என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவெக"

    • நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
    • பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பொறுப்பு வழங்கி விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாஞ்சில் சம்பத்திற்கு தவெகவின் பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர். அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள், தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார்.

    மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவர், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.
    • தவெக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.

    சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில்,

    சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவையில் ரோடு-ஷோ சென்று மக்களை சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது.
    • 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.

    கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். விஜய் பங்கேற்ற கூட்டங்களில் திரளாக மக்கள் பங்கேற்று ஆதரவு அளித்தனர்.

    3-வது நிகழ்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் திறந்த வேனில் நின்றபடி அவர் மக்களை சந்தித்து உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அலைகடலென த.வெ.க. தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

    அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. த.வெ.க. சார்பில் உள் அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.

    காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உள்ளரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.

    இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டம் பக்கத்து மாநிலமான புதுவையில் நடைபெறுகிறது. புதுவையில் ரோடு-ஷோ சென்று மக்களை சந்திப்பதாக முதலில் திட்டமிடப்பட்டது.

    ஆனால் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி புதுவை போலீசார் ரோடு-ஷோவுக்கு அனுமதி அளிக்கவில்லை. ரோடு ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டத்தை நடத்தி கொள்ளுமாறு த.வெ.க. நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான அனுமதியை கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சரான நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தார். இதையடுத்து விஜய்யின் பிரமாண்ட பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுவை உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    துறைமுக வளாகத்தில் மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்றி மண் கொட்டி, சமப்படுத்தினால்தான் கூட்டத்தை நடத்த முடியும் என்பதால் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    துறைமுக வளாகத்தின் முழு பகுதியையும் வழங்க முடியாது. ஹெலிகாப்டர் இறங்கும் தளம் உள்ள பகுதியை மட்டுமே பொதுக்கூட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

    5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், முதல்-மந்திரி ரங்கசாமியை சந்தித்து, துறைமுக வளாகத்தின் முழு பகுதியையும் பொதுக்கூட்டம் நடத்த வழங்கும்படியும், 10 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதிக்கும்படியும் கோரினார். இதைத் தொடர்ந்து த.வெ. க.வின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து துறைமுக வளாகம் முழுவதும் தண்ணீரை வெளியேற்றி சமன் செய்யும் பணி தொடங்கி உள்ளது. டிராக்டர்கள் மூலம் மணல் கொட்டப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் துறைமுக வளாகம் தண்ணீர் தேங்காதவாறு சமன்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் மேடையும், தொண்டர்களை பார்ப்பதற்காக, நடந்து வந்து செல்வதற்கு பாதையும் அமைக்கப்படும். ஆனால் புதுவை பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கப்படவில்லை.

    அதற்கு பதிலாக விஜய் பிரசார வாகனத்தில் இருந்தே பேச உள்ளார். இதற்காக வருகிற 8-ந்தேதி இரவு பிரசார வாகனம் புதுவைக்கு வருகிறது. துறைமுக வளாகத்தில் ஹெலிபேடு தளத்தில் வாகனம் நிறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த பகுதியிலும் தொண்டர்கள் நின்றபடியே விஜய் பேச்சை கேட்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கியூ.ஆர்.கோடுடன் 10 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க உள்ளனர். 1000 பேர் நிற்பதற்கு ஒரு பாக்ஸ் என 10 பாக்ஸ் தடுப்பு கட்டைகளுடன் அமைக்கப்பட உள்ளது. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் நிறுத்த தனிபகுதி ஒதுக்கப்படுகிறது. தற்போது துறைமுக வளாகத்தின் நுழைவுக்கு ஒரு வாசல் மட்டுமே உள்ளது. கூட்டம் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் வசதியாக மேலும் 2 வாசல்கள் காம்பவுண்ட் சுவரை உடைத்து அமைக்கப்பட உள்ளது.

    9-ந்தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 45 நிமிடம் த.வெ.க. தலைவர் விஜய் பேச திட்டமிட்டுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த வரைபடத்துடன் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், போலீசாருடன் ஆலோசனை மேற்கொண்டார். 2 மாதத்துக்கு பிறகு புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆணவம், உண்மை மறைக்கும் கற்பனை உலகில் வாழ கூடாது.
    • இளைஞர்களின் எழுச்சி நாயகனாக தலைவர் விஜய் திகழ்கிறார்.

    கோபி:

    கோபியில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்ட அமைப்பு செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம், மாவட்ட அலுவலகங்களில் நடைபெறுகிறது. தலைமை உத்தரவின் படி, அம்பேத்கர் புகழை போற்றும் வகையில் நடைபெறுகிறது.

