என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாகும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்ய வேண்டும்.
    செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு பரிகாரமாக செய்யவேண்டியது தெய்வ வழிபாடாகும். செவ்வாய் கிரகம் முருகப்பெருமானுக்கு கட்டுப்படும்.
    சனி கிரகம் விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் கட்டுப்படும்.

    முருகன் திருத்தலங்களும், பெருமாள் மற்றும் விநாயகர் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து செல்வதால் நிச்சயமாக செவ்வாய்-சனிசேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும்.

    இந்த வழிபாட்டை எதுவரை செய்ய வேண்டும் என்று கணக்கு பார்க்க கூடாது. ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப்பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்.

    இந்த ஜாதகர்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்னதாக மேற்சொன்ன தெய்வங்களை வணங்கி தொடங்கினால் தான் அவை பிரச்னையின்றி-தடங்களின்றி நடைப்பெறும்.

    விநாயகப் பெருமானையும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வழிப்படலாம் என்றாலும் கூட, ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை கொண்டவர்கள், செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானையும், சனிக்கு அதிபதியான ஸ்ரீமன்நாராயணனையும் வாழ்நாள் முழுவதும் எந்த சமயத்திலும் மறக்கவே கூடாது.

    நீங்கள் எந்த திருக்கோயில்களுக்கு சென்றாலும் அங்கு இருக்கும் செவ்வாய்-சனி சிலைகளுக்கு விசேஷ வழிபாடு நடத்துங்கள். நம்பிக்கையுடன் வழிபடுங்கள். அவர்கள் நம் அன்புக்கும் வழிபாட்டுக்கும் கட்டுப்பட்டு இன்பங்களை அள்ளிதருவார்கள்.
    ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடைப்படுதல், தாமதத் திருமணம், இருதாரம், நோயுற்ற மனைவி போன்ற பிரச்சனைகள் எல்லாம் இருக்கும்.
    ஒருவருடைய ஜாதகத்தில், செவ்வாய் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12ம் இடங்களில் நின்றால் தோஷம் என்று கூறப்படுகிறது. செவ்வாய் தோஷம் என்றால், செவ்வாய் தோஷமுள்ள ஒருவருடன்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது சரியல்ல.

    செவ்வாய், தான் நிற்கும் ஸ்தானத்தையும், பார்க்கும் ஸ்தானங்களாகிய (4, 7, 8 ம் பார்வை) 3-மிடம், 6-மிடம், 7-மிடம், 8-மிடம், 2-மிடங்களையும் பாதிப்படையச் செய்து, திருமண வாழ்க்கைக்கு அவசியமான குடும்பம், வியாதி, களத்திரம், கவுரவம், மாங்கல்யம் ஆகியவற்றை வளரவிடாமல் செய்து விடுகிறார்.

    இதில் சகோதரம், கடன், வியாதி, வீரியம், தைரியம், கவுரவம், அந்தஸ்து, ஆயுள் என பலவகையிலும் பாதிக்கப்படுவதால், தானாகவே கெட்டப் பெயர் ஏற்பட்டு, தீய நடவடிக்கைகளால் பெண்களால் வெறுக்கப்பட்டு, தகாத பழக்கங்களில் ஆரோக்கியம் குறைவது போன்றவை ஏற்படும். ஆயுள் குறையும். இது போல துன்பங்கள் ஏற்படுவதால் இதை செவ்வாய் தோஷம் என்கிறோம்.

    இதனால் திருமணம் மட்டும் தடைபடாது. சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாகுதல், வேலைக்காரர்களால் அவமானப்படுதல், பூர்வீக பூமியை விற்பது போன்றவைகளுக்கும் காரணமாகி விடும். குடியிருக்க வசதியான வீடு கூட, செவ்வாய் தோஷம் வந்தால் அமையாது. நண்பர்களே எதிரியாக மாறுவார்கள்.

    2, 4, 7, 8ம் இடங்களில் ஒன்றில் செவ்வாய் அமரக் காரணம், நம் முன் ஜென்மப் பலன். அது, தனக்கு அல்லாத, இந்தப் பாவங்களுக்கெல்லாம், கலியுகம் என்பதால் உடனே தண்டனை கிடைக்காது. வயதான பின்போ, அல்லது அதற்கு முன்போ பிள்ளைகளுக்குத் துன்பம் நேர்ந்து ஒன்றும் உதவி செய்ய முடியாமல் மனம் வருந்தி ஏங்கும் நிலை ஏற்படும்.

