என் மலர்tooltip icon

    கோவில்கள்

    திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார்.
    உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது.

    கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர். தென்திசை புறப்பட்ட அகத்தியருக்கு ஆதி மொழியாம் தமிழ் மொழியை உபதேசித்தார் சிவபெருமான்.

    தென்தமிழகத்தில் உள்ள பொதிகை மலை வந்ததும் உலகம் சமநிலை அடைந்தது. அதன்பின் அகத்தியர் தமிழ் கடவுளான முருகப்பெருமானிடமும் தமிழை கற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதினார்.

    தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின் அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மருத்துவம் என்றால் இந்த காலத்தைப்போல உடல்கூறுகளையும் மருந்துகளை மட்டும் படிப்பது அல்ல. இந்த மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான் அவன் முழு மருத்துவன் ஆக முடியும். இதற்காக அகத்தியர் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிராந்தங்கள் வகுத்துள்ளார். தான் கண்டறிந்த சித்த மருத்துவ குறிப்புகளை கொண்டு அகத்திய வைத்திய சேகரம் என்ற நூல் படைத்துள்ளார்.

    அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின் படி பாடத்திட்டங்களை அகத்தியர் வகுத்தார். அந்த பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது.

    தொடர்ந்து கணிதமும், மருத்துவ ஆய்வு வகைகளும், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாடகம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், இரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், இரணவாடகம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்று கொடுக்கப்பட்டது.

    இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்தப் பின்னர் அகத்தியர் தோரணமலை பகுதியில் பாடசாலையை தொடங்கினார். தோரணமலை பயிற்சி கூடத்தில் சீனா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பயில சித்தர்கள் பலர் வந்தனர். பின்னர் சிவபெருமான் நடனம் புரிந்த ஐந்து சபைகளில் அதாவது திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன. இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி(பழனி), கொள்ளிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும்.

    இந்த பாடசாலையில் ஆறு ஆறு ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில்தான் மன்னன் காசிவர்மனுக்கு தீராத தலைவலிக்காக அகத்தியர் கபால அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்த சீடர் தேரையரை மூலிகை ஆராய்ச்சிக்காக பணித்தார். அவரும் தோரணமலையில் தங்கி இருந்து மூலிகைகள் மூலம் மருத்துவ சேவை செய்து வந்தார். அகத்தியரும் தேரையரும் தோரணமலையில் இருக்கும்போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர். அவர் இங்கேயே சமாதி நிலையை அடைந்தார்.

    காலப்போக்கில் அங்கு வழிபாடு நின்றுபோனதோடு முருகன் சிலையும் காணாமல் போனது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஆதிநாராயணன் அவர்களது மூதாதையர் ஒருவர் கனவில் முருகப்பெருமான் வந்து தான் தோரணமலையில் இருப்பதாகவும் அங்கு சுனையில் மறைந்து கிடக்கும் சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி அவர் அங்கு வந்து சுனையில் மறைந்திருந்த முருகனை மீட்டு குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார்.

    சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது ஐதீகமாகும்.
    இந்த நிலையில்தான் 1970 ஆம் ஆண்டு ஆதிநாராயணன் அவர்கள் கோயில் பொறுப்புகளை ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரிய ரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலையிலேயே கழித்தார். கடையம் சுற்றுவட்டாரத்திற்கு மட்டும் தெரிந்த அந்த கோயிலை பிரபல படுத்த எண்ணினார். அதற்கு என்னவழி என்று சிந்தித்தார். அப்போதெல்லாம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே சினிமா தியேட்டர்களில் தோரணமலை முருகன் பற்றிய சிலேடுகளை போட ஏற்பாடு செய்தார்.

    அப்படித்தான் தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. இந்த நிலையில் தோரணமலையின் வனப்பை கண்ட சினிமா கலைஞர்கள் அங்கு சினிமா படம் எடுக்க வந்தனர். அவர்களுக்கு ஆதிநாராயணன் அவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் தங்களுக்கு இடம் கொடுத்து உதவியும் செய்ததற்காக ஒரு கணிசமான தொகையை ஆதிநாராயணனன் அவர்களிடம் கொடுத்தனர்.

    ஆனால் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். மாறாக, எனக்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டுமானால் படத்தில் எழுத்துப்போடும் போது தோரணமலை என்ற பெயரை போடும்படி கேட்டுக்கொண்டார். அதனை புனிதமாக கருதிய படக்குழுவினர் தோரணைமலை என்ற பெயரை படத்தில் சேர்த்தனர். மறைந்த இயக்குனர் பரதனின் சாவித்திரி என்ற சினிமாப்படம் (இந்த படத்தில் கதாநாயகியாக நடத்தவர் பிரபல நடிகை கீர்த்திசுரேசின் தாயார் மேனகாதான்) இங்கு அதிக அளவில் படமாக்கப்பட்டது.

    அந்த படத்தின் வசனத்தில் தோரணமலை என்று குறிப்பிட்டு பேசுவார்கள். அதேபோல் டெலிவிஷன் தொடர்களும் இங்கே படமாக்கப்பட்டன. அதிலும் தோரணமலை பெயர் இடம்பெறும்.

    இப்படி தோரணமலையில் பெயர் நாலாபுறமும் பரவியதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வரத்தொடங்கினர். கிராமவாசிகள் மட்டும் வந்தகாலம் போய் நகரவாசிகளும் வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்களால் மலையில் எளிதாக ஏறமுடியவில்லை. அப்போதுதான் ஆதிநாராயணன் அவர்கள் பக்தர்கள் எளிதாக மலைமீது ஏற படிக்கட்டுக்கள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக பலரை சந்தித்து உதவி கேட்டார். அப்போதும் பணத்தை தாருங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. உங்களால் இயன்ற படிக்கட்டுகளை கட்டித்தாருங்கள் என்றுதான் வேண்டினார்.

    இந்த நிலையில்தான் ஆவுடையானூர் டாக்டர் முருகனின் அருளால் ஈர்க்கப்பட்டார். அவர் அடிக்கடி தோரணமலைக்கு வருவார். அவரது திருப்பணி மிகவும் மகத்தானது. அவரது முயற்சியால் பல படிக்கட்டுகள் முழுமை அடைந்தன. அதோடு வழியில் உள்ள லட்சுமி தீர்த்தத்தை புதுப்பித்து அங்கே பக்தர்கள் நீராட வசதி செய்து கொடுத்தார். இதற்காக அந்த டாக்டரே தன் தலையில் செங்கற்களை சுமந்த சம்பவங்களும் உண்டு. அதோடு பண உதவி செய்ய இயலாத பாமர ஏழை பக்தர்களும் திருப்பணி செங்கற்களை கொண்டு சென்றனர்.

    ஆதிநாராயணன் அவர்கள் இந்த திருப்பணியை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. இந்த வயதிலும் அவருடைய எண்ணங்கள் அனைத்தும் தோரணமலை முருகனையே வலம் வந்து கொண்டிருக்கிறது. மோட்டார் சைக்கிள்களும், கார்களும் பெருகி விட்ட இந்த காலத்திலும் தனது திருப்பணிக்கு உதவிய மிதிவண்டியை அவர் இன்றும் மறக்கவில்லை. இயக்குவார் யாரும் இல்லை என்றாலும் அந்த மிதிவண்டி முருகனின் பெயரை சொல்லும் காட்சி பொருளாக அவரது வீட்டில் நின்று கொண்டிருக்கிறது.

    வயது முதுமை காரணமாக ஆதி நாராயணன் அவர்களுக்கு அவரது மூத்த மகன் செண்பகராமன் உதவியாக இருக்கிறார். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தோரணமலையின் பெருமையை பறைசாற்றி வருகிறார். அவரது சீரிய முயற்சியின் பேரில் வருகிற 21&ந்தேதி (திங்கட்கிழமை) தைபூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று வள்ளி&தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு (உற்சவர்) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் வீதிஉலாவும் நடத்தப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து கோயில் திருப்பணி தொடங்க உள்ளது. இதில் கற்களால் ஆன புதிய கட்டிடங்கள், அலங்கார தோரணங்கள் இடம் பெறும். பணி நிறைவு அடைந்தவுடன் குடமுழுக்கும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதில் பக்தர்களும் தொழில் அதிபர்களும் உதவி செய்து முருகப்பெருமானின் அருளை பெறலாம். கடந்த காலத்தில் திருப்பணியில் உதவியவர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து தொடர்ந்து மலைக்குகை நாயகனாம் தோரணமலை முருகப்பெருமானை வந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். அதேபோல் திருப்பணிக்கு உதவி செழுமையாய் வாழ முருகப்பெருமான் அருள்புரிவார்.

