search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்தனம்திட்டா முகாமில் தங்கி உள்ளவர்களை முதல்-மந்திரி பினராயி விஜயன் சந்தித்து நலம் விசாரித்த காட்சி.
    X
    பத்தனம்திட்டா முகாமில் தங்கி உள்ளவர்களை முதல்-மந்திரி பினராயி விஜயன் சந்தித்து நலம் விசாரித்த காட்சி.

    கேரளாவில் இயல்புநிலை திரும்புகிறது: பள்ளிக்கூடங்கள்- கல்லூரிகளை திறக்க நடவடிக்கை

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.

    இதனால் ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை மாநில அரசு மேற்கொண்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை முப்படையை சேர்ந்த வீரர்களும் மீட்கும்பணியில் ஈடுபட்டனர். இயல்பு நிலை திரும்புவதை தொடர்ந்து 13 பட்டாளியன் ராணுவ வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பி விட்டனர்.

    கடந்த 3 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

    வெள்ளத்தில் மூழ்கிய பலரது வீடுகள் முற்றிலுமாக இடிந்து சேதம் அடைந்து விட்டதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் தப்பிப் பிழைத்த வீடுகளும் உடனடியாக மக்கள் குடியேற முடியாதபடி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இவற்றை தூய்மை செய்து மக்கள் குடியேறி வருகிறார்கள்.

    இதனால் முகாம்களில் தங்கி உள்ளவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 50 சதவீத மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை இன்று முதல் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் திருமண மண்டபம், சமூகநலக்கூடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள கோலஞ்சேரி முகாமில் தங்கி உள்ள பொதுமக்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மாநில அரசு தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளித்தார்.

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுவதால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. சபரிமலையில் மழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மண்டல பூஜைக்கு முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட மதிப்பீடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தயார் செய்து வருகிறது.

    கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இன்று முதல் அதற்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. முகாம்களில் தங்கி உள்ளவர்கள் ஓணம் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். மழை காரணமாக ஓணம் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது.  #KeralaFloods
    Next Story
    ×