search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கொஞ்சம் வரலாறு... கொஞ்சம் சமையல்...
    X

    கொஞ்சம் வரலாறு... கொஞ்சம் சமையல்...

    • உணவால் சுகம் கண்டவன் “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்று பழமொழி உருவாக்கினான்.
    • எல்லாம் அவனாலே என்றவன் பட்டினி கிடந்து வழிபாடுகளால் தேற்றி கொண்டு தன்னை காப்பாற்றிக் கொண்டான்.

    உணவு என்பதை சாதாரணமாகப் பேசிக் கழித்துவிட முடியாது. உலக போராட்ட வரலாறுகளே உணவால் ஆரம்பமானது தான். நாடும், எல்லையும் , மொழியும் ,உணவுக்குப் பிறகே!

    விலங்குகளோடு போட்டி கொண்டு உணவுக்கான போராட்டத்தை ஆரம்பித்தது மனிதகுலம். வேட்டைச் சமூகம் , தாய் வழி சமூகம் , நிலப்பிரபுத்துவ சமூகம், இன்றைய பொருளாதார சுரண்டல் சமூகம் ஆகியவற்றுக்கு உணவே ஆதாரமாகிறது.

    தேடுதலில் நாட்டம் குறைந்தவன் வேட்டைச் சமூகத்தை துறந்து எல்லை பிரித்து வாழக் கற்றுக் கொண்டான். உச்சபட்ச சொல்லாடலில் "செவிக்கு உணவு இல்லாதபோது சற்று வயிற்றிற்கு" என்று சுரண்டல் சமூகத்தை உசுப்பி விட்டான். உணவால் சுகம் கண்டவன் "சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்று பழமொழி உருவாக்கினான். எல்லாம் அவனாலே என்றவன் பட்டினி கிடந்து வழிபாடுகளால் தேற்றி கொண்டு தன்னை காப்பாற்றிக் கொண்டான்.

    விலங்கோடு போட்டிபோட்டு விலங்கை வென்றவன் ருசிவழி பயணம் மேற்கொண்டான். சமையலின் முக்கியத்துவம் உணர்ந்து சமையற்கலை படைத்தான். நாவின் உமிழ்நீர் பாதையை சரி செய்தான். செவிவழி இலக்கியத்தைப் புறந்தள்ளி, செயல்வழி இலக்கியமாக உணவுத் திருவிழாக்கள் ஏற்படுத்தினார்கள். விருந்தோம்பலில் முகமலர்ச்சி ஆனார்கள். அமுது படைத்து ஐக்கியம் ஆனார்கள். சமையலில் தேர்ந்தவர்கள் நாசிகளில் மணம் புகட்டி உணவால் நம்மை தடுமாற வைத்தார்கள்.

    கறியுணவில் எத்தனையோ வகை கண்டார்கள், நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, சுவை கூடும் குறையும். சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்கள், நல்லி எலும்பு குழம்பு ஸ்பெஷலானது. எலும்பு, கறி, ஈரல், ரத்தம், தலைக்கறி , ஆட்டுக்கால் என ஆட்டிலும் எல்லை பிரித்து குழம்பு வகை படைத்தார்கள். மசாலாவை, கறிக்குள் ஏற்றி சித்து விளையாடினார்கள். நல்லி எலும்பு குழம்பு கிரேவியாக்கி உறிஞ்சவும், கடிக்கவும் கடைவாய் பற்களை வலுவாக்கினான். உமிழ்நீருடன் கலந்து கறி திரவமும், தீயினால் வெந்த கறியும், உடலுக்கு வீரம் ஊட்டின. காரத்தின் உச்சாணி சுவை மண்டைக்குள் வேகமெடுக்க, சோறு பிசைந்து, வயிற்றுக்கு சிறப்பு செய்தான்.

    நல்லி எலும்பு இலக்கியச் சுவையில் இருந்தது. செயல்முறைக்கு வருவோம். உதாரணத்துக்கு அரை கிலோவிலிருந்து முக்கால் கிலோ சதை ஒட்டிக்கொண்டிருக்கிற பதமான நல்லி எலும்பாக பார்த்து வாங்குங்கள். நன்கு கழுவி குக்கரில் போட்டு கொஞ்சம் மஞ்சள் தூள், சிறிது கறிவேப்பிலை, கொஞ்சம் சின்ன வெங்காயம், கொஞ்சம் பூண்டு இஞ்சி நசுக்கி போட்டு குக்கரை மூடி ஒன்றரை டம்பளர் தண்ணீர் விட்டு 6 அல்லது 7 விசில் விடவும்.

    இன்னொரு வாணலியில், கொஞ்சம் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு , 4 மிளகாய் , ஒரு ஸ்பூன் சீரகம் , கொஞ்சம் சோம்பு ,ஒரு பட்டை , இலவங்கம் , கசகசா, சின்ன வெங்காயம் இவைகளை வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பேஸ்ட் பண்ணி கொள்ளவும்.

    சிறிது எண்ணெய் விட்டு கடாயில் கறிவேப்பிலை, கட் செய்த பெரிய வெங்காயம் போட்டு அரைத்த கிரேவியை அதனுள் விட்டு , தேவைப்பட்டால் ஒரு பெரிய தக்காளி , (தக்காளி தேவையில்லை எனினும் அது ஒரு சுவை) வெந்து தணிந்த நல்லி எலும்பை அதன் சாரோடு அதில் கலந்து தேவையான அளவு உப்பையும் போட்டு 5 அல்லது 7 நிமிடம் கொதிக்கவைத்து கண்ணுக்கு அழகான., பார்க்க பரவசமூட்டும் வாசத்தோடு இப்போது வயிற்றுக்கான நல்ல இலக்கியம் நல்லி கிரேவி தயார். இறக்கிவைக்க,தெருவே கறிவாசம் சொந்தம் கொண்டாடும்.

    பசி மயக்கம் " வயிற்றாற்று படை" எழுதும். நல்ல உணவு செய்து, நட்போடும், உறவோடும் உண்ண, கருணை கொண்ட உள்ளம் விருந்தோம்பலில் மயங்கும்.

    -பல்லவன்

    Next Story
    ×