என் மலர்tooltip icon

    மற்றவை

    • ஹ்யூண்டாய் கம்பனி சமீபத்தில் டெக்சாஸில் இருந்து பனாமா கால்வாய் வழியே தென்கொரியாவுக்கு ஆள் இல்லாத ஒரு கப்பலை வெற்றிகரமாக அனுப்பி வெள்ளோட்டம் பார்த்தது.
    • இதனால் சம்பளம் மட்டும் மிச்சம் என இல்லை. ஏராளமான நன்மைகள். மனிதர்கள் போகமுடியாத குளிர் உள்ள பகுதிகளுக்கு கூட இக்கப்பல்கள் போகும்.

    டிரைவர் இல்லாத கார்கள், லாரிகள் சந்தையில் நுழைந்துள்ளன. அதேபோல் அதிகம் பேசப்படாத புரட்சி கடலில் நடந்துகொண்டுள்ளது. அதுதான் கேப்டனும், மாலுமிகளும் இல்லாத கப்பல்கள்.

    சில வாரங்களுக்கு முன்பு மே ப்ளவர் எனும் சரக்கு கப்பல் அட்லாண்டிக் கடலையே கடந்து கனடாவுக்குள் வெற்றிகரகமாக நுழைந்தது. கப்பலில் மருந்துக்கு கூட ஒரு ஆள் இல்லை. ஏ.ஐ உதவியுடன் கப்பல் இயக்கபட்டது.

    நார்வேயில் உரக்கம்பெனி ஒன்று துறைமுகத்துக்கும், தன் பாக்டரிக்கும் இடையே ஆள் இல்லாத கப்பலை உரம் கொன்டு போக பல ஆண்டுகளாக பயன்படுத்திக்கொண்டுள்ளது.

    ஹ்யூண்டாய் கம்பெனி சமீபத்தில் டெக்சாஸில் இருந்து பனாமா கால்வாய் வழியே தென்கொரியாவுக்கு ஆள் இல்லாத ஒரு கப்பலை வெற்றிகரமாக அனுப்பி வெள்ளோட்டம் பார்த்தது.

    இதனால் சம்பளம் மட்டும் மிச்சம் என இல்லை. ஏராளமான நன்மைகள். மனிதர்கள் போகமுடியாத குளிர் உள்ள பகுதிகளுக்கு கூட இக்கப்பல்கள் போகும். கப்பலை இயக்குவதிலும் கேப்டனை விட ஏ.ஐ சிறப்பாக செயல்பட்டு ஏராளமான எரிபொருளை மிச்சபடுத்துகிறதாம். மாலுமிகளுக்கு எடுக்கவேண்டிய இன்சூரன்சு, பொருட்களை ஏற்றி, இறக்குவதில் அவர்களுக்கு அடிபட்டால் கொடுக்கும் நட்ட ஈடு எல்லாம் மிச்சம்.

    மேலும் ஆள் இல்லாத கப்பலை எத்தனை மெதுவாகவும் செலுத்தி எரிபொருளை மிச்சபடுத்தலாம். ஆட்கள் இருந்தால் ஒவ்வொரு நாளுக்கும் சம்பளம் கூடுதலாக கொடுக்க வேண்டும்.

    அடுத்த சில ஆண்டுகளில் உலக சரக்கு கப்பல் போக்குவரத்து முழுக்க ஆள் இல்லாத கப்பல்கள் மூலம் தான் நடைபெறும் என்கிறார்கள்.

    எதாவது மரைன் எஞ்சினியரின் மாதிரி கோர்ஸ்கள் படிப்பது என்றால் இதை மனதில் கொள்ளவும்.

    -நியாண்டர் செல்வன்

    • வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான்.
    • மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.

    திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தார்கள் தொல் தமிழர்கள்.

    அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் முதலுதவிக்கு அவ்வாறு செய்து வைத்தார்கள். எத்தகைய அமங்கலமும் நடக்காமல் இருந்தால் அது மங்கலம் தானே !

    வாழை இலையில் உண்பது நஞ்சு நீக்க மட்டும் காரணம் அல்ல. வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.

    சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

    சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

    வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.

    வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.

    வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், விரைவாக காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது.

    - அண்ணாமலை சுகுமாறன்

    • திராவிடர் கழகம் சார்பில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடக்க இருந்தது.
    • அதற்காக ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தை அண்ணா எழுதினார்.

    ஒரு முறை கணேசன் வீட்டுத் தெருவில் கட்டபொம்மன் ஆட்டம் நடந்தது. கட்டபொம்மன் நாடகத்தை மட்டுமே நடத்தும் கம்பளத்தார் கூத்து அங்கே நடந்தது. கூத்துப் பார்க்கப் போன கணேசனுக்குக் கூத்தில் வெள்ளைக்கார சிப்பாய்களில் ஒருவனாக வீர நடை போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கணேசன் போட்ட முதல் வேஷம் அதுதான். இப்படி நடித்ததற்காக இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான அப்பாவிடம் முதுகில் அடி வாங்கினார் கணேசன். அடி வாங்கிய கணேசனுக்கு காய்ச்சலும் வந்தது; நடிக்கும் ஆசையும் வந்தது.

    வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போவது வாடிக்கையானது. கடைசியில் "அப்பா அம்மா இல்லாத அனாதை நான்" என்று பொய் சொல்லி எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியில் போய் சேர்ந்தான் கணேசன்.

