என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- தமிழகத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி கோவிலில் துறவிகள் குவிந்து இருப்பது இங்கு மட்டுமே.
- கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிமிதமான சக்தி உண்டு.
ஒரு இடத்தில் ஒரு சித்தர் ஜீவசமாதி அடைந்து இருந்தாலே அந்த இடம் அருள் அலைகள் நிரம்பிய இடமாக திகழும். சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் அடங்கி இருப்பார்கள். அத்தகைய இடங்களில் சித்தர்களின் அருள் பொங்கி வழியும்.
அதே சமயத்தில், ஒரே இடத்தில் அதிக அளவில் சித்தர்கள் முக்தி அடைந்து இருக்கிறார்கள் என்றால் அந்த இடம் எத்தகைய மகிமை வாய்ந்த புண்ணிய தலமாக இருக்கக்கூடும். சித்தர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த மகிமை புரியும். அந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம், வடக்கு பொய்கை நல்லூர் எனும் ஊர் ஆகும். இங்கு கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி பீடம் அமைந்துள்ளது.
இந்த ஜீவசமாதிக்கு நாம் எப்போது சென்றாலும் முன்பகுதியில் காவி உடை அணிந்த சிவனடியார்கள் நூற்றுக்கணக்கில் நிறைந்துள்ளதை பார்க்கலாம். தமிழகத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி கோவிலில் துறவிகள் குவிந்து இருப்பது இங்கு மட்டுமே.
அந்த துறவிகளில் பலர் நிரந்தரமாகவே கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் தங்கி உள்ளனர். ஆசிரமத்தின் உள்ளே நுழையும்போதே ஏதோ ஓர் இனம்புரியாத அமைதி நமக்குள் ஊடுருவி விடுவதை நம்மால் உணர முடியும். அதிக அளவில் சித்தர்கள் முக்தி அடைந்த இடம் என்பதால் மனதுக்குள் வேறு சிந்தனைகளே வருவது இல்லை.
மனம் முழுக்க 'கோரக்கர் சித்தர்' நிறைந்து விடுகிறார். அங்கு அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தால் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிமிதமான சக்தி உண்டு.
ஒவ்வொரு வியாழக்கிழமை, பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கோரக்கரை தரிசனம் செய்து இரவில் தங்கி செல்கின்றனர்.
- கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.
- சிவசக்தியின் திருவருளும், கோரக்கரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது.
நவபாஷண முருகன் சிலையை போகரும், கோரக்கரும் செய்து, அதனை தைப்பூச பவுர்ணமி நாளில் பழனியில் நிறுவினர். அதன் பின், ஆசிரமத்தையும், கோவிலையும் பராமரிக்கும் வேலையை புலிப்பாணி சித்தரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, போகர், கோரக்கரை அழைத்து என்னை பழனியில் சமாதி வைத்த பின், நீ வடக்கு பொய்கைநல்லூர் சென்று அங்கேயே தவம் செய்து கொண்டிரு, நான் என் சமாதியில் இருந்து வெளிப்பட்டு அங்கு வந்து உன்னை சமாதியில் அடக்கம் செய்கிறேன் என்றார்.
ஐப்பசி பரணியில் சமாதி அடைவேன்
அதன்படி கோரக்கர், போகரை சமாதியில் அடக்கம் செய்துவிட்டு வடக்கு பொய்கைநல்லூர் வந்தார். அப்போது அவரது சீடர்கள் அனைவரும் மக்கள் பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருந்தனர். அதைக்கண்டு மகிழ்ந்த கோரக்கர், தான் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று சமாதி அடைந்து விடுவேன் எனக்கூறி விட்டு ஈசனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது போகர் பழனியில் உள்ள தன்னுடைய சமாதியில் இருந்து வெளிப்பட்டு தன் சீடர்களுக்கு தெரியாத வண்ணம் வடக்கு பொய்கைநல்லூர் வந்து சேர்ந்தார். அந்நாளில் கோரக்கரின் ஆசிரமம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கோரக்கர் சமாதி நிலை அடைவதை காண சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், அடியார்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் அங்கு கூடி இருந்தனர். அப்போது கோரக்கரை சமாதி அடையும் இடத்திற்கு போகர் அழைத்து வந்தார்.
