என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    புரட்டாசி மாதமானது பெருமாளை வழிபடச் சிறப்பாகக் கருதப்படுவது போல் ஆடி மாதம் முழுவதும் அம்மனை விரதம் இருந்து வழிபடச் சிறப்பு நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது.
    ஆடிச் செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி தினங்களில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் விரதம் இருந்து பக்தர்கள் பொங்கல் வைத்து, கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்கிறார்கள். அதேபோல், ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளைகாப்பு செய்து கோயிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல்களைப் பிரசாதமாக வழங்குவதையும் பார்க்க முடியும்.

    கிருஷ்ண பரமாத்மாவின் மாமன் கம்ஸன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் குழந்தைகளை எல்லாம் கொன்று குவிக்க, அவளுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையான கிருஷ்ணருக்கு பதிலாக வேறு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை தேவகியிடம் மாற்றி வைக்கிறார்கள். அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்ஸன் முயற்சி செய்யும்பொழுது அந்தக் குழந்தையானது பவானி அம்மன் தோற்றத்தில் கம்ஸா உன்னைக் கொல்வதற்குப் பிறந்தவன் இப்பூவுலகில் உயிரோடு இருக்கிறான். அவனால் தான் உனக்கு சாவு என்று கூறி மறைகிறது. அந்த பவானி அம்மன்தான் பெரியபாளையத்து அம்மன் என்று கதைகள் கூறுகின்றன.

    இது மட்டுமல்லாமல் இந்த அம்மன் அவதரித்தது பற்றிய மற்றொரு கதையும் உண்டு. இப்பொழுது பெரிய பாளையம் கோவில் இருக்கும் இடம் முன்பு மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அந்த இடத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது, பால் கறந்து விற்பது என்ற தொழிலைச் செய்து வந்த ஒருவரிடம் அவர் வளர்த்த மாடுகளில் ஒன்று மட்டும் தினமும் பால் கொடுக்காமல் இருந்தது சந்தேகத்தைக் கிளப்பியது.

    அந்த மாட்டை சில தினங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கத் துவங்கினார். அந்த குறிப்பிட்ட பசுவானது மேய்ச்சலை முடித்து விட்டு அருகி லிருக்கும் ஆற்றில் நீரை அருந்தி விட்டு குறிப்பிட்ட ஒரு பாறைக்கு அருகில் சென்று அந்தப் பாறையின் மேல் அனைத்து பாலையும் பொழிவதைக் கண்டார். அந்தப் பாறையில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைக் கண்டறியும் எண்ணத்தில் கோடாலியால் அந்தப் பாறையை இரண்டாகப் பிளந்தார். அந்தப் பிளவுபட்ட பாறையிலிருந்து மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடையை உடுத்திய பெண் உருவம் ஒன்று வெளிப்பட்டு அந்த இடத்தில் தனக்கு ஒரு ஆலயத்தை உருவாக்கினால் அவர் செய்த பாவங்களில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறி மறைந்தது. அங்கு கட்டப்பட்ட அந்தக் கோவில்தான் பெரியபாளையத்து அம்மன் கோயில் என்றும் கூறப்படுகிறது.

    ஆடி மாதத்தில் இக்கோயிலில் ஆடு, கோழிகளை வேண்டிக் கொண்டு அம்மனுக்குப் பலியிடுகிறார்கள். இன்னும் சில பக்தர்கள் தீச்சட்டி எடுப்பது, நெருப்பு மதிப்பது, அலகு குத்திக் கொள்வது போன்ற வேண்டுதல்களையும் செய்கிறார்கள். இக்கோயிலில் ஆடித்திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் அம்மனுக்கு விதவிதமான அலங்காரங்களைச் செய்து பூஜை செய்கிறார்கள். ஆடி மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமையில் செல்வத்திற்கு அதிபதியான ஸ்வர்ணாம்பிகை அதாவது பார்வதிதேவி அலங்காரத்தை அம்மனுக்கு செய்கிறார்கள். இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசிப்பவர்களுக்கு எல்லாச் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று சித்தி சக்திகள் நிறைந்த அங்காளம்மன் அதாவது காளியின் அலங்காரமானது செய்யப்படுகின்றது. இந்த அலங்காரத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் அளவற்ற புத்திக்கூர்மையானது கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தைரியத்தை வழங்கும் காளிகாம்பாள் அலங்காரமானது அம்மனுக்கு செய்யப்படுகின்றது. இக்கோலத்தில் அம்மனை வணங்குபவர்களுக்கு வாழ்வில் எவ்விதத் தடைகள் வந்தாலும் அவற்றைப் போராடி வெற்றி கொள்ளும் தைரியம் கிடைப்பதோடு சிறந்த உடல் நலமும் அமையப்பெறும்.

