search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் உட்புறத் தோற்றம்
    X
    கோவில் உட்புறத் தோற்றம்

    பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - தேனி

    தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்...
    தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி மற்றும் பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபடுபவர்கள், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கப் பெற்று, மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் வரலாற்றைப் பார்க்கலாம்..

    தல வரலாறு

    ஒரு முறை சோழ நாட்டின் மன்னன் ராஜேந்திர சோழன், அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த பன்றியின் மீது பட்டு அது இறந்து போனது. தாயை இழந்த பன்றிக் குட்டிகள், பசிக்குப் பால் கிடைக்காமல் சத்தமிட்டன. அதனைக் கண்ட மன்னன், ‘தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட்டோமே’ என்று மனம் வருந்தினான்.

    அப்போது அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட முருகப்பெருமான் அவ்விடத்தில் தோன்றி, அவைகளின் பசியைப் போக்கினார். குட்டிகளின் மேல் பரிவு கொண்ட முருகப்பெருமானின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழேத் தரைப்பகுதியில் புதிய கோவில் ஒன்றைக் கட்டினார்.

    அந்த ஆலயத்தில் சிவபெருமான், பார்வதிதேவி ஆகியோருடன் முருகப்பெருமானையும் சேர்த்து மூன்று தெய்வங்களை முதன்மை தெய்வங்களாக்கி வழிபட்டான் என்று இக்கோவில் அமைக்கப்பட்ட தல வரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில், சோழர் கால கட்டுமான அமைப்பைக் கொண்டிருக்கிறது. வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரை ‘ராஜேந்திர சோழீஸ்வரர்’ எனும் பெயரில் வழிபடுகிறார்கள். அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் தனி சன்னிதியில் இருக்கிறார். மற்றொரு சன்னிதியில், முருகப்பெருமான் ஆறு முகங் களுடன் ‘பாலசுப்பிரமணிய சுவாமி’யாக வள்ளி-தெய்வானை யுடன் சேர்ந்து அருள்காட்சி தருகிறார்.

    ஆலய வெளிச்சுற்றில் நடராசர், தங்கள் மனைவியருடன் சூரியன் மற்றும் சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சப்த கன்னியர், மகாவிஷ்ணு, நவக்கிரகங்கள் இருக்கின்றன. இங்கு மரணத்தை வென்ற மிருத்யுஞ்சர் சன்னிதியும் உள்ளது. முருகப்பெருமான் சன்னிதிக்கு நேராக அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேற்கூரை உட்பகுதியில், 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகள் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கின்றன.

    இங்குள்ள ராஜேந்திர சோழீசுவரர் சன்னிதியில் சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களிலும், அறம் வளர்த்த நாயகி சன்னிதியில் அம்மனுக்குரிய சிறப்பு நாட்களிலும், பாலசுப்பிரமணிய சுவாமி சன்னிதியில் முருகனுக்குரிய சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவம் மற்றும் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் போன்ற விழாக்களும், அம்மனுக்கு ஆடிப்பூரம் விழாவும் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன.

    இந்தக் கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரையிலும், நேரெதிராகப் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன. காசிக்கு அடுத்ததாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்கின்றனர். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள்.

    திருமணத்தடை உள்ளவர்கள், வராக நதியில் நீராடி, பின்னர் கோவிலுக்குச் சென்று, இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் அவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும். இதே போல், குழந்தைப்பேறு வேண்டும் கணவன் - மனைவி இருவரும் இங்கு நீராடிவிட்டு, கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்கின்றனர்.

    மேலும் வராக நதியின் இரு கரைகளிலும் இருக்கும் ஆண், பெண் மருத மரங்களைப் பார்த்து வழிபட்டுச் செல்லும் தம்பதியர்கள், மனம் ஒன்றுபட்டு அதிகக் காலம் வாழ்வர். அவர்களுக்கு இடையே எவ்விதக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இக்கோவிலில் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் முருகப் பெருமான் என்று மூன்று சன்னிதிகளுக்கும் தனித்தனியாக மூன்று கொடி மரங்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகக் கருதப் படுகிறது. இக்கோவிலுக்கு வந்து மூவரையும் வழிபடுபவர்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைப்பதுடன் மனமகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்கிறார்கள்.