அம்மை-அப்பன் காட்சி
அப்போது போகர், கோரக்கரை பார்த்து கலியுகம் முடியும் வரை நீ இங்கு இருந்து உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும், எதிர்காலத்தில் நடக்க போகும் பல அதிசயங்களை பற்றியும் எடுத்துரைத்தார். அதன்பின், கோரக்கர் அன்னை பராசக்தி- ஈசன் திருவடிகளை தியானித்த வண்ணம் சமாதியில் இறங்கினார்.
அப்போது வானவர்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் கோரக்கருக்கு வாழ்த்துக்கள் கூறி பூமாரி பொழிந்தனர். அப்போது அம்மை- அப்பன் கோரக்கருக்கு நேரில் காட்சி அளித்தனர். போகர் கோரக்கரை சமாதியில் அடக்கம் செய்தார். அதன்பின், இருவரும் வெட்டவெளியில் சங்கமம் ஆனார்கள். எனவே, தான் இந்த இடத்தில் ஈசன் திருவடிக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகின்றன. மேலும், அந்த இடத்தில் சிவசக்தியின் திருவருளும், கோரக்கரின் குருவருளும் நிரம்பி வழிகின்றது.
- பெண்ணோ இல்லை சுவாமி, அடுப்பு சாம்பலை இதோ அந்த எருக்குழியில் போட்டு வைத்து இருக்கிறோம்
- ‘என்ன சித்தரே’ என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.
கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியில் இருந்து பிறந்தவர் தான் 'கோரக்கர்'.
மச்சேந்திரன்
ஒரு முறை சிவபெருமானும்- பார்வதி தேவியும் கடற்கரையில் அமர்ந்து இருந்தனர். அப்போது சிவபெருமான், பார்வதி தேவிக்கு மந்திர உபதேசம் செய்து கொண்டு இருந்தார். கடலுக்குள் இருந்த மீன்களுள் ஒன்று அந்த மந்திரத்தை கிரகிக்க சிவனின் அருளால் அந்த மந்திரம் மீனின் வயிற்றில் இருந்து மனிதனாக உருவெடுத்தது. சிவனின் அருளால் பிறந்த அவனுக்கு மச்சேந்திரன் என்ற பெயரும் ஏற்பட்டது.
திருநீறு
சித்தனாக விளங்கிய மச்சேந்திரன் ஒரு முறை அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஏன் அழுகிறாய்? என கேட்க அந்த பெண்ணோ குழந்தையின்மை காரணமாக தான் என்றாள். மலடியான அப்பெண்ணின் துன்பம் தீர்க்க மச்சேந்திரன், தாயே! இது திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய் என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்றுவிட்டார். இதனை கண்ட அவரது தோழி யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய் எனக்கூறி, அதனை வீசி எறிந்து விடு, என்றாள். தோழியின் பேச்சை கேட்டு பயந்து போன அந்த பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.
கோரக்கா...
சில ஆண்டுகள் கடந்தன. மீண்டும் மச்சேந்திரரை சந்திக்கும் வாய்ப்பு அந்த பெண்ணுக்கு கிடைத்தது. அவள் அழுது கொண்டே நடந்ததை கூறினாள். மேலும், இதுவரை தனக்கு குழந்தை இல்லை என்பதையும் கூறினாள். அவளது நிலைமையை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்காமல் சரி பெண்ணே, உன் வீட்டு அடுப்பு சாம்பலை எங்கே கொட்டுவீர்கள்? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா? என கேட்டார்.
அதற்கு அந்த பெண்ணோ இல்லை சுவாமி, அடுப்பு சாம்பலை இதோ அந்த எருக்குழியில் போட்டு வைத்து இருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்த சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது என்றாள். இதனை கேட்ட மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகம் இருக்கிறது எனக்கூறி கொண்டு எருக்குழிக்கு அருகே சென்று 'கோரக்கா.. கோரக்கா...' என குரல் கொடுத்தார்.
வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை...
'என்ன சித்தரே' என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா என்றார் சித்தர். அப்போது சாம்பலை கொடுத்த நாளில் இருந்து, இதுவரை 10 ஆண்டுகளை கடந்த நிலையில், 10 வயது சிறுவன் ஒருவன் தெய்வீக லட்சணங்களுடன் உள்ளிருந்து எழுந்து வெளியே வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர்.
