என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சென்னையில் உள்ள சக்தி தலங்களில் மிக மிக பழமையான தலமாக திகழ்வது பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும்.
    சென்னையில் உள்ள சக்தி தலங்களில் மிக மிக பழமையான தலமாக திகழ்வது பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும். கொத்தவாசல் சாவடியில் காய்கறி மார்க்கெட் இருந்தபோது கடைகளுக்கு மத்தியில் இந்த ஆலயம் இருந்தது போன்ற தோற்றம் இருந்தது.

    காய்கறி மார்க்கெட் கோயம்பேடுக்கு இடம் பெயர்ந்த பிறகு இந்த ஆலயத்துக்கு சென்று வருவது மிக மிக எளிதாக மாறி உள்ளது. பார்வதிதேவியின் ஒரு அம்சமாக கன்னிகாபரமேஸ்வரி இந்த ஆலயத்தில் சாந்தரூபமாக அருள்பாலித்து வருகிறாள்.

    ஆலயம் சிறியதாக இருந்தாலும் அதன் மகிமை மிகவும் மகத்துவமானது. இந்த ஆலயத்தின் பின்னணியில் மிகப்பெரிய வரலாறு உள்ளது. அதை தெரிந்து கொண்டு கன்னிகா பரமேஸ்வரியை வழிபட்டால் அவளது பரிபூரண அருளை நாம் பெற முடியும். ஒருசமயம் சிவபெருமான் வைசியர் அனைவரையும் பூவுலகம் சென்று தங்கள் கடமைகளைச் செய்யுமாறும் தான் நகரேஸ்வர ஸ்வாமியாகவும் அம்பிகை விந்தியவாசினியாகவும் தோன்றி அவர்களை என்றும் காத்திருப்போம் என்று கூறினார்.

    ஆனால் வைசியர்கள் இறைவனை நீங்க மனமின்றி பிரம்ம லோகம் சென்று பிரம்மனைத் துதித்தனர். பிரம்மதேவன் அவர்களிடம், தானே பூவுலகில் பாஸ்கராச்சாரியராகப் பிறந்து அவர்களின் குருவாக இருந்து வழி நடத்துவேன் என்று ஆறுதல் கூறினார். பின்னர் வைகுந்தவாசனை தரிசனம் செய்ய அவரும் அவர்களிடம் உலக நன்மைக்காக பூவுலகிற்குச் செல்லுங்களென்றும், தானே ஜனார்த்தன ஸ்வாமியாகவும், திருமகள் கோனக மலையாகவும் வந்து அவர்களை காப்பதாகவும் வாக்களித்தார்.

    வைசியர்கள், மும்மூர்த்திகளின் ஆசிகளுடனும், அவர்களால் அளிக்கப்பட்ட நவநிதிகளையும் பெற்றுக் கொண்டு நீங்க மனமில்லாமல் கைலாயத்தை விட்டு பூமிக்கு வந்தனர்.வைசியரான சமாதி மகரிஷி, பெனுகொண்டா நகர மன்னன் குசுமசெட்டியாகப் பிறந்து குசுமாம்பாள் என்ற பெண்ணை மணந்து இறைநினைவுடன் வாழ்ந்து வந்தார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தைபாக்கியம் இல்லாததால் குலகுருவின் ஆசியுடன் புத்திரகாமேஷ்டியாகம் புரிய, வசந்தருதுவில், வைகாசி, சுக்கிரவாரம், தசமி, புனர்வசு கூடிய நன்னாளில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தன.

    தெய்வாம்சம் பொருந்திய பெண் குழந்தை ஒரு கையில் கிளியையும், மற்றொரு கையில் வீணையையும், மேலிரு கரங்களில் தாமரையையும், பாசத்தையும் தாங்கி நாற்கரங்களோடு, பேரழகுடன் பெற்றோருக்குக் காட்சி தந்து பின் சாதாரண குழந்தையாக மாறினாள். அவர்களின் குலகுரு பாஸ்கராச்சாரியார் அந்த பெண் குழந்தைக்கு வாசவி என்று பெயரிட்டு ஆசீர்வதித்தார்.

    இதற்கிடையில் விஷ்ணுவர்த்தன் என்ற சாளுக்கிய மன்னன் ராஜமகேந்திரபுரத்தை ஆண்டுவந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள பலநாடுகளையும் வெல்லும் நோக்குடன் படையெடுத்துச் சென்றான். அவ்வாறு செல்கையில் பெனுகொண்டாவில் வாசவியைக் கண்டு அவளை மணக்க விரும்பினான். குசுமசெட்டியிடம் சென்று பெண் கேட்டான்.

    குசுமசெட்டி தன் குலத்தாருடன் ஆலோசனை நடத்தினார். 18 நகரங்களிலிருந்து 714 கோத்திரக்காரர்கள் நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் ஒன்று கூடி விவாதித்தனர். 612 கோத்திரக்காரர்கள் பெண் கொடுக்கலாம் என்றனர். 102 கோத்திரக்காரர்கள் கொடுக்க வேண்டாம் என்றனர். மேலும் அவர்கள் தங்கள் குலதர்மத்தைக் காக்க தீக்குளிக்கவும் துணிந்தனர். அதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து நாட்டை விட்டு வெளியேறினர்.

    விஷ்ணுவர்த்தன், வாசவியைச் சிறைபிடிக்க சேவகர்களை விரைந்து அனுப்பினான். வாசவி, தன்னால் வந்த குழப்பத்தைத் தீர்க்கவும் விஷ்ணுவர்த்தனிடம் அகப்படாமல் இருக்கவும் தான் அக்னிப்பிரவேசம் செய்வதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள். அவளுடன் 102 கோத்திரக்காரர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு தம் மனைவியருடன் அக்னிப் பிரவேசம் செய்து கயிலையை அடைந்தனர். வாசவி பரமேஸ்வரரோடு ஒன்று கலந்தாள். அன்று முதல் வாசவி, கன்னிகா பரமேஸ்வரியாக எல்லோருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.

    வாசவியாக வாழ்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை ஆரிய வைசியர்கள் தங்கள் குலதெய்வமாக ஏற்று, ஆண்டுதோறும் அம்பிகையின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் அதிவிமரிசையாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர். சென்னை பிராட்வேயில் உள்ள கொத்தவால்சாவடி ஆதியப்பா தெருவும், கோடவுன் தெருவும் சந்திக்கும் இடத்தில் வாசவி தேவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்பிகை இரு திருக்கரங்களுடன் வலது திருக்கரத்தில் பூவை ஏந்திக்கொண்டு கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த அன்னையை உற்று நோக்கினால், மதுரை மீனாட்சி அம்மனே நம் முன் நிற்பது போல் தத்ரூபமாக இருக்கிறது.

    வாசவி அம்மனின் கடைக்கண் பார்வையில் நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. எனவே இத்தல அம்மனை வழிபட்டு, கருவறை தீபத்தில் தொடர்ந்து 9 வாரங்கள் நெய் சேர்த்து வந்தால் சரக கிரக தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம். கருவறையின் இடதுபுறம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியின் உற்சவ விக்ரகம் அமைந்துள்ளது. ‘கன்னிகா பரமேஸ்வரியின் சரிதத்தைப் படிப்பவர்களும், காதார கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர்’ என்கிறது கந்தபுராணம்.

    வாசவி அம்மனுக்கு ஊறவைத்த பச்சைப் பருப்பை வேகவிட்டு, கையால் மசித்து, உப்பு காரமிட்டு நைவேத்தியம் செய்கிறார்கள். வாசவியின் அக்னிப் பிரவேச நாள் அன்று, அன்னையை முழு நெற்றுத் தேங்காயில் ஆவாஹனம் செய்து ஹோம குண்டத்தில் இடுகிறார்கள். அன்னையை இறக்கிய பின் கருவறையில் உள்ள அம்மனை மூட்டை, மூட்டையாக மலர்களைக் கொண்டு நிறைத்து கதவை மூடி விடுவார்கள். அன்று மாலையில் கதவைத் திறந்து புஷ்பங்களை அகற்றி, உஷ்ணத்தில் இருக்கும் அம்பாளுக்கு 1000 லிட்டர் பசும்பால் அபிஷேகம் செய்து குளிர வைப்பார்கள். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவச அலங்காரம் செய்வார்கள்.

    வசந்த உத்ஸவம் உட்பட பல்வேறு உத்ஸவங்கள் இத்திருக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேக அலங்காரங்களும் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலை “ஸ்ரீ கன்யாபரமேஸ்வரி தேவஸ்தானம்‘ என்ற தர்ம ஸ்தாபனம் மிகச் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறது. ஆலயத்தை தொடர்புகொள்ள 25383598, 25362262 என்ற எண்களில் அழைக்கலாம்.

    அடி மேல் அடி வைத்தால் அன்னையின் அருள் கிடைக்கும்

    கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் உடலை வருத்தும் அளவுக்கு மிகப் பெரிய கடுமையான வேண்டுதல்கள், வழிபாடுகள் எதையும் செய்ய வேண்டியது இல்லை. கன்னிகா பரமேஸ்வரி வீற்றிருக்கும் பிரகாரத்தை அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்து வந்து வேண்டி கொண்டாலே போதும். அன்னையின் அருளை முழுமையாக பெற முடியும். அப்படி அடி மேல் அடி எடுத்து வலம் வரும்போது உள்ளம் உருக வேண்டி கொண்டால் அன்னையின் அருளை உடனே பெறலாம்.

    இன்று அன்னக்கூட உற்சவம்


    கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகளவு பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதத்தில் பெண்கள் அதிகளவு வந்து வழிபாடு செய்து செல்வார்கள். ஆடி மாதம் முழுவதுமே இந்த ஆலயத்தில் மிக சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

    குறிப்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆடி அன்னக்கூட மகாஉற்சவம் நடைபெறும். நாளை காலை 9 மணிக்கு கன்னிகாபரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் இருந்து 102 பெண்கள் பால் குடம் எடுத்து வருவார்கள். 10.20 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். 11.30 மணிக்கு அலங்காரம் அன்னக்கூட மகா உற்சவம் நடத்தப்படும்.
    102 கிலோ அரிசியை சமைத்து சாதத்தை குவித்து அன்னக்கூட மகாஉற்சவம் நடத்தப்படும்.

    இந்த சாதம் கன்னிகாபரமேஸ்வரிக்கு நைவேத்தியம் செய்யப்படும். மதியம் 12 மணிக்கு தீபாராதனை நடைபெறும். 12.15 மணி முதல் அன்னக்கூட பிரசாதம் பிரிக்கப் பட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.  நாளை மாலை 6 மணிக்கு சவுகார்பேட்டை ஸ்ரீவாசவி கிளப் சார்பில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தப்படும்.
    வன்னிய தேனாம்பேட்டையில் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து ஆலயத்தில் அருளாட்சி புரிகிறாள் அருள்மிகு ஆலையம்மன். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இப்போதுள்ள மாம்பலம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று பகுதிகளும் சேர்ந்து மிகப்பெரிய ஏரியாக இருந்தது. சுற்றிலும் கொய்யாத்தோப்பு நிறைந்திருந்தது. கோவில் கொண்டிருந்த இடம் அப்போது ஏரிக்கரையாக இருந்தது. கரையோரமாக சில குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தன.

