என் மலர்
ஆன்மிகம்
- கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது.
- கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள்.
கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள்.
அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.
கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்த கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.
வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.
நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.
அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.
தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன. அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்தது.
'சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம். இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது.
- சூரசம்ஹாரம் முடிந்த பிறகு ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் நடைபெறும்.
- சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம்.
சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு.
சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான்.

இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக்கொண்டார்.
சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெரு வாழ்வு தந்தருள்கிறார்.
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புடைய முருகன்-சூரபத்மன் போர் எப்படி நடந்தது தெரியுமா?
மொத்தம் 6 நாட்கள் போர் நடந்தது. இந்த சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர் ஆகும். ஆண்டுதோறும் கந்த சஷ்டி அன்று இங்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
திருச்செந்தூரில் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் அதிகாலையில் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு நடுவே உள்ள ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுகிறார்.
ஆறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுரு, வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்ட திக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்கின்றனர்.

தினமும் உச்சிக்காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். ஆறாம் நாளன்று சூரசம்ஹாரம் செய்வதற்காக வள்ளி, தெய்வானை இல்லாமல் முருகப பெருமான் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்.
முன்னதாக சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை வலம் வருவான்.
அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும், இங்கும் அசைத்தபடி வருவான். சூரன் முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள்.
சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகனும் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நிற்பார்கள். விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள்.
இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருள்வார். அப்போது இயற்கை காட்சியில் கூட மாற்றங்கள் ஏற்படும்.
கடல், ஆகாயத்தின் செந்நிறமாக மாறும். கடற்கரையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அசாதாரண அமைதி நிலவும்.
போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வரும். பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி செல்லும்.
இதைத்தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.
சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் அவன் நெற்றியில் குத்தி வீழ்த்துவார்.
இதைத்தொடர்ந்து உடலில் சிங்கமுகாசுரன் தலை பொருத்தப்படும். சிங்க முகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துவார்கள்.
அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படும். சூரபத்மனும் வீழ்த்தப்படுவான். இந்த போரின் போது பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.
சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றிக் கொண்டே இருப்பான். அவனை ஜெயந்திநாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டுகளிப்பார்கள். போரின் போது ஜெயந்தி நாதருடன் தேவர் படையும், சூரனுடன் அசுரர் படையும் இருப்பது போல் பக்தர்கள் இரண்டு பிரிவாக எதிர் எதிரே வேல் மற்றும் ஆயுதங்களை வைத்து கொண்டு செல்வார்கள்.
இந்த போரின் போது ஒரு கட்டத்தில் சூரன், விநாயகர் தலையுடன், ஜெயந்தி நாதர் முன்பு தோன்றுவான். அவனது மாயத்தை கண்டு சற்று தடுமாறும் ஜெயந்திநாதர், சூரனின் தந்திரத்தை புரிந்து கொண்டு அவனது யானை தலையையும் துண்டித்து விடுவார். நான்காவது மாமரமும், சேவலும் சூரனின் உடலில் பொருத்தப்படும்.
மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறந்து விடும். அத்துடன் சூரசம்ஹாரம் முடியும். சூரனை, ஜெயந்தி நாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக ஆட்கொள்வார். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
சூரசம்கார நிகழ்ச்சி முடிவடைந்ததும் 6 நாட்களாக சஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் கடலில் குளித்து விட்டு விரதத்தை முடித்து உணவு உட்கொள்வார்கள்.
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்த பின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர்.
சாயா என்றால் நிழல் எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.

தெய்வானை திருக்கல்யாணம்:
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார்.
இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்த சஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப் பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள் பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார்.
நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார்.
அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.
- கெட்டவை நீங்க, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது.
- உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது.