    (தொடர்புக்கு - செண்பகராமன்,
    கைபேசி எண் 76959 62002, 9965762002)
    கடையம் பாலன்
    கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு சாஸ்தா (ஐயப்பன்) கோவில்.
    கேரள மாநிலம் திரூர் அருகில் உள்ளது சாம்ராவட்டம் என்ற ஊர். இங்கு நிலா என்ற ஆற்றின் உள்ளே தீவு போல் அமைந்திருக்கிறது ஒரு சாஸ்தா (ஐயப்பன்) ஆலயம்.

    தல வரலாறு :

    சாம்பரன் எனும் முனிவர் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில், நிலா (பாரதப்புழா) ஆற்றின் நடுவில் இருந்த சிறிய தீவு தென்பட்டது. அந்தத் தீவுக்குச் சென்ற முனிவருக்கு, அதன் அழகும், அமைதியும் பிடித்துப் போனது. முனிவர் அந்த இடத்திலேயே தியானத்தில் அமர்ந்தார்.

    நீண்ட கால தியானத்தில் இருந்த அவரின் முன்பு ஒரு ஒளி வட்டம் தோன்றியது. உடனே அவர், இறைவன் விஷ்ணு தனக்குக் காட்சியளிக்கப் போகிறார் என்று நினைத்து, இறைவன் விஷ்ணுவை நினைத்துத் தியானத்தில் ஆழ்ந்தார். ஆனால், அவர் நினைத்தது போல், அவருக்கு விஷ்ணு காட்சியளிக்கவில்லை. அவ்விடத்தில் ஒளி வட்டம் அப்படியே இருந்து கொண்டிருந்தது.

    அதன் பிறகு, இறைவன் சிவபெருமான் தமக்குக் காட்சியளிக்கப் போகிறார் என்று முனிவர் நினைத்தார். அதனால் சிவபெருமானை நினைத்துத் தியானித்தார். ஆனால் சிவபெருமானும் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. அதே நேரம் ஒளி வட்டமும் மறையாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து கணபதி, சுப்பிரமணியர், துர்க்கா என்று முனிவர், ஒவ்வொரு தெய்வமாகத் தியானித்தார். அவர் தியானித்த எவரும் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. ஒளி வட்டம் மட்டும் அப்படியே இருந்தது.

    தன் முன்னேத் தோன்றிய ஒளி வட்டத்தை, முனிவர் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அந்த ஒளி வட்டத்தினுள் சாஸ்தா, அவரது மனைவி பிரபா மற்றும் மகன் சத்யகனுடன் இருப்பது தெரிந்தது. அதனைக் கண்ட முனிவர், சாஸ்தாவை வணங்கினார். அதன் பின்னர் சிறிது நேரத்தில், அந்த ஒளி வட்டம் மறைந்து போனது.

    பின்னர் முனிவர், ஆற்றங்கரையில் இருந்த குட்டிசேரி மணாவைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவரிடம், தான் ஆற்றின் நடுவில் இருந்த தீவில் கண்ட காட்சியைச் சொன்னார். அவ்விடத்தில் சாஸ்தாவுக்குக் கோவில் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்யும்படிச் சொல்லி, சாஸ்தா வழிபாட்டுக்கான விதிமுறைகளையும் அவருக்குச் சொல்லிச் சென்றார். இதையடுத்து நிலா ஆற்றின் நடுவிலிருந்த தீவில் ஆலயம் அமைக்கப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    ஆலய அமைப்பு :

    ஆற்றிற்குள் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில், சுயம்புவாக இருக்கும் சாஸ்தா தவிர்த்து, விஷ்ணு, கணபதி, சிவா, பிரபா, துர்க்கா, சத்யகன் ஆகியோரும் இடம் பெற்றிருக்கின்றனர். இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் கணபதி, சத்யகன், துர்க்கா, பத்ரகாளி மற்றும் சிவபெருமான் ஆகியோருக்கான சன்னிதியும் உள்ளது. சாஸ்தாவிற்கு வழிபாடு செய்யப்படும் போது, இங்கிருக்கும் அனைத்துத் தெய்வங்களுக்கும் வழிபாடு செய்யப்படுகின்றன.

    இங்குள்ள இறைவனுக்கு சத்தச்சாதம், பனப் பாயசம், நெய் பாயசம் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இத்தல இறைவனுக்கு தூபம், தீபம் காட்டப்படுவதில்லை. வழிபாட்டு நேரத்தில் மணியும் அடிப்பதும் இல்லை.

    ஆலயத்திற்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைக் காலம் மற்றும் வெள்ளக் காலங்களில், இக்கோவிலைச் சுற்றிலும் நீர் சூழ்ந்து விடுகிறது. இக்காலங்களில் பூைஜ செய்பவர் மட்டும் படகில் சென்று வழிபாடு செய்து திரும்புகிறார்.

    இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும், தீராத நோயுடையவர்கள் வந்து வழிபட்டால், அவர்களது நோய் நீங்கி, நீண்ட வாழ்வைப் பெறுவர் என்பதும் இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், ஆலயம் வந்து வழிபடுபவர்களுக்கு, சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி, நல்ல பலன்கள் கிடைக்கும் என்கின்றனர்.

    ஆலயம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற நாட்களில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை வேளையில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் வட்டம், திரிப்பிரங்கோடு ஊராட்சியில் சாம்ராவட்டம் என்ற இடத்தில் ஆலயம் உள்ளது. திரூர் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்ல, திரூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பைரவரின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார். ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள். வழியில் வைரவன் கோவில் என்னும் தலம் வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார்.

    அதன்படி பைரவர், வைரவன் கோவில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி அமர்ந்தார். பழமையான இந்த ஆலயத்தின் வலதுபுறம் ஒரு வாய்க்கால் உத்திரவாகினியாக ஓடுகிறது. பைரவர் நோக்கிய தெற்கு முகத்தில் மயானம் உள்ளது. இது காசிக்கு சமமான பெருமையைப் பெற்ற இடமாகும்.

    முன் முகப்பைத் தாண்டியதும் விசாலமான மகா மண்டபம் உள்ளது. நடுவே நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. காசியில் உள்ள கால பைரவரின் அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக இங்குள்ள பைரவர் அருள்கிறார்.

    சிவபெருமானால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்த ஜாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. அத்துடன் அன்று 108 வலம்புரி சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் நடக்கிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு அர்த்த ஜாமத்தில் காலபைரவரை வழிபட அஷ்டலட்சுமிகளின் ஆசியும், கால பைரவரின் வரங்களும் ஒருங்கே கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    இந்த கால பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும் ஞாயிறு மற்றும் வியாழக் கிழமை உச்சி காலத்திலும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களின் ராகு காலத்திலும் வணங்குவது நல்ல பலனைத் தரும்.

    நவக்கிரகங்களை தன்னுடைய சரீரத்தின் சிரம் முதல் பாதம் வரை உள்ளடக்கியவர் கால பைரவர். எனவே இவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நவக்கிர கங்களின் தோஷங்களை நிவர்த்தியாக்கும் பூஜைக்கு நிகரானதாகும்.

    ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும். திருமண தடைகள் விலகும். புத்திரபாக்கியம் கிட்டும். பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.

    பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு- நெய் ஆகியவை ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மேலும் அஷ்டமி நாளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

    இந்த ஆலயம் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், ஞாயிறு மட்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வைரவன் கோவில். இந்த சிற்றூரில் சாலை ஓரத்திலேயே ஆலயம் இருக்கிறது. பஸ் வசதிகள் உள்ளன.
    தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வேங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்த ஆலயத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூரில் ஏராளமான சைவ, வைணவ ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் தஞ்சை நகருக்குள், தெற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவில் பல வகைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. எல்லா கோவில்களிலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும், நுழைவு வாசலும் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் வடக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம் ஒன்று தான் நுழைவு வழி. பெருமாள் கோவில்களில் எல்லாம் வடக்குவாசல் என்பது வைகுண்ட ஏகாதசி அன்று ‘சொர்க்கவாசல்’ என்ற பெயரில் திறக்கப்படும். இங்கே வடக்கு வாசலே நுழைவு வாயிலாக இருப்பதால் ‘நித்திய சொர்க்கவாசல்’ என்று அழைக்கப்படுகிறது.

