search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர் சிலை"

    • பஸ்நிலையம் முன்பு ஓ.எம்.ஆர். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    திருப்போரூர்:

    அ.தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க.கூட்டணியை முறித்து உள்ளது. இந்நிலையில் திருப்போரூர் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர், ஓ.எம்.ஆர். சாலையில் பஸ்நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றி இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதில் பூட்டு போடவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் திருப்போரூர் பஸ்நிலையத்தில் இருந்த எம்.ஜி.ஆர்.சிலையின் மீது காவித் துண்டை அணிவித்து சென்றுவிட்டனர். இன்று காலை பஸ்நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க தொண்டர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பஸ்நிலையம் முன்பு ஓ.எம்.ஆர். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)மங்கள பிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எம்.ஜி.ஆர்.சிலை இருந்த இரும்பு கூண்டுக்கு புதிய பூட்டும் போடப்பட்டது.

    இதுதொடர்பாக திருப்போரூர் போலீஸ்நிலை யத்தில் அ.தி.மு.க.வினர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திருப்போரூர் பஸ்நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ராயபுரம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் அரசு புகார் செய்தார்.
    • எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மர்மகும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டை, காலிங்கராயன் முதல் தெருவில் உள்ள அண்ணா திருமண மண்டபம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலை கடந்த 1994-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்மகும்பல் எம்.ஜி.ஆர். சிலையின் முகத்தில் சிவப்பு நிற பெயிண்ட்டை ஊற்றி தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் எம்.ஜி.ஆர்.சிலை மீது பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ராயபுரம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் அரசு புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர்.சிலை துணியால் மூடப்பட்டது. இச்சம்பவத் தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மர்மகும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எம்ஜிஆர் ஒரு தெய்வ பிறவி, அவர் சிலை மீது காவித்துண்டு போடுபவர்கள் மனித பிறவி அல்ல
    • இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம்.

    அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம், இந்த இயக்கத்தை தோற்றுவித்த எம்ஜிஆர், சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தெய்வ பிறவி. அவருடைய சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவி அல்ல, ஒரு இழிவான பிறவி. எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு தெய்வமாக வாழ்ந்தவர் அவரை கொச்சைப்படுத்துவது இழிவான பிறவிகளுக்கு உரிய குணமாகும். காவிதுண்டை எங்கு போட வேண்டுமோ அங்கு போட வேண்டும். குங்குமத்தை நெற்றியில் தான் வைக்க வேண்டும்.

    அதை தரையில் போட்டு மிதிக்க கூடாது. அது போல நாடு போற்றும் மக்கள் தலைவரின் சிலைக்கு காவி துண்டு போட்டு கொச்சைப்படுத்துபவர்கள் இழிவான பிறவிகள். தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் இப்படி செயல் படுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
    • புதிய வரலாற்றுப் புரட்சியை ஜெயலலிதா படைத்தார்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்று வந்த தி.மு.க. ஆட்சியை அகற்றி, தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், உழைப்பால் உயர்ந்தவரும், மக்களை கவரும் காந்தசக்தி படைத்தவரும், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியும், தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் நாயகனாக தொடர்ந்து விளங்குபவருமான எம்.ஜி.ஆரால் தமிழக மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஓங்கு புகழ் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஐம்பதாண்டு வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2022 அன்று 51-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்த ஆண்டு அ.தி.மு.க.விற்கு பொன்விழா ஆண்டு.

    எம்.ஜி.ஆர். தன்னுடைய சாதனைகள் மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டை மூன்று முறை ஆண்டு சாதனை படைத்தவர்.

    1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் நாள் எம்.ஜி.ஆர். நம்மை விட்டுப் பிரிந்தவுடன், கழகம் பிளவுபட்டதன் காரணமாக 1989-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.

    இதன் தொடர்ச்சியாக, கழகக் தொண்டர்களின் உறுதுணையாலும், ஓய்வில்லாத உழைப்பாலும், இடைவிடாத போராட்டங்களாலும், பிளவுற்றுக் கிடந்த கழகத்தை ஒன்று படுத்தி, இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டவர் ஜெயலலிதா.

    1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய வரலாற்றுப் புரட்சியை ஜெயலலிதா படைத்தார்.

    இதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது.

    ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்ட ஓரிரு ஆண்டுகளில் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்தது. இருண்ட தமிழகம் வெளிச்சத்திற்கு வந்தது. விலையில்லா அரிசி, கட்டணமில்லா கல்வி, விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்தது.

    ஜெயலலிதா நல்லாட்சி காரணமாக, 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. 2-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றது.

    2001-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுடன் ஒருசேர பயணித்தவன் நான். இந்தக் காலகட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நிதித்துறை என பல்வேறு முக்கியமான இலாக்காக்களை ஜெயலலிதா என்னிடம் அளித்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு முறை முதல்-அமைச்சர் நாற்காலியிலும் என்னை அமர வைத்தவர் ஜெயலலிதா.

    ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், விசுவாசியாகவும் இருந்தேன். இதை நான் சொல்லவில்லை. ஜெயலலிதாவே பல மேடைகளில் கூறி இருக்கிறார். இதை என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    இந்தச் சூழ்நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன் விழா ஆண்டைக்கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக, அம்மா நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும், அந்தப் பதவியை வேறு ஒருவர் பறிக்க நினைப்பதும் கட்சிக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.

    இன்றைய நிலையில், சிலசுயநலவாதிகளிடம் சிக்கிக் கொண்டிருப்பதை நினைக்கும்போது பொதுப்பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப்பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன் மக்களால் வெறுக்கப்படுவான் என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன் மொழி தான் என் நினைவிற்கு வருகிறது.

    என்னைப் பொறுத்தவரையில், தொண்டர்களைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற இருக்கின்ற இந்தத் தருணத்தில், ஜெயலலிதா வழிகாட்டுதலோடு தி.மு.க.-வை வீழ்த்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் செயல்படுவோம் என உறுதியேற்போம்.

    2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலின்போது நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை மலரச் செய்வோம். அதற்கான ஊக்க சக்தியாக, உந்து சக்தியாக தொண்டர்கள் விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு உட்பட்ட கிளை மற்றும் வட்ட, வார்டுகளில் ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கழகக் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொன் விழா ஆண்டு நிறைவினையொட்டி, 17-10-2022 அன்று காலை 9 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்திற்குச் சென்று அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகளை அளிக்க உள்ளேன்.

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆங்காங்கே அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு அல்லது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கி பொன் விழா கொண்டாட்டங்களை விமரிசையாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×