    அப்போது பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புரண்டது. அந்த வெள்ளத்தில் ஒரு கல் ஆடி ஆடி அசைந்து வந்தது. துணி வெளுக்கச் சென்ற சலவைத் தொழிலாளி, வெள்ளத்தால், கரை மறைக்கப்பட்டு துணி துவைக்க முடியாமல் அவதிப்பட்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளமாக காட்சி அளிக்க அதை நோட்டமிட்ட சலவைத் தொழிலாளி வெள்ளத்தில் கல் மிதந்து வருவதை கண்டதும் வியப்பில் தன்னை மறந்து நின்றார்.

    மிதந்து வந்த கல்லை கரை சேர்த்து கரையில் நிறுத்தினார். அழுக்கு மூட்டையை அவிழ்த்து ஏரி நீரில் நனைத்து அந்த கல் மீது துணியை அடித்து துவைக்க ஆரம்பித்தார். திடீரென அவருடைய கைகள் வலித்தன. இதனால் அவர் அந்த கல்லில் துணிகள் அடிப்பதை நிறுத்தினார். கல் மீது இருந்த துணிகளை உற்றுப்பார்த்தார். அந்த துணியில் பொட்டு பொட்டாய் ரத்த துளிகள்.

    சலவைத் தொழிலாளிக்கு வியர்த்துக் கொட்டியது. துணியால் முகத்தை துடைத்துக் கொண்டார். அந்த துணியில் ரத்தக்கறை இருந்ததை பார்த்ததும் அவருக்கு வியப்பு மேலிட்டது. தவிர மூக்கு வழியாக வாயோரமாக ரத்தம் வேறு வடிந்து கொண்டிருந்தது.

    இதைப் பார்த்ததும் பதறிப் போனார். தனக்கு அந்திமக் காலம் நெருங்கி விட்டதோ என்று கூட ஒரு கணம் பயந்தார். தலையைச் சுற்றுவதுபோல இருக்கவே மெதுவாக கரையோரமாக நடந்தார். ஒரு இடத்தில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டார். அவரது கண்கள் சோர்வுடன் மூடின. கைகளும் கால்களும் தள்ளாடிய நிலையில் இருந்தன. அந்த நேரம் ஊர் நாட்டாமைக்காரர் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த அந்த பெண்மணி கல்லாய் நின்றாள். வீட்டில் இருந்தவர்கள் இதைக் கண்டு பதறி ஓடோடி வந்து என்னம்மா என்னாச்சு, உடம்புக்கு என்ன? என்று கேட்டனர்.

    அதற்கு அந்த பெண் தண்ணீர் கரையிலே சலவைத் தொழிலாளியின் துரிக்கல்லாக இருக்கிறேன். போ... போய் எனக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடம் பண்ணிக் கொடு. நீர், நெருப்பு, ஆபத்து வராமல் உங்களை காப்பாற்றுகிறேன் என்று அன்னை பராசக்தியின் அருள்வாக்காய் உதிர்த்தாள்.

    இதைக் கேட்டதும் அந்த கிராமமே தீர்த்தக் கரைக்கு ஓடோடி வந்தது. மயங்கிய நிலையில் இருந்த சலவைத் தொழிலாளி அருகே கிடந்த துரிக்கல்லைப் பார்த்தார்கள். தானே புரண்டு விழுந்தது அக்கல். இதைக் கண்டதும் ஊர்க்காரர்களுக்கு ஒரு உண்மை புலப்பட்டது.

    கார்காத்தாள் கனிமொழியாய், கல்லாய் வந்தாளோ? கடலலையால் வரும் துயரெல்லாம் துடைத்திட, அலை மீதமர்ந்து வந்தாளோ என்று வியப்பு மேலோங்க துதிக்கத் தொடங்கினார்கள். கார்காலத்தில் விடாது பெய்ததால் சம்பவித்த இந்த அருள் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓடி வந்து வழிபடும் ஒரு கருணை வடிவாக தாயின் இல்லமாக ஆகிவிட்டது இந்த திருக்கோவில்.

    அம்மன் அலை மேல் மிதந்து வந்ததால் இத்திருக்கோவிலில் குடிக் கொண்டவளை அலைமேல் அமர்ந்தவள் என்றும், ஆலையம்மன் என்றும் அழைத்தனர்.
    வன்னிய தேனாம்பேட்டையில் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து ஆலயத்தில் அருளாட்சி புரிகிறாள் அருள்மிகு ஆலையம்மன். ஆரம்பத்தில் ஒரு குடில் அமைத்து பக்தர்கள் இந்த அம்மனை தரிசித்து வந்தார்கள். படிப்படிப்பாக நாளடைவில் இத்திருக்கோவில் வளர்ச்சியுற்றது. 1943-ம் ஆண்டில் உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் எழுப்பப்பட்டது.

    வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை விரைந்து தீர்ப்பாள் எங்கள் தாய் ஆலையம்மன். பெற்ற குழந்தைகள் குறைதீர்ப்பதில் ஒரு தாய் எந்த அளவுக்கு முனைப்புடன் செயல்படுவாளோ அதைப் போலத் தன்னை அபயம் என்று நாடி வந்தோரின் குறைகளை தீர்த்து வைப்பதில் இப்பூவுலகத்தில் அவளுக்கு நிகர் அவளே என்று அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள்.

    அர்ச்சனை பலன்

    ஆடி மாதம் முழுவதும் தேவி பூஜையை  நாம் பக்தியோடு செய்ய வேண்டும். மலர் ஒவ்வொன்றையும் அன்னையின் பாதங்களில் திருநாமாவினைச் சொல்லி சமர்ப்பிக்க வேண்டும்.

    மலர் கொண்டு அன்னையைப் பூஜிப்பதால் நமக்குக் கயிலாய நாதரின் இருப்பிடமான கயிலையில் சென்று வாழும் பாக்கியம் கிடைக்கிறது. வில்வ இலைகளால் பூஜை செய்தால் வாழ்வில் துன்பத்தையே சந்திக்க நேராது. குருக்கத்தி மலர் கொண்டு பூஜித்தால் பிரம்ம தேவனின் அருள் கிட்டி வேண்டிய வரம் அனைத்தும் பெறலாம். ஜாதி மல்லிகைப் பூவை மீகுந்த வாசமுடைய அஷ்ட கந்தம் கலந்து நூறு சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்தால் பிரம்ம தேவனுக்கு ஈடான பதவி கிடைக்கும்.

    தாமரை மலர் கொண்டு ஆயிரம் நாமம் சொல்லி அர்ச்சனை செய்தால் அம்பிகையின் திருவடித் தாமரையில் இருக்கும் பாக்கியம் கிடைக்கிறது. தூப தீபங்களைக் கொண்டு ஆராதனை செய்தால் மூன்று லோகங்களிலும் வாசம் செய்யும் பாக்கியம் உண்டாகும். செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சித்தால் பெரும் செல்வம் கிட்டும்.

    சென்னை அருகே பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில், அம்மன் பக்தர்களை பெருமளவில் வெகுவாக ஈர்க்கிறது.
    சென்னை அருகே பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் திருக்கோயில், அம்மன் பக்தர்களை பெருமளவில் வெகுவாக ஈர்க்கிறது. பவானி அம்மனே இக்கோயிலின் பிரதான தெய்வம், வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெரியபாளையத்தை சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையிலுள்ள செங்குன்றத்திலிருந்து மிக எளிதில் அடையலாம். மேலும், ஆவடி, திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளிலிருந்தும், பெரியபாளையம் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது.
    ஆண்டு முழுவதும், அம்மனின் அருள் வேண்டி இக்கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். குறிப்பாக, பவானி அம்மனைத் தரிசிக்க, வார இறுதி நாட்களில், பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர். பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்வதற்காக, கோயில் நிர்வாகம் அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர். மேலும், கோயிலை நன்றாகப் பராமரித்தும் வருகிறார்கள்.

    பக்தர்கள், பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.

    பெரியபாளையம் கோவில் உள்ள இடம் ஆதி காலத்தில் புற்று மேடாக இருந்த இடமாகும். பவானி அம்மன் வளையல் வியாபாரி ஒருவர் மூலம் திருவிளை யாடல் நடத்தி, தான் அங்கு இருப்பதை இந்த உலகுக்கு உணர்த்தினாள். அதன் பிறகே புற்று இருந்த இடத்தில் பாளையத் தம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது.
    இத் திருக்கோயில், சமீபத்தில் மறுசீரமைக்கப் பட்ட பிறகு, பவானி அம்மன் மிகவும் ஜொலிப்பதாக பக்தர்கள் பரவசப்படு கின்றனர். நாம் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன், விநாயகர் தனிச்சன்னதியில் ஸ்ரீஅற்புத சக்தி விநாயகர் என்ற திருநாமம் கொண்டு அருள் புரிவதைக் காணலாம். இதை ஒட்டி, ஸ்ரீ சர்வ சக்தி மாதங்கி அம்மன் சன்னதி உள்ளது.

    அடுத்து, நாம், பவானி அம்மனைத் தரிசிப்பதற்கான வரிசையை சென்றடையலாம். கட்டணமில்லாத் தரிசனம் மற்றும் சிறப்புக் கட்டணத் தரிசனம் நடைமுறையில் உள்ளது. அம்மனை மிகவும் அருகாமையிலிருந்து தரிசிப்பதற்கு சிறப்புக் கட்டணத் தரிசனம் சிறந்தத் தேர்வாகும். மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

    மூலஸ்தானத்தை விட்டு வெளியே வந்தால், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து அருள் புரியும் உற்சவர் அம்மன் நம்மை வரவேற்பதைக் காணலாம். குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.

    அம்மன் தரிசனத்தை சிறப்பான முறையில் முடித்து விட்டு வரும் வழியில், வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், ஸ்ரீபரசுராமர் (விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) மற்றும் நாகர் ஆகிய சன்னிதிகளைத் தரிசிக்க முடியும். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்து பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் பல வழிகளில் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

    மங்களத் தாலி

    பெரியபாளையத்தமன்னை குல தெய்வமாக கருதும் பக்தர்கள் தங்கள் திருமணத்தில் ஒரு புதிய சடங்கை வைத்திருக்கிறார்கள். அதன்படி திருமணநாள் அன்று கட்டிய தாலியை அம்பிகைக்கு காணிக்கையாக்குகின்றனர். பிரதியாக அன்னையின் அருள்மிகு மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்று அதை  அம்பிகையின் வரப்பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். இன்றும் இதைக் காணலாம். இப்படிச் செய்தால் அந்தக் குடும்பம் செழித்து, தழைத்து, ஓங்குவதுடன் கட்டிய கணவனுக்கு நீண்ட ஆயுளையும் பவானி வழங்குவாள் என்பது நம்பிக்கை.