    உள்ளே மகா மண்டபத்துக்குள் வடக்கு கோபுர வாசல் வழியே நுழைந்தால், விநாயகர் - நாகர் சிலைகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. அதே வரிசையில் கருடாழ்வார் மேற்கு பார்த்த படியும், மூலவரை வணங்கிக் கொண்டிருக்கிறார். சதுர்ப்புஜ வரதராஜ பெருமாளுடன் லட்சுமி தேவி அமர்ந்திருக்க, பக்கத்தில் பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் அருள்கிறார். இவர் மணிகட்டிய வாலை தலைக்கு மேல் உயர்த்தியபடி, இடது கரத்தில் கடிமலர் ஏந்தி, வலக்கரத்தால் ஆசி வழங்கியபடியும் வீற்றிருக்கிறார்.

    வழக்கமாக இறைவனின் கருவறை முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இந்த ஆலயத்தில் இருக்கும் துவார பாலகர்கள் ‘தீர்த்தர் - கிஷ்கிந்தர்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

    அஷ்ட லட்சுமிகளின் உருவம் செதுக்கப்பட்ட மணிக் கதவினைத் தாண்டி, அர்த்த மண்டபத்துக்குள் சென்றால் கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேசப் பெருமாள் அருள்புரிகிறார்கள். சங்கு, சக்கரம் ஏந்திய தடக்கையராக, வரதஹஸ்தம், கடிஹஸ்தம் உடையவராக நான்கு கரங்களுடன் புன்னகை தவழ காட்சி தருகிறார். இருபுறமும் திருமகளும், நிலமகளும் நின்றருள் செய்கின்றனர். உற்சவ மூர்த்தங்களும் அதே திருநாமத்துடன் திகழ்கிறார்கள்.

    திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நவக்கிரக சன்னிதி அறுங்கோண வடிவில் தனி விமானத்தின் கீழ் இருப்பது சிறப்பு. மேலும் நவக்கிரகங்கள் அனைத்தும் வரிசை மாறி அமைந்திருக்கின்றன. வழக்கமாக நடுவில் இருக்கும் சூரியனுக்கு பதிலாக சந்திரன் நடுவில் உள்ளது. அதற்கு வலது புறத்தில் சாயாதேவி- உஷாதேவியுடன் சூரிய பகவான் இருக்கிறார். சனி தெற்கு நோக்கியும், அவரது நட்புக் கிரகங்களான புதன், சுக்ரன் இருபுறமும் இருக்க நவக்கிரகங்கள் காட்சி தருகின்றன. இவை வைணவ ஆலய விதிப்படி நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    பெருமாள் சன்னிதிக்கு நேரே கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. அதை ஒட்டியுள்ள மண்டப மேற்கூரையில் பன்னிரு ராசிகளும் பதிக்கப்பட்டுள்ளன. கொடி மரத்தின் முன், தங்களது ராசிக்குக் கீழ் நின்று பிரார்த்தித்துக் கொண்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேல் விதானத்தில் ராமாயண, நரசிம்ம அவதாரக் காட்சிகள் சிறிய புடைப்புச் சிற்பங்களாக காணப்படுகின்றன.

    கோவிலை வலம் வரும் போது பிரகாரத்தில் மூலவரின் விமானத்தின் அருகே தலவிருட்சமான வில்வமரம் உள்ளது. சிவனுக்குரிய வில்வம் தல விருட்சமாக இருப்பது ஒரு சில திருமால் கோவில்களில் மட்டுமே. அந்த வகையில் இந்த ஆலயம் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.

    வெளிச் சுற்றில் அமிர்த வெங்கடேசர் தனிச் சன்னிதியிலும், தைத்யமர்த்தினி என்ற பெயரில் காவல் தெய்வமான அஷ்டபுஜ துர்க்கை, அருகே பட்டாபிஷேக ராமர், ஆஞ்சநேயர், கஜ சம்ஹார காட்சி சிறிய சிற்பங்களாக வழிபடப்படுகின்றன. திருமணம் தடைப்பட்டோர், சுவாமிக்கு திருமண உற்சவம் செய்து வைத்து, தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். நவக்கிரக தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    கலியுகத்தின் காக்கும் கடவுளான வேங்கடேசப் பெருமாளை நித்திய சொர்க்க வாசல் வழியே சென்று வழிபட்டு அனைவரும் நலம் பெறலாமே.
    துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த ஆலயத்தின் பெயர் ‘சுயம்பு கோலோச்சும் முருகன் கோவில்’ என்பதாகும். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய முகப்புடன் கூடிய நுழைவுவாசல். அடுத்துள்ள மகா மண்டபத்தை அடுத்து விலாசமான அர்த்த மண்டபம் உள்ளது.

    அதை அடுத்த கருவறையில், இறைவன் கோலோச்சும் முருகன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனுக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் வேலையும் கொடியையும் தாங்கி நிற்கும் முருகனின் கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளை காட்டுகின்றன. முருகன் தனது வலது புறம் சக்தி சூரியனுடனும் இடது புறம் பக்தி சண்டிகேஸ்வரருடனும் கட்சி தருகிறார். தவிர முருகனுக்கு முன் அவரது தந்தை சிவபெருமானும், தாய் பார்வதியும், சகோதரர் வலம்புரி விநாயகரும் அமர்ந்துள்ளனர்.

    தனது குடும்ப சகிதமாய் பக்தர்களுக்கு முருகப் பெருமான் கோலோச்சும் அமைப்பு மிகவும் சிறப்பானது என்பதுடன் எங்கும் காண இயலாது என்கின்றனர் பக்தர்கள். முருகப்பெருமானின் கோஷ்டத்தில் அறுபடை வீடுகளும் மிக அழகாக வண்ணத்தில், சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தவிர கருவறையின் முன் மயில், குதிரை, நந்தி, மூஞ்சுறு, பலி பீடம் ஆகியவையும் காணப்படுகின்றன. ஆலயத்தின் திருச்சுற்றில் தெற்கில் விநாயகர், வலம்புரி விநாயகர், ராகு-கேதுவும், மேற்கில் உற்சவ மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் வலது புறம் கொல்லிமலை அருள்வாக்கு சித்தர் ஜானகிராம் சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. இந்த ஆலயத்தை கட்டியவரும் இவர் தான்.

    இந்த ஆலயத்திற்கு மேலே ஒரு தளம் உள்ளது. இறைவனின் கருவறைக்கு மேலே கோபுர கலசம் உள்ளது. இது முற்றிலும் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. கருவறையில் மூன்று ஷவர் பைப்புகள் உள்ளன. முருகனுக்கும், சண்டிகேஸ்வரருக்கும், சூரியனுக்கும் காலையில் அபிஷேகம் செய்யும் முன், இந்த ஷவரை திறந்து விடுவார்கள். தலை மேல் உள்ள ஷவரில் இருந்து தண்ணீர் பூப் பூவாய் பொழிய, முருகன் ஷவரில் நீராடுவது போன்ற அந்த நிகழ்வு, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அற்புத அமைப்பு வேறு எங்கும் உள்ளதா? என்பது சந்தேகமே!

    கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தினத்தன்று, ஆலயம் முன்பு பிரமாண்டமான முறையில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் விழா, பக்தர்கள் முன்னிலையில் ஒளிமயமாக நடைபெறும். கந்தசஷ்டியின் போது ஆலயத்தின் முன், முருகன் வேல் வாங்கி சூரனை சம்ஹாரம் செய்யும் போது கருவறை முருகன் முகத்தில் வெள்ளி பணித் துளிகளாய் வியர்வை துளிகள் காணப்படுவது நம்மை சிலிர்க்க வைக்கும் அதிசயமாகும்.

    இந்த ஆலயம் செவி (காது) வடிவத்தில் இருப்பதால், பக்தர்களின் அனைத்து விதமான பிரார்த்தனையையும், தன்னுடைய காதில் ஏற்று முருகப்பெருமான் அவற்றை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    தினசரி மூன்று கால ஆராதனை நடக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம், நாவல் மற்றும் வன்னி மரமாகும். இந்த ஆலயத்தில் வழிபடும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், இட்லி, உப்புமா, தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் என தினசரி விதம் விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    கால பைரவர், குடும்ப சகிதமாக முருகப்பெருமான்

    ஆலயத்தின் வடக்குப் பகுதியில், பைரவரின் தனிச் சன்னிதி உள்ளது. இந்த கால பைரவருக்கு ‘கலியுக குபேர காலச் சக்கர பைரவர்’ என்று பெயர். இந்த பைரவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக மலை குகை உள்ளே இருந்தார். இவரது அடி பீடத்தில் 6,646 ஸ்ரீசக்கரங்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

    கோவிலின் மேல் தளத்தில் குமார குரு பகவானின் சன்னிதி உள்ளது. இங்கு முருகப்பெருமானே குமார குருவாக அருள்பாலிக்கிறார். குருப்பெயர்ச்சியின் போது ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அன்றைய தினம் 5008 பால்குடம் சுமந்தும், 1000 காவடி சுமந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருவது பரவசத்தை கொடுக்கும் நிகழ்வாகும். அன்றைய தினம் ஆலயத்தில் மட்டுமின்றி, நகரில் உள்ள பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்படும்.