    நிராயுதபாணியாக எதிரிகளிடம் சிக்கிக் கொள்வார்கள். கடன் வாங்கிவிட்டுத் திருப்பி தர முடியாமல் திணறுவார்கள். அடிக்கடி குடியிருக்கும் வீட்டை மாற்றுவது, மனைவியிடம் கருத்து வேற்றுமை உண்டாவது, ஒரு பாவமும் செய்யாமல் பழி ஏற்பது போன்ற துன்பங்கள் செவ்வாய் தோஷத்தால்தான் ஏற்படும்.

    திருமணம் தடைப்படுதல், தாமதத் திருமணம், இருதாரம், நோயுற்ற மனைவி, அல்லது மனைவி அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, தான் நோயுறுதல் இவையெல்லாம் நடக்கும். நாம் கண்ணால் காணக்கூடிய 5 கிரகங்களுள் ஒன்று செவ்வாயும் என்பதால், செவ்வாய் தோஷத்தின் தாக்கம் நம்மை நேரடியாகவே பாதிக்கும்.
    முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.

    முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று பொன்- பொருள்-ஆடைகள் சேர்த்திருந்தாலும் அவர்கள் இப்பிறவியில்/மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம், பொருட்கள், பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டியிருக்கும்.

    இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும். மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற்பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி- மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.

    பெண்களின் மாங்கல்ய தோசத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம் ஆகும்.

    கவலைகள், துன்பங்கள் விரைவில் தீர சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படிப்பாக மறையும்.
    ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை நன்றாக மனதில் வேண்டி கொண்டு, அந்த பேப்பரை சுருட்டி அதில் கருப்பு நிற நூலால் லேசாக கட்டி வைக்கவும்.

    பின்பு கருப்பு நிற மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, மனதினுள் குறைகள் அனைத்தும் அகல வேண்டும் என கருப்பசாமியை நினைத்து வேண்டுதல் வைத்து, அதை மெழுகுவர்த்தி நெருப்பில் காட்டி எரிய விடவும். எரிந்து முடிந்த பின் அனைத்தையும் அகற்றி விடலாம்.

    சிறிய அளவில் உள்ள குறைகள் ஒரே வாரத்தில் நீங்குவதை அனுபவத்தில் காணலாம். பெரிய அளவில் உள்ள பிரச்சனைகளுக்கு 8 வாரங்கள் தொடர்ந்து செய்யவும். நேரம், திசை போன்றவை பார்க்க தேவை இல்லை. பலர் செய்து வெற்றி கண்ட சூட்சுமம் நிறைந்த பரிகாரம் இது.
    பசுவை துன்புறுத்தி அதன் இறப்புக்கு காரணமாக இருந்தால் கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது. இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.
    பசுவுக்கு உணவிடாமல் இருப்பது, அடிப்பது, பசுவின் இறப்புக்கு காரணமாக இருப்பது ஆகியவற்றால் ஒருவருக்கு கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    இதனால் பாவத்தை செய்தவர் மட்டுமல்லாமல் அவரது சந்ததியும் தொடர்ந்து பாதிக்கும். இதற்கு பிராயச்சித்தமாக மஹார்வணம் என்னும் நூலில் ஒரு பரிகாரம் கூறப்பட்டுள்ளது.