    ஆடி பெரு விழா நிகழ்ச்சி

    ஆடி 18 (3-8-19) ஆடிப்பூரம். 108 பால் குடம்.
    ஆடி 19 (4-8-19, ஞாயிறு) 3-ம் வாரம். மாலை 4 மணிக்கு நாக வாகனத்தில் அனந்த சயனத்தில் அம்மன் வீதி உலா.
    ஆடி 26 (11-8-19 ஞாயிறு) 4-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு ‘சிம்ம வாகனத்தில்’ பவானி அம்மன் மகிஷா சூரமர்த்தினி அலங்கா ரத்தில் திருவீதி உலா.
    ஆவணி 1 (18-8-19 ஞாயிறு) 5-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு ‘அன்ன வாகனத்தில்’ பவானி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் திருவீதி உலா.
    ஆவணி 8 (25-8-19 ஞாயிறு) 6-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு காமதேனு வாகனத்தில் பவானி அம்மன் கெஜ லட்சுமி அலங்கா ரத்தில் திருவீதி உலா.
    ஆவணி 15 (1-9-19 ஞாயிறு) 7-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு கிளி வாகனத்தில் பவானி அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா.
    ஆவணி 16 (2-9-19 திங்கள்) விநாயகர் சதுர்த்தி விழா
    மாலை 4 மணிக்கு  விநாயகர் மூஷிக வாகனத் தில் திருவீதி உலா நடைபெறும்.
    ஆவணி 22 (8-9-19 ஞாயிறு) 8-ம் வாரம்
    மாலை4 மணிக்கு கஜ வாகனத்தில் பவானி அம் மன் சூரிய அலங்காரத்தில் திருவீதி உலா .
    ஆவணி 29 (15-9-19 ஞாயிறு) 9-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு ‘சந்திர பிரபையில்’ உற்சவர் பவானி அம்மன் பார்வதி அலங்காரத்தில் திருவீதி உலா .
    புரட்டாசி 5 (22-9-19 ஞாயிறு) 10-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு ‘சூரிய பிரபையில்’ உற்சவர் பவானி அம்மன் காமாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா .
    புரட்டாசி 12 (29-9-19 ஞாயிறு) 11-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு ‘அன்ன வாகனத்தில்’ பவானி அம்மன் பத்மாசனி அலங்காரத்தில் திருவீதி உலா.
    புரட்டாசி 19 (6-10-19 ஞாயிறு) 12-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு ‘சந்திர பிரபையில்’ பவானி அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் திருவீதி உலா .
    புரட்டாசி 21 (8-10-19 செவ்வாய்)
    மாலை 6-8 மணிக்கு விஜய தசமியை முன்னிட்டு விசேஷ ஹோமங்கள், பூர்ணாஹ¨தி, சோடச தீபாராதனை, பரிவேட்டை உற்சவம் . உற்சவர் பவானி அம்மன் ‘குதிரை வாகனத்தில்’ திருவீதி உலா .
    புரட்டாசி 26 (13-10-19 ஞாயிறு) 13-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு ‘சூரிய பிரபையில்’ பவானி அம்மன் காயத்திரி அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறும்.
    ஐப்பசி 3 (20-10-19 ஞாயிற்றுக்கிழமை) 14-ம் வாரம்
    மாலை 4 மணிக்கு ‘குதிரை வாகனத்தில்’ பவானி
    அம்மன்  திருவீதி உலா.

    அம்மனை வழிபடும் சூரியன்

    பெரிய பாளையத்து அன்னையை ஆண்டுக்கு ஒருமுறை சூரியன் வழிபாடு செய்யும் நிகழ்ச்சி காணவேண்டிய ஒன்று. ஆடிப்பெருவிழா ஆடி முதல் ஞாயிறு அன்று தொடங்கி 14 ஞாயிற்றுக்கிழமைகள் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பத்தாவது ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை அன்னை யின் சிரசிலிருந்து பாதம் வரை சூரிய கதிர்கள் படுகின்றது.  இந்த நிகழ்வு 22-9-19 அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் சூரியபகவான் அன்னையை பத்தாவது வாரம் பூஜிப்பதை பக்தர்கள் காணலாம். இப்பூஜையை கண்டால் இம்மையில் இன்பமும், மறுமையில் பிறவா நெறியும் உண்டு என்பது வேதங்கள் கூறும் விளக்கமாகும்.
    மாமல்லபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மணமை கிராமத்தில் அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவில் இருக்கிறது.
    சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டில், வழிபாட்டு சிறப்புமிக்க பல திருக்கோவில்கள் மக்களால் போற்றி வணங்கப்படுகிறது. சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, மணமை கிராமம். இங்கு அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவில் இருக்கிறது.

    சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவில் வெளிப்பட்டதே சுவையான வரலாறு. மணமை கிராமத்தில் இக்கோவில் இருந்ததே பலருக்கு தெரியாது. வழிபாடு இல்லாமல் கோவில் மீது மரம், செடி, கொடிகள் வளர்ந்தும், புற்று மண்ணால் சிவலிங்கம், அம்பாள், நந்தி மூடப்பட்டும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது. கோவில் இருந்த இடத்திற்கு வருவதற்கே பலர் தயங்கினர். அப்படிக் கிடந்த ஆலயத்தை சிலர் உழவாரப் பணிகளைச் செய்யத் தொடங்கினர். பலரின் உதவியோடு ஆலயம் கடந்த 2017-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    இந்த ஆலயத்தைச் சுற்றி சீர்திருத்தம் செய்யும் பொழுது, கருவறை அருகே உடைந்த கல்வெட்டு பலகை கிடைத்தது. அது மூன்றாம் குலோத்துங்கச் சோழனது 24-வது ஆண்டு கல்வெட்டாகும். அதில் மணமை என்ற இந்த ஊர் ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்கு உட்பட்ட ஆமூர் நாட்டுக்கு உட்பட்ட, மணமையான ஜனநாத நல்லூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாதன் என்பது முதலாம் ராஜராஜ சோழனது சிறப்பு பெயராகும். இந்த ஆலயத்தின் விளக்கு எரிக்க, திரு நட்டப்பெருமாள் என்பவன் மூன்று பசுக்களை ஆலயத்திற்கு அளித்துள்ளான் என கல்வெட்டு குறிப்பு சொல்கிறது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புடன் விளங்கியிருக்கிறது.

    ஆலய அமைப்பு :

    கிழக்கு நோக்கிய திருக்கோவிலின் வாசலில் பலிபீடம் உள்ளது. அதையடுத்து நந்தியம்பெருமான், இறைவனை நோக்கி அமர்ந்துள்ளார். கருவறையில் இறைவன், லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். பெரிய வடிவத்துடன் காட்சி தரும், இறைவன் சோழர்காலத்தில் செய்யப்பட்ட திருமேனியைக் கொண்டவர். கருவறையின் வாசலில் துவார விநாயகர் எழுந்தருளியுள்ளார். கருவறையின் அர்த்த மண்டப நுழைவு வாசலில் வலதுபுறம் விநாயகப்பெருமானும், இடதுபுறம் முருகப்பெருமானும் உள்ளனர்.

    கருவறை தேவகோட்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வத் திருமேனிகளைக் கண்டு வழிபடலாம். சண்டிகேசுவரர் சன்னிதியும் இடம் பெற்றுள்ளது. தெற்குத் திருச்சுற்றில் சைவசமய குரவர் களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். அருகில், ஆலய திருப்பணியின் போது கிடைத்த பலகைக் கல்வெட்டினை ஒரு பீடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    வடக்குத் திருச்சுற்றில் கருவறையின் இடது புறத்தில் திருநீலகண்டேஸ்வரர் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக் கிறார். அகத்தீஸ்வரமுடையார் கோவில் அருகே வயல்வரப்பில் புதைந்து கிடந்த இவரை, ஆலயத்தில் எழுந்தருளச் செய்துள்ளனர். தன்னை வழிபடுபவர்களுக்கு, வழிகாட்டுபவராக இந்த நீலகண்டேஸ்வரர் திகழ்கிறார். இவரது சன்னிதிக்கு அருகில் வில்வ மரமும், வன்னிமரமும் உள்ளது. அதனை பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். வடக்கு திருச்சுற்றில் நாகர் வடிவமும், வடகிழக்கு மூலையில் பைரவ மூர்த்தியும் வீற்றிருந்து அருள்கிறார்கள். அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மனோன்மணி அம்பாள் தனது கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், அபய கரத்துடன் அருளாசி வழங்கு கிறார்.

    மணமை திருக்கோவிலுக்கு எதிரே சிறிய குன்று உள்ளது. இங்கு கன்னிமார் கோவிலும், சுனையும் உள்ளது. பலர் கன்னிமார் கோவிலை குலதெய்வமாக போற்றி வணங்குகின்றனர். பவுர்ணமி நாளில் இந்த மலையைச் சுற்றிவரும் ‘கிரிவலம்’ சிறப்பாக நடைபெறுகிறது. கிரிவலம் செல்லும் வழியில் கங்கையம்மன் கோவில், விநாயகர் போன்ற பல திருக்கோவில்கள் உள்ளன. மேலும் இவ்வூரின் ஏரியில் காணப்படும் கங்கை சுனைக் கிணறு, வற்றாமல் சுவையான நீரை வழங்குவது தனிச் சிறப்பாகும். மக்கள் பலர் இந்தக் கிணற்றில் இருந்து நீர் எடுத்துச் செல்கின்றனர்.

    இந்தக் கோவிலில் பிரதோஷ வழிபாடு, சங்காபிஷேகம், நவராத்திரி, சிவராத்திரி, திருவாதிரை, ஆருத்ரா தரி சனம் போன்ற சிறப்பு வழிபாடுகளும், திருமுறை ஓதுதல் போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் சன்னிதியில் மூன்று பவுர்ணமி தினங்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருத்தலமாக இது விளங்குகிறது.

    அமைவிடம் :


    திருக்கழுக்குன்றம் வட்டத்தில், மணமை மதுரா லிங்கமேடு கிராமம் என இவ்வூர் குறிக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் மணமை பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது.

    கி.ஸ்ரீதரன்
    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது சக்திபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    இந்திரனுக்கு, ஒரு முறை மரண பயம் ஏற்பட்டது.

    ‘தன்னை வீரபத்ரன் கொன்று விடுவாரோ?’ என்ற பயத்தில் ஓடத் தொடங்கினான். அவரிடம் இருந்து தப்பிக்கும் வழி தெரியாது ஓடிக் கொண்டே இருந்தான்.

    ஆம் யார் இந்த வீரபத்ரன்? அவர் ஏன் இந்திரனை விரட்ட வேண்டும்? அது என்ன கதை?

    பிரம்மதேவனின் பத்து புதல்வர்களில் ஒருவன் தட்சன். அவன் சிவபெருமானை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் கடுமையான தவம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அதில் ஒன்று, உமாதேவியை தனது மகளாக அடைந்து, அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து தர வேண்டும் என்பது.

    அந்த வரத்தின்படி இமயமலை சாரலில் ஒரு சங்கு வடிவில் தவம் செய்து கொண்டிருந்த உமாதேவியை கண்டான் தட்சன். அவன் அந்த சங்கை கையில் எடுத்த மறுகணம், அது ஒரு பெண் குழந்தையாக உருமாறியது.

    குழந்தையை வீட்டிற்கு கொண்டுவந்து, தாட்சாயணி என்று பெயரிட்டு, அவளை செல்லமாக வளர்த்து வந்தான் தட்சன். ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து ஆறு வயது முதலே சிவபெருமானை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள் தாட்சாயணி. அவள் முன் தோன்றிய சிவபெருமான் அவளை விரைவில் மணப்பதாகக் கூறி மறைந்தார்.

    அதற்கான நேரம் வந்தது. கன்னிகா தான மந்திரங்களைக் கூறி உமா தேவியின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான் தட்சன். மறுவினாடி சிவபெருமான் திடீரென மறைந்தார்.

    கோபம் கொண்ட தட்சன், அவரை கடுமையான வார்த்தைகளால் தூற்றினான். இதனைக் கண்ட உமா தேவி மனம் வேதனைப்பட்டாள். மீண்டும் சிவபெருமானை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினாள். அவளது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவள் முன் தோன்றினார். அவளை தன் பக்கத்தில் இருத்திக் கொண்டு மீண்டும் மறைந்தார்.