    இங்கு குருஷேத்திர சனி பகவானாக காட்சி தரும், சனீஸ்வரர், ஆலயத்தின் மேல் தளத்தில் தனிச் சன்னிதியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வேறு எந்த ஆலயத்திலும் சனி பகவான் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஏழரைச் சனி, ஜென்ம சனி, கண்டகச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சனீஸ்வரரை வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மேல் தளத்தில் குபேர மூலையில் குபேர காளி, வடக்கு நோக்கி அருள்புரிகிறார். ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும், காலை வேளையில் இந்த குபேர காளிக்கு விசேஷ அபிஷேக ஆராதைனகள் நடைபெறும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ஆலயத்தில் முருகப்பெருமானின் முக்கிய திருவிழாவான தைப்பூசம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    நினைத்ததை நடத்தி தந்து அருள்புரியும், கோலோச்சும் முருகப்பெருமானை, நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே!

    திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது கோலோச்சும் முருகன் ஆலயம்.

    தத்து கொடுக்கும் நிகழ்வு


    இந்த ஆலயத்தில் புதுமையான சம்பிரதாயம் ஒன்று உள்ளது, ‘தத்து கொடுக்கும் நிகழ்வு. தீராத வியாதி களால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள முருகன் சன்னிதிக்கு வந்து, இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, மாலை சாத்தி, புதிய வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள். பின்னர் தங்களின் நோய் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, தன்னைத் தானே முருகப்பெருமானுக்கு தத்துக் கொடுத்து விடுவார்கள். அதன்பிறகு அந்த நபர் தன்னுடைய பழைய உடைகளை தானம் அளித்து விட்டு, புதிய உடை அணிந்து 10 பேருக்கு அன்னதானம் அளிக்கிறார்.

    அன்னதான நிகழ்வு முடிந்ததும், மூன்று பெயர்களை எழுதி, குலுக்கிப் போட்டு அதில் ஒன்றை எடுத்து, தன்னுடைய பெயராக சூட்டிக்கொண்டு இல்லம் திரும்புவார். அப்படி அந்த தத்துக் கொடுக்கும் நிகழ்வைச் செய்யும் நபருக்கு, அவரது நோய்களும், வந்த இன்னல்களும் அகல்வது கண்கூடான உண்மை என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள்.
    கடலூரை அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ளது ‘அழகு முத்தையனார் கோவில்’. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோவில்’. வேண்டிய வரங்களை அருளும் அழகு முத்தையனாரை, திங்கட்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும். கம்பீரமான கலைநயமிக்க கோபுரங்களுக்கு மாறாக, இந்தக் கோவிலில் பல வண்ணங்களால் ஆன சிலைகள் கைகூப்பி பக்தர்களை வரவேற்பது தனிச் சிறப்பு.

    தல வரலாறு :

    சுமார் 366 ஆண்டுகளுக்கு முன்பு அய்யனார் எனும் குழந்தையை, ஒரு முனிவர் வளர்த்து வந்தார். சிவனும், விஷ்ணுவும் தான், முனிவரிடம் அய்யனாரை வளர்ப்பதற்காக ஒப்படைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த அய்யனார் குழந்தை பருவத்தில் ‘அழகர்’ என்று அழைக்கப்பட்டார். அய்யனார் வளர்ந்த பகுதி தான் தென்னம்பாக்கம். முனிவரும் அய்யனாரை திறம்பட, மாவீரனாக வளர்த்து வந்தார். முனிவருக்கு பூரணி, புஷ்கலை (பொற்கலை) என்னும் 2 மகள்கள் இருந்தனர்.

    அப்போது ஒரு மந்திரவாதி மந்திரக்கட்டு என்னும் வித்தை மூலம், அந்தப் பகுதியின் சுற்றுப்புறத்தில் இருந்து சில சிற்றரசர்களை சிறை பிடித்து வசப்படுத்தி வைத்திருந்தான். அவனது மந்திர வித்தை மக்களுக்கு துன்பத்தை அளித்து வந்தது. இதனால் மக்கள் முனிவரிடம் முறையிட்டனர். அவர் அய்யனாரை அழைத்து “மந்திரவாதியை அடக்கி மக்களை காப்பற்று” என்றார். இதையடுத்து அய்யனார், அந்த மந்திரவாதியை அழித்து சிறையில் இருந்த சிற்றரசர்களை மீட்டார். இதனால் ஊர் மக்களுக்கு பயம் நீங்கியது.

    அய்யனாரின் வீரத்தை பார்த்து வியந்த முனிவர், அவரிடம் “உனக்கு என்ன பரிசு வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு பூரணி, புஷ்கலை ஆகியோரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும், என்னைவிட பலசாலியான, வயதில் பெரியவரான ஒருவரை எனக்கு காவலாளியாக நியமிக்க வேண்டும் என்று அய்யனார் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு சம்மதம் தெரிவித்த முனிவர், அய்யனாரிடம் “என் மகள்கள் இருவரது கண்களிலும் கண்ணீர் வரக்கூடாது” என்று நிபந்தனை விதித்தார். இதை அய்யனாரும் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அய்யனாருக்கு முனிவர் தனது 2 மகள்களையும் திருமணம் செய்து வைத்து, வீரபத்திரரை காவலாளியாக நியமித்தார்.

    பின்னாளில் ஒரு சமயம், முனிவரின் ஒரு மகள் தலைமுடியை விரித்து உலர வைத்துக் கொண்டிருந்தார். இதனை தூரத்தில் இருந்து முனிவர் பார்த்தபோது, தனது மகள் அழுவது போல தெரிந்தது. தனது மகள் அழுவதால் கோபம் கொண்ட முனிவர், அய்யனாருக்கு அடுத்த பிறவியில் பிரம்மச்சாரியாக பிறக்க சாபம் விட்டார். அதன்படி, அவர் மணிகண்டனாக (ஐயப்பன்) பிறந்தார் என்று இந்த ஆலயத்தில் தல வரலாறு கூறுகிறது.



    ஆலய அமைப்பு :

    இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் பெரிய அளவில் யானை, குதிரை சிலைகள் உள்ளன. இதைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் பூரணி அம்மாள், பொற்கலை அம்பாள் சமேத அழகு முத்தையனார் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மேலும், அய்யனாரின் வலப்புறம் வீரபத்திரர் காட்சி அளிக்கிறார்.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அய்யனாருக்கு, சிலை வைத்து நேர்த்திக்கடன் செய்வது மரபாக இருந்து வருகிறது. அதாவது இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குழந்தை பாக்கியம், வீடு கட்டுதல், கார் வாங்குதல், கை, கால் போன்ற உடல்பகுதி பாதிப்புகள் சீராகுதல் போன்ற குறைகளை நிறைவேற்றித் தரக் கோரி, அழகுமுத்து அய்யனாரிடம் வேண்டுகிறார்கள். அப்படி வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதும், அந்த வேண்டுதலுக்கு ஏற்ப சிலைகளைச் செய்து கோவிலில் வைத்து வழிபட்டு செல்கிறார்கள். இங்குள்ள சிலைகளே, இங்கு வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறியதற்கு சான்றாக காட்சி தந்து கொண்டிருக்கின்றன.

    அழகு முத்து அய்யனார் சன்னிதிக்கு பின்புறம், அழகர் சித்தருக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த கோவிலின் பின்புறமும் அழகர் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவர் இங்குள்ள கிணற்றுக்குள் ஜீவசமாதி அடைந்தார். அந்த கிணற்றை மூடி ஜீவசமாதியாக பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    சித்தரின் சமாதி அருகே விநாயகர் சிலை உள்ளது. முத்தையனார் கோவிலின் பின்பக்கம் உள்ள இந்த ஜீவசமாதியை தரிசித்து வேண்டினால் முத்தையனாரின் அருளோடு அழகர் சித்தரும் அருள்புரிவார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. ஜலத்தில் (நீர்) சித்தர் சமாதியான இடம் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் சுந்தரேஸ்வரர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன.

    வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாணம் விழா நடைபெறுவது வழக்கம். அன்று 108 நாதஸ்வரம், தவில் கலைஞர்களின் இசைநிகழ்ச்சியுடன் அழகு முத்து அய்யனாருக்கும், பூரணி- பொற்கலை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதில் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பக்தர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து முத்தையனாரின் கையில் உள்ள அரிவாளில் கட்டி வழிபாடு செய்வது வழக்கம். அதில் உள்ள கோரிக்கைகளை முத்தையனார் நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

    சிலைகள் சொல்லும் கதை :

    ஒவ்வொரு கோவிலும் கலைநயமிக்க கோபுரங்களில் உள்ள சிலைகளும், கோவில் சுவர்களில் உள்ள பல ஓவியங்களும் புராண கதைகளை விளக்கும். ஆனால் அழகு முத்தையனார் கோவிலில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிமெண்டு சிலைகள் உள்ளன. டாக்டர், வக்கீல், போலீஸ், திருமண ஜோடிகள், வீடு, கார் போன்ற பலவிதமான சிலைகள் அவை. ஒவ்வொரு சிலையும் ஒரு பக்தரின் கோரிக்கை நிறைவேறியதற்கு சான்றாக அமைந்து, அந்த பக்தரின் கதையை சொல்லியபடி ஆலயத்தின் ஒரு பகுதியில் நிரம்பியிருக்கிறது.

    அமைவிடம் :

    கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் தென்னம்பாக்கம் அழகுமுத்தையனார் கோவிலுக்குச் செல்லலாம்.
    மங்களப்பள்ளியில் சாந்த ரூபியாக நரசிம்மர் அருள்புரிகிறார். இந்த ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தசாவதாரங்களிலேயே சிறப்பு மிக்கதாக விளங்குவது நரசிம்மர் அவதாரம். பக்தர்களின் துன்பத்தை உடனடியாக தீர்ப்பவர் என்பதால், நரசிம்மருக்கு இந்த சிறப்பு. இப்பூவுலகில் வெறும் இரண்டு நாழிகைகள் மட்டுமே நீடித்திருந்த அந்த அவதாரத்திலேயே, ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைதல் ஆகிய ஐம்பணிகளையும் செவ்வனே செய்து முடித்தார்.

    அப்படிப்பட்ட அவதார தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று, கருடன் வருந்தினார். இதனால் கருடனுக்கு நவ நரசிம்மராக இறைவன் காட்சி தந்த இடம் தான் அகோபிலம். இந்த திருத்தலம் தற்போதைய ஆந்திர மாநில கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. இங்கு செல்ல உடல் உறுதியும், மன உறுதியும், கடின முயற்சியும் தேவை.

    ஆனால் சுலபமாக தரிசனம் செய்யும் வகையில், தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரைச் சுற்றி அகோபிலம் போலவே நவ நரசிம்மர் கோவில் கொண்டுள்ளார்.

    புராண காலத்தில் திண்டுக்கல் ‘பத்மகிரி’ என்று அழைக்கப்பட்டது. பத்மம் என்றால் ‘தாமரை’ தாமரைப் பூவில் இருக்கும் மகாலட்சுமி அருளும் தலம் என்பதால் பத்மகிரி என்ற பெயர் உண்டானது. திண்டுக்கல் பகுதியில் ராமகிரி, கன்னிவாடி, நிலக்கோட்டை, கொத்தப்புள்ளி, அம்மைய நாயக்கனூர், மங்களப்பள்ளி, வி.மேட்டுப்பட்டி, வேடசந்தூர், நரசிங்கபுரம் என ஒன்பது தலங்களில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவற்றுள் மங்களப்பள்ளியில் சாந்த ரூபியாக நரசிம்மர் அருள்புரிகிறார். இந்த ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    கி.பி.1529-ல் மதுரை மகாமண்டலேசுவர விசுவநாத நாயக்கர் பேரரசு அமைத்தபொழுது, இந்தப் பகுதியில் இருந்த குறுநிலத் தலைவர்களையும், தன்னுடன் வந்த கன்னட, தெலுங்கு மொழி பேசும் படைத் தலைவர்களையும் அரசு நிர்வாகத்தில் அங்கமாக்கினார். அதனைத் தொடர்ந்து 72 பாளையங்கள் உருவாக்கப்பட்டன. திண்டுக்கல் பகுதியில் மட்டும் 18 பாளையங்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் கோவில்களில் திருப்பணிகளில் ஈடுபட்டனர்.



    அப்படி திருப்பணி செய்யப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் இந்த நரசிம்மர் ஆலயம். கன்னட, தெலுங்கு மன்னர்கள் காலத்தில் சிவ - விஷ்ணு ஆலயமாக சிறந்து விளங்கிய இத்திருத்தலத்தின், மகா மண்டபத் தூண்களில் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருந்தன. இங்கிருந்த 18 தூண்களிலும் விநாயகர், சிவலிங்கம், ஆனிலையப்பர், கண்ணன், ஆஞ்சநேயர் சிற்பங்களும், இசைக்கருவிகளை வாசித்துக்கொண்டு நடனமாடும் பெண்களும் சிற்பங்களாக இடம்பெற்றிருந்தன.

    கால ஓட்டத்தில் கவனிப்பாரின்றி போய்விட்ட இந்த கோவிலில், பல சிற்பங்கள் சிதைந்து விட்டன. கடந்த 2002-ம் ஆண்டு தான் கல்லூரி மாணவர்கள் சிலரின் முயற்சியால் இந்த ஆலயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. தற்போது இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத சீனிவாசன் சிலை மட்டுமே உள்ளது. தற்போதுதான் நரசிம்மர் சிலை தயார் செய்து வருகின்றனர். அறநிலையத்துறைக்குட்பட்ட இவ்வாலயம் அரசு ஆவணங்களில் லட்சுமி நரசிங்கப்பெருமாள் என்றே உள்ளது. லட்சுமி நரசிம்மருக்குப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

    இங்கு ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரம் அன்றும் காலையில் சுதர்சன ஹோமமும், கோபூஜையும் நடக்கின்றன. இங்கே நரசிம்மரை மனதில் நிறுத்தி வழிபாடு செய்தால் மன அமைதி கிட்டும், சர்வரோக நிவாரணம் ஏற்படும். திருமணத் தடங்கல் நீங்கும். சந்தான பாக்கியப்பேறு வாய்க்கும். லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

    நரசிம்மர் குழந்தை மனம் கொண்டவர். தம் பக்தர்களின் மனம் மகிழச் செய்பவர். குழந்தையைக் கண்டதும் தாயின் முகம் மலர்வது போல பக்தர்களைக் கண்டதும் பகவானின் முகம் மலர்கிறது. ஏராளமான பக்தர்களை ஒருங்கே காண நேரிடும்போது, சீனிவாசனுக்கு ஆனந்தக் களிப்பு தலைக்கேறி முகம் மலர்கிறது. அந்த மலர்ச்சியைக் காண நீங்களும் ஒரு முறை இந்த ஆலயம் சென்று வாருங்கள்.

    அமைவிடம் :


    திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்னும் ஊரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மங்களப்பள்ளி அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நவாமரத்துப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, கோவில்பட்டிப் பிரிவில் இறங்கி 1 கி.மீ. மேற்கே சென்றால் இத்தலத்தை அடையலாம்.கோடாங்கிப்பட்டி செல்லும் பேருந்தில் பயணித்து மன்னார்கோட்டையில் இறங்கி 1 கி.மீ. கிழக்கே சென்றும் இக்கோவிலுக்கு வரலாம்.
    திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருகன்குளம் கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது.
    திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம். இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.

    தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். சீதையை ராவணன் கடத்துவதை அருகன்குளம் பகுதியில் வைத்துப் பார்த்த ஜடாயு என்ற கழுகு அரசன், ராவணனை தடுத்து நிறுத்தினான். இதனால் ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர் ஏற்பட்டது.

    இதில் ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டினான். இதில் காயமடைந்த ஜடாயு, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. அந்த வழியாக வந்த ராமரும், லட்சுமணரும் துடித்துக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்தனர். உடனே ராமர், ஜடாயுவை தனது தொடையில் தூக்கிவைத்து தடவிக்கொடுத்தார். அப்போது ஜடாயு, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்கிறான் என்ற தகவலை சொல்லியது. மேலும் தான் இறந்ததும் இறுதிச்சடங்கை ராமர் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து விட்டு இறந்தது.

    அதன்படி ஜடாயுவுக்கு, தாமிரபரணி ஆற்றங் கரையில் இறுதிச்சடங்கு செய்தார், ராமபிரான். அப்போது ஜடாயுவுக்கு தீர்த்தம் கொடுப்பதற்காக ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கி அதில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார். ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம், தாமிரபரணி நதிக்கரையில் ‘ஜடாயுத்துறை’ யாக இன்றும் அழைக்கப்படுகிறது.

    ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ராமர், அவருக்கு மோட்சம் கிடைக்கவேண்டும் என்பதற்காக தாமிரபரணி நதிக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த லிங்கம் தான் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ராமலிங்க சுவாமி ஆகும். இந்த ஆலயத்தில் ராமலிங்க சுவாமி மூலவராக உள்ளார். வெளி மணிமண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி சன்னிதிகளும் உள்ளன. மூலவருக்கு வடக்கு பகுதியில் தனிக் கோவிலாக ஜடாயுவுக்கு பிண்டம் போட்ட ‘பிண்ட ராமர்’ உள்ளார்.



    இந்தக் கோவில் பிற்காலத்தில் வல்லபாண்டிய மன்னரால் புனரமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன. ஆலயத்தின் அருகில் ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், சிவ தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களும் உள்ளன. இந்த தீர்த்தங்களின் அருகில் லட்சுமி நாராயணர் கோவிலும், காட்டு ராமர் கோவிலும், எட்டெழுத்து பெருமாள் கோவிலும், கோசாலையும் அமைந்திருக் கின்றன. இந்த 3 தீர்த்தங்களும் ராமர் ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ஜடாயுத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

    இதனால் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் புனித நீராடிவிட்டு ராமலிங்க சுவாமியையும், பிண்ட ராமரையும் வழிபட்டால், நமது குடும்பத்தில் உள்ள 27 தலைமுறையினர் செய்த பாவங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் இந்த ஜடாயுத்துறைக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து சுவாமியை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி குடும்பம் முன்னேற்றம் அடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கும், ராமருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    அருகன்குளம் பழைய கிராமத்தில் உள்ள இக்கோவில் ராமேசுவரம் கோவிலுக்கு முந்தைய கோவில் என்பதால் ‘பழைய ராமேசுவரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஏராளமானவர்கள் இங்கு வந்து ஜடாயுத்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, இத்தல இறைவனையும் வழிபடுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்து ஊற்றி விளக்கு ஏற்றினால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து கோவிலுக்கு சென்று வர மினிபஸ் இயக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பு, தாழையூத்தில் இருந்து ஆட்டோவில் சென்று வரலாம். கோவில் அருகில் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்கின்ற தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
    வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை என பல பெருமைகள் வாய்ந்த தலமாக விளங்குவது உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவில்.




    குறை இல்லா கருவறை
    கோவில் தோற்றம்
    வெக்காளி அம்மன்









    வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை, சோழ மன்னனின் தலைநகரான தலம், பெருமைமிக்க அருளாளர்கள் அவதரித்த பூமி, பழங்கோவில்கள் நிறைந்த தலம், யானையை அடக்கிய கோழி வாழ்ந்த ஊர் என பல பெருமைகள் வாய்ந்த தலமாக விளங்குவது உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவில்

    கல்வெட்டுச் செய்தி :

    முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய நகரம் இது. இன்று திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இது ‘உறந்தை’, ‘கோழியூர்’, ‘வாகபுரி’, ‘வாரணம்’ உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்பட்டிருப்பதை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், பெரியபுராணம் போன்ற இலக்கியங்கள் உறுதி செய்கின்றன.

    தாலமி (கி.பி. 130) என்ற வெளிநாட்டு அறிஞரும், ‘பெரிப்ளஸ்’ என்ற கிரேக்க நாட்டுப் புவியியல் நூலும், உறையூர் பற்றி கூறுகின்றன. ‘உரகபுரம்’ என்ற வடமொழி சொல்லின் திரிந்த வார்த்தை தான் ‘உறையூர்’ என்றும் கூறப்படுகிறது.

    சோழ மன்னன் காலத்தில், இத்தலத்திற்கு வந்த மன்னனின் பட்டத்து யானை அலங்காரத்தோடு, கம்பீரமாக பவனி வந்தது. அப்போது அதை எதிர்கொண்ட கோழி ஒன்று, சற்றும் பயம் கொள்ளாமல், சட்டெனப் பறந்து, யானையின் பிடரியின் மீது அமர்ந்து கொண்டது. இதனால் அதிர்ச்சியுற்ற பட்டத்து யானை, செய்வதறியாது நெடுநேரம் திகைத்து நின்றது. இதனால் இத்தலம் ‘கோழியூர்’ என்றும், யானையைக் குறிக்கும் விதமாக ‘வாரணம்’ என்றும் அழைக்கப்பட்டது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இத்தலத்தில் உள்ள பஞ்சவர்ணநாதர் கோவில், அம்மன் சன்னிதி கருவறை வெளிச்சுவரில், இக்காட்சி புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளதை கண்டு மகிழலாம்.

    சிலப்பதிகாரத்தில் கூறப்படும் நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எழுப்பிய பத்தினிக் கோட்டமே ‘வெக்காளி ஆலயம்’ என கூறப்படுகிறது. மேலும், ஒட்டக்கூத்தனின் ‘தக்கயாகப் பரணி’, சைவ எல்லப்பனின் ‘செவ்வந்திப் புராணம்’ ஆகியவற்றிலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. கண்ணகியின் வடிவமே வெக்காளி என்று கூறுவோரும் உண்டு.

    தலவரலாறு :

    சாரமா முனிவர் என்பவர், அபூர்வ பூச்செடிகளைக் கொண்டு உறையூரில் நந்தவனம் அமைத்தார். அந்த நந்தவனத்தில் மலரும் மலர்களை மாலையாகத் தொடுத்து, அருகே உள்ள தாயுமான சுவாமிக்கு நாள்தோறும் சமர்ப்பித்து வந்தார்.

    இந்த நிலையில் பூ வணிகன் ஒருவன், அந்தப் பகுதி மன்னனை மகிழ்விப்பதற்காக சாரமா முனிவரின் நந்தவனத்தில் இருந்து மலர்களை திருட்டுத்தனமாக பறித்துக் கொடுத்து வந்தான். ஒரு நாள் இதனைக் கண்டறிந்த சாரமா முனிவர், மன்னனிடம் போய் முறையிட்டார். மன்னனோ, முனிவரின் புகாரை புறக்கணித்த தோடு அல்லாமல், பூ வணிகனை ஊக்குவித்தான்.

    இதனால் தவித்துப் போன சாரமா முனிவர், திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று எண்ணி, தாயுமான சுவாமிகளிடமே தனது புகாரை சொல்லி வழிபட்டார். தனக்கு நேரும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், தன் அடியார்கள் படும் துயரைத் தாங்கிக்கொள்ள மாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் கிழக்கு நோக்கிய இறைவன், கோபக்கனல் கொண்டு மேற்குநோக்கி திருப்பினார். அவரது உக்கிரப் பார்வையால், உறையூரில் மண் மழை பொழிந்தது. இதில் அங்கு வசித்த மக்களின் வீடுகள் அழிந்தன. மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அனைவரும் உறையூரில் உள்ள வெக்காளி அம்மனிடம் சரண் புகுந்தனர்.

    அன்னை வெக்காளி, தம் மக்களுக்காக தாயுமானவரிடம் வேண்ட, மண் மாரி பொழிவது நின்றது. மக்கள் வீடு இழந்து நின்றனர். மக்களின் துயரம் கண்டு வருந்திய அன்னை, மக்கள் அனைவருக்குமே வீடு கிடைக்கும் வரை நானும் வெட்ட வெளியிலேயே வாழ்வேன் என்று சபதம் செய்து வானமே கூரையாக வாழத் தொடங்கினாள். இன்றளவும் வீடற்றவர்கள் வாழ்ந்து வருவதால், அன்னையும் தன் சபதப்படியே வெட்ட வெளியில் வாழ்ந்து வருவதாக தல வரலாறு சொல்கிறது.


    குறை இல்லா கருவறை

    ஆலய அமைப்பு :

    சுற்றிலும் எழிலான மண்டபம் இருக்க, அன்னை வெக்காளி மட்டும் தன் வாக்குப்படி வெட்டவெளியில் நடுநாயகமாக வடக்கு முகமாய் அருள்காட்சி வழங்குகிறாள். ஆலயத்திற்கு தெற்கு, வடக்கு வாசல்கள் உள்ளன. தெற்கு வாசலில் நுழைந்தால் வல்லப கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி - தெய்வானை சமேத மயூர முருகன், காத்தவராயன், புலி வாகனத்துடன் கூடிய பெரியண்ணன், மதுரைவீரன், உற்சவர் வெக்காளி, வடக்கு சுவரில் துர்க்கை, பொங்கு சனீஸ்வரர் என அனைத்து சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.

