search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தர் சிலை"

    • கரையோரங்களில் மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.
    • புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது ஆற்றின் நடுவில் மணல் திட்டு பகுதியில் கருங்கல்லிலான பழங்கால புத்தர் சிலை இருந்ததை கண்டு வியந்தனர். உடனடியாக, அந்த சிலையை மீனவர்கள் மீட்டனர்.

    சிலையின் உயரம் 4 அடி ஆகும். இந்த புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது.

    இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் ஊராட்சி தலைவர் செல்வராஜிடம் தெரிவித்தனர்.

    அதன்பேரில், சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிலையை பார்வையிட்டனர்.

    பின்னர், அதிகாரிகள் புத்தர் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும், இந்த சிலை எங்கிருந்து வந்தது? கொள்ளிட ஆற்றின் மணல் பகுதியிலேயே இருந்ததா? என பல்வேறு கோணங்களில் கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும்.
    • புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் புத்தகரம் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    புத்தர் கோவில் அமைந்திருக்கும் இடம் புத்த விகாரம் என்று அழைக்கப்படும். புத்த கிரகம், புத்த விகாரம் என்பது காலப்போக்கில் மருவி புத்தகரம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலுக்கும், ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கும், இடையே உள்ள இடத்தில் குளம் சீரமைத்தபோது அழகிய புத்தர் சிலை ஒன்று கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.

    இந்த புத்தர் சிலை முக்கால் அடி உயரம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படும் கற்சிலையாகும், செம்பாதி தாமரை அமர்வு உடன் கால்களும், சிந்தனை முத்திரையுடன் கைகளும், தலைமுடி சுருள் சுருளாகவும், ஞான முடி தீப்பிழம்பாகவும், கழுத்தில் மூன்று கோடுகளும், இடது புற தோள் மட்டும் சீவர ஆடையால் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் சிலையின் பின்புறம் தலைப்பகுதியில் தாமரை மலர் மீது அறவாழி சக்கரம் அமைந்துள்ளது.

    பின்புறம் உள்ள உடலின் முதுகுப் பகுதியில் சீவர ஆடை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 16-ம் நுற்றாண்டுக்கு முற்பட்ட புத்தர் சிலையில் காண முடியும்.

    தமிழகத்தில் காணப்படும் புத்தகரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள புத்தகரத்தில் மட்டுமே பவுத்த அடையாளங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

    இதனை ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிஷிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வு குழுவினர் கடந்த 2009-ம் ஆண்டிலேயே கண்டறிந்து உள்ளனர்.

    மேலும் புத்தகரம் கிராமப் பகுதியில் பழங்கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதும், பல்லவர் காலத்திற்கு முந்திய குடியேற்றங்களும் இருந்து உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது. அத்தகைய சிறப்புகளை உடைய புத்தர் சிலையை தற்பொழுது வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையம் தலைவர் அஜய குமார் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் புத்தகரம் கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதியைப் பெற்று புத்த விகாரம் எனும் புத்தர் கோவில் சுற்றுலா துறையின் மூலம் கட்டப்பட உள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்து ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கான ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சி துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தில் புத்த விகாரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    • சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர்.
    • கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போது வரையில் அங்கே அந்தோணியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டு உள்ளனர்.

    இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும்.

    இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வீரிருப்பு கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2000-ம் ஆண்டு புத்தர் கோவில் கட்டுவதற்க்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர்.
    • சிலைகளுக்கு புத்த பிக்குகள், புத்த பிக்குணிகள், சர்வ சமயத்தை சேர்ந்தவர்கள், புத்த துறவிகள் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    இன்றைய உலகில் இயற்கை மாற்றங்களாலும், பல விதமான வன்முறைகளாலும் அழிவை நோக்கி செல்லும் நிலையில் அமைதியை போதித்த புத்தரின் பொன்மொழிகளை பின்பற்ற கூடிய காலம் தற்போது உள்ளது.

