search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கக்கன்"

    • ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளதை இத்திரைப்படம் மூலம் காண முடிகிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தியாக சீலர் கக்கன் வாழ்க்கை வரலாற்றை திரைக்காவியமாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அரசியலில் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்த கக்கனின் வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதா யத்தினர் அறிந்து கொள்கிற வகையில் சிறப்பான திரைக்கதையுடன் கூடிய காட்சியமைப்புகளுடன் இத்திரைக் காவியத்தை ஜோசப் பேபி தயாரித்து, நடித்து தமிழ்ச் சமுதாயத்திற்கு படைத்து உள்ளார்.

    தமிழக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலன், உள்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கக்கன் வகித்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளதை இத்திரைப்படம் மூலம் காண முடிகிறது.

    இத்திரைப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் வரிவிலக்கு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். வெறுப்பு அரசியல் மற்றும் சுயநல அரசியலால் ஆர்வமில்லாமல் ஒதுங்கி நிற்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இத்திரைக் காவியத்தை கொண்டு சேர்க்கும் வகையில் மாநகராட்சி, அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்கின்ற வகையில், தமிழக கல்வித்துறை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இத்திரைப்படத்தை காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசியலில் எளிமைக்கு அடையாளமாக வாழ்ந்தவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி உள்ளது.
    • படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் காட்சி வெளியீட்டு விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.

    சென்னை:

    சுதந்திர போராட்ட தியாகி, நேரு பிரதமராக இருந்தபோது எம்.பி., காமராஜர் அமைச்சரவையில் அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தவரும் அரசியலில் எளிமைக்கு அடையாளமாக வாழ்ந்தவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி உள்ளது.

    இந்த படத்தை கோவை சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஜோசப் பேபி கக்கனாக நடித்துள்ளார்.

    இந்த படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் காட்சி வெளியீட்டு விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பாடல் ஒலிநாடா மற்றும் டிரைலர் காட்சிகளை வெளியிட்டார். முதல் பிரதியை கக்கனின் மகள் கஸ்தூரி பாய், பேத்தியும் சேலம் சரக காவல் துறை துணைத்தலைவருமான ராஜேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    இசையமைப்பாளர் தேவா, கக்கன் வேடத்தில் நடிக்கும் ஜோசப் பேபி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

    • இயக்குனர் பிரபு மாணிக்கம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கக்கன்’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    சுதந்திர போராட்ட வீரர் கக்கன், முதல் பிரதமர் நேரு ஆட்சி காலமான 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார். காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தார். இதையடுத்து இவரின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.


    இயக்குனர் பிரபு மாணிக்கம் இயக்கும் இப்படத்தில் என் காதலி சீன் போடுற, இரும்பு மனிதன் ஆகிய படங்களை தயாரித்த ஜோசப் பேபி கதாநாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார். தேவா இசையமைக்கும் 'கக்கன்' திரைப்படத்திற்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


    இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில், 'கக்கன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், கக்கனின் மகள் கஸ்தூரி, இசையமைப்பாளர் தேவா, அமைச்சர் துரைமுருகன், சாமிநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.




    • மேட்டுப் பாளையம் ஜோசப் பேபி தயாரித்து நடித்துள்ள கக்கனின் திரைப்பட விளம்பர போஸ்டரை வெளியிட்டார்.
    • எஸ்.சி.துறை சார்பில் நலிந்த கட்சி தொண்டர்கள் 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    சென்னை:

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பது நேற்று அவர் நடத்திய நிகழ்ச்சி மூலம் வெளியாகி இருக்கிறது. அவர் வந்தால் அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்ட போது, 'இப்படித்தான் நடிகர் ரஜினி இதோ வருகிறார். அதோ வருகிறார் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் அவர் அரசியலுக்கு வரவில்லை.

    இப்போது நடிகர் விஜய்யை பற்றி சொல்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும். அப்புறம் பார்க்கலாம்' என்றார்.

