search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்குழு வழக்கு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
    • அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

    ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இரட்டை பதவியால் கொள்கை முடிவுகளில் தாமதம் ஏற்படுவதாக கூறி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததால் அ.தி.மு.க. பிளவுபட்டது. 98 சதவீதம் அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை ஆதரிக்கின்றனர்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்து ஓ.பன்னீர் செல்வத்தை அதிரடியாக நீக்கினார்கள். இதையடுத்து அந்த பொதுக்குழு கூட்ட முடிவுகளை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல்வேறு மேல் முறையீட்டு மனுக்களை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    மேலும், இரு தரப்பினரும் எழுத்துபூர்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்ததால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து இடைத்தேர்தலுக்காக மட்டும் ஓர் இடைக்கால உத்தரவைப் பெற்றது.

    அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி வாசித்தார்.

    தீர்ப்பு விவரம் வருமாறு:-

    ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்கிறது. எனவே அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லும்.

    அந்த கூட்டத்தில் அ. தி. மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் சரியானதுதான். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பு மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றி கிடைத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இறுதி வெற்றியை பெற்று உள்ளார்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. முழுமை பெற்று உள்ளது. அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கைவசம் ஆகி உள்ளது.

    அடுத்தக்கட்டமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வில் இனி எடப்பாடி பழனிசாமி மட்டுமே தலைவர் என்ற நிலை உருவாகிறது.

    அதே சமயத்தில் ஜெயலலிதா காலத்தில் இருந்து செல்வாக்குடன் திகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டப் போராட்டத்துக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அடுத்தக் கட்டமாக என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஒபிஎஸ் தனக்குத்தான் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல என எடப்பாடி தரப்பில் வாதம்.
    • உட்கட்சி தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அறிவித்ததாக ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

    புதுடெல்லி:

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமா்வு விரிவாக விசாரணை நடத்தியது.

    இரட்டை தலைமை தொடர்பாக நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிப்படி நடைபெற்றது. ஒபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல என வாதிடப்பட்டது.

    தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய பொதுக்குழுவே அவற்றை நீக்க முடியும் என்ற வாதம் தவறு. கட்சியின் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அறிவித்தனர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

    2017-ம் ஆண்டில் அசாதாரண சூழலின்போது பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்பதை மறந்துவிட்டனர் என வாதிடப்பட்டது.

    ஜனவரி 11ம் தேதி இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. பின்னர் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

    இந்நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக்கான முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிப்ரவரி 2-வது வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானது. தனி நீதிபதி முதலில் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் பின்னர் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருந்தன.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், கட்சியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் தன்னிச்சையாக நீக்கப்பட்டதும் செல்லாது என்று வாதிடப்பட்டது.

    பின்னர் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை தொடர்ந்தது.

    அப்போது வாதிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள், அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், அ.தி.மு.க. அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய காரணத்தினாலேயே பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார் என்றும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஆகியோர் 16-ந்தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக தங்கள் தரப்பு பதில் மனுக்களை எழுத்துப்பூர்வ பதிலாக நேற்று தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் 39 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 18 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை பதில் மனுவில் தெள்ளத்தெளிவாகவும், விரிவாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கீழ்க்கண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடனேயே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் பொதுக்குழுவே உச்சபட்ச அங்கீகாரம் படைத்த அமைப்பாகும். இதனை கூட்டியே கட்சியின் அனைத்து முடிவுகளும் இதற்கு முன்பு எடுக்கப்பட்டு உள்ளன. கட்சியில் உள்ள கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகாரம் செய்துள்ளனர்.

    ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்க முடியாது என்பதாலேயே பொதுக்குழு அதிகாரம் மிக்க அமைப்பாக அ.தி.மு.க.வில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விஷயங்களையும் கேட்பதற்கு தொண்டர்களிடம் செல்வது சிரமமான காரியமாகும். இதற்காகவே பொதுக்குழு உள்ளது.

    2017-ம் ஆண்டு அ.தி.மு.க. விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய 2 பதவிகளும் அப்போது பொதுக்குழு உறுப்பினர்களின் அதிகாரத்தாலேயே உருவாக்கப்பட்டன. அப்படி இருக்கும் போது அந்த பதவிகளை நீக்கும் அதிகாரமும் பொதுக்குழுவுக்கு உண்டு.

    பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தனி நீதிபதியின் தீர்ப்பு அமைந்துள்ளது. தனி நபர் ஒருவர் பயன் அடையும் வகையிலும் அந்த தீர்ப்பு உள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றே பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் எடப்பாடி பழனிசாமி தேர்வாகியுள்ளார். எனவே பொதுக்குழுவை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றியதில் எந்தவிதமான விதி மீறல்களும் இல்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் இது போன்ற விரிவான அறிக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர்களும் 18 பக்க பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

    அதில், எடப்பாடி பழனிசாமி என்ற தனி நபர் பயன் அடையும் வகையில் ஜூலை 11-தேதி நடைபெற்ற பொதுக்குழு அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்கிற முடிவு எடுக்கப்பட்டது. அந்த பதவிக்கு இனி யாரும் வரக்கூடாது என்பதற்காகவே 2017-ம் ஆண்டில் கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த பதவிகளே நிர்வாக பதவிகளாகும். இதன் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய 2 பதவிகளும் காலாவதியாகாமல் இருக்கும் நிலையில் கட்சியின் விதிகளில் தன்னிச்சையாக திருத்தம் செய்து எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்துள்ளார்.

    எனவே பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பது போன்ற பல தகவல்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து எழுத்துப்பூர்வ பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து பிப்ரவரி 2-வது வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அரசியல் களத்திலும் பலத்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை.
    • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொது குழுவை கூட்ட முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது.

    இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றது.

    இதில், தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை.

    கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாக்கியுள்ளார். அதை யாராலும் மாற்ற இயலாது.

    இரட்டை தலைமை காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொது குழுவை கூட்ட முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

    இந்நிலையில், இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது.
    • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சர்ச்சைக்கு தீர்ப்பில் விடை கிடைத்துவிடும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.

    அப்போது வைரமுத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தனது வாதத்தை தொடர்ந்தார். நேற்றும் வாதாடினார். அ.தி.மு.க. பொதுக்குழு சட்ட விதிமுறைபடி நடைபெறவில்லை. அதுவும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால் இந்த பொதுக்குழு அவ்வாறு கூட்டப்படவில்லை.

    அவைத் தலைவரை வைத்து பொதுக்குழுவை கூட்டினார்கள். ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதாக கூறினார்கள். ஆனால் அப்படி நீக்குவதற்கு முறைப்படி நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கவில்லை. எனவே ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம், ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து இதுவரை எந்த கோர்ட்டிலும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடரவில்லை. எனவே அந்த பிரச்சினையை இந்த வழக்கில் எழுப்ப முடியாது. 5-ல் ஒரு பகுதியினர் கடிதம் அளித்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்று கட்சி விதிகளில் உள்ளதாக வாதிட்டார்.

    எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பேச முற்பட்டபோது அதற்கு நீதிபதிகள் உங்கள் முறை வரும் போது உங்கள் வாதத்தை தொடரலாம் என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் தொடர்ந்து வாதிட்டார்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கட்சி விதிகளில் எங்கெங்கு உள்ளதோ அதை பொதுச்செயலாளர் என்று மாற்றி உள்ளனர் என்று வாதிட்டார்.

    நேற்று மாலை 4.30 மணி வரை வாதங்கள் நீடித்ததால் விசாரணையை இன்று மதியம் 2 மணிக்கு தள்ளி வைத்தார்.

    இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியதும் வைரமுத்து வழக்கறிஞரும், ஓ.பன்னீர் செல்வம் வழக்கறிஞரும் முதலில் வாதங்கள் செய்ய உள்ளனர். அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதாட உள்ளார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் இன்று நிறைவு செய்ய வேண்டும என்று நீதிபதிகள் கூறி உள்ளதால் அ.தி.மு.க. வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சர்ச்சைக்கு தீர்ப்பில் விடை கிடைத்துவிடும்.

    • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் செயல்பட்டு வருவதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
    • இரு தரப்பும் முன்வைத்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

    புதுடெல்லி:

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றால் அனைத்து பதவிகளும் செல்லாது என ஒபிஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

    இரு தரப்பும் முன்வைத்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர். மேலும், விசாரணையை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • தேர்தல் ஆணையம் கட்சியின் திருத்த விதிகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் கட்சி செயல்படாத நிலை உருவாகியுள்ளது.
    • ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு விவாதித்தது.

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு காரசாரமாக விவாதித்தது

    இதில், தேர்தல் ஆணையம் கட்சியின் திருத்த விதிகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் கட்சி செயல்படாத நிலை உருவாகியுள்ளது என்றும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பு விவாதித்தது.

