search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nerthikadan"

    • 7 நாள் விரதம் இருந்து அரிவாள்கள் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • தயார் செய்யப்பட்ட அரிவாள்களுக்கு பூஜை செய்யப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரிவாள் செய்யும் பட்டறைகள் உள்ளன. இங்கு கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள்கள் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜெயங்கொண்டநிலை பகுதியை சேர்ந்த குடும்பத்தார்கள் சார்பில் நேர்த்திகடனுக்காக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு 18 அடி உயரத்தில், 200 கிலோவில் 2 அரிவாள்கள் செய்ய இங்குள்ள சேகர் அரிவாள் பட்டறையில் உத்தரவு வழங்கப்பட்டது.

    இதனை செய்ய பட்டறை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் 7 நாள் விரதம் இருந்து பணியில் ஈடுபட்டனர். தயார் செய்யப்பட்ட அரிவாள்களுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த அரிவாள்கள் லாரி மூலம் அழகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    • பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் காமராஜர் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா நடந்தது. முன்னதாக மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை துலா கட்டத்தில் புனித நீராடிய பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டி பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த பால்குடத்திற்கு வீடு, வீடாக பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    பின்னர் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. அங்கு பத்ரகாளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.

    • சக்தி கரகம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • அம்மன் வீதி உலா வந்தார்.

    கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உற்சவ விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று சக்தி கரகம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. மின் அலங்கார தேர் பவனியில் அம்மன் வீதி உலா வந்தார். மேலும் பாம்பார்புரம், செல்லபுரம், அப்சர்வேட்டரி, புதுக்காடு ஆகிய இடங்களில் நடந்த மண்டகபடிகளில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    இதேபோல் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தீச்சட்டி எடுத்து பக்தி பரவசத்துடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அலகு குத்தி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர் ஒருவர், 20 அடி நீள அலகு குத்தி வந்து மெய்சிலிர்க்க வைத்தார். பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் பவனியாக வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் இறுதி நாளான வருகிற 20-ந்தேதி மறு பூஜை, பாலாபிஷேகம், பால்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • 7-ந்தேதி தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார்.
    • 16-ந்தேதி விடையாற்றி விழா நடக்கிறது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பிரசித்திப்பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கென்று தனி சன்னதி கிடையாது. ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தீபமாக காட்சி தரும் அம்மனுக்கு வைகாசி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும் திருவிழா பிரசித்திப்பெற்ற திருவிழாக்களுள் ஒன்றாகும்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற நாச்சியார் கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்திலிருந்து அம்மன் கோவிலுக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 27-ந் தேதி வீற்றிருந்த திருக்கோலத்திலும், 28-ந் தேதி தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரத்திலும், 29-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் ஆகாசமாரியம்மன் அருள்பாலித்தார்.

    30-ந் தேதி மதன கோபால அலங்காரத்திலும், 31-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 1-ந் தேதி சேஷ சயன அலங்காரத்திலும், 2-ந் தேதி அம்பாள் அந்தம் வரை வளர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் ஏகாந்த வைபவத்தையொட்டி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று பெரிய திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தல் உள்பட பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    நாச்சியார்கோவில் வீதிகள் அனைத்தும் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து தொட்டில் கட்டியும், பாடை காவடி எடுத்தும், அலகு காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஆகாசமாரியம்மன் அருள்பாலிக்கிறார்.

    7-ந் தேதி (புதன்கிழமை) இரவு தேரில் அம்பாள் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார். அப்போது நின்ற திருக்கோலத்தில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு சமயபுரம் புறப்படுகிறார். வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன் அறங்காவலர்கள் டாக்டர்.எஸ். கோபாலகிருஷ்ணன், டி. ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.

