search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்று"

    • நிசார் முகமது வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.
    • கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா பள்ளி தைக்கால் பகுதியில் வசிப்பவர் நிசார் முகமது. வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவர் விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் அதீத ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.

    திடீரென, அந்த பசு நேற்று முன்தினம் ஒன்றின்பின் ஒன்றாக கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

    இதனை கண்ட நிசார் முகமது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் பசுவையும், 2 கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர்.
    • சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்த சிறுத்தை ஒன்று அங்கு பதுங்கிக்கொண்டது. பின்னர் அந்த பகுதியில் தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் சிறுத்தை எந்த இடத்தில் இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை.

    காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள்,டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் ஒரு தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த கன்று குட்டியை கவ்வி செல்ல முயற்சி செய்தது. கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்ட பெரிய மாடுகள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை துரத்தியது. இதில் பயந்து போன சிறுத்தை கன்றுக்குட்டியை விட்டு விட்டு வனத்துக்குள் ஓடியது. பின்னர் காயங்களுடன் இருந்த கன்றுக்குட்டியை அதன் உரிமையாளர் மீட்டு, கால்நடை டாக்டர் வரவழைக்கபபட்டு காயங்களுக்கு மருந்துகள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊதியூர் மலையடிவார பகுதியில் மீண்டும் சிறுத்தை கன்று குட்டியை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாலை அழைத்து வந்துள்ளனர்
    • 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறந்து போனது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 45). விவசாயியான இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். அவர் வைத்திருந்த ஒரு பசு மாடு கன்று போடும் நிலையிலிருந்தது. சம்பவத்தன்று மாலையில் கன்று போடக் கூடிய அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் வெகு நேரமாகியும் பசுமாடு கன்றுபோட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து அவரது உறவினர் மூலம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபாளையத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்ற உதவி கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு அதிகாலை அழைத்து வந்துள்ளனர். அவர் சம்பவ இடத்திற்கு வந்து பசு மாட்டின் வயிற்றிலிருந்து மூன்று கன்றுகளை வெளியே எடுத்துள்ளார். இதில் 3 கன்றுகளுமே காளைக்க ன்றுகளாக இருந்துள்ளது. ஆனால் 2 கன்றுகள் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் இறந்து போனது. ஒரு கன்றுக்குட்டி மட்டுமே கால்நடை மருத்துவரால் காப்பாற்ற முடிந்தது. இதனால் விவசாயி நவநீதன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு பசு மாடு மூன்று கன்றுகளை ஈன்றுள்ள சம்பவம் ஆச்சரி யத்தை ஏற்படுத்தினாலும், அதில் இரண்டு கன்றுகள் இறந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • மாடு விருத்தி அடைந்ததால் இம்மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர்.
    • சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், உள்நாட்டு இன கால்நடைகளை பாதுகாத்தல், இனவிருத்தி விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உப்பளப் புல் என்ற ஒரு வகை புல் பிரசித்தி பெற்றது.

    இப்புற்களில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். இந்த புல் வகையை மேய்ந்து உம்பளச்சேரி மாடு விருத்தி அடைந்ததால் இம் மாட்டிற்கு உம்பளச்சேரி மாடு வகையினம் என பெயர் வந்தது.

    இம்மாட்டினங்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது.

    உம்பளச்சேரி எருதுகள் சேர் நிறைந்த சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 6 மணி நேரம் அயராது உழவு செய்யும் திறன் படைத்தது.

    கடுமையான மழை, வெயிலை தாங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாடு இனமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த உம்பளச்சேரி மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக மாடு, கன்றுகளை பராமரித்து வரும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர்சஞ்சீவ் ராஜ், உதவி இயக்குனர் மருத்துவர் ஹசன் இப்ராஹிம், மருத்துவர் விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, தலைஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது.
    • கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள 18 முதல் சேத்தி கிராமத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு "கால்நடை கன்றுகள் காப்போம்" இயக்கம் தொடங்கப்பட்டது.

    இந்த விழாவுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். 2981 ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கன்றுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் வழங்கினார்.

    அப்போது அவர் கூறும் போது:- கால்நடைகள், கன்றுகளுக்கு தனி தனியாக தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனம் கன்றுகளுக்கு கொடுக்கக் கூடாது. ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் கொடுக்க வேண்டும். கன்று பிறந்த ஒன்றரை வயதுக்குள் சினை பக்குவத்திற்கு வர வேண்டும். 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி செயலாளர் ஜி. கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, ராஜ்மோகன், கே.ஆர். மதிவாணன், சேதுராமன், சுந்தர்ராஜ், குப்புசாமி, ஏ. பன்னீர்செல்வம், மாரியம்மாள், என். மாரிமுத்து, வெங்கடேஷ், கே.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×