search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பொது ஆவுடையார் கோவிலில் ஆடு, கோழி, நவதானியங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்கள்
    X

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நெல், தேங்காய், ஆடுகளை படத்தில் காணலாம்.


    பொது ஆவுடையார் கோவிலில் ஆடு, கோழி, நவதானியங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்கள்

    • பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருக்கும்.
    • ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரத்தில் (வெள்ளாலமரம்) வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

    மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும். மற்ற நாட்களில் பகலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள்.

    ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் (ஒவ்வொரு திங்கட்கிழமையும்) சோமவார திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி சோம வார திருவிழா தொடங்கியது. விழாவில் வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, பேராவூரணி, தஞ்சை, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, கட்டுமாவடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள், பரக்கலக்கோட்டைக்கு இயக்கப்பட்டன.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு தாங்கள் கொண்டு வந்த ஆடு, கோழி, நெல், தேங்காய், உளுந்து, நவதானியங்கள், தென்னங்கன்று, மாங்காய், பலாப்பழம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு மத்தியபுரீஸ்வரர் வீற்றிருக்கும் ஆலமரத்தின் இலையும், விபூதியும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 6 மணிக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் பொருட்கள் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்பட்டது. நேற்று கடைசி சோம வார திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். இவை ஏலம் விடப்பட்டன.

    வெளியூரில் இருந்து வருகை தந்த பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை உதவி ஆணையர் நாகையா தலைமையில் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் செயல் அலுவலர் வடிவேல் துரை, பரம்பரை அறங்காவலர்கள் ராதா, முரளிதரன், ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம், மற்றும் பரக்கலக்கோட்டை கிராமவாசிகள், ஊர் பிரமுகர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×