search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எளிமைக்கு சொந்தக்காரர்.... கக்கன் பிறந்த நாள்-  காங்கிரஸ் மரியாதை
    X

    எளிமைக்கு சொந்தக்காரர்.... கக்கன் பிறந்த நாள்- காங்கிரஸ் மரியாதை

    • கக்கனின் தம்பி விஸ்வநாத கக்கனின் மகள் இமயாகக்கன்.
    • காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்க சென்றதால் தமிழக காங்கிரஸ் தலவராக கக்கன் பொறுப்பேற்றார்.

    சென்னை:

    தமிழக அரசியலில் எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர்களில் முன்னாள் அமைச்சரான கக்கனும் ஒருவர். இன்று அவரது 114-வது பிறந்த நாள்.

    இப்படியெல்லாம் தலைவர்கள் வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள் என்று இன்றைய தலைமுறை நினைத்து பெருமைப்பட வேண்டிய தலைவர்.

    மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டியில் பிறந்த கக்கன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் எல்லா சமூகத்தையும் கவர்ந்தவர்.

    மிகவும் ஏழ்மையான கிராம கோவில் பூசாரி குடும்பத்தில் பிறந்து அமைச்சர் பதவி வரை வகித்தவர். ஆனாலும் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்து மறைந்தவர். அதனால்தான் ஏழை பங்காளராக போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜருக்கு பிடித்தமான தோழராக இருந்தார்.

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார்.

    காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்க சென்றதால் தமிழக காங்கிரஸ் தலவராக கக்கன் பொறுப்பேற்றார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது உள்துறை அமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர், ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பதவிகள் வகித்தார்.

    இவர் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த கால கட்டத்தில்தான் மேட்டூர், வைகை, வீடுர் அணைகள் கட்டப்பட்டது. அதே போல் 2 வேளாண்மை பல்கலைக்கழகங்களும் தொடங்கப்பட்டன.

    அவரது நேர்மைக்கு ஒரே ஒரு உதாரணம். அவரது சகோதரர் வேலை தேடி கக்கனின் அமைச்சர் பங்களாவில் அவருடன் தங்கி இருந்தார்.

    போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட போது அவரும் சென்று இருக்கிறார். தேர்வில் வெற்றி பெற்றதாக அவருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதை தனது அண்ணனிடம் மகிழ்ச்சியுடன் காட்டியிருக்கிறார்.

    அதை வாங்கி பார்த்த கக்கன் நீ எப்படி எல்லா பயிற்சிகளிலும் வெற்றி பெற்றாய் என்று கேட்டு இருக்கிறார். ஏனெனில் அப்போது காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக அவருக்கு பிளேட் வைக்கப்பட்டிருந்ததாம்.

    அதை மனதில் வைத்து தான் கக்கன் அவ்வாறு கேட்டுள்ளார். கேட்டதோடு விடவில்லை. அந்த பணி ஆணை கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டு மறுநாள் போலீஸ் உயர் அதிகாரிைய அழைத்து என் சகோதரனால் வடம் ஏறும் பயிற்சியெல்லாம் செய்து இருக்க முடியாது. மந்திரியின் சகோதரர் என்பதற்காக வெற்றி பெற வைத்தீர்களா? என்று கண்டித்து வேலைக்கான உத்தரவையும் ரத்து செய்து இருக்கிறார்.

    அதன் பிறகு வங்கி தேர்வு ஒன்றில் வெற்றி பெற்று பணி கிடைத்து இருக்கிறது. அதற்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, "இந்த வீடு அமைச்சர் மக்கள் பணியாற்ற தங்குவதற்காக கொடுக்கப்பட்டது. எனவே இனி நீ இங்கே தங்க கூடாது வெளியே அறை எடுத்து தங்கி வேலைக்கு போ" என்று அனுப்பி வைத்து இருக்கிறார்.

    அப்படிப்பட்ட கக்கனின் பிறந்த நாள் இன்று. அவருக்கு 5 மகன்கள். ஒரு மகள். ஒவ்வொரு வரும் கக்கனை இன்று நினைத்து வழிபட தவறில்லை.

    கக்கனின் தம்பி விஸ்வநாத கக்கனின் மகள் இமயாகக்கன். இவரது வீட்டில் தான் கக்கனின் ஒரு மகன் பாக்கியநாதன்-சரோஜினி தம்பதிகள் வசிக்கிறார்கள்.

    கக்கனுக்கு தலைக்கறி குழம்பு, கருவாடும் பிடித்த உணவாம். எனவே இன்று அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து தலைக்கறி குழம்பு, கருவாட்டுடன் சாதம் படையல் போட்டு அவர் விரும்பி அணியும் கதர்வேட்டி, கதர் ஜிப்பா சட்டை, வெள்ளை துண்டு ஆகியவற்றை வைத்து வணங்கினார்கள்.

    ஆவடியில் உள்ள தொழிலாளர்களுக்கு தேனீர், ஸ்நாக்ஸ் வழங்கினார்கள். பூந்தமல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்திலும் உணவு வழங்கினார்கள்.

    கண்ணம்மாபேட்டையில் உள்ள கக்கனின் கல்லறையில் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள்.

    காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கக்கன் படத்துக்கு கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பொன்கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், சுகுமார்தாஸ், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    த.மா.கா. அலுவலகத்தில் கக்கன் உருவ படத்துக்கு ஜி.கே.வாசன் எம்.பி. கக்கன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடியல் சேகர், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் முனவர் பாட்சா, சைதை மனோகரன், அருண்குமார் மற்றும் ராணிகிஷ்ணன், வினோபா, சைதை நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×