எத்தனை மந்திரங்கள், பாடல்கள், தோத்திரங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் மிகவும் விரும்பி படிப்பது சஷ்டி கவசமே. இது எளிமையான தமிழ் மொழியில் இருப்பதால் சொல்வதற்கும் எளிமையாக உள்ளது. எனவே அதிக அளவில் பெண்கள் சஷ்டி கவசம் படிக்கிறார்கள்.

கந்த சஷ்டி கவசத்தில் சுவாமிகள் கூறியது போல், நம் நினைவெல்லாம் முருகனாக இருந்தால் அஷ்ட லட்சுமிகள் நம் வீட்டில் வாசம் செய்வார்கள். சஷ்டி விரதம் இருப்பதினால் நவகிரகங்களும் நமக்கு நன்மையே செய்யும்.
இந்த தெய்வ சிந்தனை வருடத்தில் ஒருமுறை, ஒரு நாளோ அல்லது மூன்று நாளோ, இல்லை ஆறு நாளோ இருந்தால், நம் மனதுடன் உடலும் சுத்தமாகிறது.
சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எளிய உணவை உட்கொண்டு, அதிக வேலை செய்யாமல், மவுனத்துடன் இருப்பதால் உடலில் நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறி நம் உடலும், குடலும் சீராகிறது.
விரதத்தால் நம் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. மனதில் இருந்து உருவாகும், காம, குரோத அறுவகை கெட்ட குணங்களையும், ஆறுமுகன் எப்படி சூரபத்மனை அழித்தானோ அவ்விதமே நமது குணங்களையும் அழித்து விடுகிறான்.
கெட்டவை நீங்க, நல்லவை நம் மனதில் குடியேறுகிறது. உள்ளமும் உடலும் புத்துணர்ச்சி பெறுகிறது. முருகனது கருணை எங்கும். எப்பொழுதும் பொங்கி வழிகிறது. நமக்கு முருகனிடம் எவ்வளவு ஈடுபாடு உள்ளது என்பதை காட்டும் உறைகல் தான் இந்த விரதங்கள். நம்மால் இயன்றளவு விரதம் இருக்கலாம். வீட்டிலேயே விரதமிருந்து, ஆறுமுகனை அர்ச்சிக்கலாம். வீட்டில் வசதியில்லாதவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம். முடிந்தவர்கள் திருச்செந்தூர் போய் வரலாம்.
முடியுமளவு, உள்ளத்தூய்மையுடன் முருகப்பெருமானை வணங்கி அவனது அருளைப் பெறலாம்.
முருகனுக்கு உகந்தமலர்கள்:-
மல்லிகை, முல்லை, ரோஜா, திருநீற்றுப் பச்சை, சாமந்தி, செவ்வரளி.
அபிஷேகப் பலன்கள்:-
மஞ்சள் நீர்- வசீகரம், சந்தனம்- லட்சுமிகடாட்சம், பஞ்சாமிர்தம்- ஜெயம், தயிர்- மக்கட்பேறு, பால்- ஆயுள் விருத்தி, தேன் - இனிய குரல், இளநீர் - யோகம்.
முருகனை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும். கார்த்திகை விரதம், செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட செவ்வாய் தோஷங்கள் விலகும்.
- வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பு.
- திருச்செந்தூர் தலத்தில் 2 மூலவர்கள் உள்ளனர்.
சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்துக்கு புறப்பட்டு வந்தார். முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார்.
அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்னர் வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார்.

முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்ட தால் இவர், "ஜெயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார்.
பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திரு ஜெயந்திபுரம்' என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.
கோவில் அமைப்பு
முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாகவும் அமைந்துள்ளன.
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.
தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.
சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. 130 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எனவே பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.
ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.
கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
சூரனை வதம் செய்த பிறகு படையினர் தாகம் தீர்க்க கடலோரத்தில் முருகன் வேலால் குத்தி தண்ணீர் வரவழைத்தார். இன்றும் தண்ணீர் வரும் அது, நாழிக்கிணறு எனப்படுகிறது.
