என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.

    ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.

    சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயண சுவாமி, கோமதி அம்மன் முதலிய சன்னதிகளை உள்ளடக்கிய கோவில் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றுவதே ஆடிச்சுற்று ஆகும்.

    சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு கொடி ஏறிய பின் ஆடிச்சுற்று எனும் பெயரில் பக்தர்கள் கோவிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையுடன் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள்.

    ஆடிச்சுற்று சுற்றுவதால் ஒரு காலில் நின்று தபசு காட்சியருளும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அம்பாளும் இப்படி தனது கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அகற்றுகிறாள்.

    பக்தர்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து, கோமதி அம்மனை வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள். மாணவ-மாணவிகள், வாலிபர்கள், கன்னிப்பெண்கள், வயதான ஆண்-பெண் என அனைத்து வயதினரும் ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள்.

    மாணவ-மாணவிகள் நன்கு படிக்க வேண்டும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும், எதிர்காலத்தில் மருத்துவர், என்ஜினீயர், கலெக்டர், போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள்.

    கன்னிப்பெண்கள் தனக்கு நல்ல கணவர் அமைய வேண்டும், நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், குழந்தை பேறு வேண்டும் என பல வேண்டுதல்களை மனதில் வைத்து ஆடிச்சுற்று செல்கின்றனர். இதேபோல் வாலிபர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வேண்டி ஆடிச்சுற்று செல்கின்றனர்.

    நடுத்தர வயது ஆண் மற்றும் பெண்கள் தங்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தங்களது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். வயதானவர்கள் நோய்நொடியால் அவதிப்படாமல் வாழ வேண்டும் என வேண்டி செல்கிறார்கள்.

    இப்படியாக அனைத்து வயதினருமே தங்களுக்கு தகுந்தா ற்போல் கோமதி அம்மனை மனதில் நினைத்தப்படி ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதன் மூலம் கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டமே சாட்சி.

    தொடக்க காலத்தில் ஆடிச்சுற்று செல்பவர்களின் எண்ணிக்கை 100 முதல் 200 வரையே இருக்கும். ஆனால் இன்றோ பல்லாயிரக் கணக்கானோர் ஆடிச்சுற்று செல்கிறார்கள்.

    ஆடிச்சுற்று ஒரே நாளில் முடித்து விட முடியாது என்பதால் பல பக்தர்கள் சங்கரன் கோவிலில் பல நாட்கள் தங்கி ஆடிச்சுற்று செல்கிறார்கள். ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்த பிறகே பக்தர்கள் ஆடிச்சுற்று செல்ல தொடங்குவார்கள்.

    ஆடித்தபசு திருவிழாவிற்குள் ஆடிச்சுற்று முடித்துவிட வேண்டும். இதனால் கொடியேற்றப்பட்ட நாளில் இருந்தே பக்தர்கள் ஆடிச்சுற்று நடக்க தொடங்குவர். இதனால் கொடியேற்றபட்டதில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    வெளி பிரகாரத்தில் பக்தர்கள் ஆடிச்சுற்று சென்றபடியே இருப்பார்கள். விடுமுறை நாட்களில் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுவர். ஆடிச்சுற்று செல்லும் பக்தர்களின் நியாயமான அனைத்து வேண்டுதல்களையும் கோமதி அம்மன் நிறைவேற்றுவதாக ஐதீகம்.

    • கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.
    • ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.

    ஒருமுறை 'சிவன் பெரியவரா?... விஷ்ணு பெரியவரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும்' என்று எண்ணினாள் அம்பிகை.

    தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, 'சுவாமி... சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லாமல் பொருந்தி இருக்கும் திருக்காட்சியைக் காட்டியருள வேண்டும்' என வேண்டினாள். உடனே சிவபெருமான், 'தேவி உனது எண்ணம் நிறைவேறும்.

    பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னை வனத்தலத்துக்கு (சங்கரன்கோவில்) சென்று தவமியற்று. அங்கு நீ விரும்பியபடியே, யாம் சங்கர நாராயணராக காட்சி கொடுப்போம். மகாசக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்' என்றார்.