சுவாமி! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமையை அறியாமல் அதனை வீசி எறிந்து, இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை நான் இழந்து விட்டேனே... எனக்கூறி கதறி அழுது கொண்டே மகனை அரவணைத்து கொண்டாள். ஆனால், அவளது மகன் அவளை உதறி தள்ளிவிட்டு தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாயே.
என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை. நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன் என்றான். இருப்பினும் என் தாய் என்ற முறையில் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான்.
சித்தி பெற்றார்
தான் செய்த தவறுக்கு வருந்திய அந்த தாயோ செய்வதறியாது வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின், கோரக்கர் மச்சேந்திர சித்தரின் மாணாக்கர் ஆனார். மச்சேந்திரரிடம் இலக்கணங்களோடு ஞானநெறியும் கற்று குருகுலவாசம் இருந்தவர். நாலா திசைகளிலும் அலைந்து சித்தி பெற்றார்.
- ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன.
- அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் தலமாக இருப்பது பழனியும், திருச்செந்தூர் திருத்தலமும் தான். பழனி தலத்திற்கு சென்று வழிபட்டால் தீராத நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் திருச்செந்தூர் சென்று வழிபட்டால், முருகனின் ஆறுபடை வீடுகளையும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு மும்மூர்த்திகளின் வடிவமாக முருகப் பெருமான் காட்சி தருகிறார். அதிசயங்கள் பல நடக்கும் முருகன் கோவிலாக சித்தர்கள் பலராலும் பாராட்டப்பட்ட கோவில் என்றால் அது பழனியும், திருச்செந்தூரும் தான்.
உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. இருந்தாலும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் தலம் திருச்செந்தூர் தலம் தான். இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் நடக்கும் உற்சவங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றி பலரும் அறியாத விஷயங்களை உள்ளது.
மாப்பிள்ளை சுவாமி
கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால் திருச்செந்துார் முருகன் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமாள் என 4 உற்சவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என அழைக்கின்றனர். இவரே திருக்கல்யாணத்தின் போது உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வார். அதே போல் சூரசம்ஹாரத்தின் போது ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சக்தி வேல் தாங்கி, சூரனை சம்ஹாரம் செய்வார். இந்த நான்கு உற்சவர்களையும் தரிசித்து, வழிபட்டால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.
12 நாள் சஷ்டி விழா
முருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா 6 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்துடன் சஷ்டி திருவிழா நிறைவடையும். சில தலங்களில் மட்டும் 7 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவடையும். ஆனால் திருச்செந்துாரில் மட்டும் மொத்தம் 12 நாட்கள் சஷ்டி விழா நடைபெறும். முதல் ஆறு நாட்கள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சூரசம்ஹாரமும் நடக்கும். ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அதனை அடுத்து ஐந்து நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடக்கும்.
சந்தன மலை
ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்துாரும் மலைக்கோவிலே. கடற்கரையில் இருக்கும் சந்தனமலையில் தான் கோயில் இருந்தது. எனவே இத்தலத்தை, கந்தமாதன பர்வதம் என்பர். தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக இருப்பதைக் காணலாம். அதே போல் ஆறுபடை வீடுகளில் முருகன் சன்னதி தரை மட்டத்திற்கு கீழ் இருப்பதும், முருகப் பெருமான் கடலை பார்த்தவாறு அமர்ந்திருப்பதும், சிவ பூஜை செய்த நிலையில் கையில் பூ உடன் இருப்பதும் திருச்செந்தூரில் மட்டுமே.
தோஷம் போக்கும் ஞானகுரு
அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார். எனவே திருச்செந்துார் குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்கள் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன. திருச்செந்துார் முருகனை வணங்கினால், குருதோஷம் மறையும். ஏனெனில் திருச்செந்துாரில் ஞான குருநாதராக முருகன் அருள்புரிகிறார்.
வெற்றிக்களிப்பில் முருகன்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) வருவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு செல்வார். ஆறாம் நாளன்று கடற்கரையில் சூரனை வதம் செய்வார். அதன்பின் வெற்றிக் களிப்பில் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.
- முருகன் நடந்துவரும்போது ஏற்படும் கால்கொலுசின் ஒலியை உற்றுக் கேட்கிறார் தேவராயர்.
- சஷ்டி கவசத்தை நாள்தோறும் சொல்லிச் சொல்லி உருவேற்றும் போது மனம் அளவற்ற சாந்தி அடைகிறது.
