search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதின்கட்காரி"

    இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை, ஆனால் நீர் மேலாண்மை போதுமான அளவு இல்லை என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி கூறினார். #NitinGadkari #Water #India
    புதுடெல்லி:

    இந்தியாவில் நீர் ஆதார மேலாண்மையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில் சிறந்துவிளங்கும் மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் ‘தேசிய தண்ணீர் விருதுகள்’ வழங்கி வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.

    விழாவில் மத்திய நீராதாரத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மராட்டிய மாநிலம் முதல் பரிசையும், குஜராத் 2-வது பரிசையும், ஆந்திரா 3-வது பரிசையும் பெற்றன.

    இதைப்போல மாவட்டங்கள் வரிசையில் நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை வென்றன.

    இதில் நீர் நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பிரிவில் மதுரை மாவட்டத்துக்கு முதல் பரிசும், சிவகங்கை மாவட்டத்துக்கு 3-வது பரிசும் கிடைத்தன. மேலும் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மதுரை மாவட்டத்துக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டது. இதைப்போல நதி மீட்டெடுத்தல் பணிக்காக நெல்லை மாவட்டம் 3-வது பரிசை பெற்றது.

    இந்த பரிசுகளை மதுரை மாவட்ட கலெக்டர் எஸ்.நடராஜன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜே.ஜெயகாந்தன், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர், முன்னாள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    விழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி பேசியதாவது:-

    இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை, ஆனால் நீர் மேலாண்மை போதுமானதாக இல்லை. தேசிய அளவிலான தண்ணீர் விருதுகளை வழங்கும் அமைப்பு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றுவந்ததில், நீர் சேகரிப்பில் மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தும்படி ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி தெரியவந்துள்ளது.

    பிரதம மந்திரி வேளாண் பாசன திட்டம் மூலம் பல திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. இப்போது தண்ணீரை சேமிப்பதற்காக பாசனத்துக்கு தண்ணீரை கால்வாய்கள் மூலம் அனுப்புவதற்கு பதிலாக குழாய்கள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க மற்ற கால்வாய்களும் குழாய்களாக மாற்றப்படும்.

    கும்பமேளா விழாவையொட்டி கங்கையில் தொடர்ச்சியாகவும், தூய்மையானதாகவும் தண்ணீர் சென்றுகொண்டுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்ற மக்கள் தண்ணீர் சுத்தமாக இருந்ததாக பாராட்டி உள்ளனர். கங்கையில் டால்பின்கள், ஆமைகள், நீர்ப்பறவைகள் காணப்படுவதால் கங்கை நதியின் தரம் உயர்ந்துள்ளது தெரிகிறது.

    நீர் சேகரிப்பு பிரச்சினையில் மக்கள் பங்கேற்கும் இயக்கங்கள் நடத்தப்படுவது அவசியம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது, நீர்நிலைகளை புதுப்பிப்பது ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    இவ்வாறு நிதின்கட்காரி பேசினார். 
    உங்கள் சான்றிதழ் எனக்கு தேவை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி நிதின்கட்காரி கண்டனம் தெரிவித்துள்ளார். #NitinGadkari #RahulGandhi
    புதுடெல்லி:

    பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின்கட்காரியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழ்ந்து நேற்று டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர், “பா.ஜனதா தலைவர்களில் துணிச்சல் மிக்க தலைவர் நிதின்கட்காரிதான்” என்று கூறியிருந்தார்.

    அந்த பதிவில் ராகுல் காந்தி மேலும் கூறுகையில், “நாக்பூரில் கட்சி தொண்டர்களை முதலில் குடும்பத்தை கவனிக்க கூறிய மத்திய மந்திரி நிதின்கட்காரியை பாராட்டுகிறேன். அவர் இதோடு நின்று விடக்கூடாது. ரபேல் விவகாரம், விவசாயிகளின் கஷ்டம் மற்றும் சி.பி.ஐ. நடவடிக்கை பற்றியும் பேச வேண்டும்” என்று கூறி இருந்தார்.