    நான்காவது வெள்ளிக்கிழமையில் காமாட்சி அம்மனை காஞ்சீக்கும் சென்றே தரிசிக்கலாம் அல்லது காமாட்சி அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை தரிசித்தாலும் சிறப்பே. சக்தி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் அம்மனை தரிசிப்பதன் மூலம் வாழ்வில் துர்சக்திகள் விலகி அமைதி ஏற்படும்.

    ஐந்தாவது வெள்ளிக்கிழமை லஷ்மியை தரிசிப்பதன் மூலம் குடும்பத்தில் உடல் ஆரோக்கியம், செல்வம் மற்றும் அனைத்து மங்களங்களும் உண்டாகும். இவை மட்டுமல்லாமல் அர்த்தநாரி அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், பராசக்தி அலங்காரம் என்று பலவிதமான அலங்காரங்களை அம்மன் கோவில்களில் செய்கிறார்கள்.
    ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.
    எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

    எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி என்று சொல்வார்கள். அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.

    இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடி மாதச் செவ்வாயன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்திக் கொழுக்கட்டைப் பிடித்து வழிபாடு செய்வர்.

    இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

    ஆடி அமாவாசையன்று கடலில், நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் முடிவடையும். 
    ஆடி மாதம் விரதம் இருந்து அம்மனை வழிபடுவதற்கு மிகவும் உகந்தது. அம்மன் வழிபாடு, ஆடி மாத விரதத்தின் சிறப்புகள் பற்றிய விவரமாக அறிந்து கொள்ளலாம்.
    ஆடி மாதம் விரதம் இருந்து அம்மனை வழிபடுவதற்கு மிகவும் உகந்தது. அம்மன் வழிபாடு, ஆடி மாத விரதத்தின் சிறப்புகள் பற்றிய விவரம்:-

     ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.

     ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது.

     ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

     ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 12 நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ‘அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

     ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக பின்பற்றப் படுகிறது.

     ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

     தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதம் அம்மன் பக்தர்களுக்கு விசேஷமான காலமாக விளங்குகிறது.

     கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாதமாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

     ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

     ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

     தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான கதம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

     ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

     ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

     ஆடி மாதம் கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்கப்படாமல் இருக்கும் எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

     ஆடி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

     ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

     ஆடி மாதம் விரதம் இருந்து முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

    -தொகுப்பு: பொ.பாலாஜிகணேஷ்
    ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் விழாக்கள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஆடி தபசு

    ஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உடனே சிவபெருமான், “பொதிகை மலையில் புன்னை வனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும்” என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இதையடுத்து ஆடி பவுர்ணமி நாளில், பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் இறைவன் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு, அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இந்த விழா இன்றும் பாரம்பரியமாக சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது.

    ஆடிப்பூரம்

    அம்பாளுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இந்த சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகுசிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்.

    ஆடி அமாவாசை

    ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றை தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரர்களை, தாய்- தந்தையை இழந்தவர்கள் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆடி கிருத்திகை

    கார்த்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடி செவ்வாய்.. ஆடி வெள்ளி..

    ‘ஆடி செவ்வாய் தேடிக்குளி’ என்பார்கள். ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பதே இந்த பழமொழி கூறும் தத்துவம். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் பலரும், ‘அவ்வையார் விரதம்’ கடைப்பிடிப்பார்கள். கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.