கடலோரத்தில் உள்ள அந்த நாழிக்கிணறு கொஞ்சமும் உப்பாக இல்லாமல் நல்ல தண்ணீராக இருப்பது குறிப்படத்தக்கது. இத்தலத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன.
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

திருச்செந்தூரில் சண்முகருக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.
தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர்.
திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின் போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிப்பார்.
பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள், நடராஜர் என ஐந்து உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.
முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக் கோவிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும்.
இக்கோவில் கடற்கரையில் இருக்கும் "சந்தன மலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது.
தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.
திருச்செந்தூரில் முருகன் "ஞான குரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.
இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இவருக்கு செய்யப்படுகிறது எனவே திருச்செந்தூர் தலத்தில் 2 மூலவர்கள் உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள் பிரகாரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.
திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக் கொள்ள சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்துத் தொடாமல் போடுவார்கள்.
விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம்.
திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். இதையடுத்து முருகன் அருள் வேண்டி பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்குவார்கள்.
- வருகிற 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.
- புஷ்பாபிஷேகத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் மலர்களை கொண்டு வரக்கூடாது.
திருவனந்தபுரம்:
சபரிலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
இந்த சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது.
இதற்கிடையே நடப்பு சீசனில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதி, சாலை மேம்பாடு, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் சபரிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு பாதுகாப்பில் அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, சபரிமலையில் தேவையற்ற பொருட்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சபரிமலையில் நடத்தப்படும் புஷ்பாபிஷேகத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் மலர்களை கொண்டு வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
தற்போது சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரரின் ஆலோசனையின் பேரில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களது இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் தடை விதித்து உள்ளது.
மேலும் பம்பை ஆற்றில் பக்தர்கள் அணிந்து வரும் ஆடைகள், மாலைகள் உள்ளிட்டவற்றை போட்டு செல்வதற்கும் தடை விதித்துள்ளது.
- 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.
அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையொட்டி சூரசம்ஹாரத்தை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கடற்கரைகளில் காத்திருக்கின்றனர்.
சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இன்று பிற்பகல் சுமார் 6 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தனர்.
பாதுகாப்பிற்கு 4500 போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.
கடலில் புனித நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடலோர பாதுகாப்பு குழுமம் போலிசார் டி.எஸ்.பி. பிரதாபன் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு புறநகர் பகுதிகளில் 9 இடங்களில் சுமார் 7000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் காவல்துறை சார்பில், தயார் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மற்றும் அதன் அருகில் தற்காலிக பஸ் நிறுத்து மிடம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு வீரபாண்டியன் பட்டினம் அருகே உள்ள ஜே.ஜே. நகர், அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் நெல்லை சாலையில் அன்பு நகர், மற்றும் அரசு டாஸ்மாக் அருகில் சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நாகர்கோவில் செல்லக்கூடிய பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்து வதற்கு பரமன்குறிச்சி சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகிலும் ஆம்னி பஸ்களுக்கும், தற்காலிக பஸ்கள் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பஸ் நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப பாதைகள், வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மற்றும் லிங்க் மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்கு தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சகல ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா.
- பிள்ளை ஸ்ரீ லோகாச்சாரியார் தேரோட்டம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-21 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி இரவு 9.32 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூராடம் காலை 9.55 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சகல ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா. பிள்ளை ஸ்ரீ லோகாச்சாரியார் தேரோட்டம். வள்ளியூர் ஸ்ரீ முருகப் பெருமான் காலை வெள்ளை சாற்றி தரிசனம், மாலை பச்சை சாற்றி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான், சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-ஜெபம்
மிதுனம்-வரவு
கடகம்-தாமதம்
சிம்மம்-நலம்
கன்னி-அன்பு
துலாம்- நட்பு
விருச்சிகம்-புகழ்
தனுசு- ஆதரவு
மகரம்-இன்பம்
கும்பம்-மேன்மை
மீனம்-லாபம்
- திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும்.
- நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும்.
தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
தேவர்களை மறுத்து நிடத நாட்டு மன்னன் நளனைக் கரம் பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி.
இதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாக சோதித்தார்கள்.
எல்லா செல்வத்தையும் இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து சேவகனாக மாறினான் நளன்.
பின்னர் இங்குள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தான்.
அதனால், சனிபகவானின் கருணையால் இழந்த தன் நாட்டையும் அளவற்ற செல்வங்களையும் பெற்றான் என்று தலவரலாறு கூறுகிறது.
சனிபகவானின் கருணையை எண்ணி நளராஜனே பலவிதமான பண்டிகைகளை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தான்.
இவன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது.
ஜன்மச் சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, மத்திய சனி, ஆத்ய சனி, ஏழரை சனி என்று சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம்.
நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாத்தி சனீஸ்வரனை வணங்கினால் தீராத எந்தத் துயரமும் தீரும்.
திருநள்ளாறு வரும் பக்தர்கள் நளதீர்த்தம் சென்று, வலமாகச் சுற்றி வணங்கி குளத்தின் நடுவே இருக்கும், நளன், தமயந்தி சிலைகளை வணங்க வேண்டும்.
நல்லெண்ணெய் தேய்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நின்று 9 முறை மூழ்க வேண்டும்.
குளித்து துவட்டி வேறு ஆடை அணிந்தபிறகு, பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்களில் உள்ள புனித நீரை தெளித்துக்கொள்ள வேண்டும்.
திருக்கோவிலினுள் இருக்கும் ஸ்வர்ண கணபதி, முருகர் சந்நிதியை வணங்கி, திருநள்ளாற்றின் நாயகர் தர்ப்பாரண்யேஸ்வரரையும், அடுத்து தியாகேசரையும் வணங்க வேண்டும்.
தொடர்ந்து பிராணேஸ்வரி அம்மனை வணங்கிய பின்னரே இங்கிருக்கும் சனிபகவானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
- சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்யலாம்.
- எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைக்கலாம்.
எள் தீபம் ஏற்றுவது தொடங்கி அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜைகளைச் செய்து சனிபகவானுக்கான பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம்.
சனிபகவானை சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தின் எல்லா நாள்களிலும் வரும் சனிஹோரை நேரத்தில் வழிபடலாம்.
இதனாலும் கூடுதல் பலன் கிட்டும்.
கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட, சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் ஒருவேளை உபவாசம் இருத்தல் நல்லது.
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கறுப்பு வஸ்திரம், வடைமாலை சாத்தி, எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்யலாம்.
எள்ளால் ஆன இனிப்புப் பலகாரங்களைப் பெருமாளுக்கும் சனிபகவானுக்கும் படைக்கலாம்.
சனிபகவானின் அருளினைப் பெற ஆஞ்சநேயர், கணபதியை வணங்கலாம். சனிபகவான் நீதிமான், நியாயவான் என்று போற்றப்பெறுபவர்.
நமக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்து, ஈஸ்வரனை வழிபட்டு வந்தால் அதிக பாதிப்பின்றி வாழலாம்.
அள்ளிக்கொடுப்பதில் வள்ளலான சனிபகவானை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறலாம் என்பதே ஆன்மிகப்பெரியவர்களின் நம்பிக்கை.
அதை பக்தர்களும் கடைப்பிடித்து நலம் பெறலாம்.
- சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார்.
- தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.
சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம்.
தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது.
இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர்.
அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி.
நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது.
சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார்.
தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.
சனிபகவானின் தோஷம் நீங்க விரும்புபவர்கள், இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் அருளிய "போகமார்த்த பூண்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் பாடுவது நல்லது.