    மேலும் மற்றொரு பதிவில் வேலைவாய்ப்பு பற்றியும் நிதின்கட்காரி பேச வேண்டும். பா.ஜ.க.வில் அவரிடம் மட்டுமே கொஞ்சம் துணிச்சல் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

    ராகுலின் இந்த டுவிட்டர் பதிவுக்கு நிதின்கட்காரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராகுல்ஜி, உங்களது சான்றிதழ் எனக்கு தேவை இல்லை. பத்திரிகையில் தவறாக வெளியான ஒரு செய்தியை அடிப்படையாக வைத்துக்கொண்டு நீங்கள் மத்திய அரசை தாக்கி பேசுவது ஆச்சரியமாக உள்ளது.

    தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பாக பேச வேண்டும். தலைவராக இருப்பவர் நல்ல புரியும் சக்தி கொண்டவராக திகழ வேண்டும். இது இரண்டும் உங்களிடம் இல்லை.

    காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் உள்ள முக்கிய வேறுபாடே அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டுள்ள நம்பிக்கை தான். காங்கிரசுக்கு அரசியல் சட்டங்களில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. உங்களது செயல்பாடுகளும் அதைத்தான் காட்டுகின்றன.

    விவசாயிகள் பிரச்சினையில் நீங்கள் தவறான வழிகாட்டுதல்கள் மேற்கொண்டு இருக்கிறீர்கள். எனவே மீண்டும் மோடி தலைமையில்தான் மத்தியில் ஆட்சி மலரும். நாங்கள் தொடர்ந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம்.

    எதிர்காலத்திலாவது பொறுப்புடனும், புரிந்துகொள்ளும் தன்மையுடனும் நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். மற்றவர்களின் தோளை பிடித்துக்கொண்டு செயல்படும் நிலையில் இருந்து மாறுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #NitinGadkari #RahulGandhi
    கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பதில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #Amitshah #NitinGadkari
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    திருச்சியில் கடந்த 17-ந்தேதி “கருத்துரிமை காத்தவர் கலைஞர்” என்ற தலைப்பிலும், மதுரையில் 19-ந்தேதி “முத்தமிழ் வித்தகர் கலைஞர்” என்ற தலைப்பிலும், கோவையில் கடந்த 25-ந்தேதி “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பிலும் நெல்லையில் நேற்று “அரசியல் ஆளுமை கலைஞர்” என்ற தலைப்பிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடந்தன.

    அடுத்து சென்னையில் வருகிற 30-ந்தேதி “தெற்கில் உதிக்கும் சூரியன்” என்ற தலைப்பில் அனைத்துக் கட்சித்தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் படி அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் தி.மு.க. சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.


    பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷாவையும் இரண்டு தி.மு.க. மூத்த தலைவர்கள் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதை அமித்ஷா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அமித்ஷா பெயருடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டன.

    தி.மு.க. நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்கிறார் என்ற தகவல் பரவியதும், அது தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கான அச்சாரம் என்று தகவல்கள் பரவியது. அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் அமித்ஷா தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தன. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் இது பற்றி கூறுகையில், “அமித்ஷா வருகை பற்றி எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை” என்றனர்.

    ஆனால் தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், “அமித்ஷா வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் உறுதி அளித்த பிறகே புதிய அழைப்பிதழ் அச்சிடப்பட்டது” என்றனர்.

    இதனால் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித்ஷா வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தி.மு.க. நடத்தும் கூட்டத்துக்கு அமித்ஷா வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    அவருக்குப்பதிலாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்காரி பங்கு பெற இருப்பதை தி.மு.க. மூத்த தலைவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

    முதலில் தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதித்த அமித்ஷா, திடீரென புறக்கணித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை. தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொண்டால் அது கூட்டணி வி‌ஷயத்தில் தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் அமித்ஷா இந்த கூட்டத்தை தவிர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் இது தொடர்பாக கேட்டபோது, “அமித்ஷா வராத பட்சத்தில் வேறு யாராவது மூத்த தலைவர் வருவார்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “அரசியலில் மூத்த தலைவர் ஒருவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும், அரசியல் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.

    கூட்டணி பற்றி தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்யப்படும் என கூறிய டாக்டர் தமிழிசை, தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்பதை அரசியலாக்குவதை விரும்பவில்லை என்றார். #Karunanidhi #Amitshah #NitinGadkari
    ×