    திராவிடர் கழகம் சார்பில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடக்க இருந்தது. அதற்காக 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தை அண்ணா எழுதினார். நாடகத்தை எழுதிய உடன் நடிகர் டிவி நாராயணசாமியிடம் "உனக்காகவே ஒரு நாடகத்தை எழுதி இருக்கிறேன். நீதான் அதில் நடிக்கவேண்டும்" என்று சொன்னார். அண்ணா சொன்னவுடன் சத்ரபதி சிவாஜி வேடத்தில் எம்ஜிஆரை நடிக்கச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று டி.வி.என் நினைத்தார்.

    டி.வி.என், எம்ஜிஆரிடம் சென்றார். "சிவாஜி வேடத்தில் நடிக்கிறீர்களா?" என்று கேட்டார். நடிக்கிறேன் என்று விருப்பம் தெரிவித்த எம்ஜிஆரை சிவாஜி வேடத்துக்குப் பொருத்தமானவர் என்று அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எம்ஜிஆரின் சிவந்த நிறமும் கட்டான உடல்வாகும் அண்ணாவைக் கவர்ந்தது. தான் கற்பனை செய்த சிவாஜி இவர்தான் என்று அவரும் எம்ஜிஆரை விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டார்.

    எம்ஜிஆருக்கு சிவாஜி உடைகள் தைக்கப்பட்டன. வசனம் ஒப்படைக்கப்பட்டது. வசனத்தை படித்துப் பார்த்த எம்ஜிஆர் ஒரு சில காட்சிகளில் வசனத்தைத் திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். டைரக்டர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கிய ராஜகுமாரி என்ற படத்தில் அப்போது எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்தார்.

    அண்ணாவுக்கு நேரம் கிடைக்காவிட்டால் நானே காட்சிகளைத் திருத்திக் கொடுக்கட்டுமா என்று கேட்டார் சாமி. அண்ணாவும் பெருந்தன்மையோடு அதற்கு சம்மதித்தார். ஆனால் அண்ணா எழுதி சாமி திருத்தி அதில் நடிப்பதா என்று எம்ஜிஆருக்குக் குழப்பமாக இருந்தது. அதனால் "இப்போது என்னால் நடிக்க இயலாது. மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று டி.வி.என்னிடம் சொன்னார் எம்ஜிஆர்.

    எம்ஜிஆர் நடிக்காத பட்சத்தில் எஸ்.வி.சுப்பையா, கே.பி. காமாட்சி ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. அவர்களும் நடிக்க மறுத்து விட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் திராவிடநாடு அலுவலகத்தில் கே. ஆர். ராமசாமி, சிவசூரியன், சிதம்பரம் போன்ற நடிகர்களோடு கணேசனும் தங்கியிருந்தார். அவர்களில் சிதம்பரம் "சிவாஜி வேடத்தில் நம்ம கணேசனைப் போட்டால் என்ன?"என்று டி.வி.என்னிடம் கேட்டார்.

    அண்ணாவிடம் சென்று "சிவாஜி நடிப்புக்கு கணேசனைப் போட்டால் என்ன?" என்று கேட்டார் டி.வி.என். "கணேசன் பெண் வேடங்களில்தானே நடித்துள்ளார். அவர் சரியாக வருவாரா?" என்று கேட்டு யோசித்தார் அண்ணா. "கணேசனைத் தயாரித்து விடலாம்" என்றார் டி.வி.என்.

    "கணேசா, நீ நடிக்கிறாயா?" என்று அண்ணா கேட்டதும், "என்னால் முடியுமா?" என்று கேட்டுத் தயங்கினார் கணேசன். "முயற்சி செய்து பார் கணேசா. உன்னால் முடியும்" என்று அண்ணா கூறினார். மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை கணேசனிடம் கொடுத்து, "நான் வீட்டுக்குச் சென்று வருகிறேன். நீ இதைப் படித்துக் கொண்டிரு. எப்படிப் பேசுகிறாய் பார்ப்போம்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

    அண்ணாவிடம் இருந்து 11 மணியளவில் வசனப்பிரதிகளைப் பெற்றார் கணேசன். மாலை ஆறு மணி போல் திரும்பி வந்தார் அண்ணா. "என்னவாயிற்று?" என்று கேட்டார் கணேசனிடம்.

    "வசனங்களை நான் பேசுகிறேன். நீங்கள் கேளுங்கள்" என்றார் கணேசன். அண்ணாவின் ஆற்றல்மிகு வசனங்களை உணர்ச்சிகரமாகப் பேசி சிவாஜியாகவே மாறிவிட்டார் கணேசன். அண்ணா எழுதிக்கொடுத்த காகிதங்களைப் பார்க்காமலேயே வசனங்களை அழகுற உச்சரித்தார் கணேசன். அண்ணா, கணேசனை கட்டித் தழுவிக்கொண்டார். "நீதான் சிவாஜி.. கணேசா" என்றார்.

    மாநாட்டில் நாடகத்தை ரசித்துப் பார்த்தார் பெரியார். "நான் பத்து மாநாட்டில் சொல்ல வேண்டிய கருத்துக்களை அண்ணா ஒரே நாடகத்தில் கூறிவிட்டார்." என்று பாராட்டினார். தொடர்ந்து, "யாரோ ஒரு சின்னப் பையன் சிவாஜி வேடத்தில் குறுக்க நெடுக்க ஓடிக்கொண்டிருந்தானே, அவன் யார்?" என்று கேட்டார்.