    அதன்படியே பூலோகத்தில் உள்ள புன்னை வனத்தலத்தை அடைந்தாள் அம்பிகை. அங்கே, முனிவர்கள் - புன்னை மரங்களாகி நிழல்தர, அந்த நிழலில் பெரும் தவத்தை மேற்கொண்டாள் அம்பிகை.

    தேவ மாதர்கள் பசுக் கூட்டமாக தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். அதனால் மகிழ்ந்த அம்பிகை, அந்த பசுக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்த, 'ஆவுடையாள்' எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு). மேலும், 'கோ'(பசு)க்களின் பெயரை இணைத்து 'கோமதி' எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். அம்பிகையின் தவத்தால் அங்கே ஆவினங்களும் பெருமை பெற்றன.

    எந்த திருக்காட்சியைக் காண அங்கே அன்னை தவம் செய்தாலோ, அந்த காட்சியைக் காணும் பாக்கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை. சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள், சங்கன் - சிவபக்தன். பதுமன் - விஷ்ணு பக்தன். இவர்களுக்கிடையே பெரும் போட்டி.

    'சிவன் தான் பெரியவர்' என்று சங்கன் சொல்ல, 'இல்லை, விஷ்ணுவே பெரியவர்' என்று பதுமன் கூற, இருவருக்கும் இடையே சண்டை மூண்டது.

    இருவரும் முனிவர்கள் பலரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தேடினார்கள். அப்போது குருபகவான், 'அறியாமை கடலில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு, ஞான விளக்கம் கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் புன்னை வனம் செல்லுங்கள். அங்கு உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்' என்றார்.

    அதன்படி இருவரும் அருள் செழிக்கும் புன்னை வனம் வந்து தவமியற்றினர். அவர்களின் தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய்தது. வீண்வாதம் செய்யும் அவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகிலுள்ள மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்த, பாதித்திருமேனி சங்கரர், பாதி திருமேனி நாராயணராக கோலம் கொண்டு சங்கரநாராயணராகத் திருக்காட்சி கொடுத்தனர்.

    அம்பிகைக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தந்த வைபவமே இங்கே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழாவில் உத்திராட நட்சத்திரத்தன்று, ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.

    அன்று மாலை ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறும். ஆடித்தபசு திருவிழாவில் கலந்து கொண்டு தரிசித்தால் கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும், வாழ்வில் தடைகள்யாவும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.
    • அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார்.

    நினைப்பவர்களுக்கும், தன்னைத் தேடி வருபவர்களுக்கும் அருள் மாரி பொழியும் அம்பிகை, 'கோமதி அம்மன்' என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள சங்கரன்கோவில் திருத்தலத்தில் 1944-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது.

    ஆடி மாதம், ஆடித் தபசு திருவிழாவுக்கு உலகில் உள்ள மொத்த பேரும் திரண்டு வந்தது போல, சங்கரன்கோவில் முழுக்க மக்கள் வெள்ளம். இரவு நேரம். தெற்கு ரத வீதியில் இருக்கும் தபசு மண்டபத்தில், பல்லக்கில் எழுந்தருளியிருந்தாள் உற்சவ மூர்த்தியான அம்பிகை. திருக்கல்யாண அலங்காரத்தில் இருந்ததால், அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.

    அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார். சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள அரியூரை சேர்ந்த கணக்குப் பிள்ளை ஒருவர், பட்டரைப் போல வேடம் அணிந்து பல்லக்கை நெருங்கினார். அவர் அந்த கிராமத்து முக்கியஸ்தர். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். மனோவசியம் உள்பட பல வித்தைகள் கற்றவர். அவரைப் பார்த்த எவருக்குமே சந்தேகம் ஏற்படவில்லை. 'யாரோ, பூஜை செய்யும் பட்டர்' என்று நினைத்தனர்.

