என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    திருமணம் தடைபடி முக்கிய காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.
    திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது.

    இவை காரணமாக திருமணம் தாமதமானால் அதற்கான பரிகாங்களை செய்தால் மட்டுமே திருமணம் எந்த தடையும் இன்றி நடைபெறும். திருமணம் தடைபடி முக்கிய காரணமாக இருப்பது செவ்வாய் தோஷம். ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.

    அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

    தோஷம் என்பது தோஷம்தான். ஆனால் இந்தத் தோஷத்தில் இருந்து முற்றிலுமாக விலகிவிடலாம் என்று சொல்கிற, செய்யச் சொல்கிற பரிகாரங்களால் ஏதும் நிகழப்போவதில்லை என்பதை உணருங்கள்.
    சர்ப்ப தோஷ பரிகாரம் என்பது சமீபகாலத்தில் உருவானது. 5 ம் இட தோஷ விபரங்களை மட்டும் இப்போது பார்ப்போம்

    5ல் ராகு தோஷமா?... அளவற்ற ஆண் குழந்தைகள் பிறக்கும்.

    5ல் கேது... குழந்தை உண்டு. ஆனால் ஆரோக்கியப் பாதிப்பு உள்ள குழந்தை அல்லது ஆரோக்கியமாக இருந்தாலும் பிற்காலத்தில் பெற்றோரைப் பிரிந்து தனிமையை ஏற்படுத்தும் குழந்தை என்கிற நிலை உண்டாகும்.


    சுமார் 30 வருடங்களுக்கு முன் காளஹஸ்தி கோயிலுக்குச் செல்லும் போது அங்கே ராகு கேது பரிகாரம் என்று பெரிய அளவில் நடந்து பார்த்ததேயில்லை. தற்போது பெரிய அளவில், ஒரே நாளில், ஒரே சமயத்தில் சுமார் 100 முதல் 200 பேர் அமர்ந்து பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. எந்த பரிகாரம் செய்தாலும் தோஷம் விலகாது. தோஷம் தோஷம்தான்..! அதை அனுபவித்தே தீரவேண்டும்

    அப்படியெனில்.. தோஷம் பாதிக்குமா? என்ற கேள்விக்கு என்னுடைய பதில்... ஆமாம், பாதிக்கும். அதை அனுபவித்துதான் தீரவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்துகொண்டுதான் இருக்கிறோம்,

    அதெல்லாம் நாம் நினைப்பதுபோல் ஒரு நிகழ்வு என்றே கடந்துவிடுகிறோம். உண்மையில் அனைத்தும் கிரகங்களின் ஆளுமையே என்பதை மனதில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, சந்திக்கும் விஷயங்கள், பிரச்சினைகள் என அனைத்தும் கிரகங்களே தீர்மானிக்கின்றன.

    யோசித்து பாருங்கள்... பாக்கெட் நிறைய பணம் இருந்தும், பசியில் இருந்திருப்பீர்கள். வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்றாலும் உண்ண முடியாத நிலையும் வந்திருக்கும். இவை அனைத்தும் கிரகங்களின் வேலைகளே!

    எனவே தோஷத்தை கண்டு பயப்படாமல், அதனுடன் சேர்ந்து பயணிப்பதே நம் வாழ்வைச் சிறப்பாக்கும். செழிப்பாக்கும்!

    தோஷம் என்பது தோஷம்தான். ஆனால் இந்தத் தோஷத்தில் இருந்து முற்றிலுமாக விலகிவிடலாம் என்று சொல்கிற, செய்யச் சொல்கிற பரிகாரங்களால் ஏதும் நிகழப்போவதில்லை என்பதை உணருங்கள்.

    மிகப்பெரிய ஹோமங்களோ பரிகாரங்களோ செய்துதான் தோஷ நிவர்த்தியாகவேண்டும் என்றில்லை. எல்லாப் பரிகாரங்களும் பூஜைகளும் தோஷங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்பதே உண்மை.