    அன்னை வெக்காளி, பெயரில் தான் காளி. வடிவத்தில் கருணை கொண்ட முகம். கோரைப் பற்களின் சீற்றம் கிடையாது. சிரித்த முகம், சிவந்த வாய், அக்னிச் சுவாலையுடன் கூடிய கிரீடம், அதில் நாகமும் அமைந்துள்ளது. நான்கு கரங்களில் மேற்கரங்கள் இரண்டில் உடுக்கை, பாசம், கீழே வலது கரம் சூலம் ஏந்தியிருக்கிறாள். வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு, அரக்கனை மிதித்த விதமாக காட்சி தருகின்றாள். பொதுவாக, இடதுகாலை மடித்து காட்சிதரும் கோலத்திற்கு மாறாக, வலது காலை மடித்து காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இது ‘வீர ஆசனம்’ என்று அழைக்கப்படுகிறது.

    அம்மனின் இடது பாகத்துக்கு அருகே சூலமும், இரு பாதங்களும், கருவறையின் நான்கு மூலையில் பாதங்களும் பதிக்கப்பட்டுள்ளன. அன்னையின் மேற்புறம் வானமே கூரையாக அமைந்துள்ளது. இதே அமைப்பு திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த காளி ஆலயத்திற்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அம்மன் சன்னிதியின் எதிரே சூலங்கள் நடப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை அலுவலகத்தில் சிறு காணிக்கை செலுத்தி, ஆலயத்தில் தரும் சீட்டில் எழுதி அதனை அம்மனிடம் வைத்து எடுத்து, இந்த சூலத்தில் கட்டி விடுகின்றனர். இதனால் தங்கள் வேண்டு தல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தில் பங்குனியில் தொடங்கும் பிரம்மோற்சவம், சித்திரை 1-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தோடு நிறைவுபெறுகிறது. இது தவிர, ஒவ்வொரு மாதமும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. விழாக்களுக்குக் குறைவில்லாத ஆலயமாக இது விளங்குகின்றது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    சுற்றியுள்ள தலங்கள் :

    உறையூரில் பஞ்சவர்ண நாதர் கோவில், தான்தோன்றீஸ்வரர் ஆலயம், நாச்சியார் கோவில், செல்லாண்டி அம்மன் திருக்கோவில் உள்ளிட்ட பல ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர உறையூரைச் சுற்றிலும் உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமான சுவாமி ஆலயம், திருவானைக்கா ஆலயம், உய்யக்கொண்டான் திருமலை, திருவெறும்பூர், திருநெடுங்களம், திருவாசி, திருப்பைஞ்ஞீலி, வயலூர் உள்ளிட்ட சைவத் தலங்களும், ஸ்ரீரங்கம், உத்தமர் கோவில், திருவெள்ளரை, அன்பில் எனும் வைணவத் தலங்களும் அமைந்துள்ளன. இது தவிர சமயபுரம், குணசீலம் உள்ளிட்ட பிரார்த்தனைத் தலங்களும் இருக்கின்றன.

    அமைவிடம் :

    திருச்சிராப்பள்ளி மாநகரின் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உறையூர் அமைந்துள்ளது. எண்ணற்ற பேருந்துகள் உறையூர் வழியே சென்று வருகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இது 108 திவ்யதேச ஆலயங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் ஆலயத்தின் துணைக் கோவிலாகும். ஆலயத் தில் 9 அடி ராஜகோபுரம் மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து செல்கையில் தெற்கு திசையில் விநாயகர் சன்னிதி உள்ளது. இதையடுத்து ஈசான மூலையில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது. தொடர்ந்து பலிபீடம் காணப்படுகிறது.

    அடுத்ததாக கருவறை மண்டபம். இதன் மத்தியில் பெருமாளை வணங்கியபடி கருட பகவான் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். கருவறை மண்டபத்தின் தெற்கு திசையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இவர் நின்ற கோலத்தில் கதாயுதத்தை கையில் தாங்கியவாறு உள்ளார். பக்தர்கள் தங்கள் மனக்குறை விலக, இந்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

    ஆஞ்சநேயரைக் கடந்ததும், பெருமாள் சன்னிதியைக் காணலாம். கருவறையில் வராக மூர்த்தியாய் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார். இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும், வலது காலை தொங்க விட்டு, மடியில் தாயாரை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் அற்புத தரிசனம் அது. தாயாரின் ஆனந்த அமர்ந்த கோலம் மற்றும் சவுந்தரியமான பார்வை சேவிக்கும் பொழுது, நம்முள் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

    ஆலயத்தில் அருளும் தாயாரின் திருநாமம் ஆதி லட்சுமி. தாயார் பெருமாளிடம் ஒன்றியே சேவை சாதிப்பதால் அவருக்கென்று தனிச் சன்னிதி இல்லை. பெருமாள், கல்யாண குணம் கொண்டவராக இந்த ஆலயத்தில் திகழ்கிறார். பெருமாளுக்கு வலது புறத்தில் சக்கரத்தாழ்வார் அருள்கிறார்.

    ஆலயத்தின் தல விருட்சம் வில்வ மரமாகும். இந்தக் கோவிலில் முக்கியமான 2 பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. ஒன்று காலசர்ப்ப தோஷம் நிவர்த்தி, மற்றொன்று திருமணம் கைகூட பெருமாள் மற்றும் தாயாருக்கு மாலை சமர்ப்பித்தல். காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டி தோஷ நிவர்த்தியடைகின்றனர். திருமணம் கைகூட வேண்டுபவர்கள், இரண்டு மாலைகளுடன் திருக்கோவிலுக்கு வர வேண்டும். அந்த மாலைகள் பெருமாள் மற்றும் தாயாரிடம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து ஒரு மாலையைத் திருப்பித் தரப்படும். அதை பத்திரமாக வீட்டில் வைக்க வேண்டும். இந்த பிரார்த் தனையை தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் மேற்கொள்ள வேண்டும். முடிவில் ஆனந்தமான செய்தி உங்களை வந்தடையும்.

    புரட்டாசி மாதம் வரும் எல்லா சனிக்கிழமைகளிலும் பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் வரும் மூல நட்சத்திரத்தன்று வடைமாலை சாத்தப்படுகிறது. ஆவணி மாத மூலமும், அனுமன் ஜெயந்தியும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்- சாயல்குடி இடையில் கடலாடி அமைந்துள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    வடவண்டையில் மேற்கு நோக்கி வரதராஜப் பெருமாள் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வடவண்டையில் மேற்கு நோக்கி வரதராஜப் பெருமாள் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளார். பல இடங்களில் சிவன் கோவில்களில் பெருமான் சன்னதி, கோவிலுக்குள்ளேயே அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். சீதேவி, பூதேவி இல்லாமல் திருமால் மட்டும் மேற்குப் பக்கம் நோக்கித் தனிக்கோவில் தனித்துத் திருக்காட்சி அளிப்பது இங்கே தான். பிரயோக சக்கரமும், சங்கும் விளங்க அபயஹஸ்தத்துடன் நமக்கு நெடியோன் வேங்கடவன் அருள்புரிகிறார். கம்பீரமான ஆறடி உயரம். அற்புதமான திருக்காட்சி.

    சீதேவியும், பூதேவியும் நாச்சியார் கோவிலில் இருப்பதாகவும், சுவாமி மட்டும் வக்கிராசுரனுடன் போர்தொடுக்க இங்கே வந்து, போர் முடிந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்த இடம் என்றும் தல வரலாறு கூறுகிறது. கோவிலுக்குள், ஒரே கல்லில் ராதா, ருக் மணி சமேதராக ராஜகோபாலன் உள்ளார். கிருஷ் ணாவதாரத்துடன் ராமாவதாரத்தையும் இணைத்து கண்ணன் கைகளில் வில்லும், அம்பும் மிளிர்கின்றன. கோவிலின் எதிரில் ஆஞ்சநேயரும் கருடாழ்வார் பக்தியின் வடிவமாக எழுந்தருளியிருக்கிறார்கள்.

    இத்திருக்கோவிலை எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது எடுத்து, ‘உலகம் ஆண்ட திருக்குலத்துவனச் சோழன் கோச்செங்கணான் செங்கல்லால் கட்டினான்’ என்னும் செய்தி நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. செங்கட் சோழன் காலம் கடைச்சங்க காலம், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. ‘இக்கோவில் அதிராசேந்திரனுடைய இரண்டாவது ஆட்சியாண்டில் (கி.பி.1072) கற்கோவிலாகக் கட்டப்பெற்றது’ என்று கல்வெட்டு கூறுகிறது.

