என் மலர்tooltip icon

    மற்றவை

    • ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.
    • சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

    உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்! தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

    தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் உங்களை மீண்டும் அணுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.

    அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவைக் கொடுத்து வருகிறார்கள். அதிசயக்கத்தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள்.

    ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம். மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியைக் கலந்து குடித்து வாருங்கள். 'எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்' என்று அடித்துச் சொல்கிறார்கள் கோபன்ஹேகன் பல்கலைக் கழக ஆய்வு மையத்தினர்.

    ஒரு நாளில் மூன்று முறை இரண்டு கரண்டி தேன், ஒரு கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும். சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

    இரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்கப்பவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

    தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்கப் பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.

    ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், 'வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்' என்று தெரிய வந்துள்ளது. ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

    -வள்ளல் ராமமூர்த்தி

    • பிராட்லா பிடிவாதத்தைக் கண்ட அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வில்லியம் கிளாட்ஸ்டோன் கூட இறங்கி வந்தார்.
    • ‘சரி பரவாயில்லை’ என்று முடிவில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    பிரிட்டனில் அதுவரை பாராளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெறுவோரெல்லாம் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் போது கடவுள் பெயராலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நடைமுறையே இருந்து வந்தது. இதைப் போராடி மனச்சாட்சிப்படி உறுதி எடுக்கக் காரணமாக இருந்தவர் பிராட்லா என்பவர் தான்!

    சிறு வயதிலேயே நிறைய கேள்வி கேட்கும் வழக்கம் உள்ளவர் பிராட்லா. அப்படி பைபிளில் உள்ள முரண்களை மத குருமார்களிடம் கேள்விகளாகக் கேட்கப்போய் வீட்டை விட்டே தந்தையால் துரத்தி அடிக்கப்பட்டார். முன்னிலும் அதி தீவிரமாக கடவுள் மறுப்பாளராக ஆகி, பெண் விடுதலை உட்பட நிறைய பேசுபவராக மாறிப்போனார்.

    அவர் பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு, நார்த் ஹாம்டன் பகுதியில் 1880-இல் போட்டி போட்டார். வெற்றியும் பெற்றார். பிரிட்டன் பாராளுமன்றம் சென்றார். சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க அவரை அழைத்தார். கடவுளின் சாட்சியாக என்று சொல்லிப் பதவி ஏற்குமாறு கூறினார். ஆனால் அவரோ,"இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைத்துவர முடியாது" என்று கூறி, கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள உறுதியாக மறுத்துவிட்டார்.

    "உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை; இந்தப் பேரவை நம்புகிறது, இந்த நாட்டின் அரசியல்சாசனம் நம்புகிறது, அதற்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்; எனவே, 'கடவுள் சாட்சியாக' என்று கூறித்தான் நீங்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதற்கு நீங்கள் மறுப்பீர்களேயானால் உங்கள் தேர்வு ரத்து செய்யப்படும்" என்றார் சபாநாயகர்.

    அதற்கு சார்லஸ் பிராட்லா, "இந்த அவையின் ஆயுள்காலம் ஐந்து ஆண்டுகள்தான்; இந்த ஐந்து ஆண்டுகளுக்காக என் ஆயுள்முழுவதும் நான் கட்டிக்காத்துவரும் என்கொள்கைகளை விட்டுவிடமுடியாது; என் தேர்வை நீங்கள் ரத்துசெய்ய விரும்பினால், தாராளமாக செய்துகொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.

    பிராட்லா பிடிவாதத்தைக் கண்ட அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வில்லியம் கிளாட்ஸ்டோன் கூட இறங்கி வந்தார், 'சரி பரவாயில்லை' என்று முடிவில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவையில் உறுப்பினர்களாக இருந்த மத நம்பிக்கைவாதிகள் கொஞ்சமும் தயவுதாட்சண்யம் இல்லாமல், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது தேர்வை அவருக்கு எதிராக வாக்களித்து ரத்து செய்தார்கள்.

    இதைத் தொடர்ந்து லண்டன் டவர் சிறையில் அடைத்தும் வைக்கப்பட்டார். பிராட்லாவைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருந்தால், அவர் மேல் மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டு விடும் என்று சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள்; இதனால் பின்னர் விடுதலை ஆனார்.

