search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் விதிப்படிதான் கூட்டப்பட்டது: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வக்கீல் வாதம்
    X

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் விதிப்படிதான் கூட்டப்பட்டது: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வக்கீல் வாதம்

    • அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று 2-வது நாளாக நடந்தது.
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் ஆஜராகி வாதம் செய்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அ.தி.மு.க. சார்பிலும், அதன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் மூத்த வக்கீல் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜ கோபால், நர்மதா சம்பத், இன்பதுரை ஆகியோர் ஆஜரானார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், திருமாறன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

    அப்போது நீதிபதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி தகுதி வாய்ந்த நபர்களால் கூட்டப்பட்டதா, இல்லையா என்பது குறித்து இரு தரப்பு வக்கீல்களும் வாதிட வேண்டும் என்று கூறினார். அதன்படி இரு தரப்பு வக்கீல்களும் நேற்று வாதாடினார்கள்.

    இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்ததை ரத்து செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு சரமாரி கேள்விகளை கேட்டார். அதன் பிறகு இந்த வழக்கை வக்கீல்கள் வாதத்துக்காக இன்று தள்ளி வைத்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை இன்று 2-வது நாளாக நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் விஜய் ஆஜராகி வாதம் செய்தார். அவர் வாதாடும் போது கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இது சம்பந்தமான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23-ந் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27-ந்தேதியே தயாரிக்கப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஜூன் 23-ந் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை. 23 வரைவு தீர்மானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன், "ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதி ஆனது" என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் விஜய் நாராயண் பதில் அளித்து வாதாடியதாவது:-

    2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன. அதற்கு பதிலாக 2017-ம் ஆண்டு நியமனத்தை எடுத்துக்கொள்ள முடியாது.

    இரட்டை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமைதான் தேவை என்பது ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் போது, பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம். ஆனால் ஐகோர்ட்டு தடை உத்தரவு காரணமாக அன்று அதை நிறைவேற்ற முடியவில்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் செயல்பட வேண்டும். இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமை கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பார்கள் என்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் போல, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை. ஏனென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் திருத்த விதிகளின்படி நடத்தப்பட்டது. அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை.

    ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று கூற முடியாது. ஜூன் 23-ந் தேதி கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நோட்டீஸ் தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் நோட்டீஸ்.

    2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர். ஒருவரின் சூழலை தனியாக பார்க்காமல் ஒட்டு மொத்த கட்சியின் நிலையைதான் பார்க்க வேண்டும் மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வில்தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.

    எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கியே செல்கின்றன. எனவே ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் ஒட்டுமொத்த கட்சிகளின் நலனை பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அதன் பிறகு அ.தி.மு.க. சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதாடியதாவது:-

    எதிர்மனுதார்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு விட்டு மனுதாரராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு நடைபெறும் என்பது ஜூன் 23-ந் தேதி பொதுக்குழுவிலேயே ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிந்திருக்கிறது.

    கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பு வழங்க வேண்டும். 5-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க அவசியம் இல்லை.

    கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை ஏற்கப்பட்டால் பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும்.

    அ.தி.மு.க.வுக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வம் நடத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி குறுக்கிட்டு, "அவரது நடத்தை பற்றி பேச வேண்டாம். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதது" என்றார்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் விதிகளில் எந்த திருத்தமும் செய்யாததால் அவர்களின் தேர்தல் செல்லும்.

    அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள். அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் எடுக்கும் முடிவு என்பதை ஒட்டு மொத்த உறுப்பினர்களின் முடிவாகத்தான் பார்க்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை ஆதரிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் வாதாடினார்.

    Next Story
    ×