    பசு ஒன்றை வாங்கி ஒரு மாதம் வரை வீட்டில் வைத்து தினமும் பசுவுக்கு நன்கு உணவளித்து பராமரிக்க வேண்டும். அதை சுதந்திரமாக நடக்க விட வேண்டும். காலையிலும், மாலையிலும் அந்த பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கி கோ பூஜை செய்ய வேண்டும். ஒரு மாதம் கழித்த பின்னர் பசுவை தானம் அளித்து விட வேண்டும். இதனால் பசு தோஷம் நீங்கும். துன்பங்களும் படிப்படியாக குறையும்.
    27 நட்சத்திரங்களுக்கும் மனிதர்களுடைய துன்பங்களை தீர்க்கும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற மாலை மலர் வாழ்த்துகிறது.
    உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் பிறந்த மனிதர்கள் ஒவ்வொரு வரும் பலவிதமான இன்னல்களை தினமும் சந்திக்கிறார்கள். 27 நட்சத்திரங்களுக்கும் மனிதர்களுடைய துன்பங்களை தீர்க்கும் சக்தி உண்டு.அதன் அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற மாலை மலர் வாழ்த்துகிறது.

    புரட்டாசி-1- (17-ந் தேதி,வெள்ளிக்கிழமை)
    நட்சத்திரம்: திருவோணம்
    சுக்கிரன், சந்திரனின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் இந்த நாளில் காலை 8 மணி முதல் -9 மணி வரையான சந்திர ஒரையில் மல்லிகைப் பூ சாற்றி மாரியம்மனை வழிபட்டால் மாமியார்- மருமகள் பிணக்கு, தாய்-மகள் கருத்து வேறுபாடு மறையும்.

    புரட்டாசி-2- (18-ந் தேதி, சனிக்கிழமை)
    நட்சத்திரம்: அவிட்டம்
    சனி, செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் மாலை 4.30 - மணி முதல் 6 மணி வரையான சனிப் பிரதோஷ நாளில் நந்தியம் பெருமானுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வழிபட்டால் தீராத வழக்கு, சொத்து பிரச்சினைகள் தீரும்.

    புரட்டாசி-3- (19-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
    நட்சத்திரம் : சதயம்
    சூரியன்,ராகுவின் ஆதிக்கம் மிகுந்த இந்த நாளில் மாலை 4.30 மணி முதல் -6 மணி வரையான ராகு வேளையில் நெய் தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் தந்தை மகன் பிணக்கு, இருதய நோய், பார்வை குறைபாடு ராகு/ கேது தோஷம், கால சர்ப்ப தோஷத்தின் தன்மை குறையும்.

    புரட்டாசி-4- (20-ந் தேதி, திங்கட்கிழமை)
    நட்சத்திரம்: பூரட்டாதி
    குருச்சந்திர யோகமும் பவுர்ணமியும் இணைந்த நாளில் பிராமணர்களுக்கு உணவு, உடை தானம் தந்தால் தன வரவு தாராளமாகும்.

    புரட்டாசி-5- (21-ந் தேதி, செவ்வாய்க்கிழமை)
    நட்சத்திரம்: உத்திரட்டாதி
    செவ்வாய், சனி ஆதிக்கம் இணைந்த நாளில் இரவு 8-மணி முதல் 9 மணி வரையான செவ்வாய் ஓரையில் முருகனுக்கு அரளி மாலை அணிவித்து வழிபட்டால் விபத்து, கண்டம், தீராத, இனம் புரியாத நோய் குணமாகும்.

    புரட்டாசி-6- (22-ந் தேதி, புதன்கிழமை)
    நட்சத்திரம்: ரேவதி
    புதனின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் காலை 6 -மணி முதல் 9 மணி வரையான புதன் ஓரையில் ஹயக்கிரீவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கற்றல் குறைபாடு நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்கும்.
    புரட்டாசி-7 - (23-ந் தேதி , வியாழக்கிழமை)

    நட்சத்திரம்: அஸ்வினி
    குரு, கேது ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் ஆஞ்ச நேயருக்கு வாழைப்பழ மாலை சாற்றி வழிபட்டால் கோபித்து கொண்டு வீட்டை விட்டுச் சென்றவர்கள், தலைமறைவாக வாழ்பவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் கிடைக்கும்.

    புரட்டாசி-8- (24-ந் தேதி, வெள்ளிக்கிழமை)
    நட்சத்திரம் : பரணி
    சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் வயதான சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள்,குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், ஜாக்கெட் பிட், இனிப்பு கொடுத்து ஆசி பெற திருமணத்தடை அகலும்.