    முன்னதாக மறைந்த அமைச்சர் கக்கனின் 116-வது பிறந்தநாளை யொட்டி சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மேட்டுப் பாளையம் ஜோசப் பேபி தயாரித்து நடித்துள்ள கக்கனின் திரைப்பட விளம்பர போஸ்டரை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., எஸ்.சி., எஸ்.டி. தலைவர் ரஞ்சன்குமார், மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், துணைத் தலைவர் பொன் கிருஷ்ண மூர்த்தி, கோபண்ணா, சுமதி அன்பரசு, எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி, இமயா கக்கன், முனிஸ்வர கணேசன், பி.வி.தமிழ் செல்வன், தணிகாசலம், மாவட்ட தலைவர் திரவியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    எஸ்.சி.துறை சார்பில் நலிந்த கட்சி தொண்டர்கள் 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    • காமராஜர் ஆட்சியிலும், பக்தவசலம் ஆட்சியிலும் கக்கன் பொதுப்பணித்துறை ஆதிதிராவிடர் நல்வாழ்வு, விவசாயத்துறை, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார்.
    • ஒருமுறை மலேசிய மந்திரி கக்கனை சந்தித்து ஒரு தங்கப்பேனாவை பரிசாக வழங்கினார். அதை வாங்க மறுத்தார் கக்கன்.

    தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கன் நேர்மைக்கும், எளிமைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.

    சுதந்திர போராட்ட தியாகி, நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், இந்திய அரசியல் அமைப்பியல் உறுப்பினர் என பல பதவிகளை வகித்தவர்.

    அரசியல்வாதி என்றாலே பணமும், சொத்தும் குவிக்க நினைக்கும் இந்த காலத்தில் தன் வாழ்நாள் முழுவதும் அரசியலை புனிதமாக கருதி, தூய்மையான வாழ்வு நடத்தி எளிமையாகவே வாழ்ந்து மறைந்தவர்.

    கக்கன் 18-6-1908-ல் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி கிராமத்தில் பிறந்தார். தந்தை பூசாரி கக்கன். தாயார் குப்பு. மனைவி சொர்ணம் பார்வதி.

    தொடக்க கல்வியை மேலூரில் பயின்ற கக்கன், திருமங்கலம் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். வறுமை காரணமாக அவரால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது.

    மாணவ பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மகாத்மா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்கு உதவியாக இருந்தார். தமிழகத்தின் பல இடங்களுக்கும் அவருடன் சென்றார்.

    'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கக்கன் பங்கேற்று கைதாகி அலிப்பூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    1952 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் காமராஜர் ஆட்சியிலும், பக்தவசலம் ஆட்சியிலும் கக்கன் பொதுப்பணித்துறை ஆதிதிராவிடர் நல்வாழ்வு, விவசாயத்துறை, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார்.

    கக்கனின் நேர்மைக்கு சான்றாக சில நிகழ்வுகளை குறிப்பிடலாம்.

    கக்கன் போலீஸ் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவரது தம்பி விஸ்வநாதன் காவல்துறை பணியில் சேர விண்ணப்பித்து இருந்தார். அதற்கான பரீட்சையில் தேறி, சப்-இன்ஸ்பெக்டராக தேர்வானார்.

    இந்த மகிழ்ச்சியான செய்தியை அண்ணனிடம் தெரிவித்து ஆசி பெற சென்றார். செய்தி அறிந்த கக்கன் தம்பியைப் பாராட்டவில்லை. மாறாக ஐ.ஜி.யாக இருந்த அருளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எந்த அடிப்படையில் விஸ்வநாதனை போலீஸ் துறைக்கு தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டார்.

    'அவர் விளையாட்டில் சிறந்தவர்' என்ற அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஐ.ஜி. அருள் தெரிவித்தார்.

    உடனே கக்கன் தகுதி தெரியாமல் நியமனம் செய்திருப்பது முறையாகாது. விஸ்வநாதனின் இடதுகை விரல்கள் சரியாக செயல்படாது. சுண்டுவிரலும், அதற்கு அடுத்த மோதிர விரலும் சற்று வளைந்து இருப்பதால் அவனால் துப்பாக்கி சுட முடியாது என்று கூறி விஸ்வநாதனின் பணி ஆணையை ரத்து செய்தார்.