    மறைந்து போன கோவில்

    பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர், வழிப்போக்குச் சித்தர் என்பவரிடம் தனது தோஷம் நீங்க வழி கேட்டார்.

    அந்தச் சித்தர், “நதிக்கரையில் மூன்று கொடிமரங்களுடன் அமைந்த கோவில் எங்கு உள்ளதோ, அங்கு சென்று மூன்று முறை நதியில் நீராடி எழுந்து, கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டால், உன்னுடைய தோஷம் நீங்கும்” என்றார்.

    அவர் சொன்னது போன்ற அமைப்பிலான கோவிலைத் தேடி அலைந்த அந்த நபர், கடைசியாக இந்தக் கோவிலுக்கு வந்தார். வராக நதிக்கரையில் மூன்று கொடிமரங்களுடன் இருந்த கோவிலைக் கண்டதும் மகிழ்ந்தார்.

    ‘தனது தோஷம் நீங்கப் போகிறது’ என்கிற ஆர்வத்துடன், வராக நதியில் இறங்கியவர், ஒரு முறை மூழ்கி எழுந்து கோவிலைப் பார்த்து வணங்கினார். இரண்டாவது முறை மூழ்கி எழுந்து கோவிலைப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அங்கு கோவில் தெரியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் வயல்வெளியாக காட்சியளித்தது.

    பயந்து போன அந்த நபர், ஆற்றில் இருந்து வெளியேறி, அங்கு தவம் செய்து கொண்டிருந்த ஜெயதேவ மகரிஷியிடம் நடந்ததைச் சொல்லி புலம்பினார்.

    அவரை சமாதானப்படுத்திய மகரிஷி, “கவலைப்பட வேண்டாம். இது இறைவனின் திருவிளையாடலே. நீ பயப்படாமல், மூன்றாவது முறையும் நதியில் மூழ்கி எழுந்து பார். உனக்குக் கோவில் தெரியும்” என்றார்.

    அதேபோல அவரும் மீண்டும் வராக நதிக்குள் இறங்கி, மூன்றாவது முறையாக நதியில் மூழ்கி எழுந்து பார்த்தார். அவருக்குக் கோவில் முழுமையாகத் தெரிந்தது. அதன் பிறகு, மகிழ்ச்சியுடன் கோவிலுக்குள் சென்று வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார்.

    கோவில் பற்றி..

    * ராஜேந்திர சோழனால் கட்டப்பெற்ற இக்கோவிலைப் பெரியகுளத்தில் இருப்பவர்கள் ‘பெரியகோவில்’ என்றே அழைக்கின்றனர்.

    * இக்கோவிலின் மூலவராகச் சிவபெருமான் இருக்கின்ற போதும், ஆலயத்தை ‘பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்’ என்றே பலரும் குறிப்பிடுகிறார்கள்.

    * இந்த ஆலயம் அமைந்திருக்கும் இடம் முன்பு ‘குளந்தை’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இவ்வூரில் அமைந்திருந்த பெரிய குளத்தின் அடையாளமாக, ‘பெரியகுளம்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

    * அருணகிரிநாதர் ‘திருப்புகழ்’ பாடலில் இக்கோவிலைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

    * இக்கோவிலின் அருகில் ஓடும் வராக நதியை ‘பிரம்ம தீர்த்தம்’ என்றும் அழைக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    அமைவிடம்

    தேனி மாவட்டம், பெரியகுளம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, பெரியகுளம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப்பேருந்து மற்றும் சிற்றுந்து வசதிகள் இருக்கின்றன.

    -தேனி மு.சுப்பிரமணி
    Next Story
    ×