    இரண்டே இரண்டு விஷயங்கள். இதுவே பரிகாரங்கள். முதலாவது, தினமும் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் ஒருபத்துநிமிடமேனும் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். வழிபாடுகளும் தரிசனங்களும் பிரார்த்தனைகளும் தோஷங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்துவிடும்.
    ஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது ஐதீகம்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. பல யுகங்களுக்கு முன்பு இப்பகுதியில் காடாக இருந்த போது, ரிஷிகள் தியானம் செய்ய முடியாத அளவு வன விலங்குகளின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது.

    இதனால் ரிஷிகள் பெருமாளை வேண்டியுள்ளனர். இதனால் நரசிம்ம பெருமாள் அவதரித்தாகவும், ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் ஆகிய கோவில்களின் எல்லை தெய்வமாகவும் அவர் விளங்கி வருகிறார். பெருமாள் தனக்காக கோவில் அமைத்து தானே வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

    இங்கு அவதரித்துள்ள நரசிம்மர் மேற்கு பார்த்த முகத்துடன், தனது இடது தொடையில் லட்சுமி தேவியை அமர வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். இதனால் லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார்.

    பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினம், பிரோதஷ தினம் மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் துளசி, பழங்களை வைத்து படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், தொழில் தடைகள் நீங்க நினைப்பவர்கள் வந்து வழிபட்டால் அவை நீங்கும் என்பது ஐதீகம். இங்கு வீற்றிருக்கும் நரசிம்ம பெருமாள் லட்சுமி தேவியுடன் சாந்தமாக காட்சி தருகிறார்.

    மேலும் பக்தர்களின் வேண்டும் வரங்களை அவர்களின் விருப்பம் போல் லட்சுமி நரசிம்மர் வழங்கி அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் வெல்லம், சுக்கு கலந்த பானகம் சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலாக எதை எடுத்து வந்தாலும் அவையும் படைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும், அதன் உபகோவிலாக விளங்கும் காட்டழகிய சிங்கபெருமாள் கோவிலின் மூலவரான லட்சுமி நரசிம்மருக்கும் செய்யப்படுகின்றன.
    பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முன் தினமான பரணி நட்சத்திரமன்று மாலை வேளையில் இல்லத்திலும், இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும்.
    பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முன் தினமான பரணி நட்சத்திரமன்று மாலை வேளையில் இல்லத்திலும், இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும். 22-11-2018 (வியாழக்கிழமை) பரணி தீபம் வருகிறது.

    அகல் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளில், படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைத்து வழிபடுவது மரபு. வீட்டில் ஏற்றும் விளக்குகளை நல்லெண்ணெய் ஊற்றியும், இறைவன் சன்னிதியில் ஏற்றும் விளக்குகளை இலுப்பெண்ணெய் ஊற்றியும் வழிபடுவது நல்லது.

    அப்பொழுதுதான் அஷ்டலட்சுமி உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார். இல்லத்தில் ஐஸ்வரியம் பெருக வழிபிறக்கும்.
    திண்டிவனம் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். மேலும் சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு நரசிம்மர் இடது மடியில் லட்சுமி தேவியுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பெருமாளின் உக்கிரத்தை குறைக்க தாயாரை மார்கண்டேய மகரிஷி வேண்டிக் கொண்டார். அதன்படி தாயார், பெருமாளை நோக்கி கைகூப்பி பக்தனுக்கு சாந்த மூர்த்தியாக அருள்பாலிக்கும் படி வேண்டி கொண்டார். அதன்பேரில் சாந்த மூர்த்தியாக பிரகலாத வரதனாக பெருமாள் காட்சி தந்தார். எனவே இந்த தலத்தில் தற்போதும் பக்தனுக்காக தாயார் கும்பிட்ட நிலையில் நரசிங்க பெருமாளோடு காட்சி அளித்து வருகிறார்.

    திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய அரக்கர்கள் வனத்தில் தவம் செய்த முனிவர்களுக்கு தொடர்ந்து தீங்கு செய்து வந்தனர். உடனே முனிவர்கள், நாராயணரை வேண்டினர். இதை ஏற்றுக்கொண்ட நாராயணர், அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அனுமாருக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட அனுமர், அரக்கர்களை கொன்று முனிவர்களின் தவவேள்வியை நிறைவு பெற செய்தார். இதனால் இந்த கோவிலில் அனுமார் சங்கு, சக்கரத்தோடு 4 கைகளுடன் காட்சி அளிக்கிறார்.

