என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருநெல்வேலி அருகே அருகன்குளம் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி அருகே அருகன்குளம் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் கோவில். இந்த ஆலயம் ஜடாயு தீர்த்த கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருப்பது விசேஷமானதாகும். ஜடாயு தீர்த்த கிணற்றில், லட்சுமி நாராயணர் சிலை உள்ளது. அதேபோல் கோவிலின் கர்ப்பக்கிரகத்திலும் லட்சுமி நாராயணர் சிலையும், ஜடாயு சிலையும் இருக்கிறது.

    அயோத்தி மன்னன் தசரதனின் மகன் ராமன். இவர், விசுவாமித்திரரின் யாகத்துக்கு தடையாக இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்தார். அதோடு கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு சாப விமோசனமும் கொடுத்தார். பின்னர் மிதிலை நகர் சென்று, அங்கு ஜனகர் மாளிகையில் இருந்த சிவ தனுசை உடைத்து சீதையை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

    ராமனுக்கு, அயோத்தி மன்னராக முடிசூட்ட வேண்டும் என்று தசரதர் நினைத்தார். அந்த நேரத்தில் தசரதரின் 2-வது மனைவி கைகேயி, தனது மகன் பரதன் நாடு ஆள வேண்டும், ராமன் 14 வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என்று கூறினார்.

    இதையறிந்த ராமன் தனது மனைவி சீதை, தம்பி லட்சுமணருடன் வனவாசம் சென்றார். அப்படி வனத்தில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இலங்கை வேந்தன் ராவணன் வந்து சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். அப்போது சீதை தன்னை ராவணன் கடத்தி செல்கின்ற வழிப்பாதையை ராமரும், லட்சுமணரும் அறிய வேண்டும் என்று வழிநெடுகிலும் தனது ஆபரணங்களை கழற்றி வீசிக்கொண்டே சென்றாள்.

    தற்போது ஆலயம் இருக்கும் இடத்தின் அருகில் வந்தபோது, சீதையை ராவணன் கடத்தி செல்வதை அறிந்த கழுகு அரசன் ஜடாயு, ராவணனுடன் போர் புரிந்தார். இந்த போரில் ராவணன், ஜடாயுவின் இறகை வெட்டினான். இதில் ஜடாயு வுக்கு உயிர் போகும் நிலை ஏற்பட்டது. அப்போது சீதை, “நான் என் கணவருக்கு உண்மையானவள் என்றால், அவர் வரும் வரை ஜடாயு உயிரோடு இருக்க வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டினாள்.

    அதேபோல் சீதையை தேடி ராமனும், லட்சுமணனும் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்த ராமன், அவரை தனது மடியில் தூக்கி வைத்து தடவிக்கொடுத்தார். அப்போது ஜடாயு ராமரிடம், சீதையை ராவணன் கடத்தி செல்கிறான் என்ற விவரத்தை கூறியது. மேலும், “நான் இறந்தவுடன் நீங்கள்தான் இறுதிக்கடன் செய்ய வேண்டும், எனக்கு புண்ணிய தீர்த்தம் கொடுக்க வேண்டும், லட்சுமி நாராயணராக காட்சி கொடுக்க வேண்டும்” என்று ராமனை வேண்டினார்.

    அதன்படி, இத்தலத்தில் ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், சிவ தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களை உருவாக்கி ஜடாயுவுக்கு ராமன் புனிதநீர் கொடுத்தார். மேலும் லட்சுமி நாராயணராக காட்சி கொடுத்து ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தார். அப்படி லட்சுமி நாராயணராக காட்சி கொடுத்த இடத்தில்தான் இந்த லட்சுமிநாராயணர் கோவில் உள்ளது என்று புராண வரலாறு கூறுகிறது. இந்த கோவிலுக்கு அருகில் தாமிரபரணி ஆற்றில் ஜடாயுவுக்கு ராமர் தர்ப்பணம் கொடுத்த ஜடாயுத்துறை உள்ளது.

    இந்தக் கோவிலில் உள்ள 3 தீர்த்தங்களிலும் நீராடி பெருமாளை வணங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த 3 தீர்த்தங்களிலும் உள்ள தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் உள்ள ஜடாயுத்துறையில் கலக்கிறது. அங்கு இறந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் மோட்சத்துக்கு செல்வார்கள் என்பது ஐதீகம். எனவேதான் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஜடாயு தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் செய்ய மக்கள் அதிகளவில் இங்கு வருவார்கள். ஆடி அமாவாசையன்று ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் மிகப்பெரிய சிறப்பு என்பதால் அன்று மக்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த கோவில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும் திறந்து இருக்கும்.

    இந்த கோவிலுக்கு அருகில் ராமலிங்கசுவாமி கோவில், காட்டுராமர் கோவில், எட்டெழுத்து பெருமாள் கோவில், கோசாலை கோபால கிருஷ்ணர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

    திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து கோவிலுக்கு மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

    புலவனூரான்
    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இதன் பழங்காலப் பெயர் ‘பட்சி தடாகம்’ என்பதாகும். ‘பட்சி’ என்றால் குருவி. ‘தடாகம்’ என்றால் குளம் என்று பொருள்.

    இயற்கையாகவே எழில் நிறைந்த செழுமையான ஊராக குருவிகுளம் விளங்குகிறது. இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மனே, இங்கு வந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். எனவே குருவிகுளம் தென் மதுரை என்றும் போற்றப்படுகிறது.

    தமிழகத்தில் 72 பாளையங்கள் என்னும் ஜமீன்தார்கள் இருந்தனர். இவர்களில் ராயல் ஜமீன் என்று அழைக்கப்பட்டது, குருவிகுளம் ஜமீன்தார்தான். இந்த ஜமீன் பகுதியை, பெம்மசானி வம்சத்தினர் ஆண்டு வந்தனர். சுமார் 400 வருடங் களுக்கு முன் குருவிக்குளத்தில் ஆலயங்கள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தப் பகுதியில் இருந்த குருவிகுளம் ஜமீன்தார், வில்லு வண்டியில் கழுகுமலை முருகன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம்.

    கழுகுமலை முருகன் கோவில் எட்டயபுரம் ஜமீன் நிர்வாகத்துக்குள்ளே இருந்தது. எனவே அவருக்கு தான் அங்கு முதல் மரியாதை வழங்கப்படும். எனவே குருவிகுளம் ஜமீன்தார் அங்கு செல்லும் சமயங்களில் எல்லாம், எட்டையபுரம் ஜமீன்தாருக்காக காத்திருந்து தெய்வத்தை வழிபட வேண்டிய நிலை உருவானது. இது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு நாள் நீண்ட நேரம் எட்டயபுரம் ஜமீன் கோவிலுக்குள் இருந்த காரணத்தினால், குருவிகுளம் ஜமீன்தார் கோவிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டார்.

    இதனால் மனம்நொந்து போன குருவிகுளம் ஜமீன்தார், தனது அரசவையை கூட்டி, குருவி குளத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படி ஆலயம் நிர்மாணம் செய்தால், அதற்கு கருவறையில் வைக்க மூலவர் சிலை வேண்டும். எனவே காசிக்குச் சென்று காசி விஸ்வநாதர் சிலையையும், காசி விசாலாட்சி சிலையையும் எடுத்து வரவேண்டும் என ஜமீன்தார் ஏற்பாடு செய்தார்.

    ஆனால் இறைவனின் கணக்கு வேறாக இருந்தது. அன்று இரவு ஜமீன்தார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, “நீ ஏன் காசிக்கு செல்லப் போகிறாய்? மதுரை மீனாட்சியான நானே அருகில் உள்ள கிணற்றில் இருக்கிறேன். அந்த சிலையைக் கொண்டு வந்து நீ கட்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்” என கூறினார்.

    “அதை எப்படி கண்டுபிடிப்பது?” என்று ஜமீன்தார் வினா எழுப்பிய போது, “ஓரிடத்தில் கருடன் வட்ட மிடும். அவ்விடத்தில் தான் நான் இருப்பேன்” என்றும் கூறியிருந்தார்.

    மறுநாள் விடிந்தது. ஜமீன்தார் தன்னுடைய படையுடன் கனவில் மீனாட்சி அம்மன் கூறிய இடம் நோக்கி சென்றார். கழுகுமலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் செட்டிகுறிச்சி எனும் ஊரில் உள்ள கிணற்றின் மீது கருடன் வட்டமிட்டது. உடனே செட்டிகுறிச்சி ஊர்மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி பார்த்த போது, அங்கு மீனாட்சி அம்மன் சிலை கிடைத்தது. அந்த சிலையை மேளதாளம் முழங்க குருவிகுளம் கொண்டு வந்தார் ஜமீன்தார். சிலையை குருவிகுளம் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்.

    ‘நாம் அமைத்த ஆலயத்திற்குள் மீனாட்சி அம்மன் வந்து விட்டார். சொக்கநாதர் எந்த ரூபத்தில் வர இருக்கிறாரோ’ என்று காத்துக் கொண்டிருந்தார் ஜமீன்தார்.

    ஒருசமயம் குருவிகுளம் குளத்தின் அருகில் மந்தை வெளியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கண்ணில் மணலில் புதையுண்டு கிடந்த பல சிலைகள் தென்பட்டன. அவர்கள் உடனே ஊருக்குள் சென்று பெரியவர்களை அழைத்து வந்து காட்டினர். அவற்றைத் தோண்டி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மண்ணில் இருந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, சுந்தரேஸ்வர் ஆகியோரது சிலைகள் கிடைத்துள்ளன.