    ஆடி பெருக்கு

    ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

    தொகுப்பு: பொ.பாலாஜி கணேஷ்
    ஆனி பௌர்ணமி தினமான இன்று விரதம் இருந்து செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த ஆனி மாத பௌர்ணமி தினம் பொதுவாக கேட்டை நட்சத்திர தினத்தில் வருகின்றது. ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று காரைக்காலில் காரைக்கால் அம்மையாரின் தெய்வீக ஆற்றலை போற்றும் விதமாக வருடந்தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. மேலும் கோயில்களில் இறைவனுக்கு முக்கனிகள் படைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆனி பௌர்ணமியில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகவும் சிறந்த பலன்களை தரும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆனி பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, தெய்வங்களை வழிபடுவதால் அந்த தெய்வத்தின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆனி பௌர்ணமியில் கிருஷ்ண பகவானுக்கும், கற்புக்கரசியான சாவித்திரி தேவிக்கும் விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.

    முன்னிரவு வேளையில் வானில் தோன்றும் சந்திர பகவானை தரிசித்து வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த ஆனி பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்ளலாம்.

    ஆனி மாதம் பௌர்ணமி தினத்தில் மேற்கூறிய முறையில் விரதம் இருந்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு ஐஸ்வர்யங்கள் பெருகும். பெண்களின் கணவர்களின் ஆயுள்பலம் கூடும். விரும்பிய நபரையே மணமுடிக்கும் அமைப்பு உண்டாகும். 
    துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனை தொடர்ந்து விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும்.
    துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனை தொடர்ந்து விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். அனைத்து வகையான திருஷ்டி தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும். பெண்களுக்கு சீக்கிரத்தில் நல்ல முறையில் திருமணம் நடக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தாமதங்கள், தடைகள் நீங்கி மகத்தான வெற்றி உண்டாகும்.

    துர்க்கை சக்தி வடிவான தெய்வம் ஆவார். இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபடுவதற்குரிய தினங்களாக வாரத்தில் வருகின்ற செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் இருக்கின்றன. அதோடு மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும் தங்களின் குறைகள் தீர அம்மனுக்கு பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதால் பலன்கள் விரைவாக கிடைப்பதற்கு வழிவகை செய்யும்.

    ஆடி மாதம் பெண் தெய்வ விரத வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த மாதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த மாதத்தில் வருகின்ற அனைத்து தினங்களும் சக்தி வழிபாட்டிற்கு ஏற்றதாக இருக்கின்றன. எனவே ஆடி மாதத்தில் துர்க்கையம்மனுக்கு விரதமிருந்து வழிபடலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக புரட்டாசி – ஐப்பசி மாதங்களில் வருகின்ற நவராத்திரி விழா காலம் மகிஷாசுரமர்த்தினி என்கிற வடிவம் தரித்த துர்க்கையம்மனை வழிபடுவதற்குரிய ஒரு சிறப்பான காலகட்டமாகும். இக்காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நைவேத்தியங்கள் வைத்து, விரதங்கள் மேற்கொண்டு வழிபடுவர்களுக்கு நன்மையான பலன்கள் தொடர்ந்து ஏற்படும்.
    வாழ்வில் ஏற்படும் கஷ்ட நிலைகளில் சிக்கி தவிப்பவர்கள் பைரவரை விரதம் இருந்து வணங்க அனைத்தும் நீக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார்.
    பைரவ மூர்த்தியை அனைத்து தினங்களிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம் என்றாலும் மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய சிறப்பான தினமாக இருக்கிறது. இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று விரதம் இருந்து மாலை வேளையில் சிவன் கோவிலில் இருக்கும் பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

    பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று விரதம் இருந்து பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஆபத்துகளை அறவே நீக்கும்.

    தரித்திரங்கள், பீடைகள் ஒழியும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகும். பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் தாமதமவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும்.
    நினைத்தவை நிறைவேற முருகனுக்கு விரதமிருந்து வேண்டிக்கொண்டால் அனைத்தும் நிறைவேறும். முருகனுக்கு உகந்த விரதங்களை அறிந்து கொள்ளலாம்.
    செவ்வாய்க்கிழமை விரதம் :

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.