சமணர்களுக்கு எதிரான சம்பந்தரின் அனல் வாதத்தில், இந்தப் பதிகம் எழுதப்பட்டிருந்த சுவடிகள் மட்டும் கருகாமல் இருந்ததால் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புப் பெயரால் வழங்கப்படுகிறது.
விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர்.
தமிழகத்தின் சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று. விடங்க என்றால் 'செதுக்கப்படாத மூர்த்தி' என்று பொருள்.
ஏழு சுயம்புத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.
- இந்த வரலாற்றை தமிழில் ‘நளவெண்பா’ என்ற பெயரில் புகழேந்திப் புலவர் பாடியுள்ளார்.
- திருநள்ளாறு தல புராணமும் இதை விரிவாகக் கூறுகிறது. நளசரித்திரத்தை படிப்போர் சனிதோஷம் நீங்கப்பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
முன்னொரு காலத்தில் நிடதநாட்டை ஆண்டுவந்த நளமகாராஜன் திருநள்ளாறு வந்து ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு சனி தோஷம் நீங்கப் பெற்றான்.
பிறகு இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்தான்.
நளதீர்த்தம், நளவிநாயகர் கோவில், சனிபகவானுக்கு கோவில் முதலியவற்றை அமைத்ததோடு, பல விழாக்கள் முறைப்படி தவறாமல் நடைபெறவும் தகுந்த வழி முறைகளை செய்துவிட்டு தனது நாட்டிற்கு திரும்பினான்.
இந்த வரலாற்றை தமிழில் 'நளவெண்பா' என்ற பெயரில் புகழேந்திப் புலவர் பாடியுள்ளார்.
திருநள்ளாறு தல புராணமும் இதை விரிவாகக் கூறுகிறது. நளசரித்திரத்தை படிப்போர் சனிதோஷம் நீங்கப்பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
இதைப்போல கலிங்கத்து அரசனும் இக்கோவிலில் வழிபட்டு சனிதோஷம் நீங்கப் பெற்றான்.
அதனால் இக்கோவிலிலேயே தங்கி பல திருப்பணிகளை செய்து வந்தான்.
தூயகண்டன் என்னும் அரசன் தனக்கு ஆண்குழந்தை பிறந்ததன் காரணமாக பெருமகிழ்வு கொண்டு கோதாவரி
நதிக்கரையில் யாகம் நடத்தி அந்தணர்களுக்கு பசுக்களை தானமாக வழங்கினான்.
அப்போது இரண்டு அந்தணர்களுக்கிடையே தாங்கள் தானமாகப்பெற்ற பசுக்களின் காரணமாக சண்டை ஏற்பட்டது.
அதில் ஒருவன் மற்றொருவனை ஒரு தடியை வீசி அடிக்க முயன்றபோது அந்த தடி விலகி பசுவின் தலையைத் தாக்கியது.
உடனே அந்த பசு துடிதுடித்து இறந்தது. அதனால் அந்த அந்தணனுக்கு பாவம் ஏற்படவே அவன் புலையனாக மாறித்திரிந்து கொண்டிருந்தான்.
பலகாலம் அலைந்து திரிந்த அவன் உரோமச முனிவரைச் சந்தித்தான்.
உடனே அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி இப்பாவத்திலிருந்து விமோசனம் பெறும் வழியை கூறி அருளுமாறு வேண்டிக்கொண்டான் அவர்.
நீ பாவம் நீங்கப்பெற்று நல்வாழ்வு பெற ஒரே வழிதான் உள்ளது. நீ உடனே திருநள்ளாறு செல்.
அத்தலத்தில் சனி பகவான் சிவபெருமானின் கருணையைப் பெற்றுள்ளார்.
அங்கு கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள சனிபகவானை தரிசனம் செய்து வழிபட்டால் உன் துன்பங்கள் பறந்து போகும் என்றருளினார்.
அதைக் கேட்டு ஆனந்தமடைந்த அவன் திருநள்ளாறு சென்று தீர்த்தத்தில் மூழ்கி கோவிலில் உள்ள சனி பகவானை வழிபட்டதும் பாங்கள் நீங்கி பழையபடி அந்தணன் வடிவம் பெற்றான் என்கிறது தலபுராணம்.