    இதனால் குருவிகுளம் கோவிலில் மூலவராக சுந்தரேஸ்வரரையும், பிரகாரத்தில் காசி விஸ்வ நாதர், விசாலாட்சியையும் பிரதிஷ்டை செய்தனர். ஜமீன்தார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ‘நாம் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் கொண்டுவர முடிவு செய்தோம். ஆனால் மீனாட்சி அம்மன் இங்கு அருளாட்சி புரிவதாக வந்து சேர்ந்தார். அதே நேரத்தில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் கூட வந்து சேர்ந்து விட்டார்களே’ என்று ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    தொடர்ந்து ஆலயங்களுக்கு பல திருப்பணிகளை ஜமீன்தார் செய்தார். அவரது வாரிசுகளும் கோவிலையும், பிரகாரத்தையும் கட்டி, உற்சவ மூர்த்திகள் வலம் வர வாகனங்களையும் உருவாக்கினார்கள். இந்த ஆலயத்தைச் சுற்றி மதுரையைப் போலவே ரத வீதிகள், மாடவீதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் திருவிழா நடைபெறும் போது இங்கும் திருவிழா நடத்தப்படுகிறது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ள பிரமாண்டமான இந்த கோவிலைக் காண கண்கோடி வேண்டும்.

    இந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால், மதுரை மீனாட்சி அம்மனையும், காசி விஸ்வநாதரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த பகுதியிலேயே பெரிய தேர் குருவிகுளம் தேர் தான். இந்த தேர் ஓடி வரும் அழகே கண்கொள்ளா காட்சியாகும். பிற்காலத்தில் 1920-ல் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலில் ஜமீன்தார்களுக்கு திருவிழாவில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்படும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பதினோறு நாட்களும் மண்டகப்படி சார்பாக சாமி வீதி உலா நடைபெறும். மதுரையில் நடைபெறும் அதே வேளையில் இங்கு தேரோட்டமும் மிகவும் சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது. புரட்டாசி மாத நவராத்திரி, திருவாதிரை ஆருத்ரா தரிசனம் மற்றும் மகா சிவராத்திரியும் பக்தர்களின் உதவியோடு நடைபெற்று வருகிறது. சித்திரை 10 நாட்கள் திரு விழாவில், தேரோட்டம் நடைபெறும்.

    இந்த தேரை குருவிகுளம் அரண்மனை மன்னர் பெண் வழி வம்சா வழி வாரிசுதாரர்கள், வடம் பிடித்து கொடுப்பர். 10 சமுதாய மண்டகப்படி கட்டளைதாரர்கள், சமூகத்தினர், இதில் பங்கு பெற்று தேரை வடம் பிடித்து இழுப்பர். நான்கு வீதிகளை கடந்து தேர் நிலைக்கு வரும்போது, அரண்மனை வாசலின் வடக்கு ரத வீதியில், தேர் நிற்கும். அப்போது அரண்மனை மன்னர் சமஸ்தானத்தைச் சார்ந்த, குடும்பத்தினருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துவார்கள். அந்த நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுவது, மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் அருள்தான்.

    திருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். மேலும் நவக்கிரக பலன்கள் கிடைக்கும். செய்வினை மாந்தீரிகம், துஷ்ட சக்திகள், நம்பிக்கை மோசடியில் இருந்து தப்பிக்கலாம். குடும்ப விருத்தி. குடும்ப ஒற்றுமை. பிரிந்தவர்கள் ஒன்றுசேர. வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் இந்த ஆலயத்தினை வணங்கி நிற்கலாம். வீடு, வாசல், மண்ணு, மனை, தொழில் விருத்தி அடைய இக்கோவிலில் அருளும் மீனாட்சியை வணங்கலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம் செய்கிறார்கள். கல்வி பெறவும், நோய் நொடிகள் தீரவும் இங்கு வந்து வழிபடுவது நன்மை தரும்.

    இந்த கோவிலில் முற்காலத்தில் எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது தெரிய வில்லை. தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணி நடந்து வருகிறது. இந்த திருப்பணியில் பொதுமக்கள் பங்கெடுத்து வருகிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    இக்கோவிலுக்கு வர திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோ மீட்டரிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 27 கிலோ மீட்டரிலும் பஸ் வசதி உள்ளது. திருவேங்கடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

    முத்தாலங்குறிச்சி காமராசு
    நாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில். இங்கு ஒரே சன்னிதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
    நாகை மாவட்டத்தில் ‘நூபரநதி’ என்னும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ளது புலீஸ்வரி அம்மன் திருக்கோவில். இங்கு ஒரே சன்னிதியில் 7 அம்மன்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். சப்த கன்னியர்களே இங்கு வீற்றிருந்து அருள்கின்றனர். இதில் புலீஸ்வரி என்ற அம்மனாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். மற்ற ஆறு தேவியர்கள் முறையே பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வாராயி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஆவர்.

    கொள்ளிட நதிக்கரையில் தீத்துக்குடி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அம்மன் பக்தர் இருந்தார். அவரது கனவில் தோன்றிய 7 அம்மன்களும், தாங்கள் ஒரு வனத்துக்குள் இருப்பதாகவும், தங்களை மீட்டுக் கொண்டு வந்து கொள்ளிட நதிக்கரையில் இருக்கும் புலிகள் நடமாட்டம் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பும்படியும் கூறினர்.

    அதன்படி அந்த பக்தர், பொதுமக்களோடு சேர்ந்து குறிப்பிட்ட இடத்தில் இருந்து 7 அம்மன் சிலைகளை கொண்டு வந்தார். பின்னர் புலிகள் நடமாட்டம் உள்ள, யாரும் செல்ல முடியாத ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தனர். புலிகள் மிகுந்த பகுதி என்பதால் இங்கு பிரதானமாக இருக்கும் வைஷ்ணவி தேவிக்கு ‘புலீஸ்வரி’ என்று பெயரிடப்பட்டது. தற்சமயம் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.

    ஏழு அம்மன்களும் கொள்ளிட நதிக்கரைக்கு வந்த நாள் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் ஆகும். எனவே அந்த நாளில் இங்கு 11 நாள் உற்சவம் நடைபெறுகிறது. இந்த விழாவின் போது, ஆயிரக்கணக்கான காவடிகள் கொள்ளிட நதிக்கரையில் இருந்து புறப்பட்டு இந்த அம்மன் ஆலயத்தை வந்தடையும். அதுதவிர பால்குடங்கள் பலவிதமான நேர்த்திக்கடன்கள் இந்த அம்மனுக்கு செய்யப்படுகிறது.

    இது தவிர வைகாசி விசாகம், ஐயப்பனுக்குரிய மகரஜோதி தரிசன நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஐயப்ப பக்தர்கள் பலர் இந்த ஆலயத்தில் இருந்து இருமுடி கட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வருகிறார்கள்.

    இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பே, திருமணம்தான். இங்கு அனைத்து முகூர்த்த நாட்களிலும் திருமணம் நடைபெறுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இங்கு திருமணம் செய்து கொண்டால், சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதேப் போல் திருமண தடை உள்ள ஆண்- பெண் இருபாலாரும் இந்த ஏழு அம்மனுக்கும் வஸ்திரங்கள் சாத்தி பிரார்த்தனை செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். அப்படி திருமணம் கைகூடும் பக்தர்கள் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகளை வைத்துக் கொண்டாலும் திருமாங்கல்யத்தை புலீஸ்வரி அம்மன் சன்னிதியில் தான் வைத்து கட்டுகிறார்கள். இதை ஒரு நேர்த்திக் கடனாகவே அனைவரும் செய்கிறார்கள்.

    இந்த அம்மனிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவத்தை இந்த ஆலயத்தில்தான் நடத்துகிறார்கள். அப்படிப் பெயர் வைக்கும் வைபவம் நடத்தி முடித்தவுடன் சில காலம் கழித்து அந்த குழந்தையை இக்கோவிலில் அம்மனிடம் தத்து கொடுத்து, பின் வாங்கிக் கொள்கிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து கொள்ளிடத்திற்கு ஏராளமான பேருந்து வசதி உள்ளது.

    பொ.பாலாஜி கணேஷ்
    திருச்சி உறையூரில் உள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருச்சி உறையூரில் உள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான மகா மண்டபம். மயிலும் பலிபீடமும் கருவறைக்கு எதிரே இருக்கின்றன. அர்த்த மண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் வீரவாகுவின் திருமேனியும் காணப்படுகின்றன.

    அடுத்துள்ள கருவறையில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியராக, முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தல முருகப்பெருமானுக்கு நான்கு திருக்கரங்கள். மேல் வலது கரத்தில் வஜ்ர வேலும், இடது கரத்தில் திரிசூலமும் தாங்கியுள்ள இவர், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் சிரித்த முகத்தினராய் தோற்றமளிக்கிறார். முருகப்பெருமானின் வாகனமான மயிலின் முகம் தென்திசை நோக்கி இருப்பது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

    பிரிந்து வாழும் தம்பதியரில் கணவனோ அல்லது மனைவியோ தொடர்ந்து 7 வாரங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயம் வந்து, இங்குள்ள முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், கணவன்-மனைவி பிணக்கு தீர்ந்து, இருவரும் இணைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அப்படி ஒன்றிணைந்தவர்கள், தம்பதியராக இணைந்து வந்து இத்தல முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நன்றிக்கடனை செலுத்துகின்றனர்.

    ஆலய பிரகாரத்தின் மேற்கு திசையில் நாகர்களும், வடகிழக்கில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் நின்று கொண்டு கருவறை இறைவனை நாம் தரிசித்த பின், சற்றே தலையை உயர்த்திப் பார்த்தால் நம் கண்கள் வியப்பில் விரியும். ஆம்... மண்டபத்தின் உச்சியில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளின் திருவுருவங்கள் கருங்கல்லில் செதுக்கப்பட்டு, சதுரவடிவில் பொரிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களைக் காணும் போது நாம் மனம் லயித்து மெய் மறந்து நிற்பது நிஜம்.