பாலன் தேவராயன் என்ற கவிஞரால் எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் முருகனைப் பற்றிய தோத்திரங்களில் பெரும்புகழ் பெற்றது. பல கோடி முருக பக்தர்கள் இந்தத் தோத்திரத்தை நாள்தோறும் ஓதிப் பலன் பெற்று வருகிறார்கள். அளவற்ற சக்தியுடைய மந்திரச் சொற்கள் இந்நூலில் கலந்துள்ளன.
நாராயணீயம், சுந்தர காண்டம் போன்ற சில நூல்களை மட்டும் அதிகம்பேர் பாராயணம் செய்வதன் காரணம் என்ன? விஷ்ணு சகஸ்ரநாமம், ஆதித்ய ஹ்ருதயம், கோளறு திருப்பதிகம் போன்றவை மட்டும் பலராலும் ஓதப்படுவதன் பின்னணி என்ன?
பாலன் தேவராயனே பல கவசங்களை அருளியிருந்தாலும் அவர் அருளிய கந்த சஷ்டி கவசம் மட்டும் ஏன் இத்தனை புகழோடு திகழ்கிறது?
காரணம், இவற்றை எண்ணற்ற அடியவர்கள் நம்பிக்கையோடு ஓதி ஓதி, அவற்றின் சக்திக்கு அதிக வலிமை சேர்த்திருக்கிறார்கள். இன்று அந்த நூல்கள் இறையருளை எளிதில் வாரி வழங்கும் தன்மை பெற்றிருக்கியர் இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர் நூல்களில் புகழ்பெற்றது கந்த சஷ்டி கவசமே.
முருகன் நடந்துவரும்போது ஏற்படும் கால்கொலுசின் ஒலியை உற்றுக் கேட்கிறார் தேவராயர். அந்த ஒலியை அப்படியே தம் நூலில் ஒலிக்குறிப்புச் சொற்களாக வைக்கிறார்.
`செககண செககண செககண செகென
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
இந்தச் சொற்களெல்லாம் அளவற்ற மந்திர சக்தி நிறைந்தவை. பாராயணம் செய்பவர்களுக்கு உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் ஒருங்கே தரக்கூடியவை.
சஷ்டி கவசத்தை நாள்தோறும் சொல்லிச் சொல்லி உருவேற்றும் போது மனம் அளவற்ற சாந்தி அடைகிறது. எண்ணிய எண்ணியாங்கு எய்த இந்தக் கவசம் துணை நிற்கிறது.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் வேண்டுமானால் மனத்தை மாசு தாக்காதவாறு அதற்கு ஒரு கவசம் பூட்ட வேண்டியது அவசியமல்லவா? அத்தகைய மனக் கவசமாக நிற்கும் வல்லமை படைத்தது சஷ்டி கவசமே.
*முருகன் பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம், இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன கடவுளர் உண்டு என வகைப்படுத்திப் பேசுகிறது.
`மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே!'
என்பது தொல்காப்பிய நூற்பா.
திருமாலுக்குக் காடு சார்ந்த உலகமும் முருகனுக்கு மலை சார்ந்த உலகமும் இந்திரனுக்குக் கடல் சார்ந்த உலகமும் வருணனுக்கு மணல் சார்ந்த உலகமும் உண்டு என்கிறது தொல்காப்பியம்.
மலையும் மலைசார்ந்த நிலமுமான குறிஞ்சி நிலத்தின் தனிப் பெருங் கடவுள் முருகன்தான். அவன் குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பவன்.
*எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதிய பாரதம் பாடிய பெருந்தேவனார், முருகனைத்தான் போற்றுகிறார்.
`தாமரை புரையும் காமர் சேவடி
பவழத்தன்ன மேனித் திகழொளி
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே!`
தாமரை மலர் போன்ற திருவடியையும் பவழம் போன்ற மேனியையும் குன்றிமணியைப் போல் சிவந்த ஆடையையும் குன்றைப் பிளக்கும்படி எறிந்த வேலையும் சேவல் கொடியையும் உடைய முருகன் காப்பதால் இந்த உலகம் துன்பமின்றி இருக்கின்றது என்பது இந்தப் பாடலின் பொருள்.
