என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் இத்தலம் வந்து, உமாமகேஸ்வரப் பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து இனிய இல்லற வாழ்வு அமையும் பாக்கியத்தைப் பெறலாம்.
    குரு பகவானுக்கு பாப விமோசனம் அளித்ததும், ஒரே கல்லினால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்டதுமான சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.

    நாள்தோறும் இருகால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம், ஒரு விசேஷ பரிகாரத் தலமாகும். ‘பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த, நீ முக்கிய காரணமாக இருப்பாய்’ என குரு பலத்தை குருபகவானுக்கு ஈசன் அருளியதும், ரதிதேவி வேண்டுகோளுக்கிணங்க காமக்கடவுளை மீண்டும் பிறக்கச்செய்து அருள்பாலித்ததுமான ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். எனவே திருமணத்தடை உள்ளவர்கள், மக்கட்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட அந்தக் குறைகள் விரைவில் நீங்கும்.

    மேலும் ஒருவரது ஜாதகத்தில் குரு மறைந்திருந்தாலோ, பகை வீட்டில் இருந்தாலோ, அந்த ஜாதகர் இங்கு வந்து இறைவனை வணங்கினால், சிவனருளோடு, குருவருளையும் பெறலாம். ரதிதேவி மன்மதனை திரும்பப்பெற்ற தலமாதலால், சிறந்த மாங்கல்ய தோஷ பரிகார தலமாகவும் இது விளங்குகிறது. ஆகவே கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் இத்தலம் வந்து, உமாமகேஸ்வரப் பெருமானையும் குரு பகவானையும் தரிசித்து இனிய இல்லற வாழ்வு அமையும் பாக்கியத்தைப் பெறலாம்.

    இவ்வாலயம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதிகளும் உள்ளன.

    நெய்வாசல் நெடுஞ்செழியன்
    ஜம்புகேஸ்வரரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாக, தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும்.
    திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கருவறை எதிரில் வாசல்கள் கிடையாது. அதற்குப் பதிலாக ஒன்பது துவாரங்களுடன் கூடிய கல் ஜன்னல்களே காணப்படுகின்றன. இதனை ‘திருச்சாலகம்’ என்கிறார்கள். பக்தர்கள் இந்த ஒன்பது துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

    ஜம்புகேஸ்வரரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாக, தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும். இங்குள்ள மூலவர் சன்னிதி, சிறிது சிறிதாக கீழே இறங்கி, தரைமட்டத்துக்கும் கீழே அமைந்துள்ளது. இங்கு கருவறைக்குள் நீர் கசிந்துகொண்டே இருக்கிறது. ஆம்! இத்தல சிவலிங்கமே, காவிரி நீரால் உருவாக்கப்பட்டதுதான் என்கிறது தலபுராணம்.

    இங்கு ஈசன் மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் இருந்து அருள்பாலிக்கின்றனர். இத்தல ஜம்புகேஸ்வரரை 11 முறை வலம்வந்து வழிபடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது. வல்வினைகள் எனும் பாதகங்கள், கிரக தோஷ கெடு பலன்கள், உடல் நோய்கள், வறுமை, பாவங்கள் விலகிச் செல்ல ஜம்புகேஸ்வரரை வலம்வந்து வழிபட வேண்டும்.

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில், திருவரங்கம் அருகில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவானைக்காவல் திருத்தலம் அமைந்துள்ளது.


    தம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணைப்பு ஆகியவை இங்குள்ள ராமபிரானின் அருளால் நிறைவேறுவதால் இந்த ஆலயம் தேடி நிறைய பக்தர்கள் வருகை தருவது கண்கூடான நிஜமே.
    அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கருப்பூர் என்பது ஒரு கிராமமே. ‘கருப்பூர்’ என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய ஊர்கள் உள்ளன. இந்த ஊர் பக்கத்து ஊரான கோடாலியை தன்னுடன் இணைத்துக் கொண்டு ‘கோடாலி கருப்பூர்’ என அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள ஆலயத்தின் பெயர், ‘ஸ்ரீ ராம நாராயண பெருமாள் ஆலயம்’ என்பதாகும். இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கோவில்  கருவறையில் ஸ்ரீராம பிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் சேவை சாதிக்கிறார்.