    லட்சுமி தேவிக்கு வடநாட்டில் பதினாறு வகையான திருக்கோலங்களைத் தருவார்கள். நம் தென்நாட்டில் லட்சுமி தேவிக்கு எட்டு வகையான திருக்கோலங்கள் தருவதுண்டு. அனைத்து வளங்களையும் தருபவள் ஆதிலட்சுமி. பசுமையும் பயிர்களும் செழிக்க வைப்பவள் தான்ய லட்சுமி, துணிவையும் தைரியத்தையும் தருபவள் தைரிய லட்சுமி. புகழையும் பெயரையும் அளிப்பவள் கஜலட்சுமி. குழந்தை பாக்கியம் தருபவள் சந்தான லட்சுமி, வெற்றியை அள்ளித் தருபவள் விஜய லட்சுமி, கல்வித் தருபவள் வித்யா லட்சுமி, இருக்கும் செல்வத்தை நிலைக்கச்செய்து, மேலும் பொருள் சேர அருள்பவள் தனலட்சுமி. மகாலட்சுமியின் வடிவங்களான இந்த அஷ்டலட்சுமிகளையும் நாம் ஒரே நேரத்தில் இந்த ஆலயத்தில் தரிசிக்க இயலும் போது, நம் மனம் மகிழ்ச்சியில் நிறைந்து நிம்மதி பெறுவது உண்மையே.

    இங்கு முதலில் வீரவாகுவுக்கு தீபாரதனை செய்த பின்னரே, முருகப்பெருமானுக்கு தீபாரதனை காட்டுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மாதந்தோறும் திருவிழா நடைபெறும். சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், ஆனி, ஆடி, ஆவணி கிருத்திகை, புரட்டாசி நவமி, ஐப்பசி சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி 30 நாட்கள் வழிபாடு, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் முருகப்பெருமானுக்கும், அவரோடு இருக்கும் வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

    ஐப்பசி கந்த சஷ்டியின் போது ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆறு நாட்கள் நடைபெறும் திருவிழாவைத் தொடர்ந்து ஏழாம் நாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள். மாத சஷ்டி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் போது இறைவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத கார்த்திகையின் போது சொக்கப்பனை உற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர்களுக்கு அபிஷேகம் செய்து ஆராதனை செய்தால், தோஷத்தின் கடுமை வெகுவாகக் குறைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியருக்கு இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான், ஆபத்பாந்தவனாக இருக்கிறார். தம்பதி சமேதராய் இங்கு அருள்பாலிக்கும் முருகன், பிரிந்த தம்பதிகளை இணைத்து வைப்பது வியப்பில்லை அல்லவா?

    சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் இந்த ஆலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம்

    திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உறையூர் பாளையம் பஜாரில் இந்த முருகன் ஆலயம் அமைந்திருக்கிறது.

    மல்லிகா சுந்தர்
    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.
    சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாச முனிவர் நர்மதை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவமிருந்தார். ஒருநாள் அவர் நதியில் நீராடச் சென்ற சமயம் அழகிய தேவமாது ஒருத்தி தன் தோழிகளுடன் நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அவளுடைய அழகினைக் கண்ட பரத்வாசர் மோகம் கொண்டார். அவர் தம் நிலையையும் மறந்து தேவமாதைக் கட்டி அணைத்தார். அவருடைய மோகம் தணிந்ததும் தேவமாதை விட்டுச் சென்றார்.

    தேவமாது ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள். அக்குழந்தையை நதிக்கரையிலே விட்டு தேவலோகம் சென்றாள். பெற்றோரால் கைவிடப்பட்ட அக்குழந்தைதான் அங்காரகன் அவனை பூமாதேவி தன் குழந்தைபோல் வளர்த்து வந்தாள். குழந்தை பெரியவனானதும் தன்னுடைய தந்தையைக் குறித்துக் கேட்டான். பூமாதேவி குழந்தையிடம் விவரத்தைச் சொன்னதுடன் அவனை பரத்வாச முனிவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தாள்.

    செவ்வாய் கிரகத்திற்கு தனி ஆலயம் இல்லை. செவ்வாய், கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்று எடுத்துக் கொள்ளலாம். பூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான்.

    செவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். அதற்கு நாம் திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இங்கு வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதை காட்டும் வகையில், ஊரின் பெயரே ‘நாச்சியார் கோவில்’ எனப்பெயர் பெற்று விளங்குகிறது. முற்காலத்தில் இந்த ஊர் ‘திருநறையூர்’ என்று அழைக்கப்பட்டது.

    கோச்செங்கணான் என்ற சோழமன்னன், சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டினான். ஆனால் விஷ்ணுவுக்காக கட்டியது திருநறையூரில் உள்ள நம்பிக்கோவில் மட்டுமே. கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுஒரு மாடக்கோவிலாகும். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தால், கருவறையில் உள்ள எம்பெருமான் ஒரு மலைமேல் எழுந்தருளியிருப்பதாக தோன்றும். மூலவர் சீனிவாசன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.

    நாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையில் தாயார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் காட்சியளிப்பதை வேறு எந்த தலத்திலும் பார்க்கமுடியாது.

    சுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இந்த ஊரில், முன்பு மேதாவி என்ற மகரிஷி இருந்தார். இவர் தனக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசனே மருமகனாகவும் வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக மணிமுத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தார். வழக்கம் போல் ஒருநாள் நதியில் நீராடிக் கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. அப்போது அவரது கையில் சக்கரபாணி சுவாமி சிலை கிடைத்தது. அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.

    ‘முனிவரே! இந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், நினைத்த எண்ணம் நிறைவேறும்’ என்றது அந்த குரல். முனிவரும், தமது எண்ணம் கைகூடும் காலம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் சக்கரபாணி நரசிம்ம பெருமாளை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இந்த இடத்தில் வந்து தங்க விரும்பிய மகாலட்சுமி, அங்குள்ள வகுள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த மேதாவி மகரிஷியின் முன்பு சிறுமியாக தோன்றினாள். தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். மனமகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே ஆகட்டுமென ஆசிகூறி, சிறுமிக்கு வகுளாதேவிநாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.

    வகுளாதேவிக்கு திருமண வயது வந்ததும், பெருமாள் கருடன் மீதேறி தாயாரைத்தேடி வந்தார். மேதாவி மகரிஷியை கண்டு, தனக்கு நாச்சியாரை மணமுடித்துத் தரும்படி வேண்டினார்.

    அதற்கு சம்மதம் தெரிவித்த மகரிஷி, பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டு பெற்றார். ‘இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப்பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்’ என்று வரங்களைக் கேட்டார்.

    பெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு, வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப்பெயர் பெற்றது. கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சன்னிதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகால வழிபாடு நடைபெறும்.

    48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு. 
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43-ம் திருப்பதியாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43-ம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள் ளது. முத்தரையர்களால் கட் டப்பட்ட குடவரைக் கோவில். திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோவில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்த கோவிலும் ஒன்று. இத்தலத்தில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

    திருமயத்தின் விஷ்ணு கோவிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலை விட மிகவும் பழ மையானது. இதன் காரணமாக இதற்கு ‘ஆதிரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம். இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    திருமயம் கோவில் மலைச்சரிவில் ஒரே கல்லினால் அமைந்த அதிசயிக்கத்தக்க கோவிலா கும். இங்கு ஒரே ஒரு சுற்றுச் சுவர் மட்டும் உள்ளதால் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின்படி ஸ்ரீரங்கத்து பெருமாள் 64 சதுர்யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமயம் சத்யகிரிநாதன் 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவர் என்பதால், திருமயம் கோவில் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது.

    இங்கு சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும், மற் றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக் கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்திய மாக துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு சத்திய மூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.இக்குடவரைக் கோவிலின் மூலவர் யோக சயன மூர்த்தியான திருமெய்யர் உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கிய வர். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உரு வம் இந்தியாவிலேயே மிகப் பெரியது.

    சுற்றிலும் தேவர் கள், ரிஷிகள், பெருமாளின் நாடிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடி யிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைலக்காப்பு இடப்படுகிறது. ‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின் னரர்களையும் காப்பாற்றி அருள்கிறார் என்கிறது தல வரலாறு.

    இத்தலத்தின் தாயார் உஜ்ஜீ வனத்தாயார் (ஸ்ரீஉய்ய வந்த நாச்சியார்) எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் குழந்தைப்பேறு நிச்சயம். பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறு பவர்கள் நன்மை பெறுவர் என்பது நம்பிக்கை. மேலும் மனநிலை பாதிப்புகளுக்கு உடன டியாக பலனளிக்கும் பரிகாரத்தலம். இவர் படி தாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை. கோவிலுக்கு சென்றால் மட்டுமே இவரை தரிசனம் செய்ய முடியும்.

    பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர். பெருமாளின் திருவடிக்கரு கில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்த னர். பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பா மல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஓடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ? என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர் கள் செய்த வன்கொடுமையினை தடுக்க எடுத்த வீரச் செயல்களை மெச்சிப்புகழ்ந்தார்.

    திருமயம் கோவிலின் பெருமை பிரமாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதே வதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

    சத்ய புஷ்கரணி அனைத் துப்பாவங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த திருக்குளமாக கூறப்படுகிறது. உஜ்ஜீவனத் தாயாருக்கு திருமஞ்சனம், புடவை சாத்துதல், வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் அளித்தல், பெரு மாளுக்கு வெண்ணெய் பூசுதல், தூய உலர்ந்த ஆடை சாற்றுதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகிறது.