    பல்லக்கை நெருங்கிய அவர், அதில் ஏறி அம்மனின் காதுகளை அலங்கரிக்கும் வைரத் தோடுகளை கழற்றிக் கொண்டு, கும்பலோடு கும்பலாக கலந்து மறைந்தார். (அந்த தோடுகளின் அன்றைய மதிப்பு பதினாறாயிரம் ரூபாய்.) அப்போது அசதியுடன் பல்லக்கில் சாய்ந்திருந்த குப்புசாமி பட்டரை, சுமார் எட்டு வயது சிறுமி ஒருத்தியின் மென்மையான கரங்கள் உலுக்கி எழுப்பின. அரக்கப் பரக்க கண் விழித்து எழுந்த குப்புசாமி பட்டரின் எதிரில் ஒளி மயமாக அந்த குழந்தை நின்று கொண்டிருந்தாள்.

    'என்ன? ஏது?' என்று கேட்பதற்கு முன், அவளாகவே பரபரப்புடன், 'மாமா... மாமா... எனது தோடுகளை ஒருவன் திருடிக் கொண்டு போகிறான். வா, வந்து அவனைப் பிடி' என்று அவரின் கைகளைப் பிடித்து இழுத்தாள். 'ஏதோ நடந்திருக்கிறது' என்பதை சட்டென்று உணர்ந்த குப்புசாமி பட்டர், மந்திரத்தில் கட்டுண்டவர் போல சிறுமியை பின்தொடர்ந்தார்.

    சற்றுத்தூரம் சென்றதும், திருடனை சுட்டி காட்டிய சிறுமி, 'அதோ போகிறானே... அவன்தான் எனது தோடுகளை திருடியவன்' என்றாள். கட்டுமஸ்தான உடம்போடு ஒருவர் போய்க் கொண்டிருந்தார். ஒல்லியான உடல்வாகு கொண்ட பட்டருக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. விறுவிறுவென்று போய், அந்த நபரின் மூடிய கையை பற்றி இழுத்துக் கடித்தார்.

    அந்தநபர், திமிறினாரே தவிர, எதிர்த்து தாக்காமல், பிரமை பிடித்தவர் போல் அப்படியே நின்றார். அவர் கையை பிரித்து பார்த்தால், அம்மனின் ஆபரணம் ஜொலித்தது. 'திருடன் திருடன்' என்று கத்தியபடி சிறுமியை பார்த்தார் குப்புசாமி பட்டர். அவள் மாயமாக மறைந்து விட்டிருந்தாள்!

    அதற்குள் அங்கிருந்த மக்கள் அந்தத் திருடனைப் பிடித்து அடிக்கத் தொடங்கினர். திருவிழாக்கும்பல். கேட்கவா வேண்டும்? ஆளாளுக்கு அடித்தார்கள். ஆனால், அந்த நபரோ, 'அடியுங்கள்... நன்றாக அடியுங்கள். அப்போதுதான் நான் செய்த பாவம் தீரும்' என்று சொன்னாரே தவிர கலங்கவில்லை. அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதிகாச, புராண காலத்தில் மட்டுமின்றி எப்போதும் தெய்வம் தனது திருவிளையாடலை நிறுத்தியதில்லை. அடியாருக்கு அருள்புரிவதன் மூலம் அது எப்போதும் தன்னை வெளிப்படுத்தவே செய்கிறது. அனுபவத்தால் இதை உணர்ந்தவர்கள், அடுத்தவர்களுக்கு சொல்கிறார்கள். அனுபவம் பெற துடிப்பவர்கள் அதை நம்புகிறார்கள். தெய்வத்தின் அருளை தாங்களும் அனுபவிக்கிறார்கள்.

    • முக்தி என்று சொன்னாலே ஈசனின் திருவடியை அடைவது தான்.
    • சிவபெருமானுக்கு உரிய தளங்களில் அக்னி தளமாகவும் உள்ளது.

    உலகம் தோன்றிய காலத்தில் இருந்து திருவண்ணாமலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெவ்வேறு யுகங்களில் இந்த மலை வெவ்வேறு விதமாக தோன்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

    முதன்முதலாக கிருதா யுகத்தில் திருவண்ணாமலை அக்னி சொரூபமாக அக்னி மலையாக நெருப்பு பிழம்பாக இருந்ததாம். அடுத்ததாக மாணிக்கம் மலையாக திரேதா யுகத்திலும், தாமிர மலையாக துவாபர யுகத்திலும் கூறப்படுகிறது. தற்போது கல் மலையாகவும் உள்ளது.