    இதனை அறிந்த தட்சனின் கோபம் உச்சத்தை அடைந்தது. தன் மகளை களவு கொண்டவன் என்றும், தன் குலத்திற்கே இழிவு தேடித் தந்தவன் என்றும் சிவபெருமானை இகழ்ந்தான்.

    பின்னர் கங்கை ஆற்றின் கரையில் கனகலகம் எனும் இடத்தில், வேள்விச் சாலை அமைத்து பெரிய யாகம் ஒன்றைத் தொடங்கினான். தேவர்கள், அசுரர்கள், சப்தரிஷிகள் என அனைவரையும் அந்த யாகத்திற்கு அழைத்த தட்சன், சிவபெருமானை மட்டும் புறக்கணித்தான்.

    தட்சன் செய்யும் யாகத்தினை கேள்விபட்டு அவனது தவறை திருத்தும் நோக்கத்துடன் சிவபெருமானிடம் அனுமதி பெற்று வேள்விச் சாலையை அடைந்தாள் உமா தேவி. அவளைக் கண்ட தட்சன் கோபம் தலைக்கேற, கொடிய வார்த்தைகளால் அவளை இகழ்ந்து பேசினான்.

    உமாதேவி கோபம் கொண்டாள். கயிலையை அடைந்ததும் அந்த வேள்வியை அழிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சற்றே தயங்கி பின் ஒப்புக் கொண்டார் சிவபெருமான்.

    அந்த வேள்வியை யாரைக் கொண்டு அழிப்பது?

    சிவபெருமானது கண்டத்தில் இருந்த கருத்த விஷத்தில் ஒரு கூறு, அவரது நெற்றிக் கண் வழியே குமாரனாக வெளிப்பட்டது. அந்தக் குமாரன், ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றுக்கு உரிய ஆயுதங்களையும் உடையவனாய் இருந்தான். மணி மாலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றி கொம்பு மாலைகள், கபால மாலைகள் ஆகியவற்றை அணிந் திருந்தான். சிங்க முகங்களைக் கோர்த்த மாலையுடன் பாம்பால் ஆன கச்சம் அணிந்திருந்தான். அவரே வீரபத்ரன்.

    வீரபத்ரன், தட்சன் நடத்திய வேள்விச் சாலைக்குச் சென்றார். யாகம் துவம்சம் செய்யப்பட்டது. யாகத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும், மரணபயம் கொண்டு நான்கு புறமும் சிதறி ஓடினர்.

    இந்திரனுக்கும் மரண பயம் ஏற்பட்டது. கருங்குயிலாக உருவெடுத்த இந்திரன் பறக்கத் தொடங்கினான்.

    கருங்குயில் வடிவில் கருணாபுரம் என்ற இடத்திற்கு வந்தான். அங்குள்ள கருணா தீர்த்தத்தில் நீராடி, ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் சக்திபுரீஸ்வரரையும், ஆனந்தவல்லியையும் தினமும் வழிபட்டு வந்தான்.

    இந்திரன் முன் தோன்றிய இறைவன், “என்ன வரம் வேண்டும்? கேள்” என்றார்.

    தன் சுய உருவுக்குத் திரும்பிய இந்திரன் “இந்த கருணாபுரத்தில் கருணையாளனாக இருந்து எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும். இத்தலம் என் பெயரால் ‘கருங்குயில் நாதன் பேட்டை’ என்று அழைக்கப்பட வேண்டும்” என்று வேண்டினான். இறைவனும் அப்படியே அருள்பாலித்தார்.

    இந்த சக்திபுரீஸ்வரர் ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நந்தியும் பலிபீடமும் இருக்க நுழைவுவாசலின் இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் வீற்றிருக்கிறார்கள்.

    எதிரே கருவறையில் இறைவன் சக்திபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அன்னை ஆனந்தவல்லி தென்திசை நோக்கி தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார். மகாமண்டபத்தில் பிராம்மி, சாமுண்டீஸ்வரி, கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி என சப்த மாதர்களின் திருமேனிகள் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் ‘கருணா தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் சகல வியாதிகளையும் தீர்க்க வல்லது என்கின்றனர் பக்தர்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.
    திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவாலயம் திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது.
    சோழநாட்டின் தேவார வைப்புத்தலம், சோழர்கள் எழுப்பி, மராட்டியர்கள் திருப்பணி செய்த கோவில், முட்புதரில் மறைந்திருந்த கோவிலை 82 வயது சிவனடியார் திருப்பணி செய்த ஆலயம், திருப்புமுனை, திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவாலயம்.

    தொன்மைச் சிறப்பு

    திருவாதிரைமங்கலம் சோழமன்னர்கள் ஆட்சியில், பனையூர் நாட்டில் அமைந்த ஊராக இருந்துள்ளது. மேலும், இங்கு அமைந்துள்ள தெய்வ வடிவங்கள் அனைத்தும், பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். சிற்பங்கள் சிறிது சேதம் அடைந்திருந்தாலும், அதன் கலைநயம், நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

    சங்கர நாயகி

    திருவாதிரை மங்கலம், பழமையான சிவாலயம் என்பதை, திருநாவுக்கரசர் இத்தலத்தை தேவாரத்தில் வைப்புத்தலமாக வைத்து பாடியிருப்பது உறுதி செய்கிறது. திருவாதிரை விழா சிறப்பாக நடைபெற்று வந்த ஊராக இருந்ததால், ‘திருவாதிரைமங்கலம்’ என்பதே ஊர்ப் பெயராக விளங்கியிருக்கிறது. இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், சிவலோகநாதர், சங்கர நாயகி, பலிபீடம், சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி ஆகிய சிலை வடிவங்கள், பிற்காலச்சோழர் காலமான கி.பி.12, 13-ம் நூற்றாண்டினை சேர்ந்தது என்பதை உறுதி செய்வதாக உள்ளன. இதேபோல, திருப்பணிக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆலயத்தின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன.

    இந்த ஆலயம் பிற்காலச் சோழர்களின் கலைநயத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இறைவன் வாழும் கருவறையானது, ஜகதி, பத்மம், குமுதம், வேதிகை, அரைத்தூண்கள், காபோதகம் கொண்டு திகழ்கிறது. கருவறைக்கு மேல் உள்ள விமானம், எண்பட்டைகளைக் கொண்டு, திராவிட வகையைச் சார்ந்த கோவிலாக விளங்குகிறது. இவ்வாலயத்தின் முன்மண்டபம், மகாமண்டபம் ஆகியவை கி.பி.18-ம் நூற்றாண்டில் மராட்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட செங்கல் திருப்பணியை எடுத்துரைக்கிறது.

    இந்தக் கோவிலின் திருப்பணிக்காக பூமியைத் தோண்டியபோது, நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையின் உற்சவத் திருமேனிகள் கிடைத்தன. இவை பிற்காலச் சோழர்களின் காலத்தை உறுதி செய்வதாக இருக்கிறது. இந்தச் சிலைகளின் பாதுகாப்பு கருதி, அவை மாநில அரசின் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ஆலயத்தில் கிடைத்த துண்டு கல்வெட்டுகளில் இரண்டில் ஒன்று, இத்தலம் ‘திருவாதிரைமங்கலம்’ என்பதையும், இறைவி ‘சங்கரநாயகி’ என்பதையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இக்கல்வெட்டின் முழுப்பகுதிகள் கிடைக்காத நிலையில், இவ்வரிகள் இத்தலத்தினைப் புகழும் பாடல் கல்வெட்டாக இருக்கலாம் என்பது, ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    இந்தத் திருக்கோவில் தொடக்க காலத்தில் செங்கல் தளியாக இருந்து, பின்பு சோழர் காலத்தில் கருங்கல் தளியாக மாற்றம் கண்டிருக்கிறது. இங்கு கிடைத்த கல்வெட்டுகள் கோவில் வளாகத்திற்குள் பாதுகாப்பாக உள்ளன. ஆலயம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    தலவரலாறு

    ஏழாம் நூற்றாண்டிலேயே சிறப்பு பெற்று விளங்கிய இந்தத் திருக்கோவில், நெடுங்காலமாக முட்செடிகளாலும், புதர்களால் மறைந்திருந்தது. இந்த ஊரை பூர்வீகமாக கொண்டு, ரெயில்வே தபால் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராதாகிருஷ்ணன் என்ற 82 வயது சிவனடியார், ஆலயத்தின் நிலை கண்டு வருந்தினார். ஆனால் திருப்பணி செய்வதற்கு அவரிடம் பணம் இல்லை. இந்த நிலையில் அவரது மகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தன் மகனிடம், ஆலயத்தை திருப்பணி செய்யும் தன்னுடைய எண்ணம் பற்றி கூறினார். தந்தையின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அவர், அதற்கான பணிகளை மேற்கொண்டார். தனி மனித விருப்பம், முயற்சியில் குடும்பமே தம்மை ஈடுபடுத்திக்கொண்டது. அதன் காரணமாக 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆலயத் திருப்பணி, 2016-ல் முடிவடைந்து, கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனும், இறைவியும், அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது, தன்னை நாடிவரும் அனைவருக்கும் தனது அருளாசியை வழங்கி வருகிறார்கள்.

    ஆலய அமைப்பு

    திருவாதிரைமங்கலம் என்னும் அழகிய கிராமத்தின் தென்கிழக்கு மூலையில், இந்த ஆலயம் அமைந்துள்ளது. புனரமைப்பில் பழங்கற்கள் பயன்படுத்தப்படாததால், புதுக்கோவில் போல தோற்றம் அளிக்கிறது. என்றாலும், ஆலயத்தின் உள்ளே இருக்கும் மூலமூர்த்திகள், பிற்காலச் சோழர்காலத்தின் கலை நயத்தை உணர்த்துகின்றன. ஆலயத்தின் எதிரே திருக்குளம் காணப்படுகிறது.

    எளிய வளைவு கொண்ட நுழைவு வாசல், உள்ளே பலிபீடம், நந்தி சிலையும் நம்மை வரவேற்கின்றன. உள்ளே மகாமண்டபம், இடதுபுறம் விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். வலது புறம் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் தேவ மயிலைக் கொண்டு காட்சி தருகின்றார். நடுநாயகமாக இறைவன் சிவலோகநாதர், வட்ட வடிவ ஆவுடையாராக எளிய தோற்றத்தில், கிழக்கு முகமாய் காட்சி அருள்கிறார். இறைவன் திருமேனி ஒளி வீசும் கோலத்தில் அமைந்துள்ளது.

    சுவாமி சன்னிதியின் எதிரே, இடதுபுறம் தெற்கு நோக்கிய அன்னை சங்கர நாயகி சன்னிதி இருக்கிறது. அன்னையும், சிவபெருமானைப் போலவே எளிய வடிவில் கலைநயம் கொண்ட நான்கு கரங்களை கொண்ட திருமேனியராக காட்சி தருகின்றாள். அன்னை நின்ற கோலத்தில், தன்னுடைய மேல் இரண்டு கரங்களில் ருத்ராட்ச மாலை, தாமரை கொண்டும், கீழ் வலது கரத்தால் அபய முத்திரை காட்டியும், இடது கரத்தை இடுப்பில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். அன்னையின் திருமுடி எழிலான மகுடம் தாங்கி இருக்கிறது. கருவறைச் சுற்றில் தெற்கே தட்சிணாமூர்த்தி, வடக்கே துர்க்கை, எதிரில் சண்டி கேசுவரர் காட்சிதர, வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. ஆலயத்தின் உட்புறத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள் பூத்துக் குலுங்குகின்றன.