    இக்கோவிலில் புரட்டாசி மாதம் எப்போதும் போல் சுவாமி- அம்பாளுக்கு வழிபாடு நடத்தப்படு கிறது. மற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இக்கோவிலில் வைகாசி மற்றும் ஆடிப்பூர தேரோட்டம் மட்டுமே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை நடைபெறும் வழிபாட்டில் மட்டும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அன்றைய தினமும் எப்போதும் போல் சுவாமி- அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    அசுரர்களை கொன்ற ஆதிஷேசன்

    இக்கோவில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுமலைக்கோட்டையாக குன்றின் தெற்குப் பக்கம் உள்ளது. இது ஒரு குடவரைக் கோவில் கோவிலைச் சுற்றி ஏழு சுற்று மதில்கள் உண்டு. வட்ட வடிவமான கோட்டைக்குள் இந்தக் கோவில் இருந்தாலும் வடக்கு, தெற்கு, தென் கிழக்கு ஆகிய மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன. மூலவர் ஸத்யகிரிநாதன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

    உற்சவர் பெயர் மெய்யப்பன் உய்யவந்த நாச்சியார் தாயாராக எழுந்தருளியிருக்கிறார். இந்தக் குடவரைக் கோவிற் சுவரில் பல சிற்பங்கள், கொள்ளை அழகுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. திருவரங்கனை விட பெரிய திருமேனியோடு, பெருமாள் சயனித்திருக்கும் கோலத்தையும் பிரம்மா முதலிய தேவர்களின் உருவங்களையும் இங்குக் காணலாம்.பெருமாளுக்கு ஊறு செய்ய வந்த அசுரர்களை ஆதிஷேசன் விஷக்காற்றை விட்டு அவர்களைக் கொன்றதாக தலபுராணம் கூறுகிறது.

    இரண்டாவது சந்நிதியில் பெருமாள் மலையோடு சேர்ந்து அனந்த சயனமூர்த்தியாகப் பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார். பெருமாள் ஆதிசேடன் மீது சயனம் கொண்டு கருடன் சித்திர குப்தன், மார்க்கண்டேயன், பிரமன், தேவர்கள், முனிவர்கள், கின்னாரர்கள் விளங்க, மதுகைடபர் அசுரர்கள், காலடியில் பூமிதேவி திருமார்பில் சீதேவி விளங்கக்காட்சி தருகிறார். இது திருவரங்கம் அரங்கநாதரை விடப் பெரிய திருமேனியாகும்.மற்றும் சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கிருஷ்ணர், லட்சுமி, நரசிம்மர் ஆகிய சந்நிதிகளும் உள்ளன.ஆதிசேஷன் இத்தலத்தைக் காத்துக் கொண்டுள்ளதாக ஐதீகம்.

    ஆதிசேடன், சந்திரன், சத்தியமூனிவர், புரூரவ சக்கரவர்த்தி ஆகியோர் பெருமாளை வழிபட்டுப் பேறு பெற்ற பதி.கருடன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை வழிபட்டுப் போற்றலைப் பெற்றார்.

    திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலம். ராகு கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கொடியவர்களால் அன்றாடம் துன்பப்படுகிறவர்கள் விஷ வியாதிகளால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள். போட்டி- பொறாமை போன்ற துஷ்டத்தால் நொந்து போய் கொண்டிருக்கிறவர்கள் அனைவரும் இந்த சத்தியகிரி நாதப் பெருமாளையும் ஆதிசேஷனையும் வழிபட்டு செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் பரிகாரங்களைச் செய்தால் கிரகணம் நீங்கியது போல் மலர்ந்த முகத்தோடு பெருவாழ்வு பெறுவார்கள்.
    வடசென்னையில் புதிய வண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை பகுதியில் அரசு அச்சக குடியிருப்பில் அமைந்திருக்கிறது “வடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா”.இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சீரடி சாய்பாபா உங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த அதிசய அனுபவத்தை நீங்கள் எப்போதாவது சந்தித்து இருககிறீர்களா? நீங்கள் நினைத்தால், அந்த இன்ப அனுபவத்தைப் பெற முடியும்.

    அதற்கு நீங்கள் வடசென்னையில் புதிய வண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை பகுதியில் அரசு அச்சக குடியிருப்பில் அமைந்திருக்கும் “வடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா” ஆலயத்துக்கு செல்ல வேண்டும். இந்த ஆலயத்தில்தான் சீரடி சாய்பாபா உங்களையே தத்ரூபமாக உற்றுப் பார்க்கும் ஆச்சரியத்தை பெற முடியும்.
    தினமும் எத்தனையோ பேர் அந்த அனுபவத்தைப் பெற்றுச் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான சீரடி சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. பெரும்பாலான ஆலயங்களில் சுமார் 4 முதல் 5 அடி உயரத்துக்கு சீரடி சாய்பாபா சிலையை வைத்து வழிபடுகிறார்கள்.

    அந்த கம்பீர சிலைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு அற்புதத்தைக் கொண்டிரு க்கும். சில ஆலயங்களில் சீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டைக்கு வந்த விதம், பிரதிஷ்டை செய்யப்பட்ட விதம் என பல்வேறு அதிசயங்களைக் கொண்டிருக்கும். சில சமயம் சிலை விஷயத்தில் சீரடி சாய்பாபா நடத்தும் திருவிளையாடல்கள் ஆச்சரியத்தின் உச்சமாக இருக்கும்.

    அத்தகைய ஒரு ஆச்சரியமான அம்சத்துடன் வடசென்னை சீரடி சாய்பாபா ஆலயத்தில் உள்ள மூலவர் பாபா சிலை திகழ் கிறது. இந்த சிலையின் கண்கள் மிக, மிக, சக்தி வாய்ந்தவை. பாபாவின் அந்த கண்களை நாம் உன்னிப்பாக பார்க்கும் போது, அவர் நமக்கு விழிகளை உருட்டி காட்டுவது போல இருக்கிறது. அதிலும் சாய்பாபா சிலையின் இடது புறம் (நமக்கு வலதுபுறம்) அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பி அருகில் நின்று பாபாவை பக்கவாட்டில் பார்க்கும்போது, பாபாவின் இரு விழிகளும் கூர்மையான ஒளியுடன் இருப்பதை உணர முடியும். சில சமயம் பாபாவின் பார்வை பக்தர்கள் திசை நோக்கி கூட சற்று திரும்பி பார்ப்பது உண்டாம். இது சாய்பாபா தினம், தினம் தன் பக்தர்களிடம் நடத்தும் திருவிளையாடல் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

    ராயபுரம் கல் மண்டபம் மார்க்கெட் சந்தில் சர்வ மங்கள சீரடி சாய்பாபா ஆலயம் அமைத்து சேவை செய்து வரும் யோகா ஆசிரியர் ரத்தினவேல், நம்மை அழைத்துச் சென்று அந்த ஆலயத்து சாய்பாபா கண்கள் ரகசியம் பற்றி சுட்டிக் காட்டி காண்பித்த போது மெய்சிலிர்த்துப் போனோம். சீரடி சாய்பாபாவின் இத்தகைய மகிமையால்தான் இந்த ஆலயம் வடசென்னை மக்களின் மனதில் நீக்கமற பதிந்து விட்ட ஆலயமாக மாறி உள்ளது.

    சிறிய ஆலயமாக இருந்தாலும், அழகோவியம் போல இந்த ஆலயம் அத்தனை அழகாக, சுத்தமாக நிர்வகிக்கப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்துக்கு சீரடி சாய்பாபா வந்து விட்டார். மின்ட் பகுதியில் இருந்த அரசு அச்சகத்தில் பணிபுரிந்து வந்த ராகவன் என்பவர் புதிய வண்ணாரப்பேட்டை அரசு அச்சக குவாட்டர்சில் குடியேறிய போது அவரை சீரடி சாய்பாபா ஆட்கொண்டிருந்தார். பெரிய அளவில் வசதிகள் இல்லாத நிலையில், சாய்பாபா மீது கொண்ட பற்றுதல் காரணமாக ராகவன் ஓலைக் குடிசையில் மிகச் சிறிய ஆலயம் ஒன்றை பாபாவுக்காக உருவாக்கினார்.

    அந்த ஓலைக் குடிசைக்குள் முதலில் சீரடி சாய்பாபாவின் படம் ஒன்றை வைத்து ராகவன் வழிபட்டு வந்தார். அந்த குடிசை ஆலயத்துக்கு அக்கம் பக்கத்தில் உள்ள சிலர் வந்து வழிபட்டு சென்றனர். இதையடுத்து சிறிய சாய்பாபா சிலையை வாங்கி வந்து அதை வைத்து ராகவன் வழிபட்டு வந்தார். நாளடைவில் அந்த பாபா ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்தது. பொதுவாக சாய்பாபா ஆலயத்துக்கு புதுமையான ஏதாவது ஒரு பெயரை சூட்டுவார்கள். வடசென்னையில் உருவான முதல் சாய்பாபா ஆலயம் என்பதால் பெரும்பாலான வர்கள் அந்த ஆலயத்தை வடசென்னை சாய்பாபா ஆலயம் என்றே அழைத்தனர். நாளடை வில் அந்த பெயரே நிலை பெற்று விட்டது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2009&ல் இந்த ஆலயத்தை உருவாக்கிய ராகவன் முதுமை அடைந்து மரணம் அடைந்தார். ஆனால் தனது மறைவுக்குப் பிறகும் சாய்பாபா ஆலயம் மிகச் சிறப்பாக இயங்க வேண்டும் என்று விரும்பிய தால், அதற்காக அவர் 2005&ம் ஆண்டு ‘டிரஸ்ட்’ ஒன்றை உருவாக்கினார்.
    தலைவர்&நாகப்பன், செயலாளர்&பு ஷ்பலிங்கம், இணைச் செயலாளர்& மேகவர்ணம், பொருளாளர்& கோபிநாத், துணைத் தலைவர்கள்& இந்திரேசன், அருள்மொழி தேவன், கமிட்டி உறுப்பினர்கள் &சசிதரன், செல்வராஜ், அருள் என 9 பேர் கொண்ட டிரஸ்ட் உருவானது. இந்த டிரஸ்ட் மூலம் வடசென்னை சீரடி ஸ்ரீசாய்பாபா ஆலயம் விரிவுபடுத்தப்பட்டு அழகாக கட்டப் பட்டது.