    புரட்டாசி-9- (25-ந் தேதி, சனிக்கிழமை)
    நட்சத்திரம்: கிருத்திகை (காலை 11.34- மணிக்கு பிறகு)
    சனி மற்றும் சூரியனின் கதிர் வீச்சுகள் நிறைந்த நாள். அன்றைய தினம் மாலை 4 மணி முதல் -5 மணி வரையான சூரிய ஓரையில் ஒரு கிலோ கோதுமையை தானம் தர அரசியல் பதவியில் உள்ள இடர்கள் நீங்கும்.

    புரட்டாசி-10- (26-ந் தேதி, ஞாயிற்றுக் கிழமை)
    நட்சத்திரம்: ரோகிணி (மதியம் 2.33- மணிக்கு மேல்)
    சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் இயங்கும் நாள்.சித்த பிரம்மை மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, சுய முடிவு எடுக்க முடியாத நிலை இருப்பவர்கள் மாலை 4 -மணி முதல் 5 மணிக்குள் சந்திர ஒரையில் பச்சரிசியால் செய்த உணவை தானம் தர மாற்றம் உண்டு

    புரட்டாசி-11- (27-ந் தேதி. திங்கட்கிழமை)
    நட்சத்திரம்: ரோகிணி (மாலை 5.42 மணி வரை)
    சந்திரனின் பரிபூரண இயக்கம் நிறைந்த இன்றைய நாளில் காலை 6-மணி முதல் 7 மணி வரையான சந்திர ஒரையில் பச்சரிசி மாவில் விளக்கு செய்து 2 நெய் தீபம் ஏற்றி சிவ பெருமானை வழிபட்டால் விரும்பிய ஊருக்கு உத்தியோக மாற்றம் கிடைக்கும்.

    புரட்டாசி-12- (28-ந்தேதி, செவ்வாய்க்கிழமை)
    நட்சத்திரம்: மிருகசீரிடம்
    செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் மதியம் 3 -மணி முதல் 4.30 மணி வரையான ராகு வேளையில் எலுமிச்சை சாதம் செய்து 7 பேருக்கு தானம் செய்வதுடன் துர்க்கை, காளியை வழிபட்டால் திருமணத் தடை, கணவன் மனைவி கருத்து வேறுபாடு அகலும். அதே நாளில் மகா வியதீ பாதம் இருப்பதால் புனித நீர் நிலைகளில் நீராடி நீத்தார்களை வழிபட்டால் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும்.

    புரட்டாசி-13- (29-ந் தேதி. புதன்கிழமை)
    நட்சத்திரம்: திருவாதிரை
    புதன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் எதிரொலிக் கும் இந்த நாளில் பகல் 12- மணி முதல் 1.30 மணி வரையான ராகு வேளையில் சரபேஸ்வரரை வழிபட்டால் பட்டா, சிட்டா அடங்கல் இல்லாத சொத்துப்பிரச்சினை, உயிலால், முறையான பத்திரங் கள் இல்லாததால் நிலவும் சொத்துப்பிரச்சினைகள் தீரும்.

    புரட்டாசி-14 (-30-ந் தேதி, வியாழக்கிழமை)
    நட்சத்திரம்: புனர்பூசம்
    குருவின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் மதியம் 1- மணி முதல் 2 மணி வரையான குரு ஓரையில் ராமர் பட்டாபிசேக படத்தின் முன் அமர்ந்து ஸ்ரீராம ஜெயம் எழுதினால் பிரிந்த கணவன் மனைவி, இழந்த சொந்தங்கள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள்.இழந்த பொன், பொருள் மீண்டும் கிடைக்கும்.

    புரட்டாசி-15 -(1--10-2021, வெள்ளிக்கிழமை)
    நட்சத்திரம்: பூசம்
    சனி,சுக்கிரனின் ஆசிகள் நிறைந்த இந்த நாளில் 8 உடல் ஊனமுற்றோருக்கு கருப்பு கம்பளி தானம் தந்தால் செய்யும் தொழிலில் ஸ்திர தன்மை உண்டாகும். நல்ல லாபம் கிடைக்கும். உத்தி யோகத் தில் உயர் அதிகாரிகளால் இருக்கும் சங்கடங்கள் நீங்கும்.