    திருமணத் தடையை விலக்குவதிலும், விரைந்து திருமணம் நடைபெற அருள் புரிவதிலும் இங்குள்ள ஆஞ்சநேயர் வல்லவர் என பக்தர்கள் கூறுகின்றனர். ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும், அவருக்கு வடை மாலை சாத்தி, தயிர் சாதப் பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்து மகிழ்கின்றனர்.

    மனவேறுபாடுகளால் கவலைப்படும் தம்பதிகள், இங்கு வந்து ஸ்ரீ ராமபிரானையும், சீதாதேவியையும் வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கு மறைந்து மனம் மகிழும் தம்பதிகளாய் வாழத் தொடங்குவது கண்கூடாக காணும் உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    இப்படி மனம் மகிழும் தம்பதிகள் இங்கு வந்து ஸ்ரீ ராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் கூடி நிற்கும் பக்தர்களுக்கு வித விதமான பிரசாத வகைகளை வினியோகம் செய்தும் மகிழ்கிறார்கள்.

    சொத்துப் பிரச்சினையால் தனித்து நிற்கும் சகோதரர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து ராம பிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரை வணங்க, சகோதரர்களின் பிணக்கு தீர்ந்து இருவரும் ஒரு சுமுக முடிவுக்கு வருவார்கள். இது இத்தல ராமபிரானின் அருளால்தான் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு விவரிக்கின்றனர்.

    தம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணைப்பு ஆகியவை இங்குள்ள ராமபிரானின் அருளால் நிறைவேறுவதால் சனிக்கிழமை மட்டுமின்றி ஏனைய நாட்களிலும் இந்த ஆலயம் தேடி நிறைய பக்தர்கள் வருகை தருவது கண்கூடான நிஜமே. 
    மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு திண்டுக்கல் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
    திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில். மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள் எனவும் உற்சவர் ஸ்ரீகல்யாண ஸ்ரீநிவாசர் எனவும் அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலின் நுழைவு வாயிலில் சந்நிதியை எதிர்நோக்கி சுதையால் செய்யப்பட்ட பெரிய சுமார் 20 அடிக்கும் உயரமான விஸ்வரூப கருடாழ்வார் இருகைகூப்பி பெருமாளை வணங்கி நிற்கிறார்.

    இத்திருக்கோயிலின் தல விருட்சம் நெல்லி மரம் ஆகும். அலர்மேல்மங்கைத் தாயார் தனிக்கோயில் தாயாராக படிதாண்டா பத்தினியாக எழுந்தருளியுள்ளார். தீர்த்தம் சூரிய தீர்த்தம் எனப்படுகிறது. இறைவன் பத்ம விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    அபயவரத ஆஞ்சநேயர் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இவர் கிரக தோஷங்களை நீக்கி சுகம் அளிக்கக்கூடிய சக்தி படைத்தவர். தனி சந்நிதியில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வாரைச் சுற்றிலும் திருமாலின் தசாவதாரங்களும் பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கரம் ஏந்தி நரசிம்மர் அருள்கிறார். நரசிம்மரைச் சுற்றி அஷ்டலட்சுமிகள் எழுந்தருளியிருக்கின்றனர்.

    உற்சவர் கல்யாண ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருப்பதால் இத்திருக்கோயில் திருமணங்கள் நடைபெறும் தலமாக உள்ளது. திருமணத்தடை நீங்க, கல்யாண ஸ்ரீநிவாசனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் திருக்கோயிலாகும். மாங்கல்யம் மற்றும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

    திருமால் குடிகொண்ட திண்டுக்கல் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் தாலுகா அலுவலக மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி. மீ. தொலைவிலும் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் மலையடிவாரத்தில் கோயில் அமைந்துள்ளது.
    கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார்.
    பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி செய்தான். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.
    பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார்.

    இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.

    பிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷ எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார். அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷபெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம நீங்கிற்று.

    பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, “உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக’’ என அருளினார். பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது.

    அந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, அருகிலுள்ளது.

    இவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார். இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.
    சனி தோஷத்தை விரட்ட சனிக்கிழமை அதிகாலை குலசேகரபட்டினம் கடலில் குளித்து சூரியனை பார்த்து “சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்” என்று பாடுங்கள்.
    சனீஸ்வரன் வருகிறான். தொல்லை கொடுக்கப் போகிறான் என சிவன் உள்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கு ஏற்றார் போல் பாதிப்பு கொடுக்க கூடியவர். எனவே இவரே நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். அதிலும் தலைமை நீதிபதி என்றால் கன கச்சிதமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர்தான்.
    எமதர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு.

    ஆனால் சனி நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால் ஏழரை அஷ்டமத்து சனி, கண்ட சனி, மங்கு சனி, அந்த கால கட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து நவக்கிரக நாயகி முத்தாரம்மனை மனம் உருகி சனிக்கிழமை வழிபட்டால் பாதிப்பு குறையும். சனி அவரை விட்டு விலகும். விலகும் போது பல நன்மைகளை செய்து விட்டு செல்வார்.

    சனி தோஷத்தை விரட்ட சனிக்கிழமை அதிகாலை குலசேகரபட்டினம் கடலில் குளித்து சூரியனை பார்த்து “சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்” என்று பாடுங்கள்.
    தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலைவேளையில் சனி ஓரையில் உள்ள ராகு காலத்திலும் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடுவது சிறப்புக்குரியது.
    பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். ஒருவரால் ஏமாற்றப்படுவது அல்லது அவர்கள் நியாயமற்ற வகையில் நமது சொத்துக்களை அபகரிப்பது, திரும்பி வராத நீண்ட நாள் கடன்கள் உள்ளிட்ட நிறைவேறாத நியாயமான பொருளாதார பிரச்சினைகள் தீரவும், சனி தோஷத்தால் அவதியுறுபவர்கள் அதிலிருந்து விடுபடவும், அதன் தாக்கம் குறையவும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் வழிபடுவது சிறப்பு.

    மேலும், தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலைவேளையில் சனி ஓரையில் உள்ள ராகு காலத்திலும் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடுவது சிறப்புக்குரியது. அப்போது நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், பால், தேன், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் பொடி, மஞ்சள், சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூவையும் பூஜைக்காக அளிப்பது நற்பலன்கள் பல தரும்.

    இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், அதனை தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளிப் பூக்களை கொண்டு பூஜை நடத்தப்படும்போதும் பைரவர் மூலமந்திரத்தை மன முருக பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் பிரார்த்தனை நம் துன்பங்களைப் போக்கி வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பது ஐதீகம்.
    நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள், பெற்ற சாபங்கள் அனைத்தும், தீர்த்தவாரியில் கலந்துகொண்டு நீராடுவதன் மூலம் தீரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
    ஒரு தாயின் வயிற்றில் மனிதன் கருவாக உருவாகும் போதே, அவனுடைய தாய்- தந்தையர்களிடம் இருந்தும், பல பிறவிகளில் ஆத்மாவின் பாவ- புண்ணியங்களும் இந்தப் பிறவியில் வேலை செய்யத் தொடங்கி விடும். அவரவர் செய்துவந்த பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப, நன்மை- தீமைகளை மனிதன் அனுபவிக்கிறான்.

    ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ளும் இன்ப- துன்பங்கள், பிரிவினைகள், விபத்துக்கள் அனைத்திற்குமே முற்பிறவி கர்மாவே காரணம். அத்தகைய கர்மவினையைப் போக்க, பூஜை மற்றும் வழிபாடுகளால் முடியும் என்பது காலம், காலமாக ஆன்மிக சான்றோர்களால் சொல்லப்பட்டு, நம்பப்பட்டு வருகிறது.

    இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிகாரங்கள், வழிபாடுகளால் ஒரு சிலருக்கு உடனடியாக பலன் கிடைக்கின்றன. ஒரு சிலருக்கு பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை.

    நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள், பெற்ற சாபங்கள் அனைத்தும், தீர்த்தவாரியில் கலந்துகொண்டு நீராடுவதன் மூலம் தீரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

    திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பக்தவச்சலப் பெருமாள் என்று அழைக்கப்படும் வியதபாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் மண்டபத்தில் மகாபாரதம் அருளிய வியாசர் வாழ்ந்து வருவதாக ஐதீகம். ஒருவரின் ஆன்மா சாந்தியடைய, முற்பிறவி பாவங்கள் தீர, வியாச முனிவர் குறிப்பிட்ட 12 திருத்தலங்களில் இந்த தலம் முதன்மையானதாகும்.

    இந்த திருத்தலம் முற்பிறவி சாபங்கள், பாவங்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் தலமாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வியதீபாத நித்ய யோக நாளில் தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு திருக்கோவிலில் இருந்து பெருமாள், பக்தர்கள் புடைசூழ புறப்பட்டு, தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி காண்கிறார். மிகவும் கோலாகலமாக நடக்கும் தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளுடன் நீராடுகின்றனர்.

    இந்த தீர்த்தவாரியின் போது, தாமிரபரணி ஆற்றில் நீராடுவதன் மூலம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், நம் குடும்பத்தில் மறைந்த ஆன்மாக்கள் சாந்தி அடைவதாகவும், பிறவியில்லாத நிம்மதி கிடைக்கும் என்பதும் ஐதீகமாக இருக்கிறது.

    இத்தகைய அற்புதம் வாய்ந்த தீர்த்தவாரி, பக்தவச்சலப் பெருமாள் ஆலயத்தில் 1.1.2020 நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

    இந்தத் தலத்தில் மூதாதையர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வது, வடமாநிலங்களில் உள்ள புண்ணிய நதிகளில் மேற்கொள்ளப்படும் தர்ப்பணத்திற்கு இணையானதாக சொல்லப்படுகிறது.
    எந்த வகையான கிரக தோஷத்தை உடையவர்களாக இருந்தாலும் இந்த கோவிலில் உள்ள ஜெகநாதரை தரிசித்தால் அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
    ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர். இவர்களது சிலையானது மரத்தால் செய்யப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மூன்று சிலைகளும் முறையான வழிபாடுகளுடன், புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது.

    எந்த வகையான கிரக தோஷத்தை உடையவர்களாக இருந்தாலும் இந்த கோவிலில் உள்ள ஜெகநாதரை தரிசித்தால் அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பூர்வஜென்ம காலத்தில் செய்த பாவங்களும் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையினை வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்துவருகிறது. செல்லும் வழி புவனேஸ்வரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூரி என்ற இடத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
    நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள். நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள். நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க, நாம் நமது வாரிசுகள் பயன்படும் வகையில் புண்ணிய காரியம் செய்ய வேண்டும்.
    நமது நாட்டில், பெற்றவர்களை இறுதி காலம் வரை வைத்து காப்பாற்றுவது என்பது ஒரு ஆண் மகனின் கடமை. ஆனால் இந்த அவசர யுகத்தில் கடமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. இந்த கலியுகத்தில் பெற்றோரின் உடைமைகளுக்கு உரிமை கொண்டாடுபவர்களே அதிகம்.

    வயதான பெரியவர்களை இறுதிவரை உடன் வைத்துப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள் யார்?. அதனால் அவர்கள் அடையும் நன்மைகள் என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.

    12-ம் இடம் மோட்ச ஸ்தானம். இறந்த பிறகு அடையும் நற்கதியை இது குறிக்கிறது. புண்ணியம் செய்தவர்களுக்கு சொர்க்க லோகத்தையும், பாவம் செய்தவர்கள் நரகத்தையும் அடைவார்கள் என்பது நெடுங்கால நம்பிக்கை.