    முக்தி என்று சொன்னாலே ஈசனின் திருவடியை அடைவது தான். அதேபோல அண்ணாமலையாரே நினைத்தாலே முக்தி. சிவபெருமானே மலையாக வைத்திருக்கும் தளம் தான் திருவண்ணாமலை. சிவபெருமானுக்கு உரிய தளங்களில் அக்னி தளமாகவும் உள்ளது. அதே போல சித்தர்களின் சொர்க்க பூமி திருவண்ணாமலை. இதற்கடுத்து தான் அண்ணாமலை என்று பெயர் உருவானது.

    அண்ணுதல் என்றால் நெருங்குவது என்று அர்த்தமாகும். இதற்கு எதிர்மறையான அர்த்தம் கொண்டது, அண்ணாமலை அதாவது நெருங்க முடியாதது என்ற அர்த்தமாகும். அடி முடி காணா அண்ணாமலையார் என்ற புகழ்பெற்ற பிரம்மன் மற்றும் விஷ்ணுவின் கர்வம் அழித்த புண்ணித தலம் இதுதான்.

    மேலும் சித்தர்களுக்கு எல்லாம் சித்தர் சிவபெருமான் தான். இதனால் தான் 18 சித்தர்களும், அவர்களின் சீடர்களான188 சித்தர்களும் அரூபமாக திருவண்ணாமலையில் இருக்கிறார்க்ள். அதேபோல திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலைப்பகுதியில் பல்வேறு சித்தர்களின் சமாதிகளும் உள்ளன.

    • திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
    • பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி பவுர்ணமி வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி வருவதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு.
    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்க நர்த்தன காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-2 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி இரவு 7.23 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: கேட்டை பின்னிரவு 2.54 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்க நர்த்தன காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் வார திருமஞ்சனம். ஆலங்குடி குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி சிறப்பு குரு வார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-சாதனை

    கடகம்-சிறப்பு

    சிம்மம்-திறமை

    கன்னி-வெற்றி

    துலாம்- விருத்தி

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-கடமை

    கும்பம்-கண்ணியம்

    மீனம்-கட்டுப்பாடு

    • திருவொற்றியூரில் தோன்றி திருவிளக்கு ஏற்றும் தொண்டால் சிவத்தொண்டர் புராணத்தில் இடம் பெற்றவர் கலியநாயனார்.
    • இவர் திருவொற்றியூர் சக்கரபாண்டித் தெருவில், எண்ணை ஆட்டி விற்கும் சொக்கர் குலத்தில் தோன்றியவர்.

    திருவொற்றியூரில் தோன்றி திருவிளக்கு ஏற்றும் தொண்டால் சிவத்தொண்டர் புராணத்தில் இடம் பெற்றவர் கலியநாயனார்.

    இவர் திருவொற்றியூர் சக்கரபாண்டித் தெருவில், எண்ணை ஆட்டி விற்கும் சொக்கர் குலத்தில் தோன்றியவர்.

    இவர் இயல்பாகவே ஓற்றியூர் கோவில் இறைவன் மேல் சிவபக்தி கொண்டவர்.

    இரவும், பகலும் தானே ஆட்டிய எண்ணையை எடுத்துச் சென்று கோவிலில் விளக்கேற்றும் தொண்டு செய்து வந்தார்.

    இவரின் உண்மையான பக்தியை உலகறியச் செய்ய எண்ணினார் ஒற்றீசர். ஈசனின் திருவிளையாடலால் மிகப்பெரிய செல்வந்தராக இருந்த கலியநாயனார் செல்வங்களை இழந்தார்.

    வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். என்றாலும் கடன் பெற்று விளக்கு ஏற்றும் தொண்டினை விடாமல் தொடர்ந்து செய்தார்.

    ஒரு கட்டத்தில் அவருக்கு கடன் கொடுக்க யாரும் முன்வரவில்லை இதனால் கூலி வேலை செய்து பொருள் பெற்றும், தன் வீட்டை விற்றும் கோவிலில் தீபம் ஏற்றினார்.

    மேலும் விளக்கேற்ற பொருள் வேண்டி, தன் அன்பு மனைவியாரையே அடிமையாக விற்க முனைந்தார். இதை யாரும் ஏற்கவில்லை.