    பின்னாலிருந்து "அவன் பெயர் கணேசன்" என்று சொல்லி அவர் முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். "ஆமா கணேசன். சிவாஜி கணேசன்... நல்லா நடிச்சார். சிவாஜி மாதிரி இருந்தார்" என்று பாராட்டினார் பெரியார். "கணேசா இன்று முதல் நீ சிவாஜி" என்று சொல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இதற்குப் பிறகுதான் கணேசன் சிவாஜி கணேசன் ஆனார்.

    • அளப்பருந்தன்மையின் வளப்பெரும் காட்சியைத்தான் நாசாவின் சேம்சு வெபி வெளிநோக்கி படம் பிடித்திருக்கிறது.
    • தொலைவு, காலம், அறிவியல் நுட்பம் எல்லாம் செய்திகளில் கிடக்க, நான் அந்த வெளியின் அழகை மட்டும் துய்த்துக் கொள்கிறேன்.

    எங்கெங்கு காணிணும் சக்தியடா..

    இரவு வானத்தைப் பார்த்து,

    "பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்,

    நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி"

    என்று பாரதியார் பாடும்போது சொக்கித்தான் போனோம்.

    "எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

    ஏழு கடல் அவள் வண்ணமடா! –- அங்குத்

    தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்த

    தாயின் கைப்பந்தென ஓடுமடா"

    என்று பூப்பந்தை சத்தியாக்கி, அந்த சத்திக்கு ஏழுகடல்களை உடுப்பாக்கி, அது தங்கியிருக்கும் வெளியிலே ஓடும் அண்டங்களை, சத்தி தன் கையால் எறியும் பந்துகள் என்று பாரதிதாசன் சொன்னபோது, பாரதியார் நட்சத்திரம் மின்ன மின்ன வானில் விரித்து வைத்த கருநீலப் பட்டுப்புடவையானது ஒரு கோடி அண்டங்களை விரட்டி விளையாடியதைக் காணமுடிந்தது.

    பாரதியும் அவரின் தாசனும்தான் இப்படி வெளியுலாச் சென்றனர் என்றால், இவருக்கு 1600 ஆண்டு முன், மாணிக்க வாசகர் கூறுமொழி ஏறுமொழி.

    "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

    அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

    ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

    நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன".

    பாரதிதாசன் கோடி அண்டங்கள் என்றால், மாணிக்கவாசகர் 101 கோடிக்கும் மேல் என்று சொல்லி, அந்த வானத்து அண்டங்களை அளக்கமுடியாத எண்ணமுடியாத எண்ணிலி என்று கூறி வான மண்டிலங்களின் வளப்பமான பெருங்காட்சி அழகில் சொக்கி நின்று விடுகிறார்.

    அந்த அளப்பருந்தன்மையின் வளப்பெரும் காட்சியைத்தான் நாசாவின் சேம்சு வெபி வெளிநோக்கி படம் பிடித்திருக்கிறது. இதன் தொலைவு, காலம், அறிவியல் நுட்பம் எல்லாம் செய்திகளில் கிடக்க, நான் அந்த வெளியின் அழகை மட்டும் துய்த்துக் கொள்கிறேன். திகைத்துப் போகிறேன்.

    இந்தப் பேரழகைக் கண்டுதான் எண்ணிதான், "வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்குஞ் சுகம்" என்றாரோ வள்ளலார்!

    ஆம் இத்தனைப் பேரழகை உலா வந்தால் வேறென்ன செயமுடியும்! சும்மா இருந்து சுகிப்பதைத் தவிர? எழிற்கொள்ளை.

    -நாக இளங்கோ

    • சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.
    • அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம்பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

    அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம். அவர் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்த உத்தரவிட்டார்.

    அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து. "சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

    கலாம் சொன்னார்,

    அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

    காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.

    மாப்பிள்ளைக்கு 47.

    இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

    கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க.

    அப்புறம்அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது. அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை... என்று கலாம் சொல்லி முடிப்பதற்குள்,

    "அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.

    "பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

    ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

    அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.

    ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

    கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ மாணவி சரஸ்வதி நன்றி சொன்னாள்.

    "சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."

    "நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றோம்."

    சொன்னாள். கவனமாக குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

    "ஓகே, நாங்க புறப்படறோம்.

    அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

    "என்ன சார் ?"

    "உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

    "நான்தான் சார்."

    ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

    "எப்படீம்மா ?"

    ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.

    அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

    பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம். Only four students..."

    கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

    கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.

    "இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

    அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.

    எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

    இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.

    அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.

    அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

    காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

    சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி. அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம்பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

    யார் இந்தப் பெண்?

    எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

    மேடையில் நின்ற அந்தப் பெண்மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

    யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?

    எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

    "கலியமூர்த்தி சார், நான் இங்கே அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன். மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன்.

    நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?"

    "தெரியவில்லை" 6என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

    அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :

    "ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள். படிக்க வைக்கப்பட்டவள். நான்தான் துறையூர் சரஸ்வதி."

    இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

    "உங்களுக்கும் நன்றி. உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

    சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

    ஆச்சரியம்தான்.

    அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

    தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

    ஆம். அது ஒரு அழகிய கலாம் காலம்.

    -ஜான்துரை ஆசிர் செல்லையா

    • ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும்.
    • தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும்.

    உத்தராயணம் - தட்சிணாயனம் பற்றி பார்ப்போம்.. .

    தட்சிணாயனம்: 'தட்சண்' என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே தட்சிணாயன காலமாகும்.

    ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். ஆடி முதல் நாளன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் படுக்கையில் இருந்து விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோவில்களில் பஜனை பாடி அந்தத் தேவர்களை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

    உத்தராயணம்: 'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி என்று பொருளாகும். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும்.

    தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாகும். உத்தராயனமும், தட்சிணாயனமும் சேர்ந்த நம்முடைய ஓராண்டானது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.

    சூரியன் தெற்காகவும் வடக்காகவும் நகருவதாக நமக்குத் தோன்றுவது, புவியானது தனது அச்சில் இருபத்து மூன்றரை (231/2) பாகை சாய்ந்து சூரியனைச் சுற்றி வருவவதால் தான். அதனால்தான் காலநிலை மாற்றம் நமக்கு ஏற்படுகிறது.

    இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். விதைத்த பயிர்கள் செழித்து வளரும். அதனால்தான் "ஆடிப்பட்டம் தேடிவிதை" என்றனர்.

    தட்சிணாயனம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

    ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம்.

    உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயன காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

    இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலைகுளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    - வீரமணி

    • ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு.
    • அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

    அது காமராஜர் ஆட்சி காலம். அப்போதுதான் அந்த பிரச்சனை எழுந்தது. அதிகாரிகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். காமராஜர் ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, அதுவாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க காமராஜர் அனுமதி கொடுத்ததுதான்..!

    திண்டுக்கல்லை விட்டு வெகு தொலைவில், தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள் ஒரு நிர்வாகத்தினர்.

    ஒவ்வொரு ஊர்களிலும் இப்படி தொழிற்சாலைகளை தொடங்க, ஏராளம் பேர் அனுமதி கேட்டு வரிசையில் காத்திருந்தார்கள்.

    பத்தோடு பதினொன்றாக, அத்தோடு இதுவும் ஒன்றாக பரிசீலனையில் அதை வைத்திருந்தார்கள் அதிகாரிகள்.

    இந்த விஷயம் காமராஜரின் காதுகளுக்குப் போனது. அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார் காமராஜர்.

    'உடனடியாக அந்த திண்டுக்கல்காரர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்' என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார்.

    காமராஜரின் இந்த உத்தரவை கேட்டவுடன் அதிகாரிகள் குழம்பிப் போனார்கள்.

    'எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார் ? ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ ?' அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. உடனடியாக அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார்.

    "என்ன உங்கள் சந்தேகம் ? கேளுங்கள்!" என்றார்.

    அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

    "அவசரம் அவசரமாக அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க சொன்னேனே... அது ஏன் ? இதுதானே உங்கள் சந்தேகம் ?" தொடர்ந்து கேட்டார் காமராஜர்.

    "திண்டுக்கல் நகரத்துக்கும் அந்த தொழிற்சாலைக்கும் இடையே எத்தனை கிராமங்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா?"

    அதிகாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காமராஜரே பதில் சொன்னார்:

    "அறுபது கிராமங்கள்.

    அந்த 60 கிராமங்களுக்கும் இன்னமும் மின்சார வசதி செய்து கொடுக்க நம்மால் முடியவில்லை. காரணம் அதற்குத் தேவையான நிதி வசதி அரசிடம் இல்லை.

    அந்த புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்க, அவர்களுக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை நான் போட்டு இருக்கிறேன். அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?"

    அதிகாரிகள் காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

    காமராஜர் போட்ட ஒரே ஒரு நிபந்தனை, புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, அந்தத் தொழிற்சாலை நிர்வாகத்தினர், அவர்களது செலவிலேயே மின்கம்பங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சம்மதித்து விட்டார்கள் தொழிற்சாலை நிர்வாகத்தினர்.

    இதை அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்ன காமராஜர், "இப்ப சொல்லுங்க. திண்டுக்கல் நகரத்தில் இருந்து, அவர்களது தொழிற்சாலை வரை, அந்த தொழிற்சாலைக்காரர்கள், அவர்களது சொந்த செலவிலேயே மின் கம்பங்களை அமைத்து விடுவார்கள். அதற்குப் பின் நமது வேலை சுலபம்.

    மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அந்த இடைப்பட்ட 60 கிராமங்களுக்கும், ஏற்கனவே அமைக்கப்பட்ட அந்த மின்கம்பங்கள் மூலமாக, மின்சாரத்தை எளிதாக விநியோகம் செய்து விடலாம். இதனால் அரசாங்கத்துக்கு ஏராளமான மின்கம்பங்கள் அமைக்கும் செலவு மிச்சமாகும். அதற்காகத்தான் உடனடியாக அந்தத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கச் சொன்னேன். புரியுதா ?"

    ஆச்சரியத்துடன் அசந்து போய் அமர்ந்திருந்தார்கள் அதிகாரிகள்.

    எவ்வளவு ஒரு சமூக அக்கறை ?

    எப்பேர்பட்ட கூர்மையான சிந்தனை !