    இத்தனை அற்புதங்களை கொண்ட லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக தாயாருடன் காட்சிதரும் இத்தல நரசிம்மரை புரட்டாசி சனியன்று வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும்.

    திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், ராகுதிசை நடப்பவர்களுக்கும், ஏழரை சனியின் தாக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த கோவில் பரிகார தலமாக உள்ளது. கோவிலின் தெற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தாயார் சன்னதியும், வடமேற்கு பகுதியில் ஆண்டாள் சன்னதியும், பின்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளது.

    மேலும் இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார், கோதண்டராமர், வேணுகோபாலர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் தினமும் 2 கால பூஜைகள் நடந்து வருகிறது.

    நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஐந்து வகையான தோஷங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    இந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

    அன்னம் என்பது நம்முடைய உயிரைத் தாங்குவது. அப்படிப்பட்ட உணவு எப்படி, எங்கே, எந்த முறையில், யாரால் சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. உணவு சமைப்பதிலும், பரிமாறுவதிலும், உண்பதிலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? என்றால், ஆம்.. முக்கியத்துவம் வாய்ந்தது தான். அதனால் தான் ‘உணவில் ஆசாரத்தை கடைப்பிடி’ என்று சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். இங்கே ஆசாரம் என்பதற்கு சுத்தம் என்று பொருள்.

    நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம், சம்ஸ்கார தோஷம் ஆகும். இந்த ஐந்து வகையான தோஷங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    அர்த்த தோஷம்

    இந்த தோஷத்தைப் பற்றி, ஒரு குட்டிக் கதையின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு துறவி, தன்னுடைய சீடனின் வீட்டிற்கு உணவருந்துவதற்காக சென்றிருந்தார். உணவருந்திக் கொண்டிருக்கும் போது, தனது சீடனிடம் ஒரு நபர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றைக் கொடுப்பதை துறவி பார்த்தார்.

    உணவருந்தி முடித்ததும் துறவி ஒரு அறையில் ஓய்வு எடுத்தார். அந்த அறையில்தான் சீடன் வாங்கி வைத்த பணம் நிரம்பிய மூட்டை இருந்தது. திடீரென்று துறவியின் மனதில் தீய எண்ணம் உண்டாகி, அந்த மூட்டையில் கையை விட்டு கொஞ்சம் பணத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார். பின்னர் சீடனிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

    மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது, முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார், துறவி. அவருக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பது உறைத்தது. சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர்தான் இந்த கெட்ட எண்ணம் தோன்றியது. அந்த உணவு இரவில் ஜீரணமாகி, காலையில் கழிவாக வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் எண்ணிப்பார்த்தார்.

    உடனடியாக பணத்தை எடுத்துக் கொண்டு சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

    பின்னர், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது?’ என்று சீடனிடம் கேட்டார்.

    அதற்கு அந்த சீடன் தலைகவிழ்ந்தபடியே, ‘நான் நேர்மையற்ற வழியில்தான் பணம் சம்பாதித்தேன்’ என்று ஒப்புக்கொண்டான்.

    இப்படி நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணத்தினால் வாங்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் வருவதே ‘அர்த்த தோஷம்.’ இங்கே ‘அர்த்தம்’ என்பதற்கு ‘பொருள்’ என்று சொல்வார்கள். நாம் சமைக்கும் உணவுப் பொருட்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்க வேண்டியது அவசியம்.

    நிமித்த தோஷம்

    நாம் சாப்பிடும் உணவைச் சமைக்கும் நபர், நல்ல மனதுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர் நேர்மையானவராகவும், அன்பானவராகவும், நல்ல சுபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் சமைக்கப்பட்ட உணவானது, நாய், எறும்பு, பல்லி, காகம் போன்றவற்றால் தீண்டப்படாமல் இருப்பதும் முக்கியம். உணவில் தூசி, தலை முடி, புழுக்கன் போன்றவையும் இருக்கக்கூடாது. மேற்சொன்ன ஏதேனும் ஒரு குற்றம் இருந்தாலும் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு ‘நிமித்த தோஷம்’ ஏற்படும்.