    கார்த்திகை விரதம் :

    கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். கந்தனை வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

    கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்’ என்று அருள் புரிந்தார்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது.

    சஷ்டி விரதம் :

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம் செய்தல் வேண்டும். இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.
    ஜாதகத்தில் புதன் கிரக தோஷங்கள் இருப்பவர்கள் மதுரை மீனாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் தோஷங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.
    சக்தியின் வடிவமான மீனாட்சியை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகிறது என்பது பக்தர்களின் அனுபவ பூர்வமான உண்மையாக இருக்கிறது.

    மங்களங்கள் வழங்கும் தேவியான மீனாட்சியை அனைத்து தினங்களிலும் விரதம் இருந்து வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். மேலும் சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி தினத்தில் விரதம் இருந்து மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.

    மீனாட்சி அம்மன் நவகிரகங்களில் புதன் கிரகத்தின் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே ஜாதகத்தில் புதன் கிரக தோஷங்கள் இருப்பவர்கள் மீனாட்சி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, விரதம் இருந்து வழிபாடு செய்வதால் தோஷங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். வறுமை நிலை நீங்கி செல்வங்கள் பெருகும். தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் நல்ல வருமானமும் உண்டாகும். கல்வி, கலைகளில் சிறந்து விளங்க முடியும். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த வாழ்க்கைத்துணை அமையப் பெறுவார்கள். மன அமைதி கிடைக்கும்.
    விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.
    சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் ஒன்று, நடராஜர் வடிவம். உலகை தன் உள்ளங்கால் பிடியில் சுழல வைக்கும் தத்துவத்தை உணர்த்தும் ஒப்பற்ற உருவமாக நடராஜர் வழிபடப்பட்டு வருகிறார். இந்த நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என‌ வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை. இவ்விரண்டு விழாக்களும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பிரம்மோற்சவமாக மொத்தம் 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    ‘திருமஞ்சனம்’ என்ற சொல்லுக்கு ‘புனித நீராட்டல்’ என்று பொருள். ஆனி திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும்.

    ஆனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த ஆனி திருமஞ்சன விழா தொடங்குகிறது. முதல் எட்டு நாட்கள் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகியோர் வாகனங்களில் வீதி உலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமிஅம்மை, சண்டேஸ்வரர் ஆகியோர் தனித் தனித் தேர்களில் வலம் வருவார்கள். பின் நடராஜர் சிவகாமி அம்மையுடன் யானைகள் தாங்கியது போல் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இரவில் தங்குவார்.

    10-ம் நாளான ஆனி உத்திரத்தன்று அதிகாலையில் நடராஜருக்கும், சிவகாமி அம்மைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். ஆனி உத்திரத்தன்று பகல் 1 மணி அளவில் நடராஜரும் சிவகாமி அம்மையும் நடனம் செய்தபடியே சித்சபையில் எழுந்தருள்வார்கள். நடராஜரும், சிவகாமி அம்மையும் மாறி மாறி நடனம் செய்து, சிற்றம்பல மேடையில் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண மக்கள் பெருந்திரளாகக் கூடியிருப்பர்.

    நடராஜ பெருமானுக்கு பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அலங்காரமும் நடைபெறும். இந்த நிகழ்வையே ‘ஆனித் திருமஞ்சனம்’ என்கிறோம்.