    அந்த ஆலயத்துக்கு 31.8.2005 அன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல புதிய சன்னதிகள் உருவாக்கப்பட்டது. சபரிமலை அய்யப்பனுக்கு மிக சிறிய அழகான தனி ஆலயம் அமைத்துள்ளனர். விநாயகர், ஆஞ்சநேயர், தெட்சிணா மூர்த்தி, கிருஷ்ணர் சன்னதிகளும் உள்ளன. இதைத் தொடர்ந்து சீரடியில் இருப்பது போன்றே சமாதி மந்திர், துனி, குருஸ்தான், துவாரகமாயி, சாவடி ஆகியவற்றை அமைக்க டிரஸ்ட் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதற்கான திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்தன.

    மாடியில் சாவடி, தியான மண்டபம் அலுவலகம் அமைந்த நிலையில், கீழே தரைப்பகுதியில் துவாரகமாயி, குருஸ்தான் அமைக்க தீர்மானித்தனர். பாபா வீற்றிருக்கும் இடம் அருகிலேயே இயற்கையாகவே ஒரு வேப்ப மரம் உள்ளது. சீரடியில் இருப்பது போன்றே உள்ள அந்த மரத்தடியில் சிறிய பாபா சிலை வைத்து குருஸ்தானாக மாற்றி உள்ளனர். அடுத்து துவாரகமாயி, துனியை எங்கு அமைப்பது என்பது பற்றி ஆலோசித்தனர்.

    “துவாரகமாயி” என்பது பாபாவின் இருப்பிடங்களில் முக்கியமானது. சீரடியில் சுமார் 60 ஆண்டுகள் வாழ்ந்த சாய்பாபா தன் வாழ்நாளில் 90 சதவீத நேரத்தை துவாரகமாயில்தான் கழித்துள்ளார். எனவே துவாரகமாயியை எங்கு அமைப்பது என்று ஆய்வு செய்தனர். அந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் இடம் ஒன்று இருந்தது. அந்த இடத்தில் துவாரகமாயியை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக கடந்த ஆண்டு அங்கு கட்டுமான பணிகள் தொடங்கி நடந்தன. சீரடியில் இருப்பது போன்றே துனி தீப புகை கோபுரத்தை உள்ளடக்கியதாக அந்த துவாரகமாயி உருவானது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பணி வேலை நடந்து கொண்டிருந்த போது, சாய்பாபா திடீரென அற்புதம் ஒன்றை நிகழ்த்தினார். துவாரகமாயி சுவரின் மையப் பகுதியில் பாபாவின் முகம் அச்சு அசலாக அப்படியே தத்ரூபமாக தோன்றியது. டிரஸ்டி ஒருவரின் கண்களுக்குத்தான் அந்த அற்புதம் முதலில் தெரிந்தது.
    தகவல் அறிந்ததும் வடசென்னை பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த அதிசயத்தை பார்த்து சென்றனர். பாபா முகம் தோன்றிய அந்த சுவர் பகுதி கண்ணாடி போட்டு பாதுகாக்கப்பட்டு, தினமும் மாலை சாற்றி வழிபடப்படுகிறது.

    சீரடியில் உள்ள துவாரகமாயிலும் ஒரு தடவை சாய்பாபா முகம் தோன்றியது. தற்போதும் சீரடி செல்லும் பக்தர்கள் அந்த அதிசயத்தை பார்த்து வருகிறார்கள். அதே போன்ற அற்புதம் வடசென்னை சாய்பாபா ஆலயத்திலும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 6&6&2019 அன்று மீண்டும் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தினமும் இந்த ஆலயத்தில் காலை 6.20, பகல் 11.20, மாலை 5.35, இரவு 8.20 மணிக்கு ஆரத்தி பூஜை நடத்தப்படுகிறது.

    தினமும் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தினமும் மதியம் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வியாழக்கிழமைகளில் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். அன்று மதியம் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி வியாழக்கிழமை ஆலயத்துக்கு வரும் அனைவருக்கும் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை பிரசாதம் வழங்கப்படுகிறது.

    தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் ஆலயம் திறந்து இருக்கும். வியாழக்கிழமை நாள் முழுவதும் திறந்திருக்கும். அன்று இரவு 10 மணி வரை வழிபடலாம். இந்த ஆலயத்தை 044&25911417 என்ற எண்ணிலும் அல்லது கமிட்டி உறுப்பினர் அருளை 98409 84686 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
    குறிப்பிட்ட சில ஆலயங்களும், அதிலுள்ள அழகிய தெய்வங்களின் சிலை வடிவங்களும் நம்மை பெரிதும் வசீகரிக்கும். அப்படி ஒரு ஆலயம்தான் சேலம் சங்கர் நகரில் உள்ள “ஸ்ரீ வித்யாஸ்ரமம்”.
    ஆன்மிகம் என்பது விரக்தி கொண்ட மனதில் நம்பிக்கையை ஊட்டி நன்மைகளைப் பெருக்குவதிலும், துயரங்களைக் களைவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    நம்மை சுற்றி சிறிதும், பெரிதுமாக பல வடிவங்களில் அருள்புரியும் தெய்வங்களின் ஆலயங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில ஆலயங்களும், அதிலுள்ள அழகிய தெய்வங்களின் சிலை வடிவங்களும் நம்மை பெரிதும் வசீகரிக்கும். அப்படி ஒரு ஆலயம்தான் சேலம் சங்கர் நகரில் உள்ள “ஸ்ரீ வித்யாஸ்ரமம்”. அங்குள்ள தெய்வங்களின் கருணை ததும்பும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    காண்பதற்கு மிக பிரமாண்டமாக இல்லை என்றாலும், வருபவர்களுக்கு நிம்மதியையும், பிரமாதமான வாழ்க்கையையும் வழங்குவதில் நிகரற்றதாக இருக்கிறது இந்த ஆலயம். இதிலுள்ள தெய்வங்கள் வேறெங்கும் காணமுடியாத சிறப்பைப் பெறுகின்றன .

    வரிசையாக இருக்கும் வீடுகளின் இடையில் நானும் உங்களுடன் இருக்கிறேன் எனும் நம்பிக்கையை தரும் வண்ணம் அமைந்துள்ளது, நீள்சதுர வடிவில் நேர்த்தியான வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும் ‘இந்த உலகமே தனக்குள் அடக்கம்’ என்பதுபோல், வெண்பட்டு வேஷ்டி உடுத்தி கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் ‘உச்சிஷ்ட கணபதி.’ கிழக்கு பார்த்தபடி தன் மனைவி நீலா சரஸ்வதிதேவியை தன் இடுப்பில் அமர்த்தி, தம்பதி சமேதராக காட்சியளிக்கும் இவரை வணங்கினால் திருமணத் தடைகள் விலகும். நம் தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்டவராகவும், நல்ல எண்ணம் கொண்டவர் களுக்கு நன்மைகளை அருள்வதிலும் இவருக்கு நிகர் இவரே.

    இந்த கணபதியை சுற்றி வரும் போது, மனைவியரை மடியில் அமர்த்திய கோலத்தில் சனி பகவான், பாலசுப்பிர மணியர், ஆஞ்சநேயர், தன்வந்திரி பகவான், ஹயக்ரீவர் ஆகியோர் நம் கவலை களைத் தீர்க்க அமைதியுடன் அமர்ந்தும், நின்றும் அருள்புரிகின்றனர். இவர்களுடன் ஒரு பக்தையின் கனவில் இந்த ஆலயத்தைப் பற்றி தெரிவித்து, அவர் மூலம் பளிங்குச் சிலையாக உருவான சீரடி சாய்பாபா, ஒரு கண்ணாடிப் பேழையில் புன்னகைத்தபடி இருக்கிறார்.

    சுற்றி வந்ததும் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார், ‘மகா பிரத்யங்கராதேவி.’ சிம்ம முகத்துடன் பெண் ரூபத்தில், கைகளில் பாசம், அங்குசம், கபாலம் ஏந்தி அதர்வண பத்ரகாளியாய் காட்சி தருகிறார் இந்த அன்னை. பித்ரு சாபம், குரு சாபம், கோ சாபம் போன்ற பதினாறு வகையான சாபங்களை நிவர்த்தி செய்வதோடு, நாம் அறியாமல் செய்யும் பாவங்களையும் போக்கி சக்தி கொண்டவள் இந்த தேவி.

    பிரத்யங்கரா தேவிக்கு எதிரில் மேற்கு நோக்கி வீர சரபேஸ்வரர் காட்சி தருகிறார். நரசிம்ம மூர்த்தி இரண்யகசிபுவை வதம் செய்தபிறகும் நரசிம்மரின் கோபம் தணியவில்லை. அவரை சாந்தப்படுத்த சிவபெருமான் எடுத்த அவதாரமே ‘வீர சரபேஸ்வரர்.’ பறவையான சரப வடிவத்தில் எட்டுக்கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டு அவதரித்தார். இவர் தனது இரு மனைவியரான பிரத்யங்கராவையும், சூலினி துர்க்கையையும் இரு தோள்களிலும் ஏந்தி கைகளில் நாகம், பாசம், அங்குசம், நெருப்புடன் சினத்தை கட்டுப்படுத்த உதவுகிறார் இவர். இவரை வணங்கினால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும், எதிரிகளின் மீதான பயமும் விலகும் என்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் அம்மன், சிறப்புமிக்க தெய்வமாகிறாள். ஒரு குடும்பம் என்றால் அதற்கு தலைவியோ, தலைவனோ இருப்பார்கள். அவர்களிடம் அனைவரும் பக்தியுடன் இருப்போம் அல்லவா? அதே போல் இங்கும் மொத்த உலகத்தையும் தனக்குள் அடக்கி லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவியரும் இணைந்த சொரூபமாய் விளங்குகிறாள், ‘வித்யா மகா பராசோடஷி’ அம்மன். இவர் ஈஸ்வரனின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    அன்னையின் வலதுபுறமும், இடதுபுறமும் மாதங்கியும், வராகியும் இருக்கிறார்கள். தமிழகத்தில் எங்கும் காணக் கிடைக்காத அற்புதமான தோற்றம் கொண்டவர் இந்த அன்னை. பாலாம்பிகை, திரிபுரசுந்தரி, லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரி, வித்யா மகா பராசோடஷி என ஐந்து நிலைகள் ஒன்று சேர்ந்து காட்சிஅளிக்கிறாள் இந்த தேவி.