    அசுத்தமான உணவு, மன அசுத்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உண்டாக்கும். நல்லவன் சமைத்த உணவால்தான் மனதில் நற்சிந்தனைகள் எழும்.

    குருசேத்திரப் போரில் அம்புகளால் துளைக்கப்பட்ட பீஷ்மர், போர் முடியும் நாள் வரை அம்புப் படுக்கையிலேயே உயிரோடு இருந்தார். அவரைச் சுற்றி கிருஷ்ணரும், பாண்டவர்களும், திரவுபதி போன்றவர்களும் இருந்தனர். அவர்களுக்கு பீஷ்மர் அறிவார்ந்த சிந்தனைகளின் மூலமாக பல நல்ல மொழிகளை சொல்லிக்கொண்டிருந்தார்.

    அப்போது திரவுபதியின் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. ‘இப்போது இவ்வளவு அறிவார்ந்து சிந்திக்கும் பீஷ்மர், அன்று என்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது, எதற்காக வாயை மூடிக் கொண்டிருந்தார்’ என்று நினைத்தாள்.

    அவளது மன ஓட்டத்தை அறிந்து கொண்ட பீஷ்மர், ‘தாயே! நான் துரியோதனின் ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. அம்பால் துளைக்கப்பட்டு, இவ்வளவு நாள் நான் சாப்பிடாமல் இருந்ததால், என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறி, நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவும் பிரகாசிக்கிறது’ என்றார்.

    ஸ்தான தோஷம்

    மூன்றாவதாக நாம் பார்க்கப் போவது ‘ஸ்தான தோஷம்.’ எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சமைக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள், அற்ப காரியங்களுக்காக விவாதங்கள் போன்றவை நடந்தால், அதனால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அதே போல் கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், வழக்கு மன்றம் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

    துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்தான். அதனை உண்பதற்காக கிருஷ்ணரை அழைத்தான். ஆனால் கிருஷ்ணரோ உணவருந்த மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட துரியோதனன், கிருஷ்ணரை சிறைப்பிடிக்கவும் முயன்றான். ஆனால் கிருஷ்ணரோ நேராக விதுரரின் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி மகிழ்ச்சியில் திளைத்தாள்.

    கிருஷ்ணரை கண்ட ஆனந்தத்திலும், பதற்றத்திலும், அவருக்கு என்னத் தருகிறோம் என்பதை உணராத நிலையிலும், வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு, தோலை அன்புடன் கொடுத்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் இதையெல்லாம் கண்ட விதுரர் பதறிப்போனார். தன்னுடைய மனைவியை கோபமாக பார்த்தார்.

    கிருஷ்ணரோ, ‘விதுரரே! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் என்று எதைத் தந்தாலும், அதுவே எனக்குப் போதும்’ என்று அருளினார்.

    ஆம்.. நாம் ஒருவருக்கு படைக்கும் உணவை, உள்ளன்புடன் பரிமாற வேண்டியது மிகவும் அவசியம்.

    குண தோஷம்

    நாம் சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்கள், சாத்வீக குணமுடையதாக இருக்க வேண்டும். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளிட்டவை ராஜஸிகமானவை. பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்வீக உணவு ஆன்மிக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலக மாயையில் சிக்கும் உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய எண்ணங்களை வளர்க்கிறது.

    சம்ஸ்கார தோஷம்

    தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருக்கக் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. இதைத்தான் ‘சம்ஸ்கார தோஷம்’ என்கிறார்கள்.

    இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி, ஒருவன் உணவை உண்ண வேண்டும். அதனால் தான் அன்னை அல்லது மனைவியால் இல்லத்தில் சமைத்து பரிமாறப்படும் உணவை ஏற்பது நல்லது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும்.
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும், அரகண்டநல்லூர் அருகே 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது அந்திலி லட்சுமிநரசிம்மர் கோவில்.