    ஒருமுறை மலேசிய மந்திரி கக்கனை சந்தித்து ஒரு தங்கப்பேனாவை பரிசாக வழங்கினார். அதை வாங்க மறுத்தார் கக்கன். எனினும் விடாப்பிடியாக அவர் வலியுறுத்தவே வேறு வழியில்லாமல் அதை பெற்றுக்கொண்ட கக்கன் ஊழியரை அழைத்து அதனை அலுவலக பதிவேட்டில் பதிவு செய்யும்படி கூறினார்.

    இது அரசுக்கு அல்ல. உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்குத்தான் தந்தேன் என்று மலேசிய மந்திரி கூறியும் கக்கன் கேட்கவில்லை.

    நான் அமைச்சராக இல்லையென்றால் இந்த பேனாவை தந்து இருப்பீர்களா?

    மக்களுக்கு தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மை போன்றவர்கள் பரிசு பொருட்களை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறி தங்கப்பேனாவை அவரிடமே திருப்பிக்கொடுத்து விட்டார்.

    ஆட்சி மாறி அமைச்சர் பதவி போய்விட்ட நேரத்தில் சென்னையில் வாடகை வீடு தேடித் தெருத்தெருவாக அலைந்தார். நகர பஸ்களில் பயணிகளுடன் பயணம் செய்தார். தன் வாழ்க்கையின் இறுதி காலத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட கக்கன், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களோடு சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது உடல்நல குறைவால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவரை பார்க்க முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு போனார்.

    கக்கனும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அவரை பார்க்கச் சென்றார்.

    ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் ஏழ்மைக் கோலத்தில் ஒரு கட்டிலில் படுத்துக்கிடந்த கக்கனை பார்த்து அதிர்ந்து போனார். பேசமுடியாமல் கண்கலங்கினார்.

    கக்கனின் இரு கைகளையும் பரிவுடன் பிடித்துக்கொண்டு நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன். வேறு என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். அதற்கு கக்கன் ஒன்றும் வேண்டாம் நீங்கள் பார்க்க வந்ததே போதும் என்று கூறி இயல்பாக மறுத்தார்.

    உடனே ஆஸ்பத்திரி டீனை அழைத்த எம்.ஜி.ஆர். 'இவர் யார் தெரியுமா? இந்திய அரசியல் சாசன அவையில் இடம்பெற்று இருந்தவர். இவரது உழைப்பால் கிடைத்த சுதந்திரக்காற்றை நாம் அனுபவித்து வருகிறோம். இவரை மரியாதையாக நடத்த தெரியவில்லையே!' என்று கூறி கண்டித்தார். உடனடியாக அவரை 'ஏ' வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார்.

    ஒரு முறை கக்கனின் மனைவி அரசு ஊழியர் ஒருவரிடம் மண்எண்ணெய் வாங்கி வரும்படி கூறினார். இதைக்கவனித்து விட்ட கக்கன் மனைவியிடம் இவர் அரசாங்கத்துக்கு ஊழியம் செய்பவர். உன் வீட்டுக்கு வேலை செய்ய வரவில்லை என்று அந்த ஊழியர் முன்பாகவே மனைவியைக் கண்டித்தார். கக்கன் மனைவி கண்ணீர் மல்க நின்றார். பின்னர் மனைவியிடம் ரோட்டில் இருக்கும் மண்எண்ணெய் கேனை நீயே வீட்டுக்குள் எடுத்துப்போ என்று கூறினார்.

    எழுத்தாளர் ஜெயகாந்தன், கக்கனின் எளிமையைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வினைப் பதிவு செய்து இருக்கிறார்.

    அவர் கூறுகிறார்-

    நானும், அவரும் (அமைச்சர் கக்கன்) ஒருமுறை ரெயிலில் பயணம் செய்து விட்டு இருவரும் மதுரை விருந்தினர் மாளிகையில் ஒன்றாக தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    நான் ஆடம்பர வாழ்வில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவன். முகச்சவரம் கூட ஆடம்பரமாகத்தான் செய்வேன். எலக்ட்ரிக் ஷேவரால்தான் சவரம் செய்வேன். சவரம் செய்துவிட்டு 'ஓடிகோலன்' கலந்த ஸ்நோ பவுடர், இவையெல்லாம் தடபுடலாக செய்து கொண்டு இருந்தேன்.

