search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கூடங்கள்"

    மத்திய அமைச்சகம் நாடு முழுவதும் கல்வித்தரம் பற்றி நடத்திய ஆய்வில் 13,511 கிராமங்களில் பள்ளிக் கூடங்கள் இல்லையென்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. #School
    புதுடெல்லி:

    மத்திய அரசு கல்வியை ஊக்கப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி வழங்கி வருகிறது. குறிப்பாக கிராமங்களில் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் கல்வித்தரம் பற்றி
    ஆய்வு நடத்தியது. இதில் நாடு முழுவதும் 13,511 கிராமங்களில் பள்ளிக் கூடமே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

    மிசோரம் மாநிலத்தில் மட்டுமே அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. மற்ற மாநிலங்களை விட வட கிழக்கு மாநிலங்களில் ஒரு சில கிராமங்களைத் தவிர பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக் கூடங்கள் செயல்படுகிறது. வட கிழக்கு மாநிலங்களில் மேகாலயாவில் 41 கிராமங்களில் மட்டுமே பள்ளிக்கூடம் இல்லை.

    நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் தான் 3,474 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லை என்ற நிலைமை உள்ளது. தொடர்ந்து பீகாரில் 1,493 கிராமங்களிலும், மேற்கு வங்காளத்தில் 1,277 கிராமங்களிலும் பள்ளிக்கூடங்கள் இல்லாமல் உள்ளது.

    இதுபற்றி கல்வியாளர்கள் கூறுகையில், கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே கல்வியின் அவசியத்தை பரப்ப வேண்டும். விவசாயம் அல்லது பணம் சம்பாதிக்கும் வேலை என எதுவாக இருந்தாலும் கல்வி அவசியம் என்பதை எடுத்துக் கூற வேண்டும் என்றார்.

    வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை வரலாற்றுப் பூர்வமாக கல்வி கற்றலில் சிறந்து விளங்கி வருகிறது. அதனால் அந்த மாநிலங்களில் பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளன. வட கிழக்கு மாநில மக்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் படிப்பதை ஊக்கப்படுத்துகிறார்கள். அதன் பயனைத்தான் பார்க்கிறோம் என்று தெரிவித்தனர். #School
    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.

    இதனால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மாநில அரசு மேற்கொண்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை முப்படையை சேர்ந்த வீரர்களும் மீட்கும்பணியில் ஈடுபட்டனர். இயல்பு நிலை திரும்புவதை தொடர்ந்து 13 பட்டாளியன் ராணுவ வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பி விட்டனர்.

    கடந்த 3 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    வெள்ளத்தில் மூழ்கிய பலரது வீடுகள் முற்றிலுமாக இடிந்து சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த வீடுகளும் உடனடியாக மக்கள் குடியேற முடியாதபடி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இவற்றை தூய்மை செய்து மக்கள் குடியேறி வருகிறார்கள்.

    இதனால் முகாம்களில் தங்கி உள்ளவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 50 சதவீத மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் திருமண மண்டபம், சமூகநலக்கூடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள கோலஞ்சேரி முகாமில் தங்கி உள்ள பொதுமக்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளித்தார்.

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுவதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. சபரிமலையில் மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மண்டல பூஜைக்கு முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தயார் செய்து வருகிறது.

    கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இன்று முதல் அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. முகாம்களில் தங்கி உள்ளவர்கள் ஓணம் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். மழை காரணமாக ஓணம் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது.  #KeralaFloods
    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து அரசு பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமியின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகிய வற்றுக்கு கடந்த ஏப்ரல் 20-ந்தேதியில் இருந்தும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ரெ.இளங்கோவனின் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ந்தேதியில் இருந்தும் கோடைவிடுமுறை விடப்பட்டது.

    கோடைவிடுமுறைக்கு பின் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள் அவர்கள் விருப்பம் போல் திறக்கப்படுகின்றன.
    ஆரம்ப பள்ளிகளை மூட முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் முடிவிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    800-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்கிற செய்தி ஊடகங்களில் வந்துக் கொண்டிருக்கிறது.

    அரசு கல்வி நிலையங்கள் என்பது வணிக நோக்கத்துக்காக நடைபெறுவது கிடையாது. கல்வியை மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கெல்லாம் கொண்டுச் சேர்க்கும் பெரும்பணியைத்தான் அரசு பள்ளிகள் செய்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்தின் மாபெரும் தலைவர்கள் புதிய பள்ளிகள் திறக்கும் புனித பணியினை முன்னெடுத்து வந்துள்ளனர். அதிலே பெருமகிழ்ச்சியும் கொண்டனர். ஆனால் இந்த அரசோ கல்வி நிலையங்களை மூடிக் கொண்டிருக்கிறது.

    அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, எளியோர்தான். ஒரு பகுதியில் உள்ள பள்ளியை மூடி, இன்னொரு இடத்துக்கு அம்மாணவர்களை மாற்றும்போது அங்கு சென்று அவர்கள் படிக்க வேண்டுமானால் பல சங்கடங்களைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

    ஏதேதோ அற்ப காரணம் சொல்லி பள்ளிகளை மூடும் திட்டமென்பது, மூடத்தனத்தின் உச்சக்கட்டம். 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடுவதால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும், கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கும், பேரிடியாக அமையும்.

    நீட் என்கின்ற அநீதி கிராமப்புற மாணவர்களின், மருத்துவ கனவை சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் பழனிசாமி அரசின் இந்த முடிவும், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற பிள்ளைகளின் கல்வியின் தேவையை நாசமாக்கும். இவை இரண்டையும் மிகப் பெரிய சதிவலையின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

    கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கு பேரிடியாக அமையப்போகும் இந்த முடிவை பழனிசாமியின் அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டத்தை பழனிசாமியின் அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.


    ×