    அவருடைய தொகுதிக்கு மீண்டும் 26-4-1881 தேர்தல் நடந்தது; மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்; மீண்டும் வெற்றிபெற்றார்; மீண்டும் அதே பிரச்சனை!

    பார்த்தார் பிராட்லா, தனது இடத்தில் சபையில் அமர்ந்து கொண்டு எழ மறுத்தார். "எனக்கென்று ஒரு கொள்கை ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதை எந்தக்காரணத்திற்காகவும் என்னால் விட்டுத்தர இயலாது" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் பிராட்லா. விடுவார்களா மத நம்பிக்கையாளர்கள்? குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே போட்டது மல்லாமல், மீண்டும் அவர் தேர்வை ரத்தும் செய்தார்கள்.

    பிராட்லா மக்களிடம் சென்றார். இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 990 பேரிடம் சபையில் அனுமதிக்க வேண்டி கையெழுத்து பெற்றுக் கொடுத்தார். சபாநாயகர், உறுப்பினர்கள், வெளியே இருந்த மதகுருமார்கள் அவரை அனுமதிக்கக் கூடாது என கண்டிப்புக் காட்டினார்கள்.

    1884-ஆம் ஆண்டு மீண்டும் அவர் தொகுதிக்குத் தேர்தல் நடந்தது; மூன்றாவது முறையும் பிராட்லா போட்டியிட்டார்; இந்த முறை முந்தைய இரண்டுமுறை வாங்கிய வாக்குகளைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பிராட்லா!

    இம்முறை கெஞ்ச ஆரம்பித்தார்கள்: "தயவுசெய்து பிடிவாதம் பிடிக்காமல் இந்த அவையின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்றார்கள்.

    பிராட்லா மிகவும் உறுதியாகச் சொன்னார்: "நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் என் தொகுதி மக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்; என் தேர்வை ரத்துசெய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்; அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை இழிவு செய்கிறீர்கள்; அவர்களுடைய தன்மானத்திற்கே சவால் விடுகிறீர்கள். இதற்குமேல் பேச என்னிடம் எதுவுமில்லை" என்று கூறி அவையில் அமர்ந்துவிட்டார். இந்தமுறை பிரிட்டன் பாராளுமன்றம் பணிந்தது.

    "தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டுமன்றி மனசாட்சியின் பெயராலும் பதவிஏற்கலாம்" என்று பிரிட்டனின் அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. இன்று பகுத்தறிவுவாதிகள் மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சார்லஸ் பிராட்லாதான் காரணம்!

    • இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பாமாயில் எதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியுமா?
    • மெழுகுவர்திகள் செய்யவும் இயந்திரங்களுக்கு உயவு எண்ணெய் பயன்பாட்டுக்காகவுமே இந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது.

    லிட்டர் கணக்கில் அளந்து கொடுக்கப்பட்ட எண்ணெய் கிலோ கணக்கில் எடையில் விற்கப்படுவது தற்செயலானது அல்ல.

    சன் ஃப்ளவர் ஆயில், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற எல்லா எண்ணெய்களிலும், பாரஃபின் வேக்ஸ் என்னும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலிய துணைப் பொருள். குரூட் ஆயிலிலிருந்து பெட்ரோலைப் பிரித்து எடுக்கும்போது கிடைக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று.

    இந்த பாரஃபின் வேக்சால் விளக்கு எரிக்க முடியும். அமெரிக்காவில், மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவது இல்லை. இந்த பாரஃபின் வேக்சே பயன்படுகிறது.

    இந்த பாரஃபின் வேக்சின் அடர்த்தி எண் சாதாரண சமையல் எண்ணெயைவிட அதிகம். அதாவது எடை அதிகம். இது மணமற்றது. நிறமற்றது. இது போதாதா? உடனே இதனை நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சன் ஃப்ளவர் ஆயில் ஆகியவற்றில் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள். குறைந்த விலைப் பொருளைக் கலப்பதால் வரும் லாபம் ஒருபுறம் இருக்க, அந்த கலப்படப் பொருள் அதிக எடையோடு இருப்பதால் எண்ணெய்களை எடைக்கு விற்று அதிலும் லாபம் கண்டார்கள்.

