என் மலர்tooltip icon

    கதம்பம்

    விந்தை உலகம்...
    X

    விந்தை உலகம்...

    • அளப்பருந்தன்மையின் வளப்பெரும் காட்சியைத்தான் நாசாவின் சேம்சு வெபி வெளிநோக்கி படம் பிடித்திருக்கிறது.
    • தொலைவு, காலம், அறிவியல் நுட்பம் எல்லாம் செய்திகளில் கிடக்க, நான் அந்த வெளியின் அழகை மட்டும் துய்த்துக் கொள்கிறேன்.

    எங்கெங்கு காணிணும் சக்தியடா..

    இரவு வானத்தைப் பார்த்து,

    "பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்,

    நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி"

    என்று பாரதியார் பாடும்போது சொக்கித்தான் போனோம்.

    "எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

    ஏழு கடல் அவள் வண்ணமடா! –- அங்குத்

    தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்த

    தாயின் கைப்பந்தென ஓடுமடா"

    என்று பூப்பந்தை சத்தியாக்கி, அந்த சத்திக்கு ஏழுகடல்களை உடுப்பாக்கி, அது தங்கியிருக்கும் வெளியிலே ஓடும் அண்டங்களை, சத்தி தன் கையால் எறியும் பந்துகள் என்று பாரதிதாசன் சொன்னபோது, பாரதியார் நட்சத்திரம் மின்ன மின்ன வானில் விரித்து வைத்த கருநீலப் பட்டுப்புடவையானது ஒரு கோடி அண்டங்களை விரட்டி விளையாடியதைக் காணமுடிந்தது.

    பாரதியும் அவரின் தாசனும்தான் இப்படி வெளியுலாச் சென்றனர் என்றால், இவருக்கு 1600 ஆண்டு முன், மாணிக்க வாசகர் கூறுமொழி ஏறுமொழி.

    "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

    அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

    ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

    நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன".

    பாரதிதாசன் கோடி அண்டங்கள் என்றால், மாணிக்கவாசகர் 101 கோடிக்கும் மேல் என்று சொல்லி, அந்த வானத்து அண்டங்களை அளக்கமுடியாத எண்ணமுடியாத எண்ணிலி என்று கூறி வான மண்டிலங்களின் வளப்பமான பெருங்காட்சி அழகில் சொக்கி நின்று விடுகிறார்.

    அந்த அளப்பருந்தன்மையின் வளப்பெரும் காட்சியைத்தான் நாசாவின் சேம்சு வெபி வெளிநோக்கி படம் பிடித்திருக்கிறது. இதன் தொலைவு, காலம், அறிவியல் நுட்பம் எல்லாம் செய்திகளில் கிடக்க, நான் அந்த வெளியின் அழகை மட்டும் துய்த்துக் கொள்கிறேன். திகைத்துப் போகிறேன்.

    இந்தப் பேரழகைக் கண்டுதான் எண்ணிதான், "வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்குஞ் சுகம்" என்றாரோ வள்ளலார்!

    ஆம் இத்தனைப் பேரழகை உலா வந்தால் வேறென்ன செயமுடியும்! சும்மா இருந்து சுகிப்பதைத் தவிர? எழிற்கொள்ளை.

    -நாக இளங்கோ

    Next Story
    ×