    அதற்கு முன்னும் சரி. அதற்குப் பின்னும் சரி.

    அந்த அளவுக்கு ஆற்றல் உள்ள, அக்கறை உள்ள அரசியல் தலைவரை, எந்த அதிகாரியும் கண்டது இல்லை.

    இப்படிப்பட்ட காமராஜரை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பக்கம் பக்கமாக பாராட்டி எழுதினார்கள் பத்திரிகையாளர்கள்..!

    அப்போதுதான் காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

    என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரை சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்.

    பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார் காமராஜர். வெகுநேர மௌனத்துக்குப் பிறகு காமராஜர் சொன்ன வார்த்தைகள்:-

    "ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். என்னை பாராட்டி எழுதாதீர்கள்."

    இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

    தொடர்ந்து காமராஜர் சொன்னார். "நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை.

    ஆனால் இந்த கக்கனை பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது. மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே..! அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனை பாராட்டி எழுதுங்கள்."

    காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.

    அவர் இப்படி சொல்லிய பிறகு, ஏற்கனவே காமராஜரை பாராட்டி எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், இன்னும் அதிகமாக அவரை பாராட்டி எழுத ஆரம்பித்தார்கள்.

    இன்றும் கூட பாராட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆன்மீகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு. அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

    காமராஜர்... ஒரு சரித்திரப் பொக்கிஷம் !

    - ஜான்துரை ஆசிர்செல்லையா

    • குரங்கு அம்மை நோய் இந்தியாவில் முதல் முறையாக ஊடுருவி உள்ளது
    • முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

    கொரோனா தொற்றை தொடர்ந்து குரங்கு அம்மை நோயும் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. சுமார் 50 நாடுகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து குரங்கு அம்மை நோய் நமது நாட்டிலும் பரவினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்கிற ஆலோசனையிலும் மத்திய சுகாதார துறையினர் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக அனைத்து மாநில சுகாதார துறை அதிகாரிகளும் ஏற்கனவே உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் இந்தியாவில் முதல் முறையாக ஊடுருவி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கேரளாவுக்கு விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளரான ராஜேஷ்பூசன், மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் குரங்கு அம்மைக்கு எதிரான முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    உலகம் முழுவதும் 50 நாடுகளில் 3413 பேருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளில் 86 சதவீதம் பேருக்கும், அமெரிக்காவில் 11 சதவீதம் பேருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால் இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விமான நிலையத்திலேயே சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதிக்க வேண்டும். இதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுடன் இதுபோன்ற தொற்றுகளையும் கண்டறிந்து வேரறுக்க வேண்டியது நமது கடமையாகும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் குரங்கு அம்மை நோய் தொற்று தடுப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    பக்கத்து மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    சென்னை விமான நிலையத்திலும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கண்டறிந்து அவர்கள் முழுமையாக பரிசோதனைக்குட் படுத்தப்படுகிறார்கள்.

    குரங்கு அம்மை தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் தசை வலிகள் இருக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த அறிகுறிகளுடன் வருபவர்களையும் இணை நோய் உள்ளவர்களையும் கண்டுபிடித்து குரங்கு அம்மை தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    குரங்கு அம்மை நோய் தொடர்பாக கேரளாவில் இருந்து அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியை கவனமாக எடுத்துக் கொண்டு தமிழகத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த நோய் நமது மாநிலத்துக்குள் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டியது அனைவரின் கடமையாகவும் மாறி இருக்கிறது.

    குரங்கு அம்மை பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள்:

    * குரங்கு அம்மைக்கான அறிகுறி போல தோற்றமளிக்கும் சொறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை தவிர்க்கவும்.

    * குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபரின் சொறி அல்லது சிரங்குகளைத் தொடாதீர்கள்.

    * இந்த நோய் உள்ள நபருடன் முத்தமிடவோ, கட்டிப்பிடிக்கவோ அல்லது உடலுறவு கொள்ளவோ கூடாது.

    * பாதிக்கப்பட்டவருடன் உண்ணும் பாத்திரங்கள் அல்லது கோப்பைகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

    * பாதிக்கப்பட்டவரின் படுக்கை, துண்டுகள் அல்லது ஆடைகளை பயன்படுத்தவோ தொடவோ கூடாது.

    * சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை அடிக்கடி கழுவவும், அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சுத்திகரிப்பானை பயன்படுத்தவும்.

    * நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த விலங்குகள், அவற்றின் படுக்கை அல்லது அவை தொட்ட பிற பொருட்களைத் தவிர்க்கவும்.

    * குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் குறிப்பாக சொறி போன்று தென்பட்டால், முடிந்தவரை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். 

    • உணவால் சுகம் கண்டவன் “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்று பழமொழி உருவாக்கினான்.
    • எல்லாம் அவனாலே என்றவன் பட்டினி கிடந்து வழிபாடுகளால் தேற்றி கொண்டு தன்னை காப்பாற்றிக் கொண்டான்.

    உணவு என்பதை சாதாரணமாகப் பேசிக் கழித்துவிட முடியாது. உலக போராட்ட வரலாறுகளே உணவால் ஆரம்பமானது தான். நாடும், எல்லையும் , மொழியும் ,உணவுக்குப் பிறகே!