    புரட்டாசி-16 -(2--ந் தேதி, சனிக்கிழமை)
    நட்சத்திரம் : ஆயில்யம்
     புதன் மற்றும் சனியின் ஈர்ப்பு அதிகம் உள்ள இந்த நாளில் மாலை 6 - மணி முதல் 7 மணி வரை யான புதன் ஓரையில் சக்கரத்தாழ்வாருக்கு 5 நெய்தீபம் ஏற்றி துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஜாமின் தொடர்பான பிரச்சினை அகலும். தத்துக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    புரட்டாசி-17 -(3-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
    நட்சத்திரம் : மகம்
    சூரியன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் இணைந்த இந்த நாளில் பகல் 12 மணி முதல்-1.30 மணி வரையான எம கண்ட நேரத்தில் ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை 108 முறைச் சொல்வதுடன் சாலை யோரத்தில் வாழும் ஆதரவற்றவர்கள் 7 பேருக்கு முழுச் சாப் பாடு தண்ணீருடன் தானம் தந்தால் அரச பதவி நிலைக்கும்.அரசாங்க உத்தியோகத்தில் உள்ள இடர் தீரும்.

    புரட்டாசி-18 -(4-ந் தேதி, திங்கட்கிழமை
    நட்சத்திரம்: பூரம்
    சந்திரன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் இணைந்த அதே நாளில் பிரதோஷமும் இருப்ப தால் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் மாது ளைச் சாறால் சிவனுக்கு அபிசேகம் செய்தால் கருப்பை, மாதவிடாய் தொடர்பான அனைத்து பிரச் சினைகளும் தீரும்.

    புரட்டாசி-19- (5-ந் தேதி, செவ்வாய்க் கிழமை)
    நட்சத்திரம்: உத்திரம்
    செவ்வாய் மற்றும் சூரியனின் சக்தி சேர்ந்த இந்த நாளில் காலை 7 மணி முதல் -8 மணி வரை யான சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்து சூரிய நமஸ் காரம் பண்ண அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசு உதவி கிடைக்கும்.

    புரட்டாசி-20 -(6-ந் தேதி, புதன்கிழமை)
    நட்சத்திரம்: ஹஸ்தம்
    புதன் மற்றும் சந்திரனின் சக்திகள் வெளிப் படும் இந்த நாளில் சிறு குழந்தைகளுக்கு கல்வி, உணவு சம்பந்தமான உதவி செய்ய தீராத தோல்வியாதி, வலிப்பு நோய் தீரும். அன்றைய தினம் மகாளய அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து உணவுப்படையலிட்டு வழிபட வேண்டும். இயன்ற அளவு உணவு தானம் வழங்குவது மேலும் சிறப்பு.

    புரட்டாசி-21- (7-ந் தேதி, வியாழக்கிழமை)
    நட்சத்திரம் : சித்திரை
    குரு மற்றும் செவ்வாயின் அதிர்வு கள் மிகுந்த இந்த நாளில் காலை 7 மணி முதல் -8 மணி வரையான செவ்வாய் ஓரையில் சித்தர்கள் ஜீவ சமாதிக்கு 108 செங்கல் தானம் வழங்கினால் நிதிப் பற்றாக்குறையால் தடைபட்ட வீடுகட்டும் பணி துரிதப் படுத்தப்படும்.

    புரட்டாசி-22- (8-ந் தேதி, வெள்ளிக் கிழமை)
    நட்சத்திரம் : சுவாதி
    சுக்கிரன்,ராகுவின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் விதவை பெண்களுக்கு அசைவ பிரியாணி தானம் வழங்கினால் தவறான நட்பில் இருப்பவர்கள் திருந்தி குடும்பத்துடன் இணைவார்கள்.

    புரட்டாசி- 23- (9-ந் தேதி, சனிக்கிழமை)
    நட்சத்திரம்: விசாகம்
    குரு,சனி ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் பிரம்மஹத்தி தோஷம் இருப்பவர்கள் காலை 7 மணி முதல் -8 மணி வரையான குரு ஒரையில் கோ பூஜை நடத்தினால் தோஷம் குறையும். இயலாதவர்கள் பசுவிற்கு அகத்திக்கீரை தந்தால் போதும்.