    இத்தலத்தில் பிரதோஷம் வெகு நேர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இது தவிர, திருவாதிரை, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, குருப்பெயர்ச்சி, தீபாவளி, பொங்கல் ஆகிய விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. மாதக் கிருத்திகையை ஊர்மக்கள் தங்களுக்குள் முறைவைத்து கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ஆலயத்தின் தல மரமாக செங்காலி மரம் உள்ளது. தல தீர்த்தமாக ஆலயத்திற்கு எதிரே உள்ள சிவகங்கை தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் மீது, பங்குனி மாதத்தில் முதல் 20 நாட்களில் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் படுவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

    இந்த ஆலயத்திற்கு வந்து, இறைவனையும், இறைவியையும் வழிபட்டு செல்பவர்களுக்கு, வாழ்வில் நல்ல பல திருப்பம் உண்டாகும் என்கிறார்கள். மேலும் திருமணத்தடை நீங்கும். நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு குணமாகும் என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    பனையபுரம் அதியமான்
    இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்கும்.
    மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க இயலாத மகாலட்சுமி பெருமாளிடத்தில் தங்களுடைய நரசிம்ம அவதாரத்தை தான் தரிசிக்க ஏதேனும் உபாயம் சொல்லவும் என்று கேட்டார். அப்போழுது எம்பெருமான் ஸ்ரீசைலம் எனும் சேத்ரத்தில் கமலாலய குளத்தில் அமர்ந்து அஷ்டக்ஷரமாகிய திருஎட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து அதன் பலனாக தன் நரசிம்ம கோலத்தை தரிசிப்பாய் என்றார்.

    அதன்படி மகாலட்சுமி கமல மலர்கள் நிறைந்திருந்த கமல வனத்தினில் ‘கமலாலயம்’ என்னும் குளத்தில் நரசிம்ம மூர்த்தியை நினைத்து கடுந்தவம் புரிகிறாள். இக்கால கட்டத்தில் திரேதாயுகத்தில் ராமராவண யுத்தத்தில் மூர்ச்சையான லக்ஷ்மணனின் மூர்ச்சையை (மயக்கம்) தெளிய வைப்பதற்காக சஞ்சீவி பர்வதத்தை ஆஞ்சநேயர் எடுத்து வந்தார்.

    யுத்தம் முடிந்த பிறகு அதனைக் கொண்டு இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வரும் வழியில் கண்டகி நதியில் நீராடும்போது அவருக்கு எம்பெருமானின் திரு உருவாகிய (திருமூர்த்தி) சாளக்கிராமம் கிடைக்கப் பெற்றார். மிகவும் ஆனந்தத்தில் அகமகிழ்ந்து தனக்கு ஆராதிக்க கிடைத்த எம்பெருமானின் சாளக்கிராமத்தை எடுத்துக் கொண்டு வருகின்ற தருவாயில் சூரியோதயத்தின் வருகையை அறிந்து அனுஷ்டானம் செய்ய மகாலட்சுமி தவமியற்றும் கமலாலய குளத்திற்கு வந்து, அன்னை ஸ்ரீமகாலட்சுமியின் திருக்கரங்களில் சாளக்கிராமத்தை வைத்திருக்க கொடுத்து விட்டு அனுஷ்டானம் செய்யச் சென்றார்.

    ஸ்ரீராமஜெயம் ஜபம் முடித்ததும் திரும்ப தாயாரிடம் சாளக்கிராமத்தை கேட்க, தாயாரும் கனம் தாங்காமல் கீழே வைத்துவிட அது மலையாக (பர்வதமாக) மாறிவிட்டது. ‘நீ பராகிரமசாலி என்பதால் நீயே எடுத்துக் கொள்’ என்று தாயார் கூறினார். தாயாரின் வாக்கிற்கிணங்க ஆஞ்சநேயசாமி தன் வாலால் மலையை பெயர்க்க முற்படுகையில் ஸ்ரீநரசிம்ம அவதாரமாய் மஹாலட்சுமிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் சேவை சாதிக்கிறார். நீ கொண்டு வந்த சாளக்கிராமத்தினால் இங்கே ஒரு தலம் ஏற்பட்டதால் நீயும் இங்கேயிருந்து என்னை ‘ஆராதிப்பாயாக’ என்று அருளினார்.

    தலச்சிறப்பு:

    கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவர்களால் குடையப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ள இரண்டு குடவரை கோவில்கள் இந்நகரில் உள்ளன. இந்த நகரின் நடுநாயகமாகத் திகழும் நாமகிரி என்னும் சாளக்கிராம பர்வத மலையில் கீழ்ப்புறம் அருள்மிகு அரங்கநாதர், கார்க்கோடக சயனத்தில் காட்சியளிக்கிறார். மலையின் மேற்புறம் அருள்மிகு நரசிம்மசாமி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.

    இங்குள்ள நரசிம்மர் ஸ்ரீவைகுண்ட நாராயணர், ஹிரண்ய சம்ஹாரமூர்த்தி வாமன அவதாரம் ஸ்ரீவராகமூர்த்தி ஆகிய திருவுருவங்கள் அற்புத சிற்ப வேலைபாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

    மகாவிஷ்ணு

    இத்திருத்தலம் மகாவிஷ்ணுவின் அம்சமாக ஒரே கல்லால் ஆன நாமமலையாக கோவிந்தன் பக்த பிரகலாதனைக் காக்க இரணியனை வதம் செய்து, அதனால் ஏற்பட்ட வெப்பம் தணிய மகாலட்சுமியாகிய நாமகிரித் தாயாரின் வேண்டுதலுக்கு மனம் இரங்கி, இத்திருத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் இருள் அகற்றி ஒளி ஏற்றுகிறார்.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெயர் பெற்று விளங்கும் இத்திருத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகும். இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்கும்.
    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இந்தப் பகுதி மக்களுக்கு சின்னம்மன்தான் இஷ்டதெய்வம், காவல் தெய்வம் எல்லாமே! அழகிய கோபுரத்துடன் திகழ்கிறது கோவில். நுழைவாயிலின் வலப்புறத்தில் மதுரை வீரனும், இடப்புறத்தில் காத்தவராயனும் காட்சி தருகின்றனர். உள்ளே... கருணையும், உக்கிரமும் பொங்க, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் சின்னம்மன்.

    கடன் தொல்லைகள் தீர, கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்க, திருமண தடை நீங்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள்.
    பக்தர்கள் ஆடி மாதம் பொங்கல் படையலிட்டும், அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும், மஞ்சள் சரடு கட்டியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

    கோவில் உள்ளே இருக்கும் புற்றுச் சன்னதி ரொம்பவே விசேஷமானது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். சின்னம்மனை வணங்கிவிட்டு, புற்றுக்கு பால் அல்லது முட்டை படைத்து வேண்டிக் கொண்டால் சகல தோஷங்களும் விரைவில் நீங்கும். சந்தோஷம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சின்னம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு (ராகு காலம் நிறைவுறும் நேரம்) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தித்தால், கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்!

    இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டில் எந்த விசேஷம் வைபவம் என்றாலும், இந்தக் கோவிலுக்கு வந்து அம்மனின் திருப்பாதத்தில் முதல் பத்திரிகையை வைத்துவிட்டே அடுத்தடுத்த வேலைகளைத் தொடங்குகின்றனர். அப்படி அழைத்தால், அந்த விழாவை அம்மனே முன்னின்று சிறப்பாக நடத்தி அருள்வாள் என பக்தர்கள் போற்றுகின்றனர். கோவிலில் வேப்ப மரமும், பனைமரமும் பல வருடங்களாக இருந்து வருகின்றன. வேப்ப மரத்துக்கு மஞ்சள் சரடு கட்டி, சின்னம்மனை வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!

    ஆடி மாதம் வந்துவிட்டால் சின்னம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் இருப்பார்கள். அமாவாசைக்குப் பிறகு வருகிற வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது பிரம்மோற்சவ விழா. இந்தப் பத்து நாட்களும், தங்களது பிரார்த்தனை நிறைவேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொங்கல் படையலிட்டும் அபிஷேகம் செய்தும், அம்மனுக்குப் புடவை சார்த்தியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.

    இந்த நாளில் சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, திருவீதியுலா என அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும். 9-ம் நாள் விழாவில் திருவீதிவிழா, பொங்கல் படையல், அக்னிக் கரகம் எடுத்து ஆடுதல்... என ஊரே அமர்க்களப்படும். 10-வது நாள் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெறும். கார்த்திகையில் 108 சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெறும்.

    கடும்பாடி சின்னம்மன் திருக்கோவிலில் அம்மன் சுயம்பு வடிவில் அருள்பாலிப்பதும், இவரை அணுகினால் கடன் தொல்லைகள் தீரவும், கணவன் மனைவி அன்னியோன்யமாய் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாய் வாழவும் திருமணத் தடை நீங்கவும் அனுக்கிரகம் செய்வார் என்பது சிறப்பு. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தல் அமோகமாய் இருக்கும். அம்மை நோய் கண்டவர்களுக்கு சங்கு தீர்த்தம் மருந்தாய் அமைகிறது.

    காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்துள்ளது.

    ஆடி மாத பிரம்மோற்சவ விழா

    சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. 11 நாட்களுக்கு இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு வகையான வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத பிரம்மோற்சவ விழா ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

    1-8-2019 (வியாழன்) மாலை புற்றுமண் எடுத்து வருதல்.
    2-8-2019 (வெள்ளி) காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் கொடியேற்றம், மாலையில் யாளி வாகனம்.
    3-8-2019 (சனி) காலை பவளக்கால் விமானம், மாலையில் மயில் வாகனம்.
    4-8-2019 (ஞாயிறு) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் அன்னவாகனம்.
    5-8-2019 (திங்கள்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் நாக வாகனம்.
    6-8-2019 (செவ்வாய்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் சிம்ம வாகனம்.
    7-8-2019 (புதன்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் யானை வாகனம்.
    8-8-2019 (வியாழன்) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் தொட்டி உற்சவம்.
    9-8-2019 (வெள்ளி) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் குதிரை வாகனம்.
    10-8-2019 (சனி) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் காமகோடி விமானம், அக்னி கரகம்.
    11-8-2019 (ஞாயிறு) காலையில் பவளக்கால் விமானம், மாலையில் சிம்ம வாகனம்.
    12-8-2 019 (திங்கள்) மாலையில் கந்தர்வ வாகனம்.

    தெய்வீக சக்தி நிறைந்த வேப்பிலை

    கருமாரிக்கும் இதர மாரியம்மன் அம்பிகைகளுக்கும் மிகவும் இஷ்டமான மரம் வேப்பமரம் தான். அரச மரத்தையும், வேப்பமரத்தையும் தெய்வீக மரங்கள் என்று சொல்வார்கள். அதனால் தான் அவைகளை தம்பதிகளாகக் கருதி ஒன்று சேர வளரச் செய்து திருமணமும் செய்விப்பார்கள். மரங்களில் வேப்ப மரத்தை சக்தியாகவும், அரச மரத்தை சிவமாகவும் கருதுவதுண்டு. மாரியம்மனுக்கு வாசனைப் பூக்களைவிட வேப்பிலை மிக பிடித்தமானது. நோய்களுக்கு மந்திரிக்க வேப்பிலை உபயோகிக்கிறார்கள். இம்மரத்தால் தெய்வத் திருவுருவங்கள் கூட செய்கிறார்கள்.

