search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள மழை"

    கேரளாவில் மழையால் சிதிலமடைந்த வீடுகளை புனரமைத்து கட்டித் தந்தது போன்ற நல்ல திட்டங்களை காப்பியடிப்பதில் வெட்கம் இல்லை கமல்ஹாசன் தெரிவித்தார். #Kamalhassan #KeralaRain
    கொச்சி:

    கேரளாவைச் சேர்ந்த டுவென்டி20 என்ற அமைப்பு ‘கடவுள் இல்லம்’ என்ற திட்டத்தின் கீழ் எர்ணாகுளம் மாவட்டத்தில் கிழக்கம்பள்ளம் என்ற பகுதியில் உள்ள ஒரு காலனியில் சிதிலமடைந்த வீடுகளைப் புனரமைத்து கட்டித்தந்துள்ளது.



    அந்தத் திட்டத்தின் மூலம் 37 பயனாளர்களுக்கு புதிய வீடு கட்டப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு வீடு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு வீட்டுக்கான சாவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கமல் கூறியதாவது:-

    அரசியல் என்பது ஓர் அர்ப்பணிப்பு. அது தொழில் அல்ல. நானும் டுவென்டி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் சாபு ஜேக்கப்பும் இணைந்து அரசியலில் ஒரு புது மாற்றத்தைக் கொண்டு வருவோம். வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

    என் அரசியல் பயணம் பணத்துக்கானது அல்ல. அது மக்களுக்கானது மட்டுமே. தமிழக மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த மதச்சார்பற்ற கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும். ‘கடவுள் இல்லம்’ மிகச் சிறந்த ஒரு திட்டம். நான் இங்கு வந்தது ஒரு விருந்தினராக மட்டும் அல்ல. இந்த திட்டத்தை பற்றி தெரிந்துகொண்டு இதேபோல தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் சிதிலமடைந்த வீடுகளை சரி செய்வது பற்றி அறிந்து கொள்ளவும்தான்.

    சாபுவின் இந்த திட்டத்தை காப்பி அடிக்க போகிறேன் என்பதை சொல்லிக்கொள்வதில் எனக்கு வெட்கம் இல்லை. மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தவே நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Kamalhassan #KeralaRain
    488 பேரை பலி வாங்கிய கேரள வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.3,048 கோடியை ஒதுக்கி உள்ளது. #KeralaRain #KeralaFlood
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.

    இந்த கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்தது. பாதுகாப்பு கருதி ஒரே நேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளையும் திறக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடானதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் இடம் பெயர்ந்தனர்.

    இதுவரை இல்லாத அளவுக்கு கேரளாவையே புரட்டிப்போட்ட இந்த மழை வெள்ளத்தால் 488 பேர் உயிர் இழந்தனர். பல ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. விவசாய நிலங்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தது. கேரளாவில் ஏற்பட்ட இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு நிலங்களில் இருந்தும் உதவிகள் கேரளாவுக்கு சென்றது.

    மத்திய குழுவும் கேரளாவுக்குச் சென்று அங்கு ஏற்பட்ட வெள்ள சேதத்தை ஆய்வு செய்தது. முதல் கட்டமாக கேரளாவுக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் கேரளாச் சென்று வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டார்.



    இதைத் தொடர்ந்து கேரளாவுக்கு ரூ. 500 கோடி நிவாரண நிதி வழங்க பிரதமர் உத்தரவிட்டார். அப்போது இந்த நிவாரண உதவிகள் முன்பணம் தான் என்றும் கேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    கேரள அரசும் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.4 ஆயிரத்து 800 கோடி வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தது. இதை ஏற்று கேரள வெள்ளப்பாதிப்புக்கு கூடுதல் நிதியாக ரூ. 3,048.39 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.



    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. #KeralaRain #KeralaFlood
    கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூகுள் சார்பில் ஏழு கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloodRelief



    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ள சேதங்களை சரி செய்ய கேரளாவுக்கு ஏழு கோடி ரூபாய் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

    கூகுள்.ஓஆர்ஜி (Google.org) மற்றும் கூகுளர்ஸ் (Googlers) சார்பில் ஒரு மில்லியன் டாலர்கள் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூகுள் தெற்காசியா மற்றும் இந்தியாவுக்கான துணை தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார். கேரள வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவியாக கூகுள் பேரிடர் மீட்பு குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அந்த வகையில் கூகுள் பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்டு இதுவரை 22,000 பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆனந்தன் தெரிவித்தார். கேரளாவில் மே 29-ம் தேதி துவங்கிய பருவமழையில் சிக்கி சுமார் 417 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 8.69 லட்சம் பேர் மாநிலம் முழுக்க அமைக்கப்பட்ட 2,787 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    முன்னதாக, கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் கேரள வெள்ள பாதிப்புகளுக்கு ஏழு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. 

    “கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மனமுடைந்து போனோம். ஆப்பிள் சார்பாக கேரள முதல்வர் பொது நிவாரண நிதி கணக்கு மற்றும் மெர்சி கிராப்ஸ் இந்தியா எனும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள், மற்றும் பள்ளிக் கூடங்களை கட்ட உதவியாக இருக்கும்,” என ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

    மேலும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம், ஆப் ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு உதவ பிரத்யேக பேனர்களை பதிவிட்டது. ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு 5, 10, 25, 50, 100 அல்லது 200 டாலர்கள் வரை நிதி வழங்கலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    ஓணப்பண்டிகை தினமான இன்று பத்மநாபபுரம் அரண்மனை களை இழந்து காணப்பட்டது. கேரள அரசே ஓண விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணக் கொண்டாட்டங்கள் எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை. #KeralaFloods #Onamfestival
    தக்கலை:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் வெள்ளத்தில் மிதந்தது.



    மழை வெள்ளம் காரணமாக கேரள மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தற்போது மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து வந்தாலும், கேரளாவில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.

    வழக்கமாக ஆகஸ்டு மாதம் தொடங்கிவிட்டாலே கேரளாவில் ஓணக் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த மாதம் மழை வெளுத்து வாங்கியதால் அங்கு ஓணக் கொண்டாட்டத்திற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

    கேரள அரசும் இந்த ஆண்டு ஓண விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதற்காக நடக்கும் ஊர்வலம், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும் கூறியுள்ளது.

    இதுபோல ஏராளமான மக்கள் ஓணக் கொண்டாட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை. முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தங்களுக்குள் ஓண வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்து கொண்டனர். மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவையும் பகிர்ந்து உண்டனர்.

    கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் ஓணக்கொண்டாட்டம் களை கட்டும். தக்கலையை அடுத்த பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணத்தையொட்டி அத்தப்பூக்கோலம், ஓண ஊஞ்சல் ஆட்டம் போன்றவை நடைபெறும்.

    புலியாட்டம், செண்டை மேளங்களும், புத்தாடை அணிந்து வலம் வரும் பெண்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும்.

    இதனை பார்த்து ரசிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் ஓணப்பண்டிகை நாளில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் ஓணப்பண்டிகை தினமான இன்று பத்மநாபபுரம் அரண்மனை களை இழந்து காணப்பட்டது. கேரள அரசே ஓண விழாக்களை ரத்து செய்து விட்டதால் இங்குள்ள அதிகாரிகளும் ஓணக் கொண்டாட்டங்கள் எதற்கும் ஏற்பாடு செய்யவில்லை.

    இதனால் இன்று பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்த சுற்றுலா பயணிகளும், பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #KeralaFloods #Onamfestival
    ×