    ªபாருளின்றி தொண்டு தடைபட்டு விட்டதே என வருந்தி கோவில் வந்தார். மணி வனத் திருவிளக்கு மாளின் யானும் மாள்யேன் என்று தன் கழுத்தை அறுத்து ரத்தத்ததை எண்ணையாக ஊற்றி விளக்கு ஏற்றமுனைந்தார்.

    கலிய நாயனாரின் ஈடு, இணையற்ற பக்தியைக் கண்டு கருணையுடன் வெளியிட்ட ஒற்றீசர் அவருக்குச் சிவபதம் தந்து பெருந்தொண்டராக ஆக்கிக் கொண்டார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக காட்சி தருகின்றார்.

    • சதுரானை பண்டிதர் கேரள நாட்டிலிருந்து வந்தவர். சோழ, அரசர் ராஜ ஆதித்தனுக்கு நண்பர் ஆவார்.
    • கேரள நாட்டு முறைப்படி ஸ்ரீ வடிவுடையம்மனுக்கு பூஜை முறைகள் கடைப்பிடிக்க இவரே காரணமாகும்.

    சதுரானை பண்டிதர் கேரள நாட்டிலிருந்து வந்தவர். சோழ,  அரசர் ராஜ ஆதித்தனுக்கு நண்பர் ஆவார்.

    கேரள நாட்டு முறைப்படி ஸ்ரீ வடிவுடையம்மனுக்கு பூஜை முறைகள் கடைப்பிடிக்க இவரே காரணமாகும். 

    ஆதிசங்கரர் நியமித்த கேரள நம்பூதிரிகளால் இவர் காலத்திலேயே விரிவாக விளக்கமாக பூஜை செய்யப்பட்டது. 

    முதல் ராஜேந்திரன், முதல் குலோத்துங்கன் ஆகிய சோழ வேந்தர்கள் காலத்தில் திருவொற்றியூரில் சதுரனை பண்டிதர்கள் வழிவழியாக சிவபூஜை செய்து வந்தனர். 

    அந்த பரம்பரை இன்றும் தொடர்கிறது.

    • அத்தகைய பட்டினத்தார் முக்தி பெற்ற இடம் திருவொற்றியூர்.
    • இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார். பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்

    சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், திருவொற்றியூருக்கு வந்து திருவருள் பெற்று கடற்கரை ஓரத்தில் உயிரோடு ஜீவ சாமாதியான சித்தர் ஆவார்.

    காவிரிபூம்பட்டினத்தில் நகரத்துச் செட்டியார் மரபில் தோன்றியவர் திருவெண்காடர், இவர் திருமணமானபின் குழந்தை பாக்கியம் கிடைக்காததால் சிவனிடம் முறையிட்டார்.

    அவர் மீது மனம் இறங்கிய திருவிடைமருதூர் ஈசனே மருதவாணர் என்ற பெயரில் வளர்ப்பு மகனாக வந்தார், வளர்ந்தார், கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வந்தார்.

    வறட்டிகளோடு ஒரு கிழிந்த ஒலையையும் தந்தார் மறைந்தார். "காதற்றஊசியும் வாராது காணும் கடை வழிக்கே" என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.

    சிவனைத் தவிர எல்லாச் செல்வமும் பொய் என்ற ஞானம் பெற்றார். செல்வம், மனைவி, உறவு யாவற்றையும் துண்டித்துக் கொண்டு துறவு பூண்டார். கோவில் தோறும் இறைவனை வழிபட்டு தான் பெற்ற ஞானத்தை பாடினார்.

    தாயார் மறைந்தபோது தனது பாடல்களால் அவருக்குக் கடமைகளைச் செய்தார்.

    சுவையற்றபேய்க் கரும்பு இனித்த இடமாகிய திருவொற்றியூர் தனக்கு முக்தி தரும் இடம் என அறிந்து இங்கு வந்து கடற்கரை அருகே சித்துக்கள் செய்தார்.

    "பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைபோல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

    அத்தகைய பட்டினத்தார் முக்தி பெற்ற இடம் திருவொற்றியூர்.

    இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார். பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.

    திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார்.

    பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார். மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார். வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.

    இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்த போது அவர் வெளியே வரவில்லை. தோண்டி பார்க்கும் போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார். திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

    முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார். இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது. சமீபத்தில் இந்த கோவில் சீர் செய்யப்பட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது.

    திருவொற்றியூர் பற்றி இவர் பாடிய ஒருபா ஒருவது 11ஆம் திருமுறையில் உள்ளது.

    பட்டினத்தார் முக்தி பெற்றதால் இது முக்தித்தலம் என வழங்கப்படுகிறது. பட்டினத்தார் மரபினராகிய நாட்டுக்கோட்டை நகரத்துச் செட்டியார் இக்கோவிலை முக்தித் தலமாக இன்றும் போற்றி வணங்கி வருகின்றனர்.

    • தமிழ்த்தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.
    • இம்முருகப்பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன தந்து அருள்பாலித்து வருகிறார்.

    தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.

    சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் நத்தார்.

    தமக்கு ஏற்பட்ட வயிற்று வலி நோய் நீங்குமாறு திருவொற்றியூரில் கோவில் கொண்டுள்ள முருக பெருமானை வேண்டி திருவொற்றி முருகர் மும்மணிக்கோவையை பாடினார்.

    தமிழ்த்தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    இம்முருகப்பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன தந்து அருள்பாலித்து வருகிறார்.

    • ஸ்ரீ தியாகராஜபெருமானது பவனி பற்றியும் ஓட்டம் பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.
    • திருவொற்றியூர் முருகனுக்கு கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

    ராமலிங்க அடிகள் தனது 12வது வயதிலிருந்து 35வது வயது வரை 24 ஆண்டுகள் இடைவிடாமல் திருவொற்றியூருக்கு வந்து இறைவனை வணங்கினார். அங்குள்ள தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.

    அவர் அருளிச் செய்த 6 திருமுறைகளில் 3 திருமுறைகள் முற்றிலும் திருவொற்றியூரின் மேன்மையை உணர்த்துகின்றன.

    ஆதிபுரிஸ்வரர் மீது எழுத்தறி "பெருமான் மாலை" என 31 பாடல்களையும், வடிவுடையம்மன் மீது ஸ்ரீ வடிவுடை மாணிக்க மாலை என்ற 101 பாடல்களையும் பாடியுள்ளார்.

    ஸ்ரீ தியாகராஜபெருமானது பவனி பற்றியும் ஓட்டம் பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.

    திருவொற்றியூர் முருகனுக்கு கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

    "அருமருந்தே தணிகாசலம் மேவும் ஆருயிரே

    திருமருங்கார் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னதால்

    ஒருமருங்கு ஏற்ற என் செய்வேன்

    கற்பூர ஒளியினுக்கே" என்று வருந்தி பாடியுள்ளார்.

    • தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள செய்தியால் கவிபாடும் அருள்பெற்றார்.
    • சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒரு பெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.

    கம்பர், காளி பக்தர், எனவே தினமும் வட்டபாறை காளியம்மனை வணங்கிய பிறகே ராமாயணத்தை எழுதுவார்.

    இரவில் தமிழில் பாடல் எழுதும் போது வட்டபாறை நாச்சியார், பெயர் வடிவில் வந்து ராமாயணம் எழுதும் கம்பனுக்குத் தீபந்தம் ஏந்தி நின்றதைக் கம்பரே பாடியுள்ளார்.

    ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே

    வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை & பற்றியே

    நந்தாது எழுதற்கு நள்ளிரவில் மாணாக்கர்

    பிந்தாமல் பந்தம் பிடி

    தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள செய்தியால் கவிபாடும் அருள்பெற்றார்.

    சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒரு பெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.

    கம்பர், வான்மீகி ராமாயண வடமொழிகள் மூல படம் கேட்க ஒற்றியூர் சதுரானை மடம் வந்ததும், வட்டபாறையம்மன் அருளால் தமிழில் ராமாயணம் பாடியதும் தனிச்சிறப்புக்குரிய செய்தியாகும்.

    ×