    இந்த கோவில் அரசமரத்தடியில் கருட வடிவிலான சிறிய பாறையின் மீது அமைந்துள்ளது. கோவிலில் நரசிம்மர் மீது ஆண்டு முழுவதும் சூரிய ஒளி படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது மிக சிறப்பு அம்சம் ஆகும். மகாவிஷ்ணு தனது நரசிம்ம அவதாரத்தில் தூணில் இருந்து தோன்றி இரணியனை அழித்து பக்த பிரகலாதனை காப்பாற்றினார். அப்போது மகாவிஷ்ணு கருட வாகனத்தை பயன்படுத்தவில்லை.

    எந்த சூழ்நிலையிலும் தன் மீதே அமர்ந்து பயணம் செய்யும் மகாவிஷ்ணு இந்த முறை பரமபதத்தின் மூலம் தூணில் இருந்து தோன்றி பக்த பிரகலாதனை காப்பாற்றி காட்சியளிக்க காரணம் என்ன? தான் (கருடன்) ஏதாவது தவறு செய்து விட்டோமா? அதனால்தான் நம்மீது பயணம் செய்வதை மகாவிஷ்ணு தவிர்த்து விட்டாரோ என்று கருட பகவான் குழப்பம் அடைந்தார்.

    உடனே பூமிக்கு வந்து தென்பெண்ணை நதிக்கரையின் அருகில் உள்ள கருட வடிவிலான பாறையில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார். கருடனின் கடும் தவத்தை பார்த்த மகாவிஷ்ணு நேரில் வந்து கருடனின் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு கருடன், பக்த பிரகலாதனுக்கு நரசிம்மராக காட்சியளித்த நீங்கள், எனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கூறினார். இதைகேட்ட மகாவிஷ்ணு கருடன் முன்பு நரசிம்மராக காட்சியளித்தார்.அப்போது மகாலட்சுமியும், மகா விஷ்ணுவின் மடியில் அமர்ந்து கருடனுக்கு காட்சியளித்த காரணத்தால் இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலுக்கு பல மகான்கள் வந்து தரிசித்து சென்றுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகளால் உண்டாகும் பிரச்சினைகள் விலகும். திருமண தடை நீங்கும். கண் சம்மந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும் கூறுகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் சாற்றுதல், ஹோமம் செய்தல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

    மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ள யோக நரசிம்மரை வழிபாடு செய்தால் எதிரி பயம் விலகும். மரண பயம் அகலும். திருமணத்தடை நீங்கும்.
    மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம். மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயார் பெயர் நரசிங்கவல்லி. ஆலய தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும். இது ஒரு குடவறைக் கோவிலாகும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே மிகப் பெரிய உருவத்தை கொண்ட ஆலயம் இது என்பது தனிச் சிறப்பாகும்.

    இத்தலத்தில் இருக்கும் யோக நரசிம்மர், தன் மார்பினில் மகாலட்சுமியை தாங்கியபடி மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை. இதற்குக் காரண மாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. பொதுவாக கொடி மரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீளம், அகல அளவைப் பொறுத்ததே. ஆனால் இத்தலத்தில் கரு வறைக்கு மேல், யானை மலை மிகவும் உயர்ந்து காணப்படுவதால் கொடி மரம் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    நரசிம்மராக அவதாரம் எடுத்தது, தேய்பிறை சதுர்த்தி காலத்தில்தான். எனவே அந்த நேரத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டால், கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரி பயம் விலகும். மரண பயம் அகலும். அதே போல் நரசிங்கவல்லி தாயாரை வணங்கினால் திருமணத்தடை நீங்கும். கோபம் குறைந்து அமைதியான வழியில் செல்ல வழி ஏற்படும் என்பது அனுபவ உண்மையாகும்.