    வேப்பமரத்தை சக்தி அம்சமாக கூறுவானேன்? சூரியனால் கொடுக்கப்படுகிற சக்தியை வெகு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வது வேம்பு ஒன்றே என்று கருதப்படுகிறது. சூரிய சக்தியை கிரஹித்த வேப்பமரம் அதைக் கொண்டு எல்லா ஜீவராசிகளும் முக்கியமாக மனிதவர்க்கத்திற்கும் தொண்டு செய்து வருகிறது. சூரியனுடைய முக்கியமான அம்சங்களால் ஏற்பட்டது. உணர்ச்சிக்கு உஷ்ணம்போல ருசிக்கு கசப்பாகும்.

    இக்குணங்களை அடைந்துள்ள வேம்பில் உஷ்ணத்தை சாந்தி செய்யும்படியான குணமும் அடங்கியுள்ளது. அதனாலேயே அதை சக்தி என்றும், பெண் ரூபம் என்றும் சொல்கின்றனர். வேம்புக்கு பராசக்தி என்ற பெயரும் உண்டு. கிராம தேவதைகள் இருக்கும் இடமெல்லாம் வேப்ப மரத்தைக் காணலாம். கிராம தேவதைகள் நம் மீது சினம் கொள்ளாமல் எப்போதும் சாந்தமாகவே இருக்க வேப்பிலை உதவும். வேப்பம் பூவை உட்கொள்வதால் குடல் சுத்தமாகும். அஜீர்ணம் நீங்கும். வேம்பில் ஆயிரம் மருந்து உள்ளது என்பது முற்றிலும் உண்மை. அதனால் தான் ஆடி மாதம் அம்மன் திருத்தலங்களில் அதிக அளவில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

    மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் “மாங்காடு” என்னும் காரணப் பெயர் பெற்றது.

    இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரிந்து, பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மையறியாமல் நம் மனம் மாங்காட்டிற்கு நம்மை செலுத்தும்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

    இந்த மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாறு வருமாறு:-

    ஒரு சமயம் கயிலை மலையிலே தனித்திருக்கும் போது ஞானப் பூங்கோதையாம் எம் அன்னை சிறு குழந்தையைப் போல விளையாட்டாக சூரிய , சந்திரர்களான அந்தப் பித்தனின் கண்களை பொத்த, அதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது. மக்களும் தேவர்களும், கடவுட் பூஜையிலிருந்து வழுவினர்.

    இப்பாவம் அம்மையை சாராது என்றாலும், உலகத்தோர் உய்யும் பொருட்டும் அவர்கள் 32 அறங்களையும் சரியான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டும் அம்மையே உலகமக்களுக்கு அவற்றை நடத்தி காட்ட வேண்டி பூலோகத்திற்கு சென்று காஞ்சியில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்து சிவ பூஜை செய்யுமாறும், பின் தாமே வந்து மணம் செய்தருளுவதாகவும் அருளினார் சிவபெருமான்.

    இறைவனின் ஆணைப்படி அம்மன் பூலோகத்தில் ஆம்ரவனமாம் இந்த மாங்காட்டுப்பதியிலே வந்து அவதரித்தாள். மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும் ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முணையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரியத் தவக் கோலம் பூண்டாள்.
    இதனால் அம்மை இத்தலத்திலே “தபசு காமாட்சி” என்று அழைக்கப்படுகின்றாள்.

    ஐந்தணலிலே தன் இடக்காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி நடு அக்னியில் படும்படியும், வலது காலை இடது தொடைக்கு சற்றும் மேல் புறத்தில் இருக்குமாறும், இடது கரத்தை நாபிக் கமலத் திற்கு சற்று மேற்புறமாயும், வலது கரத்தில் ஜப மாலையுடன் தனது சிரசிற்கு மேலும், தனது அழகியத் திருக்கண்களை மூடிய கோலத்தில் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடுத் திருத்தலத்தில் உக்ர தவம் புரியலானாள் அம்மை.

    மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரி மேல் கருணை கொண்ட செஞ்சடையோன் அம்மைக்கு அருள் செய்ய வரும் போது, இதே தலத்தில் தன்னை பூசித்து வந்த அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். எனவே அம்மையை அசரீரியாக காஞ்சிக்கு செல்லுமாறும் தான் அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறினார்.

    ஆம்ரவனத்தில் தவம் இருந்த அம்மை , தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வரலானாள். பின்னர் கம்பாநதியை பெருகிவரச் செய்து தழுவக்குழைந்த நாதராகி பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான். இவ்வாறு மாங்காட்டிலே தவக்கோலம் காட்டிய பண்டாசுரனை அழித்த அம்பிகை அதனால் காஞ்சியிலே மணக் கோலம் காட்டி “கல்யாண காமாட்சி “ யாக அருள் பாலிக்கின்றாள்.

    பவளம் போல் மேனியனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் அம்மன் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டதால் அந்த தீயின் உக்கிரம் தாங்காமல் இத்தலத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்க மாட்டாமல் தவித்தார்கள் நிலங்கள் வற்றிப் போயின.

    அவர்களின் துன்பத்தை துடைக்கும் விதமாக ஆதி சங்கரர் மாங்காட்டுக்கு வந்தார். மக்கள் அவரிடம் தங்கள் குறைகளைக் கூற அவரும் தன் ஞான திருஷ்ட்டியால் உணமையை உணர்ந்து லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளினால் ஆன “அஷ்ட கந்தம்” அர்த்த மேரு என்னும் ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தீயின் உக்கிரம் மறைந்து மக்கள் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.

    இந்த ஸ்ரீ சக்ரம் ராஜ யந்திரமாகும். அதாவது ஆமை (கூர்ம) வடிவத்தை அடித்தளமாகக் அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற்புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீ சக்ரம் உண்டாக்கப்பட்டுள்ளது.

    எட்டு மூலிகைகளால் ஸ்ரீ சக்கரத்தை ஆதி சங்கரர் உருவாகியதால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஜவ்வாது சந்தனம், புனுகு போன்ற இன்ன பிறவும் சாற்றப்படுகின்றது. இத்திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்திற்கே முக்கிய வழிபாடு நடத்தப்படுகிறது. குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன.

    தபஸ் காமாட்சி மோன நிலையில் இருப்பதால், மூலஸ்தானத்திலிருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஓர் கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமே உருவான “ஆதி காமாட்சி” அம்மனை மூலஸ்தானத்தில் காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கிழக்குப் பார்த்த நிலையில் அம்பாள் இருந்தால், அங்கு அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருக்கும் என்பது மரபு.

    அவ்வாறே இங்கும் காமாட்சி அம்மனுக்கு பிரதானமான தனி சன்னதி உள்ளது. மாமரத்து அடியில் அம்மன் தவம் செய்ததால் தல விருட்சமாக மாமரம் உள்ளது.

    ஆகஸ்டு 4-ந்தேதி 1008 கலச அபிஷேகம் :

    குழந்தை பேறு, வேலை வாய்ப்பு போன்றவற்றை தரும் அற்புதமான தலமாகவும் மாங்காடு தலம் திகழ்கிறது. திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. வெள்ளி மற்றும் பவுர்ணமியில் ஊஞ்சல் சேவை நடக்கிறது.

    நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள். இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது. பவுர்ணமி தோறும் 9 கலசங்களில் 9 சக்திகளை ஆவாசனம் செய்து நடத்தப்படும் நவகலச ஹோமமும், புஷ்பாஞ்சலியும் மிகவும் பிரசித்தம்.

    தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும். ஆகஸ்டு 4-ந்தேதி ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் ஆதியில் அம்மன் புற்றில் இருந்ததாக கருதப்படுகிறது.

    இங்குள்ள நவகன்னிகை சன்னதி சிறப்பு வாய்ந்தது. அம்மன் தவம் இருந்த போது இந்த நவ கன்னிகைகள்தான் காவல் புரிந்தனர்.

    இவர்களை வழிபட்டால் உடல் உபாதைகள் நீங்கி சுகபோகம் உண்டாகும். கோவில் வட திசையில் திருக்குளம் உள்ளது. பிரச்சினைகள் தீர, 18,27,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்ச மாலை சாற்றி வழிபடலாம். புரட்டாசி பவுர்ணமியன்று நடக்கும் நிறைமணி தரிசனத்தில் கலந்து கொண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    எலுமிச்சம் பழத்தில் மகிமை :

    அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் முதல் வாரம் வரும் போது மற்ற பூஜைப் பொருட் களுடன் இரண்டு எலுமிச்சை பழம் எடுத்து செல்ல வேண்டும்.

    அர்ச்சனை முடிந்ததும் அர்ச்சகர் ஒரு எலுமிச்சை பழத்தையும் மற்ற பிரசாதங்களையும் கொடுத்து அடுத்த வாரம் வரும் போது மறக்காமல் இந்த எலுமிச்சை பழத்தையும் வேறு இரண்டு எலுமிச்சம் பழங்களையும் எடுத்து வரச் சொல்வார்.

    வீட்டுக்கு எடுத்து வந்த எலுமிச்சம் பழத்தையே தேவி காமாட்சியாக வைத்து ஆறு நாட்களும் பூஜித்து வரவேண்டும். ஆறு வாரம் சென்று அம்மனை வழிபட்ட பின் ஏழாவது வாரம் பசும்பாலைக் குங்குமப்பூ, கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி மற்ற பூஜைப் பொருட்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.

    அர்ச்சனை செய்து நிவேதனம் முடிந்து பாலைத் திருப்பித் தருவார் அர்ச்சகர். பாலில் சிறிது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வைத்துக் கொண்டு மீதியை அங்குள்ள அனைவருக்கும் பகிர்ந்தளித்து விட்டு வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

    நம்முடைய பிரார்த்தனை ஆறு வாரத்திற்குள்ளாக நிறைவேறி விடும். நோய் நொடிகள் அகன்று ஆரோக்கியம் ஏற்படும்.

    முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், இடையே ஏற்பட்டு பிரச்சினையை - வழக்கினை இறைவனே நேரில் வந்து தீர்த்து வைத்ததால் இத்தலத்து இறைவன் வழக்கறுத்தீசுவரர் எனப் பெயர் பெற்றார்.
    அருள்மிகு வழக்கறுத்தீசுவரர் கோவில் மத்திய காஞ்சியில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கிழக்கும், காந்திசாலைக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.

    சுமார் 6 அடி பள்ளத்தில் இத்திருக்கோவிலின் நுழைவு வாயில் அமைந்துள்ளது. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முதலில் உற்சவ மண்டபத்தில் விநாயகரைத் தரிசிக்கலாம்.

    அடுத்து, வழக்கறுத்தீசரையும், பராசரேசரையும் தரிசிக்கலாம். இருவரும் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளனர். இதில் வழக்கறுத்தீசுவரர் 16 பட்டை லிங்கத்திருவுருக் கொண்டு பெரிய ஆவுடையாருடன் கூடிய இலிங்க ரூபமாக எழுந்தருளியுள்ளார். ஒரே திருத்தலத்தில் 2 சந்நிதிகளைக் கொண்டுள்ள திருத்தலம் இது ஆகும். (கச்சபேசமும் 2 திருக்கோவில்களைக் கொண்டுள்ள திருத்தலம் ஆகும்)

    இத்தலத்தில் 1. விநாயகர், 2. வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், 3. துர்கை, 4. சண்டிகேசுவரர், 5. பைரவர், 6. சூரியன் ஆகியோர் தனித்தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர்.