    என்னை மிகவும் கவனமாக கவனித்து கொண்டு இருந்த அமைச்சர் கக்கன் என்னைப் பார்த்து சிரித்தார். என்னை அழைத்து என்னங்க இதுக்கு இவ்வளவு நேரம்? இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சவரம் செய்றீங்க என்னைப்பாருங்க என்று சொல்லி ஒரு பிளேடை எடுத்தார். அதைக்குறுக்கில் இரண்டாக உடைத்தார். ஒரு பாதி பிளேடால் மளமளவென்று முகச்சவரம் செய்து கொண்டார். கீறலோ, வெட்டோ, ரத்தக்கசிவோ எதுவுமில்லாமல் லாவகமாக செய்து கொண்டார். அவர் என்னிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்.

    இதெல்லாம ஜெயிலில் இருக்கும்போது கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடம். மந்திரியானபோதும் மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று புன்னகைத்தவாறே கூறினார்.

    ஒரு முறை கக்கன் பஸ்சில் பயணம் செய்தார். அவர் செல்ல வேண்டிய இடம் வரை டிக்கெட்டுக்கு போதிய காசு இல்லை. அவரை அறிந்த கண்டக்டர் ஐயா காசு வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் தன்னிடமிருந்த காசை கொடுத்துவிட்டு அதற்கான ஸ்டாப் வந்ததும் இறக்கி நடந்தே சென்றார்.

    அந்த மனிதப் புனிதர் 1967-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். பின்னர் பொது வாழ்வில் இருந்து விலகினார்.

    1981-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி உடல்நல குறைவால் சென்னையில் காலமானார்.

    கக்கன் நாட்டுக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி இந்திய அரசு அவரது உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.

    தமிழக அரசு சார்பில் மதுரையில் முழு வெண்கல சிலையும், கக்கனின் சொந்த ஊரான தும்பைப் பட்டியில் மணிமண்டபமும் அமைத்து கவுரவப்படுத்தியது.

    • கக்கனின் எளிமை, நேர்மை பற்றி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் பேசினார்.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. சங்கரன்கோவில் தியேட்டர் சாலையில் அமைந்துள்ள அம்பேத்காரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நகர காங்கிரஸ் பொருளாளர் வைத்தியர் மனோகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நிர்வாகி சித்திரைகண்ணு, அந்தோணி, ராஜேந்திரன், சங்கர மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் கக்கனின் எளிமை நேர்மை பற்றி பேசினார்.

    இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பீர்முகமது, சங்கரன் ஏட்டையா, ரஷீத், தங்கராஜ், கருப்பசாமி, முருகன், ஆறுமுகம், மாடகண்ணு, சமுதாய நாட்டாண்மை சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கக்கனின் தம்பி விஸ்வநாத கக்கனின் மகள் இமயாகக்கன்.
    • காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்க சென்றதால் தமிழக காங்கிரஸ் தலவராக கக்கன் பொறுப்பேற்றார்.

    சென்னை:

    தமிழக அரசியலில் எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர்களில் முன்னாள் அமைச்சரான கக்கனும் ஒருவர். இன்று அவரது 114-வது பிறந்த நாள்.

    இப்படியெல்லாம் தலைவர்கள் வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள் என்று இன்றைய தலைமுறை நினைத்து பெருமைப்பட வேண்டிய தலைவர்.

    மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டியில் பிறந்த கக்கன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் எல்லா சமூகத்தையும் கவர்ந்தவர்.

    மிகவும் ஏழ்மையான கிராம கோவில் பூசாரி குடும்பத்தில் பிறந்து அமைச்சர் பதவி வரை வகித்தவர். ஆனாலும் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்து மறைந்தவர். அதனால்தான் ஏழை பங்காளராக போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜருக்கு பிடித்தமான தோழராக இருந்தார்.

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார்.

    காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்க சென்றதால் தமிழக காங்கிரஸ் தலவராக கக்கன் பொறுப்பேற்றார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது உள்துறை அமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பதவிகள் வகித்தார்.

    இவர் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த கால கட்டத்தில்தான் மேட்டூர், வைகை, வீடுர் அணைகள் கட்டப்பட்டது. அதே போல் 2 வேளாண்மை பல்கலைக்கழகங்களும் தொடங்கப்பட்டன.

    அவரது நேர்மைக்கு ஒரே ஒரு உதாரணம். அவரது சகோதரர் வேலை தேடி கக்கனின் அமைச்சர் பங்களாவில் அவருடன் தங்கி இருந்தார்.

    போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட போது அவரும் சென்று இருக்கிறார். தேர்வில் வெற்றி பெற்றதாக அவருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதை தனது அண்ணனிடம் மகிழ்ச்சியுடன் காட்டியிருக்கிறார்.

    அதை வாங்கி பார்த்த கக்கன் நீ எப்படி எல்லா பயிற்சிகளிலும் வெற்றி பெற்றாய் என்று கேட்டு இருக்கிறார். ஏனெனில் அப்போது காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவருக்கு பிளேட் வைக்கப்பட்டிருந்ததாம்.

    அதை மனதில் வைத்து தான் கக்கன் அவ்வாறு கேட்டுள்ளார். கேட்டதோடு விடவில்லை. அந்த பணி ஆணை கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டு மறுநாள் போலீஸ் உயர் அதிகாரிைய அழைத்து என் சகோதரனால் வடம் ஏறும் பயிற்சியெல்லாம் செய்து இருக்க முடியாது. மந்திரியின் சகோதரர் என்பதற்காக வெற்றி பெற வைத்தீர்களா? என்று கண்டித்து வேலைக்கான உத்தரவையும் ரத்து செய்து இருக்கிறார்.

    அதன் பிறகு வங்கி தேர்வு ஒன்றில் வெற்றி பெற்று பணி கிடைத்து இருக்கிறது. அதற்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, "இந்த வீடு அமைச்சர் மக்கள் பணியாற்ற தங்குவதற்காக கொடுக்கப்பட்டது. எனவே இனி நீ இங்கே தங்க கூடாது வெளியே அறை எடுத்து தங்கி வேலைக்கு போ" என்று அனுப்பி வைத்து இருக்கிறார்.

    அப்படிப்பட்ட கக்கனின் பிறந்த நாள் இன்று. அவருக்கு 5 மகன்கள். ஒரு மகள். ஒவ்வொரு வரும் கக்கனை இன்று நினைத்து வழிபட தவறில்லை.

    கக்கனின் தம்பி விஸ்வநாத கக்கனின் மகள் இமயாகக்கன். இவரது வீட்டில் தான் கக்கனின் ஒரு மகன் பாக்கியநாதன்-சரோஜினி தம்பதிகள் வசிக்கிறார்கள்.

    கக்கனுக்கு தலைக்கறி குழம்பு, கருவாடும் பிடித்த உணவாம். எனவே இன்று அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து தலைக்கறி குழம்பு, கருவாட்டுடன் சாதம் படையல் போட்டு அவர் விரும்பி அணியும் கதர்வேட்டி, கதர் ஜிப்பா சட்டை, வெள்ளை துண்டு ஆகியவற்றை வைத்து வணங்கினார்கள்.

    ஆவடியில் உள்ள தொழிலாளர்களுக்கு தேனீர், ஸ்நாக்ஸ் வழங்கினார்கள். பூந்தமல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்திலும் உணவு வழங்கினார்கள்.

    கண்ணம்மாபேட்டையில் உள்ள கக்கனின் கல்லறையில் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கக்கன் படத்துக்கு கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பொன்கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், சுகுமார்தாஸ், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    த.மா.கா. அலுவலகத்தில் கக்கன் உருவ படத்துக்கு ஜி.கே.வாசன் எம்.பி. கக்கன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடியல் சேகர், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் முனவர் பாட்சா, சைதை மனோகரன், அருண்குமார் மற்றும் ராணிகிஷ்ணன், வினோபா, சைதை நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×