    ஆணவம், உண்மை மறைக்கும் கற்பனை உலகில் வாழ கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாக தலைவர் விஜய் திகழ்கிறார். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் எழுச்சி நாயகன் மட்டும் அல்ல தமிழ்நாட்டின் எதிர்கால சக்தியாக உருவாகி உள்ளார் என்றார். 

    • கொள்கை எதிரி என பாஜகவை கூறியதில் இருந்து விஜய் பின்வாங்கவில்லை.
    • மல்லை சத்யா அழைத்தார். நான்தான் திராவிட வெற்றிக் கழகத்தில் இணையவில்லை.

    தவெக தலைவர் விஜய் பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறினாலும், திமுகவை விமர்சனம் செய்யும் அளவிற்கு அவர்களை விமர்சனம் செய்வது இல்லை. மேலும் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் அந்தளவு விமர்சித்ததில்லை எனவும் நீண்ட நாட்களாகவே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. 

    மேலும் விஜய், பாஜகவின் 'சி' டீம் எனவும் திமுகவால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். மௌனம் பாஜகவின் ஆதரவு மனநிலை என்று எடுத்துக்கொள்ளலாமா எனவும் பலநாட்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதன் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    இந்நிலையில் இதற்கான விளக்கத்தை இன்று தன் கட்சியில் இணைந்த புதிய நிர்வாகி நாஞ்சில் சம்பத்திடம் பகிர்ந்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், 

    "கொள்கை எதிரி என பாஜகவை கூறியதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. பாஜக ஆதரவு தொடர்பான விமர்சனங்கள் குறித்து விஜய்யிடம் பேசினேன். அதற்கு, "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் கட்சி. தேர்தல் இங்கு நடக்கப்போகிறது. அதனால் திமுகவை கூர்மையாக விமர்சிக்கிறேன். பாஜகவிற்கு நேரம் வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.

    மல்லை சத்யா அழைத்தார். நான்தான் திராவிட வெற்றிக் கழகத்தில் இணையவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது. திமுகவில்தான் ஆயுள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனால் வைகோ வெளியேறியதால் வெளியேறினேன். அவர்கள் என்னை நீக்கவில்லை. நான் பிரச்சாரம் செய்தே வாழ்ந்தவன் என்பதால், அந்த வாய்ப்பை விஜய்யிடம் கேட்டுள்ளேன். திமுகவையும், பாஜகவையும் ஒரேநேரத்தில் எதிர்க்கும் துணிச்சலையே நான் பாராட்டுகிறேன். எதிர்ப்பவர் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும்." என தெரிவித்தார். 

    • தவெகவில் திராவிடம் உள்ளது.
    • தேர்தல் அறிக்கை வரும்போது விஜய் கொண்டுவரும் மாற்றங்கள் குறித்து தெரியவரும்.

    திமுக, மதிமுக, அதிமுக என தமிழ்நாட்டின் மூத்த கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத் இன்று தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 

    "ஜெயலலிதா மறைந்தபின் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தேன். பெரியார், அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார். என்னைப் பார்த்து நான் உங்கள் ரசிகர் என விஜய் கூறினார். உடனே மெய்சிலிர்த்து போனேன். தொலைக்காட்சி தொடர் ஒன்றில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். அதிலிருந்து என்னை வசைபாடினார்கள். இதனால் மனமுடைந்துபோனேன்.

    திமுகவின் அறிவுத் திருவிழாவில் திட்டமிட்டு என்னை நிராகரித்தனர். எந்த பரிந்துரைக்கும் திமுகவினர் முன் நான் சென்று நிற்பதில்லை. கேட்டால் சைக்கிள்கூட தரமாட்டார்கள். கடந்த கால காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். தவெகவில் இணைந்துள்ளேன். உற்சாக மனநிலையில் உள்ளேன்." என தெரிவித்தார். 


    விஜய்யுடன் நாஞ்சில் சம்பத்

    தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

    "நான் இயங்குவதற்கான வாய்ப்பை விஜய் வழங்கியிருக்கிறார். தவெகவில் திராவிடம் உள்ளது. பெயரில் இல்லாமல் இருக்கலாம். தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் ஒன்றுதான். திராவிட இயக்கத்தின் நீட்சியாகவே விஜய்யை பார்க்கிறேன். தேர்தல் அறிக்கை வரும்போது விஜய் கொண்டுவரும் மாற்றங்கள் குறித்து தெரியவரும். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்திருக்கும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம்தான்.

