search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா: அரிவாள்களை நேர்த்திக்கடனாக செலுத்திய பக்தர்கள்
    X

    பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட அரிவாள்கள்.

    கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா: அரிவாள்களை நேர்த்திக்கடனாக செலுத்திய பக்தர்கள்

    • இந்த கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
    • ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்கள் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

    இந்த கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமியிடம், பக்தர்கள் தங்களுடைய குறைகளை தீர்க்கும்படி வேண்டி கொள்வார்கள். அந்த குறைகள் தீர்ந்ததும், கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர்.

    பொதுவாக காணிக்கையாக செலுத்தப்படும் அரிவாள்கள் இரும்பு தகடுகளால் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஒருசில பக்தர்கள் தங்கத்திலான அரிவாள்களையும் சாமிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை, பரம்பரையாக அந்த ஊரில் அரிவாள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 3-ந்தேதி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது.

    இ்தையொட்டி காணிக்கை செலுத்துவதற்கு அரிவாள் செய்யும் பணி கடந்த மார்கழி மாதம் 1-ந்தேதி தொடங்கியது. இதற்காக விரதம் இருந்து தொழிலாளர்கள் அரிவாள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து திருவிழாவில் கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக அரிவாள் செய்தவர்களின் வீட்டில் மொத்தமாக வைக்கப்பட்டு இருந்த அரிவாள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் கோவில் சாமியாடிகள், பூசாரிகள் மற்றும் விரதமிருந்த பக்தர்கள் மேளதாளம், வாணவேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆயிரக்கணக்கான அரிவாள்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோட்டை கருப்பணசாமி கோவிலில் அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டன. இதில் குறைந்தபட்சம் 2 அடி முதல் 15 அடி உயரம் கொண்ட அரிவாள்கள் இடம்பெற்றிருந்தன.

    இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்கள் பக்தர்களால் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×