search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anti Sikh riots"

    • புல் பங்காஷ் பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தைத் தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதை ஒரு பெண் நேரடியாகப் பார்த்துள்ளார் எனவும் சிபிஐ கூறியிருக்கிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து டெல்லி உட்பட பல நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் உள்ள புல் பங்காஷ் பகுதியில் நடந்த வன்முறையில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த பாதல் சிங், தாக்கூர் சிங், குர்சரண் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். சீக்கிய குருத்வாரா தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இந்த படுகொலையின் பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் அப்போதைய எம்.பி.யுமான ஜெகதீஷ் டைட்லர் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ கடந்த மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஜெகதீஷ் டைட்லர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    ''புல் பங்காஷ் குருத்வாரா பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தைத் தூண்டியுள்ளார். அதன் விளைவாக குருத்வாரா தீயிட்டு எரிக்கப்பட்டது. அதில் 3 சீக்கியர்கள் உயிரிழந்தனர்'' என்று கூறப்பட்டு இருந்தது.

    மேலும், அந்த குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளதாவது:

    ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதை ஒரு பெண் நேரடியாகப் பார்த்துள்ளார். கலவரத்தின்போது அந்தப் பெண்ணின் கணவருக்குச் சொந்தமான கடையை, ஒரு கும்பல் சூறையாடியுள்ளது. அந்தப் பெண் பயந்துபோய் உடனே வீடு திரும்பியிருக்கிறார். அந்த வழியாக வந்த ஒரு அம்பாசிடர் காரிலிருந்து ஜகதீஷ் டைட்லர் இறங்குவதை பார்த்துள்ளார். பின்னர் ஒரு கும்பலிடம் சென்ற டைட்லர், சீக்கியர்களை முதலில் கொல்லுங்கள் என்றும் பின்னர் கடைகளைச் சூறையாடுங்கள் என்றும் தூண்டிவிட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

    வீடு திரும்பியதும் அப்போது பக்கத்து வீட்டு மாடியில் இருந்து பாதல் சிங், குர்சரண் சிங் ஆகியோரின் உடல்கள் தூக்கி எறியப்படுவதை பார்த்திருக்கிறார். பின்னர் மர வண்டியில் டயர்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் டயர்களைப் பயன்படுத்தி இந்த உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. குருத்வாராவை, வன்முறை கும்பல் தீயிட்டு எரிப்பதையும் அந்தப் பெண் பார்த்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், ஒரு கும்பல் பெட்ரோல் கேன்கள், உருட்டுக்கட்டைகள், வாள்கள் மற்றும் கம்பிகளை எடுத்துச் செல்வதை மற்றொரு சாட்சி பார்த்ததாகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

    குருதாவாரா புல் பங்காஷ் அருகே 1984 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி சீக்கியர்களைக் கொல்லத் தூண்டியதுடன், தடையை மீறி அங்கு கூடிய சட்டவிரோத கும்பலின் ஒரு அங்கமாக ஜெகதீஷ் டைட்லர் இருந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் பதிவாகியுள்ளதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் உறுதிப்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே புல் பங்காஷ் வன்முறை மற்றும் கொலை வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. ஜெகதீஷ் டைட்லருக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தது. 

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, சீக்கியர்கள் படுகொலை பற்றிய கேள்விக்கு “அது 1984-ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று கேட்டதை, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் விமர்சித்தனர்.  

    சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.



    அவர் தனது பதிவில், “சாம் பிட்ரோடாவின் கருத்து ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை அவரிடம் நான் நேரடியாகவும் தெரிவிப்பேன். தனது கருத்துகளுக்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என் தாய் சோனியா காந்தி, நான் உட்பட அனைவரும் விளக்கம் அளித்துவிட்டோம். 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவரம் என்பது மிக மோசமான நிகழ்வு. அது நடந்திருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். 
    சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #antiSikhriots #SajjanKumar
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984  அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய்  பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அசோக் பூஷன்,  நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு  சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்துள்ளதால் சஜ்ஜன் குமாரை ஜாமினில் விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் மீது பரிசீலிக்கவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. #SC #antiSikhriots #SajjanKumar 
    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 88 பேரின் 5 ஆண்டுகால சிறை தண்டனையை உறுதி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்திரவிட்டுள்ளது. #DelhiHighCourt #AntiSikhRiot
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி அவரது சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.

    டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள திரிலோக்புரியில் நடந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.

    இது தொடர்பாக 1984-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி 107 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 88 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 88 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 22 ஆண்டு காலமாக விசாரணை நடந்து வந்தது.

    இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.கே.குப்தா செசன்ஸ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டார். இதன் மூலம் 88 பேரின் 5 ஆண்டுகால சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    எனினும் குற்றவாளிகளில் பலர் விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.#DelhiHighCourt #AntiSikhRiot 
    ×