    இளைஞர்களை வைத்துக்கொண்டு அதிரடி மாற்றங்களை செய்வதற்கு விஜய்யிடம் திட்டம் இருக்கிறது என நம்புகிறேன். திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக ஏன் பேசவில்லை என்பது குறித்து விஜய்யிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அதுகுறித்து விஜய் பேசாமல் இருப்பது ஒருவகையில் நல்லது. இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், ஒரு தரப்புக்கு எதிராகவும் கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது." என தெரிவித்தார். 

    • மதிமுக மேடைகளில் அதிகம் முழங்கியவர்.
    • திமுகவில் இணைய ஆர்வம் காட்டினார். ஆனால் திமுகவால் கண்டுகொள்ளப்படவில்லை.

    மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் தலைவர் விஜய் முன்னணியில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த நாஞ்சில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். திராவிட சித்தாந்தம் கொண்ட இவர் தவெகவில் இணைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய விஷயம்.

    யார் இந்த நாஞ்சில் சம்பத்?

    துரை வைகோ போலவே எப்போதும் கழுத்தில் துண்டுடன் இருப்பவர் நாஞ்சில் சம்பத். மதிமுக மேடைகளில் அதிகம் முழங்கியவர். முதலில் திமுகவில் இருந்த இவர் வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய பொழுது, அவருடன் இணைந்து வெளியேறியவர். பின் மதிமுகவில் 19 ஆண்டுகள் பயணித்தார். அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் திமுகவில் இணைய ஆர்வம் காட்டினார். ஆனால் திமுகவால் கண்டுகொள்ளப்படவில்லை. பின் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். 


    • பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு பேசினார்.

    தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளை பல மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கவனிக்க தொடங்கி விட்டனர். இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய்க்கு கரூர் சம்பவத்திற்கு பிறகு சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போது கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையனால் புத்துயிர் ஏற்பட்டு உள்ளது என்றே கூறலாம்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

    • சுமார் 4 மணி நேரம் இரண்டு பேரும் அரசியல் குறித்து விரிவாக விவாதித்து உள்ளனர்.
    • எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் காங்கிரஸ் மீதான ஈர்ப்பு இருந்துள்ளது.

    திருச்சி:

    தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தல் வரும் போதெல்லாம், ஒருமுறை அந்த கட்சி, மறுமுறை இந்த கட்சி என்ற நிலையே கடந்த கால வரலாறாக இருந்து வந்துள்ளது. ஆனால் வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தல் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    எப்போதுமே தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு வரிந்து கட்டி களப்பணிகளை தொடங்கும் அரசியல் கட்சிகள் எப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலுக்காக ஓராண்டுக்கு முன்னரே தயாராகி விட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் 'மக்கள் சந்திப்பு' என்ற கருப்பொருளுடன் பயணங்களை தொடங்கி விட்டனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.வெ.க. ஆகிய கட்சி தலைவர்கள் வாகனங்களுடன் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க.வும் கட்சியை பலப்படுத்தி அதற்கேற்றவாறு அரசின் சாதனைகளை கூறி மக்கள் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    தற்போது வரை 4 முனை போட்டி என்று கணிக்கப்பட்ட நிலையில் வரும் காலங்களில் அது மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய், தங்கள் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் யாரும் தங்களுடன் சேரலாம் என்று தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்க்க பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆனால் அந்த கனவு பொய்த்து விட்டது. ஏற்கனவே விஜய் தமது அரசியல் எதிரி தி.மு.க., கொள்கை எதிரி பா.ஜ.க. என கொள்கை முழக்கமிட்டு வந்தார். ஆகவே பா.ஜ.க. இடம்பெற்றுள்ள கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்பது தெள்ளத்தெளிவானது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து விஜயுடன், ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு அரை மணி நேரம் பேசி ஆறுதல் தெரிவித்தார். இது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கரூர் எம்.பி. ஜோதிமணி, 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் காங்கிரசில் சேர ராகுல் காந்தியை சந்தித்ததாக புது குண்டை தூக்கி போட்டார். அதன்பின்னர் கரூரில் மீண்டும் அக்கட்சியின் மாநில நிர்வாகி அருள் ராஜை அவர் சந்தித்தார்.

    இந்த நிலையில் தற்போது விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான திருச்சி வேலுச்சாமியை சந்தித்து பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக எஸ்.ஏ.சந்திரசேகர் விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    இந்த திருமணத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமிக்கும் அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர் இருவரும் ஒரே காரில் திருவாரூர் புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் அதே காரில் அவர்கள் திருச்சி விமான நிலையம் வந்தனர். சுமார் 4 மணி நேரம் இரண்டு பேரும் அரசியல் குறித்து விரிவாக விவாதித்து உள்ளனர்.

    எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட காலமாக வேலுச்சாமி உடன் தொடர்பில் இருந்து வந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு காமராஜர் குறித்து திருச்சி வேலுச்சாமி வைக்கும் வாதங்களை பார்த்து அவ்வப்போது பாராட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் காங்கிரஸ் மீதான ஈர்ப்பு இருந்துள்ளது.

    தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி தொடர்பாக அவர்கள் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியிடம் கேட்ட போது, எஸ்.ஏ.சந்திரசேகர் எனது நீண்ட கால நண்பர். திருவாரூர் திருமண நிகழ்வில் எனக்கும் அழைப்பு வந்ததை அறிந்த அவர் என்னை தொடர்புகொண்டு பேசி என்னை திருச்சியில் சந்தித்தார். இது வழக்கமான சந்திப்பு தான். கூட்டணியை தலைமை தான் முடிவு செய்யும். நான் சொல்வது முறையல்ல.

    திருவாரூர் திருமண நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பழனிசாமியின் மகன், இரண்டு முறை எம்.பி.யாக இருந்த எம்.ஜி.முருகையா மகன், காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்த பூம்புகார் சங்கர் மகன் ஆகிய மூன்று பேரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றுவதை நான் பார்க்க நேர்ந்தது. அவர்களின் தந்தைகளுடன் நான் தொடர்பில் இருந்ததால் அவர்கள் வந்து என்னிடம் நலம் விசாரித்தனர்.

    இதன் மூலம் விஜய் இளைஞர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது என்றார். அதேபோல் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதில் அமைய உள்ள அரசியல் கூட்டணி குறித்தும் விரிவாக பேசியுள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தேசிய கட்சியான பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்தது போல், முதன்முறையாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வும் தேசிய கட்சியான காங்கிரசுடன் கூட்டணி வைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்தநிலையில்தான் த.வெ.க. தலைவர் விஜய்யின் தந்தை, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியை சந்தித்து பேசியது தற்போதைய அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க த.வெ.க. காய் நகர்த்துகிறதா? என்பது அடுத்துவரும் அரசியல் களம்தான் முடிவு செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    • புதுச்சேரியில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
    • பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

    புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் என்.ஆர். காங்கிரசோடு இணைந்து புதுச்சேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான ராங்கசாமியோடு பேச்சுவார்த்தை நடத்த த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் முயற்சித்து வருகிறார்.

    இந்தநிலையில் புதுவையில் செயல்படுத்த வேண்டிய பல திட்டங்கள் கிடப்பில் உள்ளதால் பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

    அதற்கு பா.ஜ.க கூட்டணியில் நீடித்தால் தான் சரியாக இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் புதுச்சேரியில் தனித்து போட்டியிட த.வெ.க. தயாராகி வருகிறது.

    இங்கு ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.கவின் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ்- தி.மு.க.வின் இந்தியா கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில் சார்லஸ் மார்டினும் புதிய கட்சி தொடங்கி போட்டியிட உள்ளார்.

    இதனால், புதுச்சேரியில் 5 முனை போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.


    • புதுச்சேரி காவல்துறை நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.
    • கூட்டத்தில் காவல்துறை சார்பில் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த பல்வேறு காரணங்களை விளக்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் 5-ந்தேதி ரோடு ஷோ நடத்த முடிவு செய்து காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது.

    கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    புதுச்சேரி மாநிலம் சென்னை ஐகோர்ட்டுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இதனால் ஐகோர்ட்டு உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். இதனால் புதுச்சேரி காவல் துறை ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தது.

    ஆனால் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் உள்ள தனது செல்வாக்கை பயன்படுத்தி, ரோடு ஷோ நடத்த அனுமதி பெற பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இதற்காக பல முறை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். இருப்பினும் புதுச்சேரி காவல்துறை நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நேற்றைய தினம் சட்டசபை வளாகத்தில் ரோடு ஷோ தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐ.ஜி. அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., த.வெ.க. பொதுச்செயலாளர்கள் புஸ்சி ஆனந்து, ஆதவ் அர்ஜூனா, முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் காவல்துறை சார்பில் விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த பல்வேறு காரணங்களை விளக்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து கட்சித் தலைவர் விஜய்யிடம் பேசி தகவல் தெரிவிப்பதாக த.வெ.க.வினர் கூறிச் சென்றனர். இதனிடையே டிட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்கள் தொடர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதனால் புதுச்சேரிக்கு 5-ந்தேதி விஜய் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் வருகையை எதிர்பார்த்திருந்த புதுச்சேரி த.வெ.க. தொண்டர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

    ×