    விலங்குகளோடு போட்டி கொண்டு உணவுக்கான போராட்டத்தை ஆரம்பித்தது மனிதகுலம். வேட்டைச் சமூகம் , தாய் வழி சமூகம் , நிலப்பிரபுத்துவ சமூகம், இன்றைய பொருளாதார சுரண்டல் சமூகம் ஆகியவற்றுக்கு உணவே ஆதாரமாகிறது.

    தேடுதலில் நாட்டம் குறைந்தவன் வேட்டைச் சமூகத்தை துறந்து எல்லை பிரித்து வாழக் கற்றுக் கொண்டான். உச்சபட்ச சொல்லாடலில் "செவிக்கு உணவு இல்லாதபோது சற்று வயிற்றிற்கு" என்று சுரண்டல் சமூகத்தை உசுப்பி விட்டான். உணவால் சுகம் கண்டவன் "சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்று பழமொழி உருவாக்கினான். எல்லாம் அவனாலே என்றவன் பட்டினி கிடந்து வழிபாடுகளால் தேற்றி கொண்டு தன்னை காப்பாற்றிக் கொண்டான்.

    விலங்கோடு போட்டிபோட்டு விலங்கை வென்றவன் ருசிவழி பயணம் மேற்கொண்டான். சமையலின் முக்கியத்துவம் உணர்ந்து சமையற்கலை படைத்தான். நாவின் உமிழ்நீர் பாதையை சரி செய்தான். செவிவழி இலக்கியத்தைப் புறந்தள்ளி, செயல்வழி இலக்கியமாக உணவுத் திருவிழாக்கள் ஏற்படுத்தினார்கள். விருந்தோம்பலில் முகமலர்ச்சி ஆனார்கள். அமுது படைத்து ஐக்கியம் ஆனார்கள். சமையலில் தேர்ந்தவர்கள் நாசிகளில் மணம் புகட்டி உணவால் நம்மை தடுமாற வைத்தார்கள்.

    கறியுணவில் எத்தனையோ வகை கண்டார்கள், நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, சுவை கூடும் குறையும். சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்கள், நல்லி எலும்பு குழம்பு ஸ்பெஷலானது. எலும்பு, கறி, ஈரல், ரத்தம், தலைக்கறி , ஆட்டுக்கால் என ஆட்டிலும் எல்லை பிரித்து குழம்பு வகை படைத்தார்கள். மசாலாவை, கறிக்குள் ஏற்றி சித்து விளையாடினார்கள். நல்லி எலும்பு குழம்பு கிரேவியாக்கி உறிஞ்சவும், கடிக்கவும் கடைவாய் பற்களை வலுவாக்கினான். உமிழ்நீருடன் கலந்து கறி திரவமும், தீயினால் வெந்த கறியும், உடலுக்கு வீரம் ஊட்டின. காரத்தின் உச்சாணி சுவை மண்டைக்குள் வேகமெடுக்க, சோறு பிசைந்து, வயிற்றுக்கு சிறப்பு செய்தான்.

    நல்லி எலும்பு இலக்கியச் சுவையில் இருந்தது. செயல்முறைக்கு வருவோம். உதாரணத்துக்கு அரை கிலோவிலிருந்து முக்கால் கிலோ சதை ஒட்டிக்கொண்டிருக்கிற பதமான நல்லி எலும்பாக பார்த்து வாங்குங்கள். நன்கு கழுவி குக்கரில் போட்டு கொஞ்சம் மஞ்சள் தூள், சிறிது கறிவேப்பிலை, கொஞ்சம் சின்ன வெங்காயம், கொஞ்சம் பூண்டு இஞ்சி நசுக்கி போட்டு குக்கரை மூடி ஒன்றரை டம்பளர் தண்ணீர் விட்டு 6 அல்லது 7 விசில் விடவும்.

    இன்னொரு வாணலியில், கொஞ்சம் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு , 4 மிளகாய் , ஒரு ஸ்பூன் சீரகம் , கொஞ்சம் சோம்பு ,ஒரு பட்டை , இலவங்கம் , கசகசா, சின்ன வெங்காயம் இவைகளை வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் பண்ணி கொள்ளவும்.

    சிறிது எண்ணெய் விட்டு கடாயில் கறிவேப்பிலை, கட் செய்த பெரிய வெங்காயம் போட்டு அரைத்த கிரேவியை அதனுள் விட்டு , தேவைப்பட்டால் ஒரு பெரிய தக்காளி , (தக்காளி தேவையில்லை எனினும் அது ஒரு சுவை) வெந்து தணிந்த நல்லி எலும்பை அதன் சாரோடு அதில் கலந்து தேவையான அளவு உப்பையும் போட்டு 5 அல்லது 7 நிமிடம் கொதிக்கவைத்து கண்ணுக்கு அழகான., பார்க்க பரவசமூட்டும் வாசத்தோடு இப்போது வயிற்றுக்கான நல்ல இலக்கியம் நல்லி கிரேவி தயார். இறக்கிவைக்க,தெருவே கறிவாசம் சொந்தம் கொண்டாடும்.

    பசி மயக்கம் " வயிற்றாற்று படை" எழுதும். நல்ல உணவு செய்து, நட்போடும், உறவோடும் உண்ண, கருணை கொண்ட உள்ளம் விருந்தோம்பலில் மயங்கும்.