    இந்நிகழ்ச்சியின் போது நடராஜருக்கு 16 வகை தீபாரதனை செய்யப்படுகிறது. பின் இரவு மீண்டும் சித்சபையில் கடாபிஷேகம் நடைபெறும். ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சியை பதஞ்சலி முனிவர் ஆரம்பித்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் ஆலயத்தில் உள்ள மூலவர் நடராஜரே வீதி உலா வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

    பொ.பாலாஜி கணேஷ்
    நீண்ட காலம் நோய் பாதிப்பால் அவதியுறுபவர்கள் விரதம் இருந்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்க அந்த நோய் பாதிப்புகள் நீங்கும்.
    ராமாயணத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நிழலாகவும், அன்புபிற்குரிய அடியவராகவும் இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் எனப்படும் ஹனுமான். நன்மைகள் அனைத்திற்கும் சிறந்த உதாரணமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கிறார். தனது பிரதி பலன் கருதாத பக்தி மற்றும் பிரம்மச்சரிய சக்தியால் சிரஞ்சீவித்துவம் எனப்படும் இறவாநிலை பெற்றவர்.

    தொண்டருக்கு தொண்டராக இருக்கும் அந்த அனுமன் தனது பெயரை கூறி வழிபடும் பக்தர்களை விட, தனது நாதராகிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ராம நாமத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவராக இருக்கிறார். அந்த ஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து தொடர்ந்து வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.

    சக்தி வாய்ந்த தெய்வமாக ஆஞ்சநேயர் எனப்படும் அனுமனை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக இருக்கிறது. இந்த தினங்களில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுவர்களின் வாழ்வில் ஸ்ரீ ஹனுமான் மிக சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்துவார்.

    நீண்ட காலம் நோய் பாதிப்பால் அவதியுறுபவர்கள் விரதம் இருந்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று ஆஞ்சநேயரை வணங்க அந்த நோய் பாதிப்புகள் நீங்கும்.
    விஷ்ணு செல்வத்திற்குரிய சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவர் என்பதால் பெருமாளுக்கு விரதங்கள் பூஜைகள் வழிபாடுகள் செய்பவர்களுக்கு செல்வ சேர்க்கை உண்டாகும்.
    விஷ்ணு வழிபாடு செய்ய நினைப்பவர்கள் தங்கள் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் தூய்மை காத்து வழிபாடு செய்வதால் விரும்பிய பலன்களை அடைய முடியும். மேலும் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுவது, திருமஞ்சணம் செய்தல், வஸ்திரம் சாற்றுதல் போன்ற பரிகார வழிபாடுகள் செய்வதால் நமது வாழ்வில் மங்களங்கள் அனைத்தும் உண்டாகும்.

    வருடத்தில் எல்லா தினங்களும் விஷ்ணுவை விரதம் இருந்து வழிபாட்டிற்குரிய தினங்களாக இருக்கிறது. ஆனபோதிலும் வாரந்தோறும் வருகின்ற புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வீட்டில் பெருமாளுக்கு வாசமிக்க மலர்கள் சாற்றி ஏதேனும் இனிப்பு உணவுகளை நைவேத்தியம் வைத்து, பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிபடுவது பலன்களை விரைவாக கொடுக்க வல்லதாகும். பௌர்ணமி தினங்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானதாகும்.

    பெருமாளுக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படுவதை காணலாம். பொதுவாக பெருமாளுக்கு விரதமிருக்கும் போதும், பூஜைகள், வழிபாடுகள் செய்யும் போதும், பூஜை செய்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் புலால் உணவு, போதை வஸ்துக்களை அறவே தவிர்த்து விரதம் மேற்கொள்வது நல்லது.

    விஷ்ணு செல்வத்திற்குரிய சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவர் என்பதால் பெருமாளுக்கு விரதங்கள் பூஜைகள் வழிபாடுகள் செய்பவர்களுக்கும், விஷ்ணு காயத்ரிமந்திரம் துதிப்பவர்களுக்கும் செல்வ சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் நஷ்ட நிலை நீங்கி, லாபங்கள் பெருகும். சொந்த வீடு, வாகனம் போன்ற யோகங்கள் அமையும். வறுமை நிலையை நீங்கும். வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தும் அமைப்பு உருவாகும். வெளிநாடு சென்று செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல உணவு, புத்தாடைகள், வாசனை திரவியங்கள் போன்ற சுகபோக பொருட்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களும், பெண்களும் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். வாழ்க்கைத் துணையால் தனலாபம் ஏற்படும் யோகமும் சிலருக்கு உண்டாகும்.
    ×