    இந்த ஆலயத்தின் அருகே உள்ள தீர்த்தத்தில் மாசி மாத பவுர்ணமி தினத்தன்று கஜேந்திர மோட்ச விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. திருவண்ணாமலையைப் போலவே இங்கும் ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. இத்தலத்தில் சிவபெருமானுக்கு நடக்கிற பிரதோஷம் போல, நரசிம்ம ருக்கு பிரதோஷ பூஜை நடப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது யானை மலை ஒத்தக்கடை. இங்கிருந்து மினி பஸ்களில் 2 கிலோ மீட்டர் மேற்கே சென்றால் கோவிலை அடையலாம்.
    திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் உள்ள நவக்கிரக விநாயகரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்கிறார்கள்.
    திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊர் உள்ளது. இங்கு 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்கிறார்கள்.

    ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

    திருவாரூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

    தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூர் இருக்கிறது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் மரத்துறை என்ற கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    நமது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல், விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.

    பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர், தன் ஒரு கரத்தில் சிவலிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.

    திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால், விநாயகர் சிலை போலவே தெரியும்.

    விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை, தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள், எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.

    திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று, 16 கன்னிப் பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

    நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    பிற தெய்வங்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முதன்மைக் கடவுளாக வழிபடுகிறார்கள்.

    திண்டுக்கல் கோபால சமுத்திர குளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில், ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

    ‘ஓம் வக்ரதுண்டாய ஹீம்’ என்பது தான் சட்டாட்சர மந்திரம். இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.

    ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகரைத் தான் அவர் வணங்கியதாக கூறப்படுகிறது.

    புண்ணியத்தைத்தேடி காசி மாநகருக்கு செல்பவர்கள், அங்குள்ள அனைத்து விதமான ஆலயங்களிலும் வழிபட்டு விட்டு, சடங்குகளை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் முன்பாக, சிறிய ஆலயத்தில் வீற்றிருக்கும் டுண்டி ராஜ கணபதியை வணங்கினால்தான் யாத்திரை முழுமை பெறும்.
    திருவைக்காவூர் பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள வல்வில் ராமர் கோவிலில் வழிபாடு செய்தால் திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீரும் என்பது ஐதீகம்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக திருவைக்காவூர் செல்லும் பாதையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்புள்ள பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது வல்வில் ராமர் கோவில்.

    சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ராமர் சயன கோணத்தில் காட்சியளிக்கிறார். அதே போல் பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார். புதனுக்குரிய பரிகார தலமான இக்கோவிலில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உண்டு. பெருமாளின் மங்களா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 10-வது திவ்ய தேசமாகும்.

    இக்கோவிலின் பிரகாரத்தில் நரசிம்மர் தனியே சன்னதி கொண்டிருக்கிறார். இவர் யோக நரசிம்மர். இவர் காலடியில் ராமன் விக்கிரகம் காணப்படுகிறது. இந்த ராமருக்கும் மூலவர் வல்வில் ராமருக்கும் கண் திருஷ்டி பட்டு விடாதபடி இந்த நரசிம்மர் பார்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, அதுமட்டுமின்றி பக்தர்களின் உத்தியோகம், திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீர்த்து வைக்கிறார்.

    காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள திருப்புட்குழி திவ்ய தேசத்திலும் ஜடாயுவுக்கு ராமன் இறுதிக்கைங்கர் யங்களைச் செய்தான் என்ற தலபுராணக் குறிப்பு இருந்தாலும் திருப்புள்ள பூதங்குடியைப் பொறுத்த வரை பூமிதேவியுடன் அந்த சாங்கியங்களை அவன் அனுசரித்தான் என்ற வகையில் சற்றே மாறுபட்டிருக்கிறது. இப்படி தன் தந்தைக்கு நிகரான ஜடாயுவுக்கு அந்தி மக்கிரியைகளை நிறைவேற்றிய ராமன் இத்தலத்தில் ஓய்வு கொண்டான்.

    ஏற்கனவே சீதையைப் பிரிந்த துக்கம், இப்போது ஜடாயுவை இழந்து விட்ட சோகம் எல்லாமுமாகச் சேர்ந்து அவனை மிகவும் களைப்படைய வைத்திருக்கும் போலிருக்கிறது. ஆகவே இந்த புள்ள பூதங்குடியில் ஓய்வெடுத்து கொண்டான். அந்த நிலையே சயனக்கோல ராமபிரானாக இன்றளவும் நமக்கு தரிசனம் கிடைக்கிறது.