*பத்துப் பாட்டு நூல்களில் ஒன்று நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப் படை. முற்றிலும் முருகனைப் போற்றியே எழுதப்பட்ட நூல் அது. முந்நூற்றுப் பதினேழு அடிகளில் ஆன நூல். ஆசிரியப்பா என்ற பாவகையில் எழுதப்பட்டது.
முருகனைக் கண்டு திருவருள் பெற்ற ஒரு பக்தர், அவ்விதம் அருள் பெறாதவர்களை முருகனைச் சரணடைந்து அருள் பெறுமாறு ஆற்றுப் படுத்துவதே இந்த நூலின் போக்கு.
*சங்க கால நூல் போலவே, இடைக்கால நூல் ஒன்றும் முருகன் புகழ் பாடுகின்றது. `திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்` என்ற அந்நூலை இயற்றியவர் பகழிக் கூத்தர்.

திருப்பூர் கிருஷ்ணன்
காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக விளங்கிய கச்சியப்ப சிவாசாரியார், கந்தபுராணம் முழுவதையும் தமிழில் செய்யுள் நூலாகப் படைத்துள்ளார்.
அண்மைக் காலத்தில் ஆண்டவன் பிச்சி சென்னை காளிகாம்பாள் கோயில் முருகன் சன்னிதியில் அருளிய பாடல் `உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே` என்ற பாடல். டிஎம் செளந்தரராஜன் பாடிப் பெரும்புகழ் பெற்ற பாடல் இது.
கண்ணதாசன், வாலி, உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் போன்ற அண்மைக்காலக் கவிஞர்கள் பலரும் முருகனைப் பற்றிய தோத்திரப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
கந்த சஷ்டியன்று முருகன் தோத்திரங்களை ஓதியும் முருகன் பாடல்களைப் பாடியும் கேட்டும் முருகனை வழிபட்டு அவன் அருளைப் பெறுவோம்.
- வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.
- முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதாக உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.
கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினை புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவுப்படுத்துகின்றது. வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது.
வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று ெபாருதவீரன், துங்கவடிவேலன், பிரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெற்று பரலாயிற்று, ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார். வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடு என குறிப்பிட்டுள்ளார்.
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் ெபாருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
- ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதலில் கோவில் ஏற்பட்டது.
- வைதீக ஆகமத்தின்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது.
அஹீந்த்ரன் என்றால் ஆதிசேஷன் என்று பொருள். இந்த ஊர் ஆதிசேஷனால் நிர்மானிக்கப்பட்டது ஆகும். அருகிலுள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாசலம் என்றும், ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட அவுசத மலையின் ஒரு பாகம் இதில் சேர்ந்திருப்பதால் அவுசதாசலமென்றும் பெயர் பெற்றது. கருடனால் கொண்டு வரப்பட்ட நதி பக்கத்தில் ஓடுகிறது. இந்த நதி கரும் நதியென்று பெயர் பெற்றது. ஆதி சேஷனால் நிர்மானிக் கப்பட்டது என்றும் கோவிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலில் உள்ள பிரதானமூர்த்தி தேவ நாதன். இவர் அச்சுதன், ஸ்திரமோதில், அநக ஜோதிஸ், மேவு ஜோதி, மூவராகிய மூர்த்தி, அடியவர்க்கு மெய்யன், தெய்வநாயகன், தாசஸத் தியன் போன்ற பல பெயர்களில் உள்ளவர், பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு, மார்க்கண்டேயர், ததிசி முனிவர் போன்ற பலரும் தவம்புரிந்து தரிசித்து வரம் பெற்ற தலமிது.
கோவிலில் பிரதானமாகிய தாயார்-அம்புருகவாசினி. இவர் ஹேமாப்ஜநாயகி, பார்கவி, தரங்கமுக நந்தினி, செங்கமலநாயகி போன்ற பல திருநாமங்கள் அமையப்பெற்றவள்.
பெருமாளும், தாயாரும் மகாவரப்பிரசாதி. பாடல் பெற்ற 108 வைணவதலங்களில் முக்கியமானது இத்தலம். இது திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்றது. வேதாந்த தேசிகன் இங்குள்ள அவுசதாசலத்தில் தவம்புரிந்து ஸ்ரீ ஹயக்ரீவனையும், கருடனையும் பிரத்யக்ஷமாகக் கண்டு வரம் பெற்றார்.
ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதலில் கோவில் ஏற்பட்டது. ஸ்ரீதேசிகன் இந்த ஊரில் சுமார் 40 ஆண்டு காலம் வசித்து வந்தார், அநேக நூல்களை இவ்வூரில் இயற்றினார். அவர் எழுந்தருளியிருந்த இடம் ஸ்ரீதேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு விளங்குகிறது. இக்கோவிலுக்குள் இருக்கும்ஸ்ரீ தேசிகன் திவ்ய மங்கள விக்ரகம் ஸ்ரீ தேசிகன் தன் திருக்கரங்களாலேயே செய்யப்பட்டதாகும். ஸ்ரீதேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணறு இன்றும் ஸ்ரீதேசிகன் திருமாளிகையில் உள்ளது.
வைதீக ஆகமத்தின்படி 6 கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது. வேதபாராயண அத்தியாயம் (திவ்யபிரபந்த) கோஷ்டிகள் இத்திவ்ய தேசத்தில் ஒரு கவுரவ கைங்கர்யமாகவே இன்றும் நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஸ்ரீ பெருமாளுக்கும், புரட்டாசி மாதம் ஸ்ரீ தேசிகனுக்கும் மிகவும் விமரிசையாக பிரம் மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
இந்த திருத்தலம்தமிழ் நாட்டில் கடலூர் திருப்பா திரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ தூரம் மேற்கில் அமைந்துள்ளது. வருடத்தில் 12 மாதங்களிலும், உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் திரளான பக்தர்கள் வந்து சேவித்து பயனடைந்து வருகிறார்கள்.
குறிப்பு : உற்சவ கைங்கர்யதாரர்கள் உற்சவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திருக்கோவில் அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து உற்சவத்திற்கான திட்டத்தினைபெற்றுச் செல்வதுடன், உற்சவ கைங்கர்யத்தினை காலத்தே வந்திருந்து நடத்தி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கைகட்டி வணங்கும் கருடன்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி முன்பு உள்ள கருடன் தேவநாதசுவாமிக்கு அதிக மரியாதை கொடுக்கும் விதமாக கை கட்டி நின்ற நிலையில் உள்ளார். பெரும்பாலான கோவில்களில் கருடன் கை கூப்பிய நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது இந்த கோவிலின் ஒரு மிக சிறப்புவாய்ந்த அம்சமாகும்.
- கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது.
- 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது.
தல வரலாறு
முன்பொரு சமயம் சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டச்சாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும், பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து உதவினர் என்கிறது புராண நூல்கள்.
இதன் மூலம், விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் "சரநாராயணப்பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர்.
இங்கு ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ேஹமாம்புஜவல்லி தாயாருக்கு செங்கமலத்தாயார், பொற்தாமரைகொடியாள் என சிறப்பு பெயர்கள் உண்டு. ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, சேர்த்தி உற்சவத்தில் பெருமாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மாதந்தோறும் நடைபெறும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூவாலங்கி சேவையிலும் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக தவத்தால் பிறந்த ஹேமாம்புஜவல்லி தாயார் பெருமாளை திருமணம் செய்துள்ளதால், இக்கோவிலில் வேண்டுவோருக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு, கடன் நிவர்த்தி, சகல ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. கடன் நிவர்த்தி, ஐஸ்வர்யங்கள் பெருக வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடக்கிறது.
திருமாலின் திருத்தலங்களில், இக்கோவிலில் தான் நரசிம்மர், சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.
700 ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர், திருவந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மற்ற கோவில்களில் கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் சீனிவாசனைப்போல், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
அருகில் மிருகண்ட மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி. புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள், இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.
இப்பெருமாளை 7 அமாவாசையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டால் வேண்டியதை வேண்டியவாறு அருளக்கூடிய பெருமாளாக அருள்பாலிக்கிறார். பெரிய திருவடியாகிய கருடாழ்வார் இத்தலத்தில் கையைக் கட்டிக்கொண்டு சேவக பாவத்தில் காட்சி தருகின்றார்.
- திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்.
- மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். படையெடுத்துச் செல்லும் வீரர்கள் தங்கும் இடம்தான் படைவீடாகும்.
முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக சென்றபோது வீரர்கள் தங்கியிருந்த இடம்தான் தற்போதைய திருச்செந்தூர் கோவிலாகும்.
திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இவ்விடத்திற்கு 'வீரபாகு ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. வீரபாகுவிற்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
முருகனின் அவதார நோக்கமே அசுரனை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே, இத்தலம் தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.
முருகப்பெருமானின் வெற்றிவேல், மாமரமாக நின்ற சூரபத்மனை பிளவுப்படுத்திய இடம் திருச்செந்தூரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, 'மாப்பாடு' என்னும் இடமாகும். இந்த இடம் தற்போது 'மனப்பாடு' என்று அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூரில் முருகன் சேவல் கொடியுடனும், பார்வதி தேவி கொடுத்த வேலுடனும் சூரபத்மனை கொன்று வெற்றிக்கொடியுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்ற 2 மூலவரும் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அளவாய்பெருமான் என்ற 4 உத்சவர்களும் உள்ளனர்.
இக்கோவிலுக்கு செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. அவரை வணங்கிய பிறகே முருகனை வணங்கச் செல்ல வேண்டும்.
திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் என்று 2 லிங்கங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள சண்முகர் மண்டபத்தில் ஆத்ம லிங்கம் உள்ளது. திருச்செந்தூர் முருகன் இருக்கும் இடம், 'மணியடி' என்று சொல்லப்படுகிறது. இங்கு நின்று முருகனை தரிசிப்பது சிறந்தது.
மூலவருக்குப் பின்புறம் சுரங்க அறை உள்ளது. இங்கே முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு 'பாம்பறை' என்ற பெயரும் உண்டு. மூலவருக்கு மேல் ஒரு வெள்ளி பாத்திரத்தில் பால் நிரப்பி அதில் துவாரம் அமைத்து பாலை மூலவர் மீது விழச்செய்து சுமார் 3 மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் விசேஷம் வாய்ந்தது.
இரவு 9.45 மணிக்கு சுவாமிக்கு திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்து தீபாராதனை காட்டுவர். இதை ரகசிய தீபாராதனை என்கிறார்கள். உலோகத் திருமேனியான முருகப்பெருமானுக்கு ஆண்டுக்கு 36 முறையே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
மூலவர் யோக நிஷ்டையில் உள்ளவர் என்பதால், அவருக்கு செய்யப்படும் நெய் வைத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதுண்டு.
தினமும் மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கு, 'கங்கை பூஜை' என்று பெயர். இக்கோயிலில் தினமும் ஒன்பதுகால பூஜை நடைபெறுகிறது.
பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் பகல் முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. செந்தில் ஆண்டவர் கோயில் பிரணவத்தை அடிப்படையாக கொண்டு வாஸ்து லட்சணத்தோடு கட்டப்பட்டுள்ளது. கோவில் வடக்கு தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. கோபுரம் யாழி மண்டபத்தின் மேல் 137 அடி உயரமும் 90 அடி நீளமும் 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் 9-வது மாடத்தில் கடிகார மாளிகை உள்ளது. இத்தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக இருப்பதாக ஐதீகம். பன்னீர் இலைகளில் விபூதி வைத்து தரப்படுவதே விபூதி பிரசாதமாகும்.
- பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
- திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு "திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை" என்று பெயர்.
திலம் என்றால் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.
இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.
விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.
பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பித்ருக்களிடம், "15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள்" என்று அனுப்பி வைப்பார்.
இதைத் தொடர்ந்தே பித்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.
- பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது
- திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோவிலும் ஒன்றாகும்.
தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் வெங்கல கருடனுக்கு புஷ்ப அங்கி சேவை புரட்டாசி மாத பிறப்பான நடைபெற்றது. 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட வெண்கலத்தால் ஆன நூற்றாண்டு பழமை வாய்ந்த வாகனத்தில் வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பல்வேறு வாசனை மலர்கள் அணிவித்து புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது பின்னர் கருட பகவானுக்கு செங்கோல் மரியாதை செய்யப்பட்டு ஊர்வலமாக சென்று எடுத்து வந்து மீண்டும் கருட பகவானுக்கு செங்கோல் வழங்கி தீபாராதனை நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இத்தகைய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
- ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி வருகிறது . ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது . அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.
புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.
புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாளில்தான் அரிச்சந்திரன் விரதம் இருந்து தாம் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க கூடாது. அதில் மட்டும் கவனமாக இருங்கள்.






