search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk volunteer"

    நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தி.மு.க. பிரமுகரை தடுத்து நிறுத்தி வெட்டிய ரவுடி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர் .

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே வெள்ளமடம் வேம்பத்தூர் கண்ணாநகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல், (வயது 52). இவர் பீமநேரி தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இவர், தனது நண்பர்கள் ரீமாஸ் (30), சுந்தருடன் மோட்டார் சைக்கிளில் கடம்படி விளாகம் பகுதியில் உள்ள துக்க வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சந்தைவிளை பகுதியில் உள்ள செங்கட்டி பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிளை அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (28) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர்.

    திடீரென இம்மானுவேலுவை அரிவாளால் வெட்டினார்கள். இதை தடுக்க வந்த ரீமாசுக்கும் வெட்டு விழுந்தது. இவர்களது சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தப்பியோடி விட்டனர்.

    படுகாயம் அடைந்த இம்மானுவேல் ரீமாஸ் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இம்மானுவேல் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச்சட்டம் 341, 294 (பி), 324, 327, 506(2) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் சிக்க வில்லை. ராஜ்குமார் மீது ஏற்க னவே பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று இருக்கிற மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் 103 வயது மூத்த பெண் தொண்டர் ஒருவர் சந்தித்து வாழ்த்து கூறினார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார். அந்தவகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை 103 வயது மூதாட்டி ஒருவர் அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த மூதாட்டியின் பெயர், ரங்கம்மாள். மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர் பல ஆண்டுகளாகத் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்து வருகிறார். தி.மு.க.வின் மூத்த பெண் தொண்டர் இவர் தான்.

    மேலும், அவர், தன்னுடைய கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராகவும், தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். 103 வயதிலும், கட்சி பணியாற்றி வரும் அவரை கண்டதும், மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று, தி.மு.க.வுக்காக உழைத்து வருவதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த ரங்கம்மாள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘தலைவர் கருணாநிதியை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது கனவாக போய் விட்டது. ஆனால் இன்றைக்கு மு.க.ஸ்டாலினைச் சந்தித்திருப்பது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த, ரங்கம்மாள் நல்ல உடல் நிலையுடன், நினைவாற்றலுடன் பல விஷயங்களை நினைவு கூர்ந்தார். தி.மு.க.வின் மூத்த உறுப்பினராக விளங்கும் அவரிடம், அண்ணா அறிவாலயத்தில் நின்றிருந்த மற்ற நிர்வாகிகளும் வாழ்த்து பெற்றனர். மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறிய மூதாட்டியின் புகைப்படம் அண்ணா அறிவாலயத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. #DMK #MKStalin
    கருணாநிதி மரணம் அடைந்ததை கேட்ட அதிர்ச்சியில் ஓசூர் திமுக தொண்டர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்தவர் தீர்த்தகிரி செட்டியார் (வயது 70). தி.மு.க. பிரமுகரான இவர், கருணாநிதி மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார்.

    இந்த நிலையில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து தீர்த்தகிரி செட்டியார் சோகத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து, கருணாநிதி இறந்த தகவலை அறிந்ததும் தீர்த்தகிரி செட்டியாருக்கு நேற்று திடீரென அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    சென்னை எண்ணூரில் கருணாநிதி உடல்நிலை குறித்து மனவேதனை அடைந்த தி.மு.க. தொண்டர் துக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
    திருவொற்றியூர்:

    எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் எஸ்.ராஜு (வயது 63). ஓய்வுபெற்ற அனல்மின்நிலைய ஊழியர் ஆவார். தி.மு.க.வில் தீவிர தொண்டரான இவர் முன்னாள் வட்டச் செயலாளர் ஆவார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு மனவருத்தமடைந்தார். கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தார்.

    இன்று காலை அவரது மனைவி முனியம்மாள் மகள் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ராஜு தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் துக்கத்தில் அவர் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    ×