search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.ஜி.ஆரின் தி.நகர் நினைவு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் 17-ந்தேதி மரியாதை
    X

    எம்.ஜி.ஆரின் தி.நகர் நினைவு இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் 17-ந்தேதி மரியாதை

    • 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
    • புதிய வரலாற்றுப் புரட்சியை ஜெயலலிதா படைத்தார்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்று வந்த தி.மு.க. ஆட்சியை அகற்றி, தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், உழைப்பால் உயர்ந்தவரும், மக்களை கவரும் காந்தசக்தி படைத்தவரும், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியும், தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் நாயகனாக தொடர்ந்து விளங்குபவருமான எம்.ஜி.ஆரால் தமிழக மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஓங்கு புகழ் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஐம்பதாண்டு வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2022 அன்று 51-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இந்த ஆண்டு அ.தி.மு.க.விற்கு பொன்விழா ஆண்டு.

    எம்.ஜி.ஆர். தன்னுடைய சாதனைகள் மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டை மூன்று முறை ஆண்டு சாதனை படைத்தவர்.

    1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் நாள் எம்.ஜி.ஆர். நம்மை விட்டுப் பிரிந்தவுடன், கழகம் பிளவுபட்டதன் காரணமாக 1989-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.

    இதன் தொடர்ச்சியாக, கழகக் தொண்டர்களின் உறுதுணையாலும், ஓய்வில்லாத உழைப்பாலும், இடைவிடாத போராட்டங்களாலும், பிளவுற்றுக் கிடந்த கழகத்தை ஒன்று படுத்தி, இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டவர் ஜெயலலிதா.

    1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய வரலாற்றுப் புரட்சியை ஜெயலலிதா படைத்தார்.

    இதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது.

    ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்ட ஓரிரு ஆண்டுகளில் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்தது. இருண்ட தமிழகம் வெளிச்சத்திற்கு வந்தது. விலையில்லா அரிசி, கட்டணமில்லா கல்வி, விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்தது.

    ஜெயலலிதா நல்லாட்சி காரணமாக, 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. 2-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றது.

    2001-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுடன் ஒருசேர பயணித்தவன் நான். இந்தக் காலகட்டத்தில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நிதித்துறை என பல்வேறு முக்கியமான இலாக்காக்களை ஜெயலலிதா என்னிடம் அளித்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு முறை முதல்-அமைச்சர் நாற்காலியிலும் என்னை அமர வைத்தவர் ஜெயலலிதா.

    ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், விசுவாசியாகவும் இருந்தேன். இதை நான் சொல்லவில்லை. ஜெயலலிதாவே பல மேடைகளில் கூறி இருக்கிறார். இதை என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

    இந்தச் சூழ்நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன் விழா ஆண்டைக்கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக, அம்மா நிரந்தரப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும், அந்தப் பதவியை வேறு ஒருவர் பறிக்க நினைப்பதும் கட்சிக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.

    இன்றைய நிலையில், சிலசுயநலவாதிகளிடம் சிக்கிக் கொண்டிருப்பதை நினைக்கும்போது பொதுப்பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப்பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன் மக்களால் வெறுக்கப்படுவான் என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன் மொழி தான் என் நினைவிற்கு வருகிறது.

    என்னைப் பொறுத்தவரையில், தொண்டர்களைப் பொறுத்தவரையில், ஜெயலலிதா தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற இருக்கின்ற இந்தத் தருணத்தில், ஜெயலலிதா வழிகாட்டுதலோடு தி.மு.க.-வை வீழ்த்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் செயல்படுவோம் என உறுதியேற்போம்.

    2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலின்போது நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை மலரச் செய்வோம். அதற்கான ஊக்க சக்தியாக, உந்து சக்தியாக தொண்டர்கள் விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு உட்பட்ட கிளை மற்றும் வட்ட, வார்டுகளில் ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கழகக் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொன் விழா ஆண்டு நிறைவினையொட்டி, 17-10-2022 அன்று காலை 9 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நினைவிடத்திற்குச் சென்று அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட உதவிகளை அளிக்க உள்ளேன்.

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆங்காங்கே அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு அல்லது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கி பொன் விழா கொண்டாட்டங்களை விமரிசையாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×