    அடுத்து மேற்குப் பார்த்த நிலையில் காலபைரவர், தன் வாகனமான நாயுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். காசியில் உள்ள விஜய பைரவரே, இங்கும் புலித்தோல் வஸ்திரம் சாற்றி சிவாம்சமாக அருள்புரிகிறார். இவரின் எதிரே உள்ள யாக குண்டத்தில் மாதத்தின் சிறப்பு தினங்களான அமாவாசை, அஷ்டமி, பவுர்ணமி தினங்களில், பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப யாகங்கள் நடை பெறுகிறது. மற்ற பைரவர் யாகங்களில், எதிரிகளை அழிக்க மிளகாய்களை தீயில் போடுவதுபோல் இங்கு போடுவதில்லை .

    இத்தல உச்சிஷ்ட கணபதிக்கு மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தியும், ஆவணி விநாயகர் சதுர்த்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடியில் ஆசார நவராத்திரி, தையில் மாதங்கி நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, பங்குனியில் வசந்த நவராத்திரிகள் இங்கு நல்ல முறையில் நடைபெறுகின்றன.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தை இங்கு ஸ்தாபித்தவர், காளிதாசானந்த மகான் என்று பக்தர்களால் அழைக்கப்படும் சக்தி உபாசகர் ஆவார். இவர் சுவாமி சாந்தானந்தாவின் சீடராக இருந்த அருள் சித்தர். இந்த ஆலயத்தில் உள்ள சிலைகள் அனைத்தும், அழகுக்கும், நேர்த்திக்கும், கீர்த்திக்கும் புகழ்பெற்றவை. இந்த சிலைகள் முழுவதும் ஸ்ரீ கந்தாசிரமத்தில் உள்ள சிலை வடிவங்களின் வழியில் பின்பற்றி நிறுவப்பட்டவை என்று கூறப்படுகிறது.

    சேலம் சுபா

    பகைவர்களை அழித்து பக்தர்களைக் காக்கும் இறைவன் அருள் ஆலயமாக திகழ்கிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகிலுள்ள நெய்யாற்றின்கரை எனுமிடத்தில் அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோவில்.
    பகைவர்களை அழித்து பக்தர்களைக் காக்கும் இறைவன் அருள் ஆலயமாக திகழ்கிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகிலுள்ள நெய்யாற்றின்கரை எனுமிடத்தில் அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோவில்.

    தல வரலாறு :

    இளவரசர் அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர், திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராகப் பதவியேற்க இருந்தார். அவர் மன்னராவதை விரும்பாத சிலரும், தாங்கள்தான் மன்னர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பிய சிலரும் ஒன்றாகச் சேர்ந்து, மார்த்தாண்ட வர்மாவைக் கொல்வதற்குப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வந்தனர்.

    எதிரிகளின் அந்த சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டிருந்த இளவரசர், ஒரு நாள் அவர்களிடம் சிக்கிக் கொள்ள நேரிட்டது. பகைவர்களிடம் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இளவரசர் மார்த்தாண்ட வர்மா அங்கிருந்து தப்பியோடினார். அவரைக் கொல்வதற்கு முயன்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய இளவரசர், நெய்யாற்றின் கரையை வந்தடைந்தார்.

    அங்கிருந்து அவருக்குத் தப்பிச் செல்ல வேறு வழி தெரியவில்லை. உடனே அவர், தான் மறைந்து கொள்வதற்கு நல்லதொரு இடத்தைத் தேடினார். அப்போது அங்கு புல்லாங்குழலுடன் வந்த ஒரு சிறுவன், அங்கிருந்த பலா மரப்பொந்து ஒன்றைக் காட்டி, அதனுள் சென்று மறைந்து கொள்ளும்படிச் சொன்னான். பயத்துடன் இருந்த இளவரசரும், அந்தச் சிறுவன் சொன்ன பலாமரப் பொந்திற்குள் சென்று மறைந்து உயிர் தப்பினார்.

    சிறிது காலம் பகைவர்களுக்குத் தெரியாமல் மறைந்து வாழ்ந்த இளவரசர், பின்னாளில் பகைவர்களை வென்று, மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஒருநாள் அவர் கனவில் தோன்றிய கிருஷ்ணர், தானே நெய்யாற்றின்கரையில் சிறுவனாக வந்து, பலா மரப்பொந்தில் மறைந்து கொள்ளச் செய்து காப்பாற்றியதாகவும், தனக்கு அங்கே கோவில் ஒன்றைக் கட்டி வழிபடும்படியும் சொல்லி மறைந்தார்.

    மன்னரும், தன் உயிரைக் காப்பாற்றிய கிருஷ்ணனுக்கு, தான் கண்ட சிறுவன் வடிவிலேயேச் சிலை அமைத்து, நெய்யாற்றின் கரையில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    நெய்யாற்றின் கரையில் கேரளக் கட்டுமான முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலில் சதுர வடிவக் கருவறையில், பஞ்சலோகத்தால் செய்யப் பெற்ற சடைமுடியுடன் சிறுவன் வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். மேற்கு நோக்கிப் பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கும் இறைவன், தன்னுடைய இரு கரங்களிலும் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு இருக்கிறார். பால கிருஷ்ணனாக, கையில் வெண்ணெய்யுடன் இருப்பதால் இந்த கிருஷ்ணர் ‘நவநீதகிருஷ்ணன்’ என்று அழைக்கப்படுகிறார்.

    இக்கோவிலில் நிறுவுவதற்காக முதலில் மரத்தால் ஆன சிலை ஒன்றுதான் செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, நெய்யாற்றின் வழியாக ஒரு படகு மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது அந்தப் படகு ஆற்றுக்குள் ஓரிடத்தில் நகராமல் நின்று விட்டது. அங்கிருந்தவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், படகை சிறிது கூட நகர்த்த முடியாமல் போனது. குறிப்பிட்ட நாளில், கோவிலில் இறைவன் சிலையை நிறுவ விரும்பிய மன்னர், தற்போது ஆலயத்தில் இருக்கும் பஞ்சலோகத்தாலான கிருஷ்ணர் சிலையை உருவாக்கி அதை பிரதிஷ்டை செய்தார் என்று பஞ்சலோக சிலை அமைந்ததற்கான காரணக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

    இந்த ஆலயத்தின் வளாகத்தில் கணபதி, தர்மசாஸ்தா மற்றும் நாகராஜா ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலின் ஒரு பகுதியில் மன்னர் மார்த்தாண்ட வர்மா மறைந்திருந்ததாகச் சொல்லப்படும் பலா மரம் வேலியிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மரத்தை அங்கிருப்பவர்கள், மலையாள மொழியில், ‘அம்மாச்சி பிலாவு’ (தாய் மரம்) என்று அழைக்கின்றனர்.

    இந்த ஆலயத்தில் சித்திரை விசு, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் பண்டிகை, நவராத்திரி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான மண்டல பூஜை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் நெய்யாற்றில் இறைவனுக்கு ஆறாட்டு விழா நடத்தப்படுகிறது.

    இங்கு வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, இத்தல இறைவன் அவர்களின் பகைவர்களை அழித்துப் பாதுகாப்பை வழங்குவார் என்கிற பொதுவான நம்பிக்கை இருக்கிறது. மேலும், இக்கோவிலில் பூஜைகள் நிறைவடைந்தவுடன், கிருஷ்ணரின் கைகளில் சிறு சிறு வெண்ணெய் உருண்டைகளை வைத்து வழிபட்டுப் பக்தர்களுக்குத் தருகின்றனர். இந்த வெண்ணெய் உருண்டைகள் பல்வேறு நோய்களுக்கு அருமையான மருந்து என்கின்றனர்.

    நெய்யாறு உருவான கதை:

    கோவிலின் வடக்குத் திசையின் கீழ்ப் பகுதியில் நெய்யாறு ஓடுகிறது. இந்த ஆற்றுக்கு ‘நெய்யாறு’ என்று பெயர் ஏற்பட்டதற்கும் ஒரு தனிக்கதை இருக்கிறது.

    அகத்திய முனிவர், மலை உச்சியில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அகத்தியக் கூடம் என்றழைக்கப்படும் அந்த இடத்தில், அகத்திய முனிவர் பல வேள்விகளைச் செய்து கொண்டிருந்தார். அவருடைய வேள்விக்காகக் கொண்டு வரப்பெற்ற நெய், அங்கிருந்த பெரிய பானைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அந்தப் பானைகளில் இருந்த நெய் நிரம்பி வழிந்து, கீழேப் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. நெய்யே ஆறாக ஓடியதால் இந்த ஆற்றுக்கு ‘நெய்யாறு’ என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பிற்காலத்தில், அப்பகுதியில் ஏற்பட்டக் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இறைவன் கிருஷ்ணரை வேண்ட, அவர் அகத்தியக் கூடத்தில் இருந்து வெளியேறி ஓடிக் கொண்டிருந்த நெய் ஆற்றினைத் தெளிந்த நீராக மாற்றி ஓடச் செய்தார் என்றும் சொல்கின்றனர்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நெய்யாற்றின் கரை. இந்த நகரில்தான் பஞ்சலோகத்தால் ஆன கிருஷ்ணர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.

