search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னிய செலாவணி"

    • காப்புரிமை தொகையை அனுப்பியதாக சியோமி நிறுவனம் சொல்வது, அன்னிய செலாவணியை அனுப்புவதற்கான சாக்குபோக்கு என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
    • இந்தியாவில் இதுவரை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளில் இதுதான் மிகப்பெரிய தொகை.

    புதுடெல்லி:

    சீனாவை சேர்ந்த செல்போன் உற்பத்தி நிறுவனம், சியோமி குழுமம். அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, நாட்டில் 'ரெட்மி' என்ற பெயரிலான செல்போன்களை வர்த்தகம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5 ஆயிரத்து 551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. கடந்த ஏப்ரல் 29-ந் தேதி இதற்கான உத்தரவை பிறப்பித்தது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (பெமா) கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    பெமா சட்டப்படி, இந்த உத்தரவுக்கு உரிய உயர் அதிகாரி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனால், உயர் அதிகாரி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதை ஆய்வு செய்த அதிகாரி, பறிமுதல் உத்தரவுக்கு நேற்று ஒப்புதல் அளித்தார். அனுமதியின்றி ரூ.5 ஆயிரத்து 551 கோடிக்கு சமமான அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் அனுப்பி, அங்கேயே வைத்திருப்பது 'பெமா' சட்டத்தின் 4-வது பிரிவை மீறிய செயல் என்று அமலாக்கத்துறை கூறியது சரிதான் என்று உயர் அதிகாரி கூறியுள்ளார்.

    காப்புரிமை தொகையை அனுப்பியதாக சியோமி நிறுவனம் சொல்வது, அன்னிய செலாவணியை அனுப்புவதற்கான சாக்குபோக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் இதுவரை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளில் இதுதான் மிகப்பெரிய தொகை ஆகும்.

    • தேனியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள் புதிய தொழில் முனைவோர்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், கலெக்டர் தெரிவித்ததாவது.

    இந்திய அரசு சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், 75 மாவட்டங்களை ஏற்றுமதி மையமாக மேம்படுத்துவதற்கு தேர்வு செய்துள்ளது. அதில் தேனி மாவட்டமும் ஒன்றாகும். அதனடிப்படையில், மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், நறுமணப்பொருட்கள், தென்னை நார் பித் பிளாக்குகள், முருங்கை, மா, வாழை சார்ந்த வேளாண் பொருட்கள் ஆகிய தயாரிப்புகள் ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக, மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துரைகளைப் பெற்று, ஏற்றுமதி மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் போன்றோருடன் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தில் இருந்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பருத்தி நூல் மெத்தை, தலையணைகள் அதற்கான உறைகள் ஆயத்த ஆடைகள், காட்டன் சாக்ஸ், கயிறு பித் பிளாக்குகள், மசாலா பொடிகள், வாசனை பொருட்கள், காபி பவுடர் ஆகிய பொருட்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரப்பர் பேட்சுகளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேற்கண்ட ஏற்றுமதி பொருட்கள் மூலம் தேனி மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் ரூ.1500 கோடிக்கு அந்நிய செலாவணி ஈட்டப்பட்டுள்ளது.

    மேலும், தேனி மாவட்டம் விவசாயவளம் கொண்ட மாவட்டமாக இருப்பதால் விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் போது சிறந்த ஏற்றுமதி வாய்ப்பினையும் மிகுந்த லாபத்தையும் பெற முடியும். குறிப்பாக மதிப்பு கூட்டப்பட்ட தென்னை சார் பொருட்கள், மா, முருங்கை, வாழை, திராட்சை, முந்திரி போன்ற விவசாய விளை பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடை அணிகலன்கள், மின்னணு சாதனங்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை கண்டறிந்து முழுமையாக பயன்படுத்தும் பட்சத்தில் தேனி மாவட்டம் ஏற்றுமதி மையமாக மாறும் என்பதில் ஐயமில்லை. எனவே, ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள் புதிய தொழில் முனைவோர்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொண்டு அரசின் பயன்களை பெற்று பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் (கோவை) இணை இயக்குநர் ஸ்ரீதர், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை (சென்னை) கூடுதல் இயக்குநர் ஜெகதீஸ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×