    ஆனால் மக்களாகிய நாம் அமெரிக்க மண்ணெண்ணையைத்தான் அன்றாடம் தின்றுகொண்டிருக்கிறோம்.

    அடுத்தது பாமாயில்:- பாமாயில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய். இது சமையல் எண்ணெய் என்பதற்கு உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள தகுதிகளில் எதனுடனும் பொருந்தாத ஒரு பொருள்.

    இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பாமாயில் எதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியுமா? மெழுகுவர்திகள் செய்யவும் இயந்திரங்களுக்கு உயவு எண்ணெய் பயன்பாட்டுக்காகவுமே இந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னாளில், இதனை சுத்திகரிப்பு செய்து உணவுப் பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்பட்டது.

    டீக்கடையில் விற்கப்படும் பஜ்ஜி, வடை , போண்டா...ஹோட்டலில் சாப்பிடும் அனைத்து உணவுகள், இனிப்பு கார வகைகள் என எல்லாமே பாமாயிலில் தயாரிக்கப்படுவதுதான்.

    குறைந்த விலை என்பதால் எல்லோருமே பாமாயிலைப் பயன்படுத்துகிறார்கள். பாமாயிலால் ஏற்படும் பின் விளைவுகள் ஏராளம். அவை உடனே வெளியில் தெரிவதில்லை.

    கொலஸ்ட்ரால், மலச்சிக்கல் உடம்பில் அரிப்பு, இதயக்கோளாறுகள், ரத்தக்குழாய் அடைப்பு ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாய் இருகின்றது .

    அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட எண்ணெய்தான் இந்த பாமாயில்.

    -பி. சுந்தர்

    • மன்னன் கண்களுக்கு பொன்னாகத் தெரிந்த சிலை மற்றவர்களுக்குச் செம்பாகத் தெரிய, வருத்தமடைந்த மன்னன் கனவில் பொன்மேனியைச் சிதம்பரத்தில் நிறுவிவிட்டு செப்பு மேனியைத் தென்னாட்டிற்கு எடுத்து செல்ல இறை பணிக்க அவ்வாறு செய்தான்.
    • முதலில் தயாரித்த செப்புமேனியைத் தலைமேல் சுமந்துகொண்டு நமசிவாயமுத்து செல்லும்போது, ‘எந்த இடத்தில் அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் இருக்கின்றதோ அங்கு அதை கீழே வைக்க’ என்று அசரீரி எழுந்தது.

    உலகின் முதல் நடராஜர் சிலை நெல்லை மாவட்டம் செப்பறை என்ற தலத்தில் உள்ளது.

    சோழநாட்டை இரணியவர்மன் ஆட்சி செய்து வரும்போது அவனுக்கு ஏற்பட்ட நோயை எந்த வைத்தியத்தினாலும் சரிசெய்ய முடியவில்லை. கானகத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவன் பேச்சு சப்தம் கேட்டு நின்றான்.

    அங்கு இருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களை வணங்கி தன் நிலையைக் கூற அவர்கள் அருகிலுள்ள குளத்தில் நீராடி வரும்படி சொல்ல அவ்வண்ணம் நீராடியவனுக்கு அவன் நேய் நீங்கியது கண்டான்.

    திரும்பி வந்து பார்த்தபோது முனிவர்கள் இருவருக்கும் இறைவன் தில்லைக் கூத்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தான். மகிழ்ந்த மன்னன் ஊர் திரும்பியதும் தானும் முனிவர் பெருமக்களும் கண்டு களித்த இறைவனின் ஆனந்தக் கூத்தினை உலக உயிர்கள் அனைத்தும் கண்டு களித்திட எண்ணி அந்த உருவத்தைச் சிற்பமாக வடிக்க நமசிவாய முத்து என்ற சிற்பிக்குக் கட்டளையிட்டான்.

