search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagdish Tytler"

    • புல் பங்காஷ் பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தைத் தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதை ஒரு பெண் நேரடியாகப் பார்த்துள்ளார் எனவும் சிபிஐ கூறியிருக்கிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து டெல்லி உட்பட பல நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் உள்ள புல் பங்காஷ் பகுதியில் நடந்த வன்முறையில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த பாதல் சிங், தாக்கூர் சிங், குர்சரண் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். சீக்கிய குருத்வாரா தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இந்த படுகொலையின் பின்னணியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் அப்போதைய எம்.பி.யுமான ஜெகதீஷ் டைட்லர் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ கடந்த மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஜெகதீஷ் டைட்லர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    ''புல் பங்காஷ் குருத்வாரா பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தைத் தூண்டியுள்ளார். அதன் விளைவாக குருத்வாரா தீயிட்டு எரிக்கப்பட்டது. அதில் 3 சீக்கியர்கள் உயிரிழந்தனர்'' என்று கூறப்பட்டு இருந்தது.

    மேலும், அந்த குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளதாவது:

    ஜெகதீஷ் டைட்லர் கலவரத்தை தூண்டியதை ஒரு பெண் நேரடியாகப் பார்த்துள்ளார். கலவரத்தின்போது அந்தப் பெண்ணின் கணவருக்குச் சொந்தமான கடையை, ஒரு கும்பல் சூறையாடியுள்ளது. அந்தப் பெண் பயந்துபோய் உடனே வீடு திரும்பியிருக்கிறார். அந்த வழியாக வந்த ஒரு அம்பாசிடர் காரிலிருந்து ஜகதீஷ் டைட்லர் இறங்குவதை பார்த்துள்ளார். பின்னர் ஒரு கும்பலிடம் சென்ற டைட்லர், சீக்கியர்களை முதலில் கொல்லுங்கள் என்றும் பின்னர் கடைகளைச் சூறையாடுங்கள் என்றும் தூண்டிவிட்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

    வீடு திரும்பியதும் அப்போது பக்கத்து வீட்டு மாடியில் இருந்து பாதல் சிங், குர்சரண் சிங் ஆகியோரின் உடல்கள் தூக்கி எறியப்படுவதை பார்த்திருக்கிறார். பின்னர் மர வண்டியில் டயர்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் டயர்களைப் பயன்படுத்தி இந்த உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. குருத்வாராவை, வன்முறை கும்பல் தீயிட்டு எரிப்பதையும் அந்தப் பெண் பார்த்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், ஒரு கும்பல் பெட்ரோல் கேன்கள், உருட்டுக்கட்டைகள், வாள்கள் மற்றும் கம்பிகளை எடுத்துச் செல்வதை மற்றொரு சாட்சி பார்த்ததாகவும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

    குருதாவாரா புல் பங்காஷ் அருகே 1984 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி சீக்கியர்களைக் கொல்லத் தூண்டியதுடன், தடையை மீறி அங்கு கூடிய சட்டவிரோத கும்பலின் ஒரு அங்கமாக ஜெகதீஷ் டைட்லர் இருந்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் பதிவாகியுள்ளதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் உறுதிப்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே புல் பங்காஷ் வன்முறை மற்றும் கொலை வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. ஜெகதீஷ் டைட்லருக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தது. 

    ×