search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நடராஜர்
    X
    நடராஜர்

    ஆனி திருமஞ்சனம் விரதம்

    விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.
    சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் ஒன்று, நடராஜர் வடிவம். உலகை தன் உள்ளங்கால் பிடியில் சுழல வைக்கும் தத்துவத்தை உணர்த்தும் ஒப்பற்ற உருவமாக நடராஜர் வழிபடப்பட்டு வருகிறார். இந்த நடராஜருக்கு மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம், சித்திரை திருவோணம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்கள் என‌ வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை. இவ்விரண்டு விழாக்களும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பிரம்மோற்சவமாக மொத்தம் 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    ‘திருமஞ்சனம்’ என்ற சொல்லுக்கு ‘புனித நீராட்டல்’ என்று பொருள். ஆனி திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும்.

    ஆனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த ஆனி திருமஞ்சன விழா தொடங்குகிறது. முதல் எட்டு நாட்கள் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகியோர் வாகனங்களில் வீதி உலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமிஅம்மை, சண்டேஸ்வரர் ஆகியோர் தனித் தனித் தேர்களில் வலம் வருவார்கள். பின் நடராஜர் சிவகாமி அம்மையுடன் யானைகள் தாங்கியது போல் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இரவில் தங்குவார்.

    10-ம் நாளான ஆனி உத்திரத்தன்று அதிகாலையில் நடராஜருக்கும், சிவகாமி அம்மைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். ஆனி உத்திரத்தன்று பகல் 1 மணி அளவில் நடராஜரும் சிவகாமி அம்மையும் நடனம் செய்தபடியே சித்சபையில் எழுந்தருள்வார்கள். நடராஜரும், சிவகாமி அம்மையும் மாறி மாறி நடனம் செய்து, சிற்றம்பல மேடையில் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண மக்கள் பெருந்திரளாகக் கூடியிருப்பர்.

    நடராஜ பெருமானுக்கு பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அலங்காரமும் நடைபெறும். இந்த நிகழ்வையே ‘ஆனித் திருமஞ்சனம்’ என்கிறோம்.

    இந்நிகழ்ச்சியின் போது நடராஜருக்கு 16 வகை தீபாரதனை செய்யப்படுகிறது. பின் இரவு மீண்டும் சித்சபையில் கடாபிஷேகம் நடைபெறும். ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சியை பதஞ்சலி முனிவர் ஆரம்பித்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் ஆலயத்தில் உள்ள மூலவர் நடராஜரே வீதி உலா வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

    பொ.பாலாஜி கணேஷ்
    Next Story
    ×