    சிற்பியும் அப்பணியைச் செவ்வனே செய்து முடிக்க, செப்பு உலோக மேனியைக் கண்டவனுக்கு பொன்மேனியாக காண ஆவலேற்பட சிற்பியிடம் சொல்லி பொன்னால் சிலை செய்து மகிழ்ந்தான்.

    ஆனால், மன்னன் கண்களுக்கு பொன்னாகத் தெரிந்த சிலை மற்றவர்களுக்குச் செம்பாகத் தெரிய, வருத்தமடைந்த மன்னன் கனவில் பொன்மேனியைச் சிதம்பரத்தில் நிறுவிவிட்டு செப்பு மேனியைத் தென்னாட்டிற்கு எடுத்து செல்ல இறை பணிக்க அவ்வாறு செய்தான்.

    முதலில் தயாரித்த செப்புமேனியைத் தலைமேல் சுமந்துகொண்டு நமசிவாயமுத்து செல்லும்போது, 'எந்த இடத்தில் அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் இருக்கின்றதோ அங்கு அதை கீழே வைக்க' என்று அசரீரி எழுந்தது.

    மணப்படை வீடு என்ற ஊரைத் தலையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த இராமபாண்டியன், வடகரை இராஜவல்லிபுரத்தில் இருந்து தினமும் தாமிரபரணியில் குளித்து தென்கரையில் நெல்லையப்பர்- கந்திமதி ஆலயத்தில் தரிசனம் முடித்தே ஆகாரம் எடுப்பது வழக்கம். அன்று தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட ஆற்றைக்கடந்து தரிசனம் செய்யமுடியவில்லை.

    வருத்தமுற்ற மன்னன் கனவில் சிதம்பரத்திலிருந்து ஸ்தபதி ஒருவர் சிலை ஒன்றை சுமந்து வந்து பாரம் தாங்காமல் அரண்மணைக்கருகில் கீழே வைத்து விடுவார். அப்போது அது மறைந்து இலுப்பை வனத்தில் சதங்கை ஒலிக்கும் இடத்தில் தேடினால் கிடைக்கும். அதை எடுத்து தனியறையில் நிறுவி வழிபடு என்று சொல்லி மறைந்தார். மன்னன் அச்சிலையை இலுப்ப வனத்தில் கண்டு ஒரு செப்பு அறையை ஏற்படுத்தி நிறுவினான். பின்னர் நெல்லையப்பரையும் காந்திமதியையும் எழுந்தருளச் செய்து சிவாலாயம் கட்டினான். இத்தலம் செப்பறை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ளதே உலகின் முதல் நடராஜர் திருமேனி.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது இராஜவல்லிபுரம். இங்கே தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில்.

    சிதம்பரம் மற்றும் நெல்லை மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கரிவேலாங்குளம், கட்டாரிமங்களம் ஆகிய ஊர்களில் உள்ள ஐந்து ஆடவல்லான் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

    -வீரமணி

    • அனைத்து இருதய நோய்க்கும் செம்பருத்திபூ பொடி சிறந்தது.
    • காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி பொடி சிறந்தது.

    மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

    *அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

    *நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது.

    *கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

    *வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.

    *அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

    *சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

    *நாவல் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

    *வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

    *தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

    *துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாறுக்கு சிறந்தது.

    *ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

    *கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

    *ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

    *ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

    *ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

    *திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

    *வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

    *நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

    *நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்கும் சிறந்தது.

    *கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

    *வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

    *திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

    *அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

    *துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்தது.

    *செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

    *கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

    *சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

    *கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

    *முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

    *கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

    *குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

    *பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

    *முருங்கைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.

    *லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

    *வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

    *பாகற்காய் பவுடர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

    *வாழைத்தண்டு பொடி :- சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

    *மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

    *சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

    *பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

    *சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

    *ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

    *கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

    *வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

    *வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

    *நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

    *நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

    *பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

    *கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

    *பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

    *வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

    *சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

    *மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

    *கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

    • இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்றும் உருவாகியிருக்கிறது.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.98 கி.மீ விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும்.

    இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய ஏரியைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?

    நமது சூரிய மண்டலத்தின் செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையே சிறிதும் பெரிதுமான கற்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. இவையே விண்கற்கள் எனப்படுகின்றன.