    -பல்லவன்

    • பொதுவாக ஆண்கள் அதிக பாலியல் உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதற்கு அவர்களின் உடலில் அதிகம் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன்தான் காரணம்.
    • ஒரு சாதாரண ஆணின் உடல், ஒரு பெண்ணின் உடலை விட 20 மடங்கு அதிகமாக இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

    ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது.

    பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

    காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது காமம்.

    ஆண்களைவிட பெண்கள் அதிக ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோனைக் கொண்டிருப்பதுதான் பெண்கள் எளிதாக காதல்வயப்பட்டு புதிய உறவில் திளைக்க முக்கியக் காரணம். இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் அதிக அளவு சுரக்கும்போது அவர்கள் தங்கள் காதலனோடு மேலும் இணக்கமாகி வலுவான உறவை வளர்க்கிறார்கள்.

    பொதுவாக ஆண்கள் அதிக பாலியல் உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதற்கு அவர்களின் உடலில் அதிகம் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன்தான் காரணம். ஒரு சாதாரண ஆணின் உடல், ஒரு பெண்ணின் உடலை விட 20 மடங்கு அதிகமாக இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

    பாலியல் சார்ந்த விஷயங்களில் ஆண் மற்றும் பெண்களின் உணர்வுகள் வேறுபடுகின்றன. ஆண்களை போன்று பெண்கள் எப்போதும் உடலுறவை விரும்புவதில்லை. தன்னோடு பேசிப்பழகி, அன்றாட விஷயங்களை மகிழ்வுடன் பகிர்ந்து, இன்ப துன்பங்களில் தனக்கு ஆறுதலாகவும், தன்மேல் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கும் நம்பிக்கையான ஆண் மகனை தன்னுடைய காதலனாக தேர்வு செய்கிறாள்.

    திருமண பந்தத்தில் இணைந்து தனது மனதை கொள்ளை கொண்ட அந்த காதலனோடு மட்டுமே உறவு கொள்ள விரும்புகிறாள். பெண்களை பொறுத்தவரை பாலியல் இன்பம் என்பது மனம் சார்ந்தது, உள்ளார்ந்த உணர்ச்சிப்பூர்வமானது. தனது ஆசைகள், கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவையோடு பின்னிப்பிணைந்தது. பாலியல் இன்பம் என்பதை அவர்களுடைய உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பின் உச்சநிலையாக கருதுகின்றனர்.

    ஆண்களுக்கு பாலியல் இன்பம் என்பது அடிப்படை உடல்சார் தேவையாகவும், உடலில் பாலியல் உணர்ச்சியைத் தொடர்ந்து தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகவும் அமைகிறது. இந்த உடல்தேவை பூர்த்தியாகும் வரை அவர்கள் எவ்வித அன்பையும், காதலையும் புரிந்து கொள்வதில்லை. பாலியல் இன்பத்திற்கான உள்ளுணர்வூக்கம் காதலால் உண்டானது அல்ல. மாறாக அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனால் உண்டானது.

    காமமின்றி காதல் இல்லை என்பது ஆண்களின் எண்ணம். காதலுக்காகவே காமம் என்பது பெண்களின் நிலைப்பாடு. ஓர் ஆண், தான் பாலியல் இன்பம் அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய விதையை பரப்பி ஒரு குழந்தைக்குத் தந்தையாக இயலும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும். ஆகவே, ஒரு பெண் தன் வாழ்க்கை துணைவனான ஆண்மகனை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். சரியான தேர்வு மூலமே அவளால் சிறந்த சந்ததியை உருவாக்க முடியும்.

    இந்த காரணங்களால் தான், தனது மனதைக் கவர்ந்திழுக்காத எந்த ஆண்மகனையும் தன்னோடு உறவாட பெண்கள் அனுமதிப்பதில்லை. காதலின் ஆரம்பநிலையில் அவர்கள் தனது மனதினுள் நுழையாத காதலனோடு பாலியல் உறவில் ஈடுபட மறுக்கிறார்கள். அது ஆண்களுக்கு தெரிவதில்லை.

    காதலர்களுக்கு பாலியல் உள்ளுணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் போது அது வெளிப்படுத்தும் உணர்ச்சி மனதைக்களிப்பூட்டி கிளர்ச்சியடையச் செய்கிறது. அந்த கிளர்ச்சி தான் பெண்களுக்கு காதலாகவும், ஆண்களுக்கு காமமாகவும் உருப்பெற அடித்தளமிடுகிறது.

    பாலியல் உணர்ச்சி என்பது ஆண்களின் தவறல்ல; அது அவர்களின் மரபணுக்களின் வெளிப்பாடு. ஆண்களின் பாலுறவு ஆர்வமும், பெண்களின் பாலுறவு ஆர்வமும் வித்தியாசமானது. இவர்களில் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று எவருமில்லர். ஆனால், இருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொண்டால்தான், இருவருக்குள்ளும் இணக்கம் அதிகரிக்க வழிவகுக்கும்.

    -பூபதி ராஜா

    • “என் ‘தூர்’ கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது.
    • அன்று நா. முத்துகுமார் மேல் விழுந்த அந்த மஞ்சள் வெளிச்சம், மஞ்சள் காமாலையாக மாறி அவரது உயிரைக் குடிக்கும் என யார் கண்டார்கள்?

    யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அந்த மேடையில் செய்தார் சுஜாதா!

    அது ஒரு விழா மேடை.

    மிகப் பெரும் கூட்டம்.