    மேலும், ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு விவாதித்தது.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், "அனைவரும் தயாராக இருந்தால் விசாரணையை நடத்த நாங்களும் தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அளித்தீர்களா? இதற்கு என்ன தீர்வு?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்னிலையில் நாளை காலை 11 மணி அளவில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
    • விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை விரிவாக எடுத்து வைக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை சென்னை ஐகோர்ட்டு மீண்டும் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதன்படி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு விசாரணையை நடத்தினார். அப்போது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அதிரடியாக அவர் தீர்ப்பளித்தார். இது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சட்ட ரீதியாக கிடைத்த வெற்றியாகவே இந்த தீர்ப்பு உள்ளது.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த 18-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு மூத்த வக்கீல் விஜய் நாராயண் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் திங்கட்கிழமை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து செயல்படாத நிலை இருக்கும்போது இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்கிற தனி நீதிபதியின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறுகிறது.

    நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்னிலையில் நாளை காலை 11 மணி அளவில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை விரிவாக எடுத்து வைக்கிறார்கள்.

    அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு நடத்தப்பட்ட விதம் பற்றியும், அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளும் அப்போது கோர்ட்டில் தெரிவிக்கப்படுகின்றன.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் மனுவில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு ஐகோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் ஆஜராகி தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு இந்த வழக்கில் விரிவான பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை நடைபெறும் விசாரணைக்கு பின்னர் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. தலைமை பதவியை பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் நாளை அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் யாருக்கு வெற்றி கிடைக்கும்? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் நாளை நடைபெறும் வழக்கு விசாரணையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று 2-வது நாளாக நடந்தது.
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் ஆஜராகி வாதம் செய்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அ.தி.மு.க. சார்பிலும், அதன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மூத்த வக்கீல் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜ கோபால், நர்மதா சம்பத், இன்பதுரை ஆகியோர் ஆஜரானார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், திருமாறன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

    அப்போது நீதிபதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி தகுதி வாய்ந்த நபர்களால் கூட்டப்பட்டதா, இல்லையா என்பது குறித்து இரு தரப்பு வக்கீல்களும் வாதிட வேண்டும் என்று கூறினார். அதன்படி இரு தரப்பு வக்கீல்களும் நேற்று வாதாடினார்கள்.

    இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்ததை ரத்து செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு சரமாரி கேள்விகளை கேட்டார். அதன் பிறகு இந்த வழக்கை வக்கீல்கள் வாதத்துக்காக இன்று தள்ளி வைத்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று 2-வது நாளாக நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் ஆஜராகி வாதம் செய்தார். அவர் வாதாடும் போது கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இது சம்பந்தமான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23-ந் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27-ந்தேதியே தயாரிக்கப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜூன் 23-ந் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை. 23 வரைவு தீர்மானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், "ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதி ஆனது" என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் விஜய் நாராயண் பதில் அளித்து வாதாடியதாவது:-

    2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன. அதற்கு பதிலாக 2017-ம் ஆண்டு நியமனத்தை எடுத்துக்கொள்ள முடியாது.

    இரட்டை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமைதான் தேவை என்பது ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் போது, பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம். ஆனால் ஐகோர்ட்டு தடை உத்தரவு காரணமாக அன்று அதை நிறைவேற்ற முடியவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் செயல்பட வேண்டும். இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமை கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பார்கள் என்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் போல, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை. ஏனென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் திருத்த விதிகளின்படி நடத்தப்பட்டது. அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை.

    ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று கூற முடியாது. ஜூன் 23-ந் தேதி கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நோட்டீஸ் தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் நோட்டீஸ்.

    2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர். ஒருவரின் சூழலை தனியாக பார்க்காமல் ஒட்டு மொத்த கட்சியின் நிலையைதான் பார்க்க வேண்டும் மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வில்தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.

    எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கியே செல்கின்றன. எனவே ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் ஒட்டுமொத்த கட்சிகளின் நலனை பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அதன் பிறகு அ.தி.மு.க. சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதாடியதாவது:-

    எதிர்மனுதார்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு விட்டு மனுதாரராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு நடைபெறும் என்பது ஜூன் 23-ந் தேதி பொதுக்குழுவிலேயே ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிந்திருக்கிறது.

    கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பு வழங்க வேண்டும். 5-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க அவசியம் இல்லை.

    கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை ஏற்கப்பட்டால் பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும்.

    அ.தி.மு.க.வுக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வம் நடத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி குறுக்கிட்டு, "அவரது நடத்தை பற்றி பேச வேண்டாம். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதது" என்றார்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் விதிகளில் எந்த திருத்தமும் செய்யாததால் அவர்களின் தேர்தல் செல்லும்.

    அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள். அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் எடுக்கும் முடிவு என்பதை ஒட்டு மொத்த உறுப்பினர்களின் முடிவாகத்தான் பார்க்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை ஆதரிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் வாதாடினார்.

    ×