    புரட்டாசி-24- (10-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
    நட்சத்திரம்: அனுஷம்
    சூரியன், சனியின் ஆதிக்கம் கலந்த இந்த நாளில் சிவனுக்கு காலை 6- மணி முதல் 7 மணி வரையான சூரிய ஓரையில் வில்வ மாலை அணிவித்து வழிபட்டால் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தந்தை- மகன் மீண்டும் இணைவார்கள்.குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு புத்திரபிராப்தி கிட்டும்.

    புரட்டாசி-25- (11-ந் தேதி, திங்கட்கிழமை)
    நட்சத்திரம்: கேட்டை (பகல் 12.56 மணி வரை)
    சந்திரன் மற்றும் புதனின் ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபட்டால் நிலுவையில் உள்ள வரா கடன்கள் வசூலாகும்.

    புரட்டாசி-26- (12-ந் தேதி,செவ்வாய்க்கிழமை)
    நட்சத்திரம்: பூராடம் (காலை 11.26 மணிக்கு பிறகு)
    செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் உள்ள இந்த நாளில் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகருக்கு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் இணைவார்கள்.

    புரட்டாசி-27- (13-ந் தேதி, புதன்கிழமை)
    நட்சத்திரம்: உத்திராடம் (காலை 10.19 மணிக்கு பிறகு)
    புதன் மற்றும் சூரியன் இணைந்து புதன் ஆதித்ய யோகம் பெற்ற இந்த நாளில் நவ கிரகத்தில் உள்ள சூரியன் மற்றும் புதன் பகவானை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    புரட்டாசி-28- (14-ந் தேதி, வியாழக்கிழமை)
    நட்சத்திரம்: திருவோணம் (காலை 9.36 மணிக்கு மேல்) சரஸ்வதி பூஜை
    அன்று சகல கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி தேவியை மாணவ மணிகள் வழிபட்டால் ஞான விருத்தி உண்டாகும்.

    புரட்டாசி-29- (15-ந்தேதி, வெள்ளிக்கிழமை)
    நட்சத்திரம்: அவிட்டம் (காலை 9.17 மணிக்கு மேல்) விஜய தசமி
    அனைத்து வித வெற்றியை தந்தருளும் நாளான விஜயதசமி அன்று தடைபட்ட சுப விஷயங்களைத் தொடங்கினால் எளிதில் வெற்றி பெற முடியும். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்

    புரட்டாசி-30- (16-ந் தேதி சனிக்கிழமை)
    நட்சத்திரம்: சதயம் (காலை 9.23 மணிக்கு மேல்)
    சனி மற்றும் ராகுவின் ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் 9 -மணி முதல் 10.30 மணி வரையான ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட்டால் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.

    புரட்டாசி-31 - (17-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
    நட்சத்திரம்: பூரட்டாதி (காலை 9.53 மணிக்கு மேல்)
    சூரியன் மற்றும் குருவின் ஆதிக்கம் இணைந்த இந்த நாளில் அல்லது சிவன் கோவில்கள், சித்தர்கள் சமாதிகளில் உலவாரப்பணிகள் செய் தால் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். அடமான நகைகள் மீண்டு வரும்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற எளிய பலனுள்ள பரிகாரம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 வரை மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டுதல் வைத்தால் மேற்கண்ட அனைத்தையும் திரும்ப பெறலாம்.

    கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வரலாம்.
    பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ளது, ஞாயிறு என்ற திருத்தலம். இங்கு சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், கிரக தோஷங்களை நீங்கும் சக்தி பெற்றதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    சூரியன் எப்போதும், இத்தல சிவபெருமானை வழிபட்டபடியே இருப்பதாக ஐதீகம். சித்திரை மாதப்பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    கண் தொடர்பான நோய்கள் தீர இங்கு வந்து வழிபட அவை தீரும் என்பது நம்பிக்கை. மேலும் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து சிவனுக்கு திபம் ஏற்றி வழிபட்டால் , பிரிந்த தம்பதிகள்  சீக்கிரம் வாழ்வில் ஒன்றிணைவார்கள் என்றும், பல் சம்பத்தமான பிரச்சனைகள் தீரவும் இங்கு வழிபட்டால் நல்ல பலன் கிட்டும் என்றும் கூறுகின்றனர்.

    சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னிதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஞாயிறு கிராமத்திற்கு செல்ல திருவள்ளுர், சென்னையில் இருந்து பஸ் வசதியுள்ளது.
    நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

    யானைத்தலை விளக்கம்

    தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு. அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை. யானைத்தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வுகிட்டும்.

    இழந்த சொத்துக்கள் பெற

    நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

    வல்லபை கணபதி

    குழந்தைப் பேறுக்குத் தயாராகஇருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

    மாங்கல்ய தோஷம் மற்றும் திருமணத்தடை அகல

    வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
    சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அதிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார்.
    சிதம்பரம் நகரின் தெற்குத் தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னிதியை நோக்கியவாறு சக்தி பால விநாயகர் உள்ளார். சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நடராஜர் கோவில் இருந்த போது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர்.

    குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அதிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு அருளும் விநாயகர் இவர்.
    அழுக்குப் படியாமல், கிழியாத நல்ல நிலையில் இருக்கும் வஸ்திரத்தை தோஷம் போக்க ஒரு முறை உப்பு தண்ணீரில் துவைத்து காய வைத்து பின்னர் யாருக்காவது இயலாதவர்களுக்கு தானம் செய்து விடுங்கள்.
    ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவையான 3 விடயங்கள் உணவு, உடை, இருப்பிடம் ஆகும். இந்த 3 விஷயங்களை ஒருவருக்கு இன்னொருவர் தானம் கொடுப்பதன் மூலம் உயர்ந்த புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள முடியும். அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறுவது உண்டு. அன்னத்தையும், வஸ்திரத்தையும், இருக்க இடத்தையும் ஒருவர் மனமுவந்து மற்றவர்களுக்கு அருளினால் அவர்களுக்கு எத்தகைய பாவங்களும் வந்து சேருவது இல்லை. அந்த வகையில் நம்மிடம் இருக்கும் பழைய வஸ்திரத்தை என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

    ஒருவர் வீடு தேடி பசி, தாகம் என்று வந்தால் அவர் நல்லவரோ, கெட்டவரோ இல்லை என்று கூறாமல் உங்களால் முடிந்ததை கொடுத்து விடுங்கள். இந்த இடத்தில் நீங்கள் இல்லை என்று கூறினால், அந்த ஒரு வார்த்தை உங்களுக்கு பெரும் பாவத்தை சேர்க்கும்.

    நம்மால் செய்ய முடிந்த தானங்களை வாழ்நாளில் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    வருடம் ஒரு முறை உங்கள் உடன் பிறந்தவர்களுக்கும், தாய், தந்தையர் ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் புது வஸ்திரம் வாங்கி தானம் செய்து பாருங்கள். அவர்கள் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் ஆசீர்வாதம் உங்களை பன்மடங்கு உயர்த்தி காட்டும். வஸ்திர தானத்திற்கு அப்படி ஒரு அதீத சக்தி உண்டு. நம்மிடம் இருக்கும் நல்ல வஸ்திரம், ஆனால் நமக்கு போதாமல் போகும் பொழுது அதனை வீணாக வருடக் கணக்கில் குப்பைப் போல் பீரோவில் அடுக்கி வைத்திருப்போம். இது போல் பழைய துணிமணிகளை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.

    பிறகு பார்த்துக் கொள்ளலாம், நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று காலத்தை கடத்தாமல் அன்றே செய்யும் தானத்திற்கு வலிமை அதிகம். அழுக்குப் படியாமல், கிழியாத நல்ல நிலையில் இருக்கும் வஸ்திரத்தை தோஷம் போக்க ஒரு முறை உப்பு தண்ணீரில் துவைத்து காய வைத்து பின்னர் யாருக்காவது இயலாதவர்களுக்கு தானம் செய்து விடுங்கள். இதனால் உங்களுக்கு புண்ணியமானது பன்மடங்கு பெருகும். புண்ணியத்தை சேர்ப்பவர்களுக்கு வாழும் இறுதிகாலம் கூட சுகமாக அமையும்.