    ஒருவர் தன் குல தர்மத்தை கடைப்பிடிக்க வாரிசுகளை விட்டுச் செல்ல வேண்டும். அப்படி இல்லாதவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்தப் பாவத்தில் இருந்து தப்பிக்க புத்திர பாக்கியம் அவசியம்.

    புத்திர பாக்கியம் ஏற்படுவது பூர்வ புண்ணியத்தால் தான். இந்த பூர்வ புண்ணியத்தையும் பெற உதவுவது 5-ம் பாவகம். இதில் இருந்து 5 மற்றும் 12-ம் பாவகத்திற்கு நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பதை உணர முடியும். இதன் பொருள், ‘பெற்றவர்களை முறையாக பராமரித்து நற்கதி அடைய உதவுபவர்களுக்கே பூர்வ புண்ணிய பலத்தால் (புத்திரர்களால்) நற்கதி அடையும் பாக்கியம் கிடைக்கும்’ என்பதாகும்.

    நான்கு வேதங்கள் கூறும் சித்தி, முக்தி, யோகம், ஞானம், மோட்சம் ஆகியவைகளில் 12-ம் பாவகம் அல்லது 12-ம் பாவக அதிபதியுடன் கேதுவும் சம்பந்தம் பெறுகிறது. மனிதனுக்கு ஆசையைத் தூண்டி இல்லற வாழ்வில் ஈடுபட வைப்பது ராகு. பொருள் தேடும் ஆசையில் மனிதன் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சினைகளான ஏமாற்றம், இன்பம், துன்பம், கடன், நோய், வழக்குகளே ஒருவனுக்கு பற்றற்ற வாழ்வையும், முக்தி வழி என்ற ஞானத்தையும் உணரச் செய்கிறது. காமம், கோபம், குரோதம், பொருள் பற்று ஆகியவை குறையும் போதுதான் ஒருவன் ஞான மார்க்கத்தை நாடுகிறான். எனவேதான் முக்தி அல்லது மோட்சத்தை வழங்க, ராகு-கேதுவை தகுதி வாய்ந்தவர்களாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

    ஜனன கால ஜாதகத்தில் 9, 12-ம் இடங்களில் சனி நின்றவர்களே, தங்கள் பெற்றோரை இறுதி காலம் வரை வைத்து பராமரிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். 9-ம் இடம் ஒருவரின் பாக்கியத்தை பற்றி கூறும் இடம். 12-ம் இடம் ஒருவரின் தியாக மனப்பான்மையை பற்றி கூறும் இடம். முதியவர்களின் நற்கதிக்கு உதவுபவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் நிரம்பிய வாரிசுகள் கிடைக்கிறார்கள். அவர்களால் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. முதியோர்களை பராமரிக்க தவறியவர்களுக்கு, புத்திர பாக்கியமின்மை ஏற்படும். புத்திரர்கள் இருந்தாலும், அவர்களால் பயனற்ற நிலை உண்டாகும்.

    ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு 12-ல் கேது, சனி இருப்பவர்களின் ஆன்மா எளிதில் அடங்காது. இவ்வாறு இருப்பவர்களை பராமரிக்க சிரமப்பட்டு, பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள். முதுமை காலத்தில் முறையாக பராமரிக்காத தனது வாரிசுகளுக்கு, தலைமுறையினருக்கு அத்தகைய ஆத்மாக்களால் தீராத சாபம் ஏற்பட்டு விடுகிறது.

    12-ல் தனித்த கேது அல்லது சனி இருந்தால், 5 மற்றும் 9-ம் அதிபதியுடன் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தேவதையை உபாசனை செய்தால் நிச்சயம் சித்தியும் மோட்சமும் கிடைக்கும். ஆன்மா பிரியாமல் அவதிப்படுபவர்கள், தினமும் சிவ புராணம் பாராயணம் செய்ய வேண்டும். அல்லது அதை ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும்.

    நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான், நாம். நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள். நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் மரபணுக்கள் தான் நம் உடம்பில் இருக்கிறது. பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம், வெற்றி, தோல்வி, நோய், கர்மா ஆகிய அனைத்தும் மரபணு மூலம் சந்ததிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    அவர்கள் வழியாக வந்த நமது தீய நிகழ்வுகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம். காலம் தன் கடமையை செய்யும் போது, அதன் குறுக்கே எந்தக் கடவுளும் நிற்பதில்லை. அதனால்தான் நேரம் நன்றாக இருக்கும் போது பலிக்கும் பிரார்த்தனை, நேரம் கெடும் போது பலிப்பதில்லை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் அனைவருக்கும் வேண்டும்.

    நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள். நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள். நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க, நாம் நமது வாரிசுகள் பயன்படும் வகையில் புண்ணிய காரியம் செய்ய வேண்டும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    காக்கும் கடவுளான விஷ்ணுவையும், மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வழிபட்டால் திருமணம் கைகூடும். கனிவான வாழ்க்கை அமையும்.
    மார்கழி மாதம் 30 நாட்களும், சைவ- வைணவத் திருத்தலங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாராயணம் செய்வார்கள். கன்னிப்பெண்கள், அதிகாலையில் எழுந்து நீராடி, வாசலில் கோலமிடுவார்கள். அந்தக் கோலத்தின் மையத்தில் மங்கலம் தரும் மஞ்சள் நிற ‘பூ’வான பரங்கிப் பூவை, சாணத்தில் நடுவில் வைத்து, மகாலட்சுமியை வரவேற்க வேண்டும்.

    பிறகு ஆலயத்திற்குச் சென்று திருவனந்தல் நடைபெறும் நேரத்தில், சிவன் வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்தால் இறையருளால் இனிய வாழ்க்கை அமையும். மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் சிவபுராணம் பாடுவது நல்லது.

    காக்கும் கடவுளான விஷ்ணுவையும், மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வழிபட்டால் திருமணம் கைகூடும். கனிவான வாழ்க்கை அமையும்.
    கடுமையான நாகதோஷம் இருந்தால் முண்டக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே தோஷம் அகன்று விடும்.
    ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மனை சரஸ்வதி தேவியின் மறு உருவமாகவும் பக்தர்கள் கருதுகிறார்கள். 23 விளக்கு ஏற்றி வைத்து முண்டகக்கண்ணி அம்மனை மனம் உருக வழிபட்டால் தேர்வில் சாதனை படைக்கும் அளவுக்கு முதன்மை மதிப்பெண் பெற முடியும் என்று மாணவ-மாணவிகளிடம் நம்பிக்கை உள்ளது.
    நாக தோஷமாப உடனே செல்லுங்கள்

    கடுமையான நாகதோஷம் இருந்தால் முண்டக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு முட்டை, பால் ஊற்றி வழிபட்டாலே தோஷம் அகன்று விடும். பிறகு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். வசதி இருப்பவர்கள் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்தும் வழிபடலாம். இத்தகைய வழிபாடுகளால் எத்தகைய நாக தோஷமும் விலகிச் சென்றுவிடும்.

    பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம்

    முண்டக்கண்ணி அம்மன் ஆலயத்தில் உள்ள நாகர்களுக்கு வேண்டிக் கொண்டு,தங்கள் கையாலேயே பாலாபிஷேகம் செய்யலாம். குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த பாலாபிஷேகத்தை செய்து, நெய் விளக்கு தீபம் ஏற்றி கையில் வைத்து தீபாரதனை காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பெண் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

    மயிலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் நாகர் சிலைகள் உள்ள பகுதியிலும், நாகதேவதை புற்றாக உள்ள பகுதியிலும் முட்டையை உடைத்து ஊற்றி பெண்கள் வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது. சராசரியாக தினமும் 2 ஆயிரம் முட்டைகள் உடைத்து ஊற்றப்படுகிறதாம். அதுவும் ஆடி மாதம் சிறப்பு நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

    முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தை 044-24981893 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெறலாம்.
    ×