    பேசிக்கொண்டே இருந்த சுஜாதா, பேச்சின் நடுவே திடீர் என்று இப்படிச் சொன்னார்:

    "இப்போது இங்கே நான் ஒரு இளைஞர் எழுதிய கவிதையை வாசிக்கப் போகிறேன்.

    கவிதையின் தலைப்பு "தூர்."

    இப்படிச் சொல்லிவிட்டு கவிதை வரிகளை சுஜாதா வாசிக்க வாசிக்க, கூடி இருந்த கூட்டம் அசையாமல் அமர்ந்து அமைதியோடு கவிதை வரிகளை ரசித்துக் கொண்டிருந்தது.

    சுஜாதா வாசித்த அந்த கவிதை:

    "வேப்பம் பூ மிதக்கும்

    எங்கள் வீட்டு கிணற்றில்

    தூர் வாரும் உற்சவம்

    வருடத்துக்கு ஒரு முறை

    விசேஷமாக நடக்கும்.

    ஆழ் நீருக்குள்

    அப்பா முங்க முங்க

    அதிசயங்கள் மேலே வரும்...

    கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,

    துருப்பிடித்தக் கட்டையோடு

    உள் விழுந்த ராட்டினம்,

    வேலைக்காரி திருடியதாய்

    சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...

    எடுப்போம் நிறையவே

    'சேறுடா சேறுடா' வென

    அம்மா அதட்டுவாள்

    என்றாலும்

    சந்தோஷம் கலைக்க

    யாருக்கு மனம் வரும்?

    படை வென்ற வீரனாய்

    தலைநீர் சொட்டச் சொட்ட

    அப்பா மேலே வருவார்.

    இன்று வரை அம்மா

    கதவுக்குப் பின்னிருந்துதான்

    அப்பாவோடு பேசுகிறாள்.

    கடைசி வரை அப்பாவும்

    மறந்தே போனார்

    மனசுக்குள் தூர் எடுக்க."

    சுஜாதா கடைசி வரிகளை வாசித்து முடிக்கவும் பலத்த கை தட்டல்.

    அந்தக் கைதட்டல்களுக்கு இடையே சுஜாதா சொன்னார் இப்படி : "இந்த அற்புதமான கவிதையை எழுதியவர் பெயர் நா. முத்துகுமார்."

    மீண்டும் கை தட்டல்.

    கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞரைச் சுற்றி சிறு சலசலப்பு ஏற்பட,

    சுஜாதா கேட்டார்: "அந்த முத்துகுமார் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா, என்ன?"

    ஆம்.

    நா.முத்துகுமார் அந்தக் கூட்டத்தில்தான் இருந்தார்.

    கூட்டத்திலிருந்து முத்துகுமார் கைதூக்க, உடனே அவரை மேடைக்கு வரவழைத்து எல்லோருக்கும் அவரை அறிமுகப்படுத்தி ஏராளமாகப் பாராட்டியிருக்கிறார் சுஜாதா.

    அதுபற்றி நா.முத்துகுமார்:

    "என் 'தூர்' கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க என் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள்.

    விளையாட்டாக எழுதத் தொடங்கி அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்."

    அன்று நா. முத்துகுமார் மேல் விழுந்த அந்த மஞ்சள் வெளிச்சம், மஞ்சள் காமாலையாக மாறி அவரது உயிரைக் குடிக்கும் என யார் கண்டார்கள்?

    ஆனால் முத்துகுமார் பற்றி சொல்லும்போது இந்த வார்த்தைகளை எதற்காக சுஜாதா சொன்னார் என்று எத்தனையோ முறை யோசித்தும் புரியவே இல்லை எனக்கு!

    சுஜாதா சொன்னது:

    "நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கி விடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்.''

    ஏன் அப்படிச் சொன்னார் சுஜாதா?

    எவ்வளவோ சிந்தித்தும் புரியவில்லை எனக்கு!

    -ஜான் துரை ஆசிர் செல்லையா

    • திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.
    • தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய கோவில் என்ற பெருமை 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கே உரியது.

    ஒன்பது ராஜ கோபுரங்கள்,

    எண்பது விமானங்கள்,

    பன்னிரண்டு பெரிய மதில்கள்,

    பதிமூன்று மிகப்பெரிய மண்டபங்கள்,

    பதினைந்து தீர்த்தக்கிணறுகள்,

    மூன்று நந்தவனங்கள்,

    மூன்று பெரிய பிரகாரங்கள்,

    முன்னூற்று அறுபத்து ஐந்து லிங்கங்கள்

    நூற்றுக்கும் மேற்பட்ட சன்னதிகள்,

    எண்பத்து ஆறு விநாயகர் சிலைகள்,

    இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட உள் கோவில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது இந்த கோவில்... சோழர்கள் கட்டிய கோவில் இது. பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை நாயக்கர்கள் மராத்திய மன்னர்கள் என அனைவரும் தமது ஆட்சியில் இக்கோவிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

    திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.

    தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

    நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களும் அமைந்துள்ளது.

    கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கற்றூண்கள், திருவிழாக் காலங்களில் பந்தல் போடுவதற்காக முன்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவில் ஐந்து வேலி,

    குளம் ஐந்து வேலி,

    செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி

    என்ற பழமொழி இந்த கோவிலின் சிறப்பை உணர்த்தும் (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).

    -பி.சுந்தர்

    ×