    சஹஸ்ர லிங்கம் :

    பெருமாள் கோவிலின் பின்புறம் கிழக்கு நோக்கி இச்சிறிய சஹஸ்ர லிங்கக் கோவில் இருக்கிறது. ஒரே ஒரு சிறிய சிவலிங்கத்தில் ஆயிரத்தெட்டு லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒப்புயர்வற்ற கலைத் திறனைக் காணக் காண வியப்படைகிறோம். மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிதான அதைக் கண்டதும், நம் கைகள் தாமாகவே குவிந்து வணக்கம் தெரிவித்துக் கொள்கின்றன. பக்தர்கள் கண்டு மகிழ்ந்து வணங்க வேண்டிய முக்கிய இடம், இது. இக்கோவிலுக்கு முன்னர், தென்புறம் நோக்கி வள்ளி, தெய்வானையோடு ஆறுமுகப் பெருமாள் காட்சி தருகிறார்.

    அலங்கார முன் மண்டபம் :

    இத்திருமண்டபத்தை, கி.பி.1286-ல் அரசி உலக முழுதுடையாள் கட்டினாள். ‘ஸ்வஸ்திஸ்ரீ பெருமாள் விக்கிரம பாண்டிய தேவர் நம்பிராட்டியார் உலக முழுதுடையார் செய்வித்த திருமண்டபம் யாண்டு’ என்று கல்வெட்டு கூறுகிறது. அலங்கார முன் மண்டபத்தினுள் வலப்பக்கம் ராஜசிம்ம பல்லவன் காலத்திய பதினாறு பட்டை லிங்கமும், இடப்பக்கம் அகோர வீரபத்திரர் சிலையும் நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றன. வாயிலின் இருபுறமும் கதைகளின் மீது கால்களைத் தூக்கி வைத்து நிற்கும் 12 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான துவாரபாலகர் இருவரையும் பார்த்துப் பிரமிப்படைகிறோம். இருவருக்கும் பின் பக்கம் இரண்டு சிம்மங்கள் கம்பீரமாக நிற்கின்றன.

    இந்தத் துவாரபாலகரைப் பார்த்ததும், திண்டிவனம் பஸ் நிலையத்தின் அருகேயுள்ள கிடங்கில் பூமிக்கு அடியிலிருந்து கிடைத்த பெரிய அழகிய கொற்றவையின் சிலை நினைவுக்கு வருகிறது. அந்தக் கொற்றவையின் அதே பாங்கில், சுமார் ஒன்றரை அடி அகலம் உள்ள பலகைக் கற்களில் இந்தச் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிரில் பார்த்தால், சிங்கத்தின் மீது நிமிர்ந்து அமர்ந்துள்ளதைப் போன்ற மாயத்தோற்றமும் உள்ள, இச்சிற்பங்களைத் தெய்வத் தச்சன் அல்லவா கைபுனைந்து இயற்கைக்குக் கவின் பெருவனப்புடன் படைத்துள்ளான்.

    உள்சுற்று :

    திருக்கயிலாய நாதரைத் தரிசிக்கச் செல்லும் இனிய உணர்வுடன் கயிலாய மலைக்குள் நுழையும் உடல் சிலிர்ப்புடன் உள்ள திருச்சுற்றில் சென்றால், நால்வர், தட்சிணாமூர்த்தி, கணபதி, லட்சுமி பிரயோகச் சக்கரத்துடன் கூடிய திருமால், அகத்தியர் பூசித்த லிங்கமும், வள்ளி தெய்வானையோடு ஆறுமுகப் பெருமான், அஷ்டபுஜ துர்க்கை, சண்டேசுர தேவர் முதலியவர்களுடன் பல்லவர் கால... சோழர் காலச் சிற்பங்களாகிய பரிவாரத் தேவதைகளையும் தரிசிக்கலாம்.

    முதல் பிரகாரத்தில் சிலைகள் மயம் :


    கருவறையை சுற்றி உள்ள முதல் பிரகாரத்தில் முருகன் சன்னதி எதிரில் வரிசையாக சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஸ்ரீலிங்கம், வாதாபி விநாயகர், பிச்சாண்டவர், ஸ்ரீலிங்கம், லிங்கோத்துபர், ஸ்ரீலிங்கம், பிரம்மி, பைரவர், அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீலிங்கத்தை அடுத்தடுத்து காணலாம். இதைத் தொடர்ந்து ஸ்ரீலிங்கம், துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம். அதே வரிசையில் குண்டலினி மாமுனிவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அவருக்கு அருகே நாகேஸ்வரர் பிரதீஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

    அடுத்த அரங்கில் கால பைரவர், சண்டீகேஸ்வரர்கள் உள்ளனர். அந்த வரிசை இறுதியில் அகத்தியர் நிறுவி வழிபட்ட லிங்கத்தை காணலாம். பல நூறு ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னமும் அந்த அகத்திய லிங்கம் பளபளவென இருப்பது பக்தர்களைக் கவரும் வகையில் உள்ளது.
    மேட்டு மருதூர் என்ற கிராமத்தில் உள்ளது செல்லாண்டியம்மன் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மேட்டு மருதூர் என்ற கிராமத்தில் உள்ளது செல்லாண்டியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் அழகிய முகப்பைக் கடந்ததும் விலாசமான மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வலதுபுறம் பிள்ளையார், மூஞ்சுறு, நாகர் திருமேனிகள் காணப்படுகின்றன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

    கருவறையில் சப்த மாதர்களான பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, மகேஸ்வரி, சாமுண்டி ஆகியோரின் திருமேனிகள் ஒரே வரிசையில் வீற்றிருக்கின்றன. இந்த திருமேனிகளின் அமைப்பு, கண்களைக் கவரும் வனப்புடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சப்த மாதர்களின் வரிசையில் நடு வில் இருப்பது வைஷ்ணவி. இந்த வைஷ்ணவி தேவியையே, ‘செல்லாண் டியம்மன்’ என்ற பெயரில் பிரதான அம்மனாக பாவித்து வழிபாடு செய்கி றார்கள். ஆலயமும் செல்லாண்டியம் மன் பெயரிலேயே அழைக்கப்படு கிறது.

    கருவறையில் சப்த மாதர்களுடன் விநாயகரும், அய்யனாரும் அருள் பாலிக்கின்றனர். சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்திற்கு கடந்த 12.06.11 அன்று குடமுழுக்கு திருவிழா நடந்துள்ளது. அந்த நாளையே ஆண்டு விழா நாளாக இங்கு கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் அன்னையருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன், ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

    சித்ரா பவுணர்மி அன்று காவிரி நதியில் இருந்து சுமார் 500 பேர் பால் குடம், பால் காவடி, அலகு காவடி, தீச்சட்டி சுமந்து அன்னையின் ஆலயம் வருவர். சுற்றிலும் உள்ள கிராம மக்கள் இந்த நாளை ஆலய திருவிழா நாளாக கொண்டாடி மகிழ்வர். சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர்களை உடைய இந்த ஆலயத்தின் உள்ளே ஒரு பெரிய நாகமும் வசித்து வருகிறது. இந்த நாகம் அவ்வப்போது செல்லாண்டி அம்மனை தரிசிக்க கருவறை வரை வருவதுண்டாம். இந்த நாகம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை. மனித அரவம் கேட்டால் இந்த நாகம் தானாக வெளியேறி தன் புற்றுக்கு சென்றுவிடும்.

    நடுநசியில் மெல்லிய கொலுசு சப்தத்தை இந்த கிராம மக்கள் கேட்டிருக்கிறார்கள். தற்போதும் கேட்டுக் கொண்டிருப்பதும் நிஜம். செல்லாண்டியம்மனே இரவு நேரத்தில் உலா வந்து ஊரை காப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இந்த ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த செல்லாண்டியம்மன் குலதெய்வமாக விளங்குகிறாள். குலமக்கள் அடிக்கடி ஆலயம் வந்து பொங்கல் வைத்து படைத்து, அன்னையருக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மகிழ்வது அடிக்கடி காணும் காட்சியாகும். கிடாவெட்டி படையல் போடுபவர்கள் ஆலயத்திற்கு வெளியில் இருந்தபடியே தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 7 மணி வரையும், மாலை 3 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    மூலவராய் இருக்கும் வராகிக்கு மஞ்சள் காப்பிட்டு பிரார்த்தனை செய்தால் தடை பட்ட திருமணம் நடக்கும். கன்னியருக்கு விரைந்து திருமண பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் கூறுகிறார்கள்.

    திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மருதூரில் இறங்கி 1 கி.மீ. தொலைவு நடந்தால் மேட்டு மருதூர் வரும்.
    ×