    -தேனி மு.சுப்பிரமணி
    மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதத் தலங்களில் இது நீர் தலமாகும். அந்த வகையில் சங்கரன்கோவில் கோமதியம்மாள் சமேத சங்கரலிங்க சுவாமி ஆலயம் மண் தலமாகவும், கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ண நாதர் கோவில் நெருப்பு தலமாகவும், தென்மலை திரிபூரநாதர் ஆலயம் காற்று தலமாகவும், தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவனார் ஆலயம் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது.

    பஞ்சபூதத் தலங்களில் மத்தியில் அமைந்திருக்கும் ஆலயம்தான் மத்தியஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் நீர் தலம் என்பதற்கு இணங்க, குளத்தின் கரைக்குள்தான் ஆலயமே இருக்கிறது. மழை காலங்களில் ஆலயத்துக்குள் உள்ள கர்ப்பக்கிரகத்தினை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும். தானும் குளிர்ச்சியாகி, தன்னை தேடி வருபவர்களையும் குளிர்ச்சியாக வைக்கும் ஈசன் அமைந்திருக்கும் ஆலயம் இதுவாகும்.

    ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு தங்களது எல்லைகளை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில் தங்களது மனக்குறையை அகத்திய பெருமானிடம் முறையிட்டார்கள்.

    அகத்தியரோ, “உங்கள் பிரச்சினையை சிவ பெருமான் நிச்சயம் தீர்த்து வைப்பார்” என்று கூறினார்.

    அதன்படி மூவேந்தர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக சிவபெருமான், நாதகிரி முனிவராக தாருகாபுரம் வனத்தில் வாழ்ந்து வந்தார். குறிப்பிட்ட காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் பிரச்சினையை நாதகிரியாரிடம் கூறினார்கள். பிரச்சினையை அவர் உடனே தீர்த்து வைத்தார். அவர் கூற்றின் படி சேர, சோழ, பாண்டியர்கள் அவரவர் இடத்துக்கு சென்று ஆட்சி புரிய ஆரம்பித்தனர். அவர்கள் மத்தியமாக இருந்து தீர்ப்பு கூறிய சிவபெருமான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சென்று மறைந்து விட்டார். அந்த இடம் தற்போது சித்தர் பீடமாகவே கோவிலுக்குள் காட்சியளிக்கிறது. மத்தியஸ்தவமாக இருந்து மூவர் பிரச்சினையும் தீர்த்த ஈசன் ‘மத்தியஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார்.

    அதன்பின் சுயம்பு லிங்கமாக குளத்தங்கரையில் காட்சி தந்தார். பாண்டிய மன்னன் இந்த இடத்தில் கோவில் கட்டி வணங்க ஆரம்பித்தான். இத்தல இறைவனுக்கு ‘பிணக்கருத்த பெருவுடையார்’ என்ற பெயரும் உண்டு. ‘பிணக்கு’ என்றால் ‘பிரிவு’ என்று பொருள். மனப்பிரிவை நீக்கிய பெருமான்தான் பிற்காலத்தில் ‘பிணக்கருத்த பெருவுடையார்’ என்று பெயர் பெற்றார்.

    இத்தல அம்பாள் அகிலாண்டேஸ்வரி அகிலத்தினை காக்கும் தாய். இவளை வணங்கி நிற்போர்கள் பலர் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்து, நற்பலனைப் பெற்றுள்ளார்கள். இவருக்கு சிவபெருமானின் வலது புறத்தில் தனிச் சன்னிதியில் அமர்ந்து அன்னையானவள் அருள்பாலிக்கிறார்.

    ஆலயத்திற்குள் நுழையும் போது, ஆலய மேற்கூரையில் மூலிகை வண்ணங்கள் நமது நெஞ்சை கொள்ளை கொள்ளும் அளவுக்கு பூசப்பட்டுள்ளன. பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை பிரமாண்டமாக காட்சி தருகின்றன. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இடது புறம் விஷ்ணு துர்க்கை வடக்குநோக்கி தனிபீடத்தில் உள்ளார். இவருக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை 10.30 மணி முதல் பகல்12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமணத் தடை விலகும்.

    அகிலாண்டேஸ்வரி, நவக்கிரக பீடத்தில் தட்சிணாமூர்த்தி, மத்தியஸ்வரர்

    இங்குள்ள ஜுரதேவருக்கு மிளகு அபிஷேகம் செய்து வழிபட்டால் காய்ச்சல் குணமாகும். இத் தலத்தில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அருள்கிறார். வள்ளியும் தெய்வானையும் ஒருவரையொருவர் பார்த்தபடி முருகப்பெருமானை வணங்குவது போல் வீற்றிருக்கின்றனர். இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லாத அம்சம் என்று கூறுகிறார்கள். இவர்களை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.

    இக்கோவிலில் உள்ள பைரவர் சிறப்பு அம்சம் மிக்கவர். இவர் தலையில் சூரிய சின்னம் உள்ளது. இவரை ‘சத்ரு சம்ஹார பைரவர்’ என்று அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த பைரவரை தரிசிக்க நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வந்ததன் காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆள் உயர கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவும் பைரவரை தரிசிக்க முடியும்.

    ஆலயத்தின் உள்ளே நாதகிரி முனிவர் தரிசனம் தந்து பின் முக்தி பெற்ற இடத்தில் உயிரோட்டமான முறையில் சித்தர் வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இங்கு பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வேளையில் நாதகிரி மலையை சுமார் 1000-க்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை வணங்குவார்கள்.

    திருக்கார்த்திகை திருவிழாவும் இக்கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெறும். சங்கடஹர சதுர்த்தி விழா, சிவராத்திரி விழாவும் முக்கியமான விழாக்களாக கருதப்படுகிறது. சிவராத்திரி நேரத்தில் பஞ்சபூத தலங்களுக்கும் சென்று வழிபட்டு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    இந்த ஆலயமானது, தலைவன்கோட்டை ஜமீனுக்கு பாத்தியப்பட்டது. ஜமீன்தார் வாரிசுகள் வைகாசி விசாக தெப்ப உற்சவத்தினை மிகச்சிறப்பாக நடத்துகிறார்கள். 10 நாள் திருவிழா, தேரோட்டத்துடன் பழங்காலத்தில் நடைபெற்று வந்திருக்கிறது. 1952-ம் ஆண்டு வரை நடந்த தேரோட்டம் இப்போது இல்லை. தற்போது வைகாசி விசாகம் அன்று சிறு சப்பரம் மட்டுமே பவனி வருகிறது.

    கிரக தோஷம் அகற்றும் தட்சிணாமூர்த்தி

    இந்த ஆலயம் பெருஞ் சிறப்புகளை கொண்டது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சம். இவர் தனது காலடியில் 9 நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. தட்சிணாமூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும் வணங்கியதற்கு சமமாகும்.

    இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் தாருகாபுரம் இருக்கிறது. தென்காசியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

    முத்தாலங்குறிச்சி காமராசு
    களத்திர தோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து தோஷங்களையும் திருமால் உடையார் கோவில் இறைவன் நீக்க வல்லவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
    மகா விஷ்ணுவுக்கு ஓர் ஆசை வந்தது. “என்ன ஆசை” என்கிறீர்களா?

    சிவ தத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைதான் அது.

    ஆனால் அதுபற்றி யாரிடம் கேட்பது? என்று யோசித்த மகாவிஷ்ணு, சிவனிடமே கேட்டு விடலாமே என்ற முடிவுக்கு வந்தார்.

    பச்சைப் பெருமாள் தலம் வந்தார். இங்குதான் திருமால் உடையார் ஆலயம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘திருமால் உடையார்.’ மற்றொரு பெயர் ‘விஷ்ணு வல்ல பேசுவரர்.’ இறைவியின் பெயர் மங்களாம்பிகை.

    இந்த ஆலயம் வந்த திருமால் தல விருட்சமான வில்வ மரத்தடியில் அமர்ந்தார். சிவபெருமானை நோக்கி தவம் செய்யத் தொடங்கினார். பல நூறு ஆண்டுகள் கடந்தன. அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் திரு மாலுக்கு காட்சி தந்து உபதேசம் செய்தார்.

    இது செவிவழி தல வரலாறு. இதை மெய்ப்பிக்கும் வகையில் ஆலய முகப்பில் சிவபெருமானுக்கு திருமால் பூஜை செய்யும் சிற்பம் உள்ளது.

    ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நீண்ட பிரகாரம். நடுவே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. அடுத்துள்ள மகா மண்டபத்தின் வலதுபுறம் அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி இளநகை தவழ அருள்பாலிக்கிறார்.

    இறைவனின் தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, சிவதுர்க்கை, மகா விஷ்ணு ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். திருச் சுற்றின் தெற்கில் சித்தி விநாயகர், கிழக்கில் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதிகள் உள்ளன. இங்கு சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இவர் மங்கள சனியாக அருள்பாலிக்கிறார். சனி பெயர்ச்சி நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ஆலய கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சூரியன், பூலோக நாதர் சன்னிதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவன் இறைவிக்கு அபிஷேக, ஆராதனை செய்து வணங்கினால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    சுக்ரனுக்கு அதிபதி மகாவிஷ்ணு. அந்த மகாவிஷ்ணுவே இத்தல இறைவனை பூஜை செய்து பயன்பெற்றதால் களத்திர தோஷம் விலக இத்தல இறைவன் அருள்பாலிக்கிறார் என்பது நிஜமே.

    இந்த ஆலயத்தில் நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று ஆலயம் முன்பு பலநூறு பக்தர்கள் சூழ சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது.