    • தாராபுரத்தில் 7 அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.
    • ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 500 ஆண்டுகள் பழமையான காட்டில் அனுமந்தராயசாமி கோவில் உள்ளது. பொதுவாக ராமர் கோவில்களில் மூலமூர்த்தியாக சீதா, ராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஆஞ்சநேயர் இருப்பது வழக்கம். ஆனால் தாராபுரத்தில் 7 அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா, ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலின் தனி சிறப்பாகும். ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேற்கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே கோவில் இருப்பது இங்கு மட்டுமே. இக்கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்ட விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தையொட்டி தாராபுரம் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பூர்வாதி புண்ணியங்கள் வந்து சேர, நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டி அங்கப்பிரதட்சணம் என்ற மடைபுரலுதல் விநோத நேர்த்திக்கடனை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் பிரகாரத்திற்குள் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ ஆஞ்சநேயரும் பக்தர்களுடன் ஒன்றாக உடன் அமர்ந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவு அருந்தியதாகவும், அவர் சாப்பிட்ட இலையின் மீது படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்வது பூர்வ புண்ணிய நற்பலன்களை கொண்டு வந்து சேர்க்கும் என்ற ஐதீகத்தால் நேர்த்திக்கடன் செலுத்த விரும்பியவர்கள் பொதுமக்கள் அன்னதானம் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது, கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டு உருண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

    எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து, துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயப்பெருமானை உள்ளம் உருக வேண்டிக்கொண்டால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணமாகும். தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் குணமாவதுடன், வியாபார தடைகள், குடும்ப பிரிவினைகள் நீங்கி சுபிட்சம் அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டம் திருதெளிச்சேரி எனும் தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டுதோறும் சித்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொ டங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான நேற்று மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்ன தாக சந்தன காப்பு அல ங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் தங்க மாரிய ம்மனுக்கும் உற்சவருக்கும் மகா தீபாரா தனை காட்டப்பட்டது. தீக்குளி அருகே தங்க மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர். தீமிதியின் போது வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் கோவில் அறங்காவல் குழுவினர்கள், ஊர் பொது நல சங்கம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஆகாசராயர் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

    அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஆகாசராயர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பருவமழை தவறாமல் செய்ய வேண்டும் பொதுமக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும். தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காக 1000 ஆண்டுகளாக அவினாசியை அடுத்து ராயம்பாளையத்திலிருந்து மண்ணால் உருவாக்கப்பட்டு வண்ணம் தீட்டிய குதிரையை அப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சுமந்து வந்து ஆகாசராயர் கோவிலில் வைப்பது வைதீகம்.

    அதன்படி நேற்று ராயம்பாளையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆகாசராயர் கோவிலுக்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மண் குதிரையை சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து ஆகாசராயர் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • ஏப்ரல் 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழா நடக்கிறது.
    • 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழா நடக்கிறது.

    வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம வழிபாட்டுதலமாகவும், சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந்தேதி முதல் காப்பு கட்டுதல், 19-ந்தேதி 2-ம் காப்பு கட்டுதல் நடந்தது. விழா நாட்களில் தொடர்ந்து அம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.

    இந்த கோவிலில் பக்தர்கள் பாடைகாவடி எடுக்கும் நிகழ்வு முக்கிய நிகழ்ச்சியாகும். அதாவது நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து குணமடைய, மகா மாரியம்மனை வேண்டிக்கொள்வர். நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனாக பாடை காவடி எடுப்பர்.

    அதன்படி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பாடைகாவடி நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் கோவில் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றிங்கரையில் இருந்து பச்சை ஓலை படுக்கையுடன், பச்சை மூங்கிலால் பாடைகட்டி இறந்தவரை போல படுக்க வைத்து இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்வர்.

    பின்னர் அந்த பாடை காவடியை அருகிலுள்ள குடமுருட்டி ஆற்று பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கி வந்து, மகா மாரியம்மன் கோவிலை 3 முறை வலம்வந்து தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துவார்கள். நேற்று நடந்த இந்த திருவிழாவில் பாடை காவடி, பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை உள்ளூர் மட்டுமின்று, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலையிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்த நிலையில், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

    முன்னதாக கோவில் கருவறை அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் விசலூர் கிராமத்தில் இருந்து செம்மறி ஆடு கரகம் அழைத்து வரப்பட்டு, கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள செடில் மரத்தில் செம்மரியாடு ஏற்றப்பட்டு 3 முறை வலம் வந்ததன் மூலம் திருவிழா நிறைவடைந்தது.

    நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் மற்றும் செயல் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, மயிலாடுதுறை, பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    வருவாய்த்துறை, இந்துசமய அறநிலையத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் துறை, சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பக்தர்கள் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர்.

    கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகம் நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன் தலைமையில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழாவும், 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழாவும் நடக்கிறது.

    • பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர்.
    • தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    பின்னர் 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து அம்மன் வீதி உலா புறப்பட்டது.

    நேற்று முன்தினம் காலையில் இருந்து சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் இரவில் சிக்கரசம்பாளையம் புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை சிக்கரசம்பாளையம் புதூர் பகுதியில் வீதி உலா சென்றுவிட்டு இக்கரை நெகமம் காலனி பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தாரை, தப்பட்டை முழங்க அம்மனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    பின்னர் அங்கிருந்து அம்மனின் சப்பரம் புறப்படும்போது ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சப்பரம் வரும் வழியில் படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது சப்பரத்தை தூக்கி வந்தவர்கள் மற்றும் பூசாரி ஆகியோர் ஒவ்வொரு பக்தர்களையும் தாண்டியபடி அம்மனின் சப்பரத்தை தூக்கி சென்றனர்.

    இதையடுத்து பக்தர்கள் பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனின் சப்பரம் இரவு வெள்ளியம்பாளையத்தில் உள்ள அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனின் சப்பரம் அங்கு தங்க வைக்கப்பட்டது.

    • அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் உள்ள தமிழர் காலனியை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி அலகு குத்திக் கொண்டும், வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து கொண்டும், பால் குடங்களை சுமந்து கொண்டும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவர். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் 31-ம் ஆண்டாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அழகு குத்திக் கொண்டும், காவடிகளை சுமந்து கொண்டும் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.

    முன்னதாக ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருக பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது.

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம், அக்னி சட்டி எடுத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

    அதே போல உருவபொம்மை, ஆயிரங்கண்பானை, 21 அக்னிச்சட்டி, கரும்புதொட்டிலில் குழந்தைகளை எடுத்துவருதல், கரும்புள்ளி, செம்புள்ளிகுத்தி வருதல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனையும் பக்தர்கள் செலுத்தினார்கள். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக வைகை ஆற்றை சுத்தம் செய்து கூடுதலாக மின்விளக்கு, குடிநீர்வசதி, கழிப்பறைவசதி செய்திருந்தனர்.

    பக்தர்கள் செல்லக்கூடிய இடங்களில் டிராக்டர்களில் வாட்டர் டேங்க் அமைத்து ரோடுகளில் தண்ணீர் தெளித்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சோழவந்தான் முஸ்லிம் ஜமாத் மற்றும் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் பக்தர்களை வரவேற்று பேனர் வைத்திருந்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தது. சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    தேர்த்திருவிழாவையொட்டி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் -விநாயகர் கோவில் உள்ளது. இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேர்திருவிழா 25-ந்தேதி முதல் வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்கள் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா முன்பு சூலக்கல் கிராமத்தை சுற்றியுள்ள 18 கிராமங்களிலுள்ள கோவில்களிலும் 26-ந்தேதி கிடாவெட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடையும் என்பதால் நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்தார்.

    மேலும், பெண்கள் கிராமங்களில் மடிப்பிச்சை எடுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் செஞ்சேரிமலையை சேர்ந்த ஆண் பக்தர் 30 அடி நீல அலகு குத்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். இதேபோல் மேலும் சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் ெசலுத்தினார்கள்.

    கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையில்18 கிராம பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் மஞ்சள் அலங்காரத்தில் இருந்த சூலக்கல் மாரியம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் -விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×