    ஜடாயுவாகிய புள்ளிற்கு மோட்ச கதி அளித்து, அதன் பூத உடலுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை ராமன் செய்ததால் இந்தத் தலம் புள்ளபூதங்குடி என்றாகியது. ஸ்ரீரங்கம் போலவே இந்தத் தலமும் காவிரி, கொள்ளிடம் நதிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. நீத்தார் கடன் நிறைவேற்றும் பாரம்பரியத்தில் வந்த ஒவ்வொருவரும், வடநாட்டில் உள்ள பிரபலமான கயா தலத்தில் அதனை மேற்கொண்டால் என்ன நற்பலன்கள் கிட்டுமோ அந்தப் பலன்கள் எல்லாம் கொஞ்சமும் குறைவின்றி, இந்தத் தலத்தில் மேற்கொள்பவர்களுக்கும் கிட்டும்.
    இந்த நவ கயிலாயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி நிலையை அடையலாம் என்பதும் ஐதீகம்.
    சிவபெருமான் வீற்றிருக்கும் இடத்தினை ‘கயிலாயம்’ என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. நம் நாட்டில் கயிலாயத்திற்கு ஒப்பான திருத்தலங்கள் பல இருக்கின்றன. தென் மாவட்டங்களில் நவ கயிலாயங்கள் எனப்படும் ஒன்பது ஆலயங்கள் சிறப்பு வாய்ந்தவையாக பார்க்கப்படுகின்றன. இந்த ஒன்பது சிவாலயங்களையும் வழிபடும் பக்தர்களுக்கு, ஆரோக்கியமும், செல்வவளமும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

    தென் தமிழகத்தின் எல்லையாகவும், சிறப்புகளில் ஒன்றாகவும் திகழ்வது பொதிகை மலை. அங்கு அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் ‘மீண்டும் பிறவாத வரம் வேண்டி’ (முக்தி வேண்டி) சிவ பெருமானை வணங்கி வந்தார். இதை அறிந்த அகத்திய முனிவர் ‘தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு, பின்னர் நவக்கோள் வரிசையில் சிவனை வணங்க வேண்டும்’ என்று உரோமச முனிவருக்கு ஆலோசனை வழங்கினார்.

    அதோடு நவகோள்களின் வரிசையை அறிவதற்காக ஒன்பது மலர்களை ஆற்றில் விட்டு, இவை எந்தெந்த கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவலிங்கத்தை வைத்து வழிபடுமாறும் அகத்தியர் அறிவுறுத்தினார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்தார். ஒன்பது மலர்களில் முதல் மலர் பாபநாசத்திலும் (சூரியதலம்), இரண்டாவது மலர் சேரன்மாதேவியிலும் (சந்திரன்), மூன்றாவது மலர் கோடகநல்லூரிலும் (செவ்வாய்), நான்காவது மலர் குன்னத்தூரிலும் (ராகு), ஐந்தாவது மலர் முறப்பநாட்டிலும் (குரு), ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும் (சனி), ஏழாவது மலர் தென் திருப்பேரையிலும் (புதன்), எட்டாவது மலர் ராஜபதியிலும் (கேது), ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலத்திலும் (சுக்ரன்) கரை ஒதுங்கியது. இந்த ஒன்பது இடங்களுமே இப்போது நவ கயிலாயங்களாக பக்தி மணம் வீசி வருகின்றன.

    இந்த ஒன்பது ஆலயங்களையும் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.

    சூரிய தலம் :

    தலம்: பாபநாசம்
    அம்சம்: சூரியன்
    நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்
    மூலவர்: பாபநாசர் என்ற கயிலாயநாதர்
    அம்பாள்: உலகாம்பிகை
    இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் உள்ளது.

    சந்திர தலம் :

    தலம்: சேரன்மாதேவி
    அம்சம்: சந்திரன்
    நட்சத்திரம்: ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்
    மூலவர்: அம்மைநாதர்
    அம்பாள்: ஆவுடைநாயகி
    இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சேரன்மாதேவி.