    ஒரு கற்பகாலத்தில், வாழ்ந்து மறைந்த முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொல்லான ‘ஸத்’ ‘அஸத்’க்கு பொருள் கொள்வதில் கருத்து வேறுபாடுகள் - சந்தேகம் ஏற்பட்டு மனவருத்தத்தைத் தந்தது.

    பொதுவாக ‘ஸத்’ எனப்படுவது அருள் ஞானத்திற்கும், பரம் பொருளுக்கும் பெயர் என்று அறிஞர் பெருமக்கள் கூறுவர். அதே போல் ‘அஸத்’ என்பதற்கு சூனியத்திற்குப் பெயர் என்றும் அறிஞர்கள் கூறுவர்.

    இவ்வாறு இரண்டு சொல்லிற்குப் பொருள் அறிந்து கொள்வதில் கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதால் தேவர்களும், முனிவர்களும் அதைத் தீர்த்துக் கொள்ள, அப்பொருளுக்கு உண்மையான பொருளினை அறிந்து தெளிவு பெற, அவர்கள் காஞ்சீபுரத்தை அடைந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தனர். இவர்களின் பூசையால் மகிழ்ந்த ஈசன், லிங்கத்தினிலிருந்து வெளிப்பட்டு, அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

    இறைவனைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பலவாறாக அவரைத் துதித்து வழிபட்டனர். அதன் பின்பு இறைவன் அவர்களை நோக்கி என்னை நினைந்து வழிபட்டதின் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு முனிவர்களும், தேவர்களும் ஸத், அஸத் சொல்லுக்கு விளக்கம் அளித்து எங்களுக்குள் எழுந்துள்ள வழக்கினை-பிரச்சினையினைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டிப் பணிந்தனர்.

    முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், இடையே ஏற்பட்டு பிரச்சினையை - வழக்கினை இறைவனே நேரில் வந்து தீர்த்து வைத்ததால் இத்தலத்து இறைவன் வழக்கறுத்தீசுவரர் எனப் பெயர் பெற்றார். வழக்கு விவகாரங்களில் சிக்கி தவிப்பவர்கள் இத்தலத்துக்கு வந்து பரிகார பூஜைகள் செய்து பலன் பெறுகிறார்கள்.

    மேலும் இத்தலத்து ஈசனை 16 தீபம் ஏற்றி, 16 முறை வலம் வந்து, 16 வாரம் தொடர்ந்து அன்னதானம் செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

    மேலும் தகவல்களை குணாளனிடம் 9677728677 என்ற எண்ணில் பெறலாம்.
    தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்...
    தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபடுபவர்கள், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கப் பெற்று, மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் வரலாற்றைப் பார்க்கலாம்..

    தல வரலாறு

    ஒரு முறை சோழ நாட்டின் மன்னன் ராஜேந்திர சோழன், அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த பன்றியின் மீது பட்டு அது இறந்து போனது. தாயை இழந்த பன்றிக் குட்டிகள், பசிக்குப் பால் கிடைக்காமல் சத்தமிட்டன. அதனைக் கண்ட மன்னன், ‘தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட்டோமே’ என்று மனம் வருந்தினான்.

    அப்போது அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட முருகப்பெருமான் அவ்விடத்தில் தோன்றி, அவைகளின் பசியைப் போக்கினார். குட்டிகளின் மேல் பரிவு கொண்ட முருகப்பெருமானின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழேத் தரைப்பகுதியில் புதிய கோவில் ஒன்றைக் கட்டினார்.

    அந்த ஆலயத்தில் சிவபெருமான், பார்வதிதேவி ஆகியோருடன் முருகப்பெருமானையும் சேர்த்து மூன்று தெய்வங்களை முதன்மை தெய்வங்களாக்கி வழிபட்டான் என்று இக்கோவில் அமைக்கப்பட்ட தல வரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில், சோழர் கால கட்டுமான அமைப்பைக் கொண்டிருக்கிறது. வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரை ‘ராஜேந்திர சோழீஸ்வரர்’ எனும் பெயரில் வழிபடுகிறார்கள். அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் தனி சன்னிதியில் இருக்கிறார். மற்றொரு சன்னிதியில், முருகப்பெருமான் ஆறு முகங் களுடன் ‘பாலசுப்பிரமணிய சுவாமி’யாக வள்ளி-தெய்வானை யுடன் சேர்ந்து அருள்காட்சி தருகிறார்.

    ஆலய வெளிச்சுற்றில் நடராசர், தங்கள் மனைவியருடன் சூரியன் மற்றும் சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சப்த கன்னியர், மகாவிஷ்ணு, நவக்கிரகங்கள் இருக்கின்றன. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சர் சன்னிதியும் உள்ளது. முருகப்பெருமான் சன்னிதிக்கு நேராக அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேற்கூரை உட்பகுதியில், 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகள் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கின்றன.

    இங்குள்ள ராஜேந்திர சோழீசுவரர் சன்னிதியில் சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களிலும், அறம் வளர்த்த நாயகி சன்னிதியில் அம்மனுக்குரிய சிறப்பு நாட்களிலும், பாலசுப்பிரமணிய சுவாமி சன்னிதியில் முருகனுக்குரிய சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் மற்றும் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் போன்ற விழாக்களும், அம்மனுக்கு ஆடிப்பூரம் விழாவும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன.

    இந்தக் கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரையிலும், நேரெதிராகப் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன. காசிக்கு அடுத்ததாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்கின்றனர். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள்.

    திருமணத்தடை உள்ளவர்கள், வராக நதியில் நீராடி, பின்னர் கோவிலுக்குச் சென்று, இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் அவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும். இதே போல், குழந்தைப்பேறு வேண்டும் கணவன் - மனைவி இருவரும் இங்கு நீராடிவிட்டு, கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்கின்றனர்.

    மேலும் வராக நதியின் இரு கரைகளிலும் இருக்கும் ஆண், பெண் மருத மரங்களைப் பார்த்து வழிபட்டுச் செல்லும் தம்பதியர்கள், மனம் ஒன்றுபட்டு அதிகக் காலம் வாழ்வர். அவர்களுக்கு இடையே எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இக்கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் முருகப் பெருமான் என்று மூன்று சன்னிதிகளுக்கும் தனித்தனியாக மூன்று கொடி மரங்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகக் கருதப் படுகிறது. இக்கோவிலுக்கு வந்து மூவரையும் வழிபடுபவர்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைப்பதுடன் மனமகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்கிறார்கள்.

    மறைந்து போன கோவில்

    பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், வழிப்போக்குச் சித்தர் என்பவரிடம் தனது தோஷம் நீங்க வழி கேட்டார்.

    அந்தச் சித்தர், “நதிக்கரையில் மூன்று கொடிமரங்களுடன் அமைந்த கோவில் எங்கு உள்ளதோ, அங்கு சென்று மூன்று முறை நதியில் நீராடி எழுந்து, கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டால், உன்னுடைய தோஷம் நீங்கும்” என்றார்.

    அவர் சொன்னது போன்ற அமைப்பிலான கோவிலைத் தேடி அலைந்த அந்த நபர், கடைசியாக இந்தக் கோவிலுக்கு வந்தார். வராக நதிக்கரையில் மூன்று கொடிமரங்களுடன் இருந்த கோவிலைக் கண்டதும் மகிழ்ந்தார்.

    ‘தனது தோஷம் நீங்கப் போகிறது’ என்கிற ஆர்வத்துடன், வராக நதியில் இறங்கியவர், ஒரு முறை மூழ்கி எழுந்து கோவிலைப் பார்த்து வணங்கினார். இரண்டாவது முறை மூழ்கி எழுந்து கோவிலைப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அங்கு கோவில் தெரியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் வயல்வெளியாக காட்சியளித்தது.

    பயந்து போன அந்த நபர், ஆற்றில் இருந்து வெளியேறி, அங்கு தவம் செய்து கொண்டிருந்த ஜெயதேவ மகரிஷியிடம் நடந்ததைச் சொல்லி புலம்பினார்.

    அவரை சமாதானப்படுத்திய மகரிஷி, “கவலைப்பட வேண்டாம். இது இறைவனின் திருவிளையாடலே. நீ பயப்படாமல், மூன்றாவது முறையும் நதியில் மூழ்கி எழுந்து பார். உனக்குக் கோவில் தெரியும்” என்றார்.

    அதேபோல அவரும் மீண்டும் வராக நதிக்குள் இறங்கி, மூன்றாவது முறையாக நதியில் மூழ்கி எழுந்து பார்த்தார். அவருக்குக் கோவில் முழுமையாகத் தெரிந்தது. அதன் பிறகு, மகிழ்ச்சியுடன் கோவிலுக்குள் சென்று வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார்.

    கோவில் பற்றி..

    * ராஜேந்திர சோழனால் கட்டப்பெற்ற இக்கோவிலைப் பெரியகுளத்தில் இருப்பவர்கள் ‘பெரியகோவில்’ என்றே அழைக்கின்றனர்.

    * இக்கோவிலின் மூலவராகச் சிவபெருமான் இருக்கின்ற போதும், ஆலயத்தை ‘பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்’ என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள்.

    * இந்த ஆலயம் அமைந்திருக்கும் இடம் முன்பு ‘குளந்தை’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இவ்வூரில் அமைந்திருந்த பெரிய குளத்தின் அடையாளமாக, ‘பெரியகுளம்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

    * அருணகிரிநாதர் ‘திருப்புகழ்’ பாடலில் இக்கோவிலைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

    * இக்கோவிலின் அருகில் ஓடும் வராக நதியை ‘பிரம்ம தீர்த்தம்’ என்றும் அழைக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    அமைவிடம்

    தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, பெரியகுளம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப்பேருந்து மற்றும் சிற்றுந்து வசதிகள் இருக்கின்றன.

    -தேனி மு.சுப்பிரமணி
    சென்னையில் உள்ள அம்மன் தலங்களில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் தலம் என்ற சிறப்பைப் பெற்ற தலம் திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயம்.
    சென்னையில் உள்ள அம்மன் தலங்களில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் தலம் என்ற சிறப்பைப் பெற்ற தலம் திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயம்.

    திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இதனால் அந்த பகுதியை வேலக்காடு என்று அழைத்தனர். அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது. பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது. மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது. பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர்.

    கடந்த நூற்றாண்டில்தான் இந்த அற்புதம் நடந்தது. நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.  இந்த கருமாரி யார்ப நீண்ட நாட்களாக நாக வடிவில் மக்கள் அறியாதபடி இருந்ததற்கு என்ன காரணம்ப அதற்கு ஒரு புராண கதை உள்ளது.

    துவாபரயுகம்...

    கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.  தன் தங்கை தேவகியை வசுதேவனுக்குக் கட்டிக் கொடுத்தான். தங்கையை அவளது கணவனுடன் அனுப்பிவைக்கும் நேரத்தில் ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.  ‘கம்சா, உன் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லும்’ ‘தன் தங்கையின் பிள்ளை தன்னைக் கொல்வதாப’ என்று ஆத்திரமடைந்து தேவகியையும் வசுதேவனையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

    அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான். ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டன. தேவகியின் எட்டாவது கர்ப்பம். அந்தக் கருவில் உதிக்க இருந்தவன் கண்ணன். அதே சமயம், ஆயர்பாடியில் நந்த கோபனின் மனைவி யசோதையும் கருவுற்றிருந்தாள். அவள் கருவில் குடி கொண்டிருந்தது மாயா எனும் சக்தி. தேவகிக்குக் குழந்தை பிறந்தது.