    ஐப்பசியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடக்கிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை, 108 பெண்கள் கலந்துகொள்ளும் குத்துவிளக்கு பூஜை இறைவன் சன்னிதி முன் நடக்கும். பங்குனி உத்திரம் அன்று முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் அன்று பக்தர்கள் கூட்டத்தால் ஆலயம் நிரம்பியிருக்கும்.

    தினசரி ஒரு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் முற்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோவில், தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும்.

    களத்திர தோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து தோஷங்களையும் இத்தல இறைவன் நீக்க வல்லவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது பச்சைபெருமாள் திருத்தலம். சீர்காழியில் இருந்து இத்தலம் செல்ல மினி பஸ் வசதிகளும், ஆட்டோ வசதியும் உள்ளது.

    ஜெயவண்ணன்
    ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள் அல்லது திருப்பதிகளில் கோவில், திருமலை, “பெருமாள் கோவில்” என்ற மூன்றாம் இடமாக போற்றப்படுகின்ற பெருமையுடையது ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்.
    ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள் அல்லது திருப்பதிகளில் கோவில், திருமலை, “பெருமாள் கோவில்” என்ற மூன்றாம் இடமாக போற்றப்படுகின்ற பெருமையுடையது ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில். ஸ்ரீ காஞ்சி வரதனின் தல புராணம் மிகவும் பழமைமானது, பிரசித்தமானது.

    பிரம்மதேவன், பகவான் ஸ்ரீமந் நாராயணனை திவ்யமங்கள சொரூபத்துடன் சேவிக்கும் சங்கல்பத்துடன் “புஷ்கரம்” என்ற தலத்தில் வெகுகாலம் தவம் செய்தார். பகவான் பிரசன்னமாகித் தீர்த்த ரூபியாகக் காட்சி தந்தார். அந்தத் தீர்த்த ரூபத்தினால் திருப்தி ஏற்படாததால் பிரம்மன் மீண்டும் பகவானை எண்ணித் தவம் செய்யவே, பகவான் மறுபடியும் பிரசன்னமாகி “நைமிசாரண்யம்’’ என்ற ஆரண்ய ரூபமாகக் காட்சி தந்தார். எங்கும் நிறைந்து, எல்லாமுமாகிய எம்பெருமான் நீராய், நிலனாய் காட்சி தந்த போதிலும், பிரம்ம தேவனுக்குத் திருப்தி ஏற்படவில்லை.

    சங்கு, சங்கரத்தோடு, திவ்ய மங்கள சொரூபத்தில் அச்சாரூபத்தில் பெருமாளின் திருமேனியை சேவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் அத்தகு காட்சி தந்தருளும்படி பெருமானை மீண்டும் வேண்டி நிற்க, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தால், தான் அவிர்பாகம் அடைந்து காட்சி தருவதாகச் சொல்லவே, நூறு அஸ்வமேத யாகங்கள் செய்வதற்குக் காலதாமதம் ஆகும் என்பதால் விரைவில் சுலபமாக அருளைப் பெறும் வழியைச் சொல்லும்படி பிரம்மதேவன் வேண்டினார்.

    பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டு அகிலத்தையும் ஆட்கொள்ளும் கருணைக்கடல், கார்முகில் வண்ணன், கண்ணன் தன் பக்த வாஸ்லல்யத்தினால் பிரம்ம தேவனை சத்யவிரத சேத்திரம் என்றழைக்கப்படும் காஞ்சீபுரத்திற்குச் சென்று ஒரேயரு அஸ்வமேத யாகம் செய்யும்படி பணித்தார். இக்கருத்தை ஸ்ரீ தேசிகன் தமது வரதராஜ பஞ்ச சதிதோத்திரத்தில் துரக்ஹவன வேத்யாம் சியாமளோ ஹவ்யவாஹ என்றார்.

    காஞ்சியில் செய்யும் புண்ணியம் எதுவாயினும், நூறு மடங்கு அதிகப் பலனைத் தரவல்லது என்று எடுத்துரைத்துத் தவம் புரிய நியமித்ததின் பேரில் பிரம்மதேவன் அத்திகிரியில் உத்திர வேதியில் யாகம் செய்தார். அந்த யாகத்தில் எம்பெருமான் அத்திகிரி நாதன் அர்ச்சாவதார மூர்த்தியாய்க் காட்சி தந்தருளினார்.

    அக்னியிலிருந்து தோன்றிய வெப்பத்தால் உற்சவ மூர்த்தியின் திருமுகத்தில் ஏற்பட்ட வெப்ப வடுக்களை இன்னமும் காணலாம். பிரம்மாவினால் ஆராதிக்கப்பட்டு, அவிர்பாகம் அடைந்தபடியினால் இந்த “ஸத்யவிரத” சேத்திரத்திற்கு “காஞ்சீ” என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் சரஸ்வதியின் சாபத்துக்கு ஆளாகி, யானையாக உருவெடுத்த இந்திரன், இவ்விடத்தில் தவம்புரிந்து சாபவிமோசனம் பெற்றபடியால், இத்தலத்திற்கு “ஹஸ்திகிரி” என்ற பெயர் வந்ததாகப் புராணங்கள் புகலுகின்றன. ஹஸ்திகிரி அல்லது அத்திகிரி மூர்த்தியாய்த் தோன்றடியபடியால் இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு, “ஹஸ்திகிரிநாதன்” அத்திவரதன் என்றெல்லாம் பெயர் உண்டாயிற்று.

    இப்பெருமான் தேவேந்திரனால் போற்றப் பெற்றதனால் தேவாதி ராஜன் எனவும், அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளி அனைவரையும் ஆட்கொண்டு அருள்பாலித்து வருவதனால் “பேரருளாளன்” எனவும், தன்னை அண்டியவர்களின் துயர்தீர்த்து ஆட்கொள்ளும் கருணைபடைத்தவன் என்பதனால் “பிரணதார்த்திஹரன்” எனவும், வேண்டுவன வழங்கும் வரதனாய்த் திகழ்வதால் “வரதராஜன்” எனவும் போற்றப் பெறுகிறார்.

    இந்திரன் வரம் பெற்ற தலம்

    காஞ்சீபுரத்தில் மட்டும் 14 திவ்விய தேசங்கள் உள்ளன. இத்தலம் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இங்கு ஆண்டாள், மணவாள நாச்சியார், கண்ணன், சக்கரத்தாழ்வார், கரியமாணிக்கப் பெருமாள், இராமர், பன்னிரு ஆழ்வார்கள், தேசிகர், வராகப் பெருமாள் உடையவர் முதலிய சன்னதிகள் உள்ளன.

    ஐயராவதம் மலையுருவில் எம்பெருமானைத் தாங்கியதால் அத்திகிரி எனப்பட்டது. பிரமதேவன் செய்த வேள்வியில் புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளியதால் வரதராஜன் என்னும் பெயர் கொண்டார். பிருகு முனிவர், நாரதர், இந்திரன், ஆதிசேடன், சரஸ்வதி தேவி முதலியோர் இங்குப் பெருமாளை வழிபட்டுப் பேறுகளும், வரங்களும் பெற்றார்கள்.

    ஹேமன், சுக்லன் ஆகியோர் பல்லிகளாக இருந்து இங்கு சாப விமோசனம் பெற்றார்கள். இங்கு தனி விநாயகர் சன்னதி வடக்கு நோக்கி உள்ளது. அனந்த சரஸ் தீர்த்தக் கரையின் கிழக்கே ஒரு பக்கம் சக்கரத்தாழ்வாரும், மற்றொரு பக்கம் நரசிங்க மூர்த்தியும் தனிச் சன்னதியாக உள்ளனர். உடையவருக்காகச் சோழ மன்னனிடம் கண்களை இழந்த கூரத்தாழ்வார் ஸ்ரீவரதராஜ தவம் அருளிச் செய்து இழந்த கண்களைப் பெற்ற தலம். திருக்கச்சி நம்பிகளுக்கு ஆறு வார்த்தைகளைக் கூறி உடையவர்தம் ஐயங்களைத் தீர்த்தருளிய பதி. இங்கு வைகாசி விசாகத்தன்று நடைபெறும் கருட சேவை தனிச் சிறப்புடையது. அனந்தசரஸ் என்னும் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்துக்குள் அத்தி மரத்தாலான வரதராஜப் பெருமாள் மூர்த்தம் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப் பெற்று பத்து நாள்களுக்குச் சேவை சாதிக்கிறார்.

    அத்திகிரி மலைக்கு நேர் கீழே உள்ள தனிச்சன்னதியில் குகையில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். மேலே பெருமாள் சன்னதிக்குச் செல்ல 24 படிகள் உள்ளன. இவை தேவ சிற்பியால் நிர்மாணிக்கப் பட்டவை. கோயில் என்றால் வைணவத் தலங்களில் திருவரங்கத்தைக் குறிக்கும். அதுபோல பெருமாள் கோயில் என்றால் இத்திருக்கோயிலைக் குறிக்கும்.

    உலக புகழ்பெற்ற கருடசேவை

    ஆதிசேஷன் இங்கு வந்து ஆண்டுக்கு இருமுறை (வைகாசி விசதாகம் ஆடி மாத வளர்பிறை தசமி) இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். இங்கு நடக்கும் கருட சேவை உலகப் புகழ் பெற்றது. ஒன்பது ஆழ்வார்கள் இந்தக் கோவிலை பாசுரம் செய்திருக்கிறார்கள். சோகங்கள் தொடர் கதையாகி துரத்தினாலும் புத்திர சோகத்தால் பாதிக்கப்பட்டாலும் மரண பயணம் ஏற்பட்டு- மரணம் நெருங்குவதாக இருந்தாலும், நண்பர்களால், எதிரிகளால், கூடப் பிறந்தவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் அடுத்த நிமிடமே இந்த எம்பெருமாளைச் சரண் அடைந்து விட்டால் «பாதும் பகவான் உங்களது அத்தனை இன்னல்களையும் பொடிப் பொடியாக்கிவிடுவார்.
    ×