search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கூடங்களை மூடினால் போராட்டம் வெடிக்கும் - தினகரன் எச்சரிக்கை
    X

    பள்ளிக்கூடங்களை மூடினால் போராட்டம் வெடிக்கும் - தினகரன் எச்சரிக்கை

    ஆரம்ப பள்ளிகளை மூட முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் முடிவிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    800-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது என்கிற செய்தி ஊடகங்களில் வந்துக் கொண்டிருக்கிறது.

    அரசு கல்வி நிலையங்கள் என்பது வணிக நோக்கத்துக்காக நடைபெறுவது கிடையாது. கல்வியை மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கெல்லாம் கொண்டுச் சேர்க்கும் பெரும்பணியைத்தான் அரசு பள்ளிகள் செய்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்தின் மாபெரும் தலைவர்கள் புதிய பள்ளிகள் திறக்கும் புனித பணியினை முன்னெடுத்து வந்துள்ளனர். அதிலே பெருமகிழ்ச்சியும் கொண்டனர். ஆனால் இந்த அரசோ கல்வி நிலையங்களை மூடிக் கொண்டிருக்கிறது.

    அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, எளியோர்தான். ஒரு பகுதியில் உள்ள பள்ளியை மூடி, இன்னொரு இடத்துக்கு அம்மாணவர்களை மாற்றும்போது அங்கு சென்று அவர்கள் படிக்க வேண்டுமானால் பல சங்கடங்களைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

    ஏதேதோ அற்ப காரணம் சொல்லி பள்ளிகளை மூடும் திட்டமென்பது, மூடத்தனத்தின் உச்சக்கட்டம். 800-க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடுவதால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும், கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கும், பேரிடியாக அமையும்.

    நீட் என்கின்ற அநீதி கிராமப்புற மாணவர்களின், மருத்துவ கனவை சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் பழனிசாமி அரசின் இந்த முடிவும், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற பிள்ளைகளின் கல்வியின் தேவையை நாசமாக்கும். இவை இரண்டையும் மிகப் பெரிய சதிவலையின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

    கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கு பேரிடியாக அமையப்போகும் இந்த முடிவை பழனிசாமியின் அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டத்தை பழனிசாமியின் அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.


    Next Story
    ×