    செவ்வாய் தலம் :

    தலம்: கோடகநல்லூர்
    அம்சம்: செவ்வாய்
    நட்சத்திரம்: மிருகசிரீஷம், சித்திரை, அவிட்டம்
    மூலவர்: கயிலாயநாதர்
    அம்பாள்: சிவகாமி
    இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோடக நல்லூர் இருக்கிறது.

    புதன் தலம் :

    தலம்: தென் திருப்பேரை
    அம்சம்: புதன்
    நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
    மூலவர்: கயிலாயநாதர்
    அம்பாள்: அழகிய பொன்னம்மை
    இருப்பிடம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தென்திருப்பேரை உள்ளது.

    குரு தலம் :

    தலம்: முறப்பநாடு
    அம்சம்: வியாழன் (குரு)
    நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
    மூலவர்: கயிலாயநாதர்
    அம்பாள்: சிவகாமி
    இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலை வில் முறப்பநாடு இருக்கிறது.



    சுக்ரன் தலம் :

    தலம்: சேர்ந்தபூமங்கலம் (சேர்ந்தமங்கலம்)
    அம்சம்: சுக்ரன்
    நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம்
    மூலவர்: கயிலாயநாதர்
    அம்பாள்: சவுந்தர்ய நாயகி
    இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில், ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊர் அமைந்துள்ளது.

    சனி தலம் :


    தலம்: ஸ்ரீவைகுண்டம்
    அம்சம்: சனி
    நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
    மூலவர்: கயிலாயநாதர்
    அம்பாள்: சிவகாமி
    இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது.

    கேது தலம் :

    தலம்: ராஜபதி
    அம்சம்: கேது
    நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம்
    மூலவர்: கயிலாயநாதர்
    அம்பாள்: அழகிய பொன்னம்மை என்ற சிவகாமி
    இருப்பிடம்: தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை கோவிலில் இருந்து, அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் ராஜபதி உள்ளது.

    ராகு தலம் :

    தலம்: குன்னத்தூர் (சங்காணி)
    அம்சம்: ராகு
    நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்
    மூலவர்: கோத்த பரமேஸ்வரர் என்ற கயிலாயநாதர்
    அம்பாள்: சிவகாமி
    இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குன்னத்தூர். இந்த இடம் சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

    இந்த ஒன்பது ஆலயங்களையும், ஒரே நாளில் தரிசனம் செய்து வந்தால், கயிலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி இந்த நவ கயிலாயங்களையும் தரிசனம் செய்தால், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி நிலையை அடையலாம் என்பதும் ஐதீகம்.
    பெரும்பாக்கம் ஸ்ரீவெங்கடவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும்.
    விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாக்கம் என்ற பகுதி உள்ளது. இங்கு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவெங்கடவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது பல்லவர் காலத்திற்குட்பட்ட பழமையான கோவில் ஆகும்.

    திருக்கோவிலூர் தேகளீச பெருமாளுக்கு அபிமான தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறார்.

    மூலவரின் மார்பில் சிம்ம பதக்கம் காட்சி தருகிறது. இதனால் இந்த கோவில் தென்அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது. பெரியபெருமாளின் வலது கை அபய ஹஸ்தமாகவும், இடது கை கடி ஹஸ்தமாகவும் இருப்பதால் இந்த பெருமாளை தரிசிப்பவர்கள் திருப்பதி, காஞ்சிபுரம், அஹோபிபலம் போன்ற இடங்களில் உள்ள பெருமாள்களை தரிசித்த பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு லட்சுமியை மடியில் தாங்கி கிழக்கு நோக்கி லட்சுமி நரசிம்மர் காட்சி அளிக்கிறார். தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் மிகுந்த சிறப்பை அடையலாம். அவ்வாறு செய்தால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும். மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று இவரை வழிபாடு செய்வது உகந்தது.

    இந்த கோவிலில் கல்யாண ஆஞ்சநேயருக்கும் தனி சன்னதி உள்ளது. அவர் மேற்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு மட்டை தேங்காய் அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும்.
    ×