    இறைவனின் எண்ணப்படி தேவகியின் குழந்தை ஆயர்பாடி போய்ச் சேர்ந்தது. யசோதையின் குழந்தையான மாயா சக்தி சிறைக்கு இடம் மாறியது. அதன் பின்னரே குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்குத் தெரியவந்தது. குழந்தையைக் கொல்ல கம்சன் குதூகலத்துடன் வந்து சேர்ந்தான். பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான். பிள்ளை அல்லவா பிறக்கப்போகிறது என அசரீரி அறிவித்திருந்தது.

    இருந்தும் கம்சன், ‘உன்னை விட்டாலும் தவறு. ஆதலால் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்’ என வானதிரச் சிரித்து வாளை ஓங்கினான் வெட்ட...

    அவனுக்கு மேல் ஆயிரம் மடங்கு அதிகமாகச் சிரித்து விண்ணில் தாவியது அந்தக் குழந்தை.  ‘அடேய் ஆத்திரக்காரா. கருமாறி வந்த என் கழுத்தை நெரிக்கப்பார்க்கும் கல்நெஞ்சக் கம்சா! உன்னை வதைக்க என் அண்ணன் ஆயர்பாடியிலிருந்து இடையனாக எட்டு வயதில் வருவான்! அதுவரை காத்திரு’ என்று சொல்லி மறைந்தது.

    கருமாறி விட்டதை உணர்ந்த கம்சன் கலக்கத்துடன் ‘கருமாறி’ என்றான். அக்கணமே ஆகாயம், பூமி அனைத்தும் ‘கருமாரி, கருமாரி’ என்று அழைக்கத் தொடங்கின. இப்படித்தான் கருமாரி உருவானாள். அசுரரை அடக்க, அன்னை சக்தி கருநீல நிறத்தில் பயங்கரமான உக்கிர உருவம் எடுத்தாள். திரிசூலம் ஒன்றைத் தன்முன் நட்டினாள். அன்னையின் உக்கிரம் தாங்காமல், அல்லல் விளைவித்த அசுரர்கள் அடங்கி ஒடுங்கினர்.

    உக்கிர சக்தியை மகாவிஷ்ணு சாந்தப்படுத்தி, ‘கருமாரி.... உலக மக்கள் உய்வதற்கு உன் கடைக்கண் அருட்பார்வையே போதும். தலை காட்டி, உடல் மறை...’ என உள்ளன்போடு உரைத்தார்.  கருமாரி புன்முறுவலுடன் தலைகாட்டி, தன்னிலை மறைத்தாள். ஞாலத்து மக்கள் நாளும் வந்து வழிபட, எப்போதும் போல் ஓர் அழகிய வடிவமுடனும் எழுந்தருளினாள். மகாவிஷ்ணு சாந்தப்படுத்திய கருமாரி உருவம் நாரணி (நாராயணனின் பெண் வடிவம்) என்றும் கிருஷ்ணமாரி என்றும் அழகிய வடிவம் சிவை என்றும் (சிவனின் பெண் வடிவம்) அறியப்பட்டது.

    காலத்துக்கு அப்பாற்பட்ட அகத்தியமுனிவர் அம்மையை இரட்டை உருவுடன் கூடிய இந்த நிலையில் கண்டு செந்தமிழால் போற்றித் துதித்தார்.
    அம்மை அகத்தியருக்குக் காட்சி தந்தது தை மாதத்தில். பவுர்ணமி தினத்தில் பூச நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமையில், இந்த நாளே அன்னையின் அவதார தினமாகக் கருதப்படுகிறது.

    காட்சியளித்த கருமாரி அகத்தியரிடம் சொன்னாள். ‘அகத்தியா, நீ வந்து வணங்கி வழிபடவே நான் காத்திருந்தேன். அசுரர் ஆணவம் அடங்கிவிட்டது. இனி நானும் பாம்பு உருக்கொண்டு புற்றில் அடங்கியிருக்கப் போகிறேன். மறுபடி கலியுகத்தில் காட்சியளிப்பேன் கலியின் கொடுமையால் வாடும் மக்களுக்கு சாம்பலைக் கொண்டே சாந்தி அளிப்பேன். அப்போது எனக்கு திருக்கோவிலும் தீர்த்தக் குளமும் அமையும். பரிவாரக் கடவுளர்களும் பாங்குடனே அமைவர்.’ அன்னை உரைத்தபடியே அனைத்தும் நடந்தேறின.

    வேலங்காட்டில், வெள்ளை வேல மரத்தின் கீழ் பாம்புருவில் அன்னை, புற்றில் குடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த இடத்தில் அவளுக்கோர் ஆலயம் எழுந்தது. இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்து இருக்கிறது. புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று, அன்னையை அடிபணிவோருக்கு அபயம் அளிக்கிறது. புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள். கருணையே வடிவாய் இருந்த கருமாரித் தாயினை அவள் சந்நிதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக் கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் யாவற்றையும் விரும்பிய வண்ணமே அருளும் அன்னையவள் நம் கருமாரி ஆவாள். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கை அமையும்.

    மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன் மக்களைப் பெற்று அன்னைக்குத் தம் வேண்டுதல் காணிக்கையைச் செலுத்தி வருவதனையும் காணலாம். கொடிய, தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன.

    இத்தகைய சிறப்புடைய திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நாளை (19-ந்தேதி) முதல் 8-10-2019 வரை ஆடி திருவிழா நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12 வாரங்கள் திருவேற்காடு ஆலயத்தில் ஆடித் திருவிழா நடைபெறும். அதன் விவரம் வருமாறு:-

    19-7-2019- ஆடி முதல் வெள்ளிக்கிழமை சந்தன காப்பு அலங்காரம்
    21-7-2019- ஆடி முதல் ஞாயிறு மஞ்சள் காப்பு அலங்காரம்
    23-7-2019- ஆடி முதல் செவ்வாய் புற்றலங்காரம், 108 சங்கு அபிஷேகம்
    26-7-2019- ஆடி 2-ம் வெள்ளி, ஆடி கிருத்திகை, சந்தன காப்பு, 3 முழுபடையல்கள், 3 கும்பங்கள்
    28-7-2019- ஆடி 2-ம் ஞாயிறு நவகலசம் அபிஷேகம், 1008 சங்காபிஷேகம், தங்க கவசம்.
    30-7-2019- ஆடி 2-ம் செவ்வாய் 108 குடம் பால் அபிஷேகம், 1008 சங்காபிஷேகம்.
    31-7-2019- ஆடி அமாவாசை சந்தன காப்பு, முழு படையல்
    2-8-2019 - ஆடி 3-ம் வெள்ளிக்கிழமை சந்தன காப்பு, அரை படையல், தங்க ரதம்.
    3-8-2019 - ஆடிப்பூரம் மற்றும் ஆடி 18-ம் பெருக்கு மாலை 5 மணிக்கு அபிஷேகம், சந்தன காப்பு, இரவு 8 மணிக்கு அம்மன் வீதி உலா.
    4-8-2019 - ஆடி 3-ம் ஞாயிறு 108 குடம் தயிர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் பண்டாசூரன் வாகனத்தில் வீதிஉலா.
    6-8-2019 - ஆடி 3-ம் செவ்வாய் 1008 சங்காபிஷேகம், தங்க கவசம், மாலை 4 மணிக்கு குங்கும அர்ச்சனை.
    9-8-2019 - ஆடி 4-ம் வெள்ளி 108 சங்காபிஷேகம்-.
    11-8-2019 - ஆடி 4-ம் ஞாயிறு 108 குடம் பஞ்சாமிர்த அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் வீதி உலா.
    13-8-2019 - ஆடி 4-ம் செவ்வாய் வெற்றிலை காப்பு
    16-8-2019 - ஆடி 5-ம் வெள்ளி சந்தன காப்பு
    18-8-2019 - 5-ம் ஞாயிறு 108 குடம் பன்னீர் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் வீதி உலா.
    20-8-2019 - 5-ம் செவ்வாய் சந்தன காப்பு
    23-8-2019 - 6-ம் வெள்ளி சந்தன காப்பு
    25-8-2019 - 6-ம் ஞாயிறு 108 குடம் விபூதி அபிஷேகம், இரவு 8 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
    27-8-2019 - 6-ம் செவ்வாய் சந்தன காப்பு.
    30-8-2019 - 7-ம் வெள்ளி தங்க கவசம், முழு படையல்.
    1-9-2019 - 7-ம் ஞாயிறு 108 குடம் சந்தன அபிஷேகம், மாலை 6 மணிக்கு அம்மன் காமாட்சி ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    2-9-2019 - விநாயகர் சதுர்த்தி, மூஷிக வாகனத்தில் வீதி உலா.
    3-9-2019 - 7-ம் செவ்வாய் 1008 சங்காபிஷேகம்
    6-9-2019 - 8-ம் வெள்ளி 1008 சங்காபிஷேகம்
    8-9-2019 - 8-ம் ஞாயிறு 108 குடம் இளநீர் அபிஷேகம், இரவு 8 மணிக்கு அம்மன் வீதி உலா.
    10-9-2019 - 8-ம் செவ்வாய் மஞ்சள் காப்பு
    13-9-2019 - 9-ம் வெள்ளி சந்தன காப்பு
    15-9-2019 - 9-ம் ஞாயிறு காலை 7 மணிக்கு அம்மன் திருத் தேரில் உலா வருதல், 11 மணிக்கு அம்மனுக்கு நல்லெண்ணை அபிஷேகம், இரவு 8 மணிக்கு அம்மன் மான் வாகனத்தில் வீதி உலா.
    17-9-2019 - 9-ம் செவ்வாய் சந்தன காப்பு
    20-9-2019 - 10-ம் வெள்ளி 1008 சங்காபிஷேகம், சந்தன காப்பு
    22-9-2019 - 10-ம் ஞாயிறு 108 குடம் மஞ்சள் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா.
    24-9-2019 - 10-ம் செவ்வாய் பகல் 11 மணிக்கு 1008 சங்காபிஷேகம், மஞ்சள் காப்பு
    27-9-2019 - 11-ம் வெள்ளி 108 சங்காபிஷேகம்
    29-9-2019 - 11-ம் ஞாயிறு 108 குடம் கனிகள் அபிஷேகம், இரவு 7 மணிக்கு அம்மன் மேஷ வாகனத்தில் வீதி உலா.
    1-10-2019 - 11-ம் செவ்வாய் சந்தன காப்பு
    4-10-2019 - 12-ம் வெள்ளி சந்தன காப்பு
    6-10-2019 - 12-ம் ஞாயிறு 108 குடம் மலர் அபிஷேகம், மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு அம்மன் புஷ்பபல்லக்கில் ஊர்வலம்.
    8-10-2019 - 12-ம் செவ்வாய் தங்க கவசம்
    13-10-2019 - நிறைமணி காட்சி ஆரம்பம்

    15-10-2019 - மாலை 4 மணிக்கு நிறைமணி காட்சி பூர்த்தி. இத்துடன் ஆடி திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
    திருவேற்காடு ஆலயத்தில் நடைபெறும் ஆடி திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை - 2680 0430 மற்றும் 2680 0487 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.
    ×