திருநள்ளாறு ஸ்தலத்து இறைவனைப் போற்றி திருஞான சம்பந்தர் நான்கு தேவாரப் பதிகங்களும், திருநாவுக்கரசர் (அப்பர்) இரண்டு தேவாரப் பதிகங்களும், சுந்தரர் ஒரு தேவாரப் பதிகமும் பாடியுள்ளனர். வள்ளலாரும் பாடியுள்ளார்.
- தமது கை பிரம்ம தண்டத்தால் பிரம்ம தீர்த்தத்தை உண்டாக்கினார்.
- இங்கு தோன்றிய சுயம்புலிங்கமே திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்.
படைப்பு தொழிலால் செருக்கடைந்த பிரம்மா, சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு சிருஷ்டி தொழிலை இழந்தார்.
பின்னர் பிரம்மா சிவபெருமான் கட்டளைப்படி எல்லாம் வல்ல பரம்பொருளை நோக்கி தவமியற்ற வந்த இடமே தர்ப்பாரண்யம் என்ற திருநள்ளாறு.
இங்கு பிரம்மா வேதநெறிப்படி தர்ப்பைகளால் ஆன கூர்ச்சத்தில் சிவபெருமானை ஆவாஹனம் செய்து வழிபட்டார்.
பிரம்மாவினுடைய பக்திக்கு இரங்கி சிவபெருமான் தர்ப்பைகளால் ஆன கூர்ச்சத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினார்.
பிரம்மா அந்த லிங்கத்தைப்பக்திப் பெருக்குடன் வழிபட சிவபெருமான் அவருக்கு நேரில் காட்சி தந்ததோடு வேதங்களின் உட்பொருளையும், பல்வேறு சாஸ்திரங்களையும் பிரம்மாவுக்கு போதித்து, சிருஷ்டித் தொழிலின் ரகசியங்களை விளக்கி அத்தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு அருள் புரிந்தார்.
பிரம்மாவுக்கு விரும்பிய வரங்களையும் கொடுத்து அவரை மீண்டும் சிருஷ்டிகர்த்தாவாக நியமித்தார்.
அதைத் தொடர்ந்து பிரம்மா பலகாலம் இங்கேயே தங்கி இறைவனுக்கும் இறைவிக்கும் கோவில்களை அமைத்தார்.
தமது கை பிரம்ம தண்டத்தால் பிரம்ம தீர்த்தத்தை உண்டாக்கினார்.
இங்கு தோன்றிய சுயம்புலிங்கமே திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர்.
இந்த சிவலிங்கத் திருமேனியில் தர்ப்பை கூர்ச்ச வடு இருப்பதை இன்றும் காணலாம்.
பிரம்மாவோடுகூட அவர் நாவில் குடியிருக்கும் சரஸ்வதி தேவியும் இங்கு சிவபூஜை செய்து நலம் பல பெற்றார்.
பிரம்மாவின் வாகனமாகிய அன்னப் பறவையும் இங்கு சிவபூஜை செய்து சிறப்புகளை அடைந்தது.
இவர்களின் பெயரால் இங்கு பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் அன்னதீர்த்தம் என்று மூன்று விசேஷமான தீர்த்தங்கள் உள்ளன.
இவர்களைத் தொடர்ந்து திருமால், விராட மன்னன், போஜன், வசுக்கள், சிகண்டி, துரோணர், அர்ஜுனன்,கவுதம ரிஷி, காஸ்யப முனிவர், அகஸ்திய மகரிஷி, கலிங்க மன்னன், அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், வருணன், யமன், நிருதி, வாயு, குபேரன், ஈசானன் முதலானோரும் இத்தலத்தில் பூஜைகள் செய்து மேன்மை பெற்றுள்ளனர்.