    அது போல் நம்மிடம் இருக்கும் கிழிந்த அல்லது அழுக்கு படிந்த அல்லது ஒன்றுக்கும் உதவாத துணிமணிகளை எப்பொழுதும் நெருப்பில் இட்டு எரித்து விட வேண்டும். இது போன்ற துணி மணிகளை தானம் கொடுத்தால் அதிலும் உங்களுக்கு பாவம் தான் வந்து சேரும். இதனை ஆற்றில் விடுவது, குளத்தில் விடுவது, தானம் செய்வது போன்று தெரியாமல் கூட எந்த ஒரு செயலையும் செய்து விடாதீர்கள். இவையெல்லாம் பாவக் கணக்கில் சேர்ந்தவையாகும். தயங்காமல் நெருப்பிலிட்டு கொளுத்திப் பஸ்பமாகிவிடுங்கள், இதனால் தோஷங்கள் நீங்கி பாவங்கள் சேராமல் புண்ணியம் உயரும்.
    விநாயக பெருமானின் அறுபடை வீடுகள் அதில் இருந்து மாறுபட்டு நமது வாழ்வுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தரும் வகையில் அமைந்துள்ளன.
    முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்கின்றன. முருகன் அறுபடை வீடுகள் அவரது அவதாரத்தின் நிகழ்வுகளையும், அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களையும் சொல்வதுபோல அமைந்துள்ளது. ஆனால் விநாயக பெருமானின் அறுபடை வீடுகள் அதில் இருந்து மாறுபட்டு நமது வாழ்வுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தரும் வகையில் அமைந்துள்ளன.

    விநாயகர் வீற்றிருக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான தலங்களில் ஆறே ஆறு தலங்கள் மிகவும் தனித்துவம் கொண்டது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆறு தலங்கள் தான் விநாயகரின் அறுபடை வீடுகளாக உள்ளன.

    திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடையூர், மதுரை, பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய 6 தலங்கள்தான் விநாயகரின் அறுபடை வீடுகளாக உள்ளன.


    திருவண்ணாமலை தலத்தில் ராஜகோபுரத்தில் உள்ள செல்வ கணபதி விநாயகரின் முதல் படை வீடாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால் அல்லல்கள் அனைத்தும் கரைந்தோடி விடும் என்பது ஐதீகமாகும்.

    விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆழத்து பிள்ளையார் 2-வது படை வீடாக உள்ளார். காசிக்கு சமமான இந்த தலத்தில் விநாயகரை வழிபட்டால் நம் வாழ்வுக்கு தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும். திருக்கடையூர் அன்னை அபிராமி ஆலயத்தில் அமிர்தகடேஸ்வரர் சன்னதி அருகே கள்ளவாரண பிள்ளையார் சன்னதி உள்ளது. இவர்தான் 3-வது படை வீடாக கருதப்படுகிறார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் சித்தி விநாயகர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவர் அறுபடை வீடுகளில் 4-வதாக இருக்கிறார். இவரை வழிபட்டால் நாம் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும் என்பது ஐதீகமாகும்.

    புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் 5-வது படை வீடாக திகழ்கிறது. அங்குள்ள தீட்சா கணபதி படை வீடுகளில் ஒருவராக உள்ளார். அவரை வழிபட ஞானம் கிடைக்கும். முக்கிய விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பது என்ற திணறல் ஏற்பட்டால் இவரை வழிபட்டாலோ அல்லது நினைத்து கொண்டாலோ நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.

    இறுதியாக விநாயகரின் அறுபடை வீடுகளில் 6-வதாக திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லா பிள்ளையார் உள்ளார்.தேவார திருப்பதிகங்களை இந்த உலகுக்கு திருப்பி தந்தவர் என்ற மகிமை இவருக்கு உண்டு. இவரை வழிபட்டால் முக்தி தேடி வரும்.

    ஆக விநாயகரின் அறுபடை வீடுகளை தரிசனம் செய்வதன் மூலம் அனைத்து நலன்களையும் நாம் பெற முடியும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அறுபடை வீடுகளுக்கு சென்று வரவேண்டும் என்ற ஆன்மீக சுற்றுப்பயணத் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது நிச்சயம் உங்கள் ஆத்ம பலத்துக்கு உதவி புரியும்.
    ×