search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீதாதேவி, லட்சுமணனுடன் ஸ்ரீராமபிரான்
    X
    சீதாதேவி, லட்சுமணனுடன் ஸ்ரீராமபிரான்

    தம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணக்கு நீக்கும் ராமபிரான்

    தம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணைப்பு ஆகியவை இங்குள்ள ராமபிரானின் அருளால் நிறைவேறுவதால் இந்த ஆலயம் தேடி நிறைய பக்தர்கள் வருகை தருவது கண்கூடான நிஜமே.
    அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கருப்பூர் என்பது ஒரு கிராமமே. ‘கருப்பூர்’ என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய ஊர்கள் உள்ளன. இந்த ஊர் பக்கத்து ஊரான கோடாலியை தன்னுடன் இணைத்துக் கொண்டு ‘கோடாலி கருப்பூர்’ என அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள ஆலயத்தின் பெயர், ‘ஸ்ரீ ராம நாராயண பெருமாள் ஆலயம்’ என்பதாகும். இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கோவில்  கருவறையில் ஸ்ரீராம பிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் சேவை சாதிக்கிறார்.

    திருமணத் தடையை விலக்குவதிலும், விரைந்து திருமணம் நடைபெற அருள் புரிவதிலும் இங்குள்ள ஆஞ்சநேயர் வல்லவர் என பக்தர்கள் கூறுகின்றனர். ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும், அவருக்கு வடை மாலை சாத்தி, தயிர் சாதப் பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்து மகிழ்கின்றனர்.

    மனவேறுபாடுகளால் கவலைப்படும் தம்பதிகள், இங்கு வந்து ஸ்ரீ ராமபிரானையும், சீதாதேவியையும் வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கு மறைந்து மனம் மகிழும் தம்பதிகளாய் வாழத் தொடங்குவது கண்கூடாக காணும் உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    இப்படி மனம் மகிழும் தம்பதிகள் இங்கு வந்து ஸ்ரீ ராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் கூடி நிற்கும் பக்தர்களுக்கு வித விதமான பிரசாத வகைகளை வினியோகம் செய்தும் மகிழ்கிறார்கள்.

    சொத்துப் பிரச்சினையால் தனித்து நிற்கும் சகோதரர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து ராம பிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரை வணங்க, சகோதரர்களின் பிணக்கு தீர்ந்து இருவரும் ஒரு சுமுக முடிவுக்கு வருவார்கள். இது இத்தல ராமபிரானின் அருளால்தான் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு விவரிக்கின்றனர்.

    தம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணைப்பு ஆகியவை இங்குள்ள ராமபிரானின் அருளால் நிறைவேறுவதால் சனிக்கிழமை மட்டுமின்றி ஏனைய நாட்களிலும் இந்த ஆலயம் தேடி நிறைய பக்தர்கள் வருகை தருவது கண்கூடான நிஜமே. 
    Next Story
    ×