    முன்னொரு காலத்தில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி போரான கலிங்கத்து போரை நடத்திய பின் போர்களை கைவிட்டு உலக அமைதிக்காக கவுதம புத்தரின் வழியை பின்பற்றி உலககெங்கும் புத்தஅமைதி கோபுரங்களை நிறுவி உலகில் அமைதியை உருவாக்க முயன்றார்.

    இந்தியா சுதந்திரம் பெற புத்தரின் கோட்பாட்டை பின்பற்றி மிக சிறந்த வழியான அகிம்சையை பின்பற்றி அதில் வெற்றியும் கண்டார்.

    அதனை தொடர்ந்து 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த புத்த துறவி நிட்சு தட்சு பியூஜீ குருஜீ என்பவர் உலகத்தில் அமைதி நிலவ உலகெங்கிலும் புத்த அமைதி கோபுரங்களை உருவாக்க முயன்றார்.

    இந்தியாவில் ஜவஹர்லால் நேரு உதவியுடன் தாமரை சூத்திரத்தை புத்தர் முதன்முதலில் உபதேசம் செய்த பீகார் மாநிலம் ராஜ்கீர் மலையில் புத்த அமைதி கோபுரத்தை அமைத்தார்.

    இதனை அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரி கோபுரத்தை திறந்து வைத்தார். அதனை தொடந்து 6 வட இந்திய மாநிலங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் தென்னிந்தியாவில் உலக அமைதி கோபுரத்தை நிறுவ தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2000-ம் ஆண்டு புத்தர் கோவில் கட்டுவதற்க்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர்.

    அந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அமைதியான சூழலில் அமைதிக்கான கோவில் கட்ட ஏதுவாக அமைந்தது. அதனை தொடர்ந்து நிப்போசன் மியொ ஹொஜி தமிழ்நாடு மற்றும் புத்த பிட்சுகள், புத்த பிக்குனீகள் சார்பில் கோவில் கட்டப்பட்டது.

    அதனை தெடர்ந்து தென்னிந்தியாவில் முதன் முதலாக உலக அமைதிக்காக 120 அடி உயரத்தில் உலக அமைதி கோபுரத்தில் கடந்த 2020-ம் மார்ச் மாதம் 4-ந் தேதி உலக அமைதி கோபுர உச்சியில் புத்தரின் அஸ்தி வைக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு வெளிநாட்டினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் உலக அமைதி கோபுரத்தில் புத்தர் சிலைகள் அமைக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு சங்கரன் கோவில் புத்தர் கோவிலை சேர்ந்த புத்த பிக்கு இஸ்தானிஜி புத்த பிக்குனிகள் லீலாவதி, கிமூரா தலைமையில் இலங்கை, ஜப்பான், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புத்த துறவிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து உலக அமைதி கோபுரத்தில் தெற்கு திசையில் ஞானம் போதிப்பது போன்ற புத்தர் சிலையும், மேற்கு திசையில் சயன கோலத்தில் இருக்கும் புத்தர் சிலையும், வடக்கு திசையில் குழந்தை பருவத்தில் உள்ள புத்தர் சிலையும், கிழக்கு திசையில் மக்களுக்கு அருளாட்சி வழங்குவது போன்ற புத்தர் சிலை ஆகிய 4 புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டது.

    அந்த சிலைகளுக்கு புத்த பிக்குகள், புத்த பிக்குணிகள், சர்வ சமயத்தை சேர்ந்தவர்கள், புத்த துறவிகள் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து பொதுமக்கள் புத்தரை வழிபட்டுச் சென்றனர்.

    இதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, தனுஷ்குமார் எம்.பி., கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கனகம்மாள் மற்றும் மங்களத்துரை, ஆசிரியர் குருசாமி, முருகேசன், வக்கீல்கள் மருதப்பன், ரவிசங்கர், ராமராஜ், கண்ணன் மற்றும் பிரஜா பிரம்ம குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஓம் சக்தி வழிபாட்டு குழுவினர், கிறிஸ்தவ அமைப்பினர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சர்வ சமய பிரார்த்தனை நடத்தினர்.

    நிகழ்ச்சியில் புத்தர் கோவில் கட்டுவதற்க்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வீரிருப்பு முத்தையா குடும்பத்தினர், நிப்போசன் மியோ போகி அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×