    இந்த கற்கள் விண்ணில் இருப்பதனால் இவற்றை விண்கற்கள் என்கிறோம். இவை பூமியின் ஈர்பால் பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போது காற்றின் உராய்வால் வெப்பமடைந்து எரிந்து விடுகின்றன. இப்போது அவற்றை எரிகற்கள் அல்லது எரிநட்சத்திங்கள் என்கிறோம்.

    விண்கற்கள் சில மீட்டர் நீளத்திலிருந்து பல கிலோமீட்டர்கள் நீளம் வரையிலும் உள்ளன. பொதுவில் பெரிய அளவில் உள்ள விண்கற்களை அஸ்டிராய்ட் என்று குறிப்பிடுகின்றனர். மாங்காய் அளவு அல்லது கூழாங்கல் அளவுக்கு இருக்கும் விண்கற்களும் விண்வெளியில் நிறையவே உள்ளன.

    இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய விண்கல் ஒன்று விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய ஏரி ஒன்றும் உருவாகியிருக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.98 கி.மீ விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும்.

    அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக கிட்டத்தட்ட 1.98 கி.மீ விட்டமும் 449 அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது.

    இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

    விண்கல் அதீத விசையுடன் இங்கே வந்து விழுந்த போது இங்கிருக்கும் பாறைகள் உராய்வின் சூட்டில் உருகி மேலெழும்பியிருக்கின்றன.

    இந்த பாறைகளில் இருக்கும் இரசாயனங்களின் காரணமாக ஏரியில் இருக்கும் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

    லானோர் ஏரியில் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை உள்ளதாக இருந்தாலும் இதன் தெற்குப்பகுதியில் நன்னீர் இருக்கிறது. ஒரே ஏரியில் உப்பு நீரும் நன்னீரும் இருப்பது லோனார் ஏரியில் மட்டும் தான் !!! .

    பழங்காலத்தில் இந்த இடத்தின் மகிமையை அறிந்தோ என்னவோ லோனார் ஏரியை சுற்றிலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஏராளமான கோவில்களை ரிஷிகளும் முனிவர்களும் எழுப்பியிருக்கின்றனர்.

    அந்த கோயில்கள் அனைத்தும் இப்போது சிதலமடைத்து காணப்பட்டாலும் அக்கோவில்களுள் பல ரகசியங்கள் பொதிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    - வீரமணி வீராசாமி

    • பூமியில் கடவுளைப்போல் வாழவும், போர் வீரர்களைப் போல் தியாகம் செய்யவும், நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
    • டாக்டர்களை கடவுளாக்க வேண்டாம். எல்லா உயிர்களைப் போல, மருத்துவர்களையும் அன்பு செய்வோம். மருத்துவர்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்தும்.

    இன்று தேசிய மருத்துவர்கள் தினம். இந்தியாவின் தன்னலமற்ற மருத்துவர்களுள் ஒருவரான பி.சி.ராய் அவர்களது நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. பி.சி.ராய் காந்தியை பின்பற்றியவர். எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தவர். இவரது பிறந்த தினம், நினைவு தினம் இரண்டுமே ஜூலை 1 .

    சிறுவயதில் எப்போதாவது உடம்பு சரியில்லாமல் போகும். அப்பா எங்களை ராமலிங்கம் என்கிற டாக்டரிடம் அழைத்து செல்வார். மென்மையாக பேசும் இயல்புடையவர். பரிவோடு அவர் பேசும் விதத்தில் பாதி சரியாகிவிடும். அதிகம் மருந்துகள் எழுதித்தரமாட்டார். இவர் போன்ற மருத்துவர்கள் கை, பிள்ளைகள் மீது பட்டால் போதும்! குணமாகிவிடும்.

    மருத்துவ அறம் காத்த செம்மல்கள். தேவையில்லாத பரிசோதனைகளை செய்யச் சொல்ல மாட்டார்கள். நம் எல்லோருக்குள்ளும் அழியாமல் இப்படி சில மருத்துவர்களின் முகங்கள் இருக்கின்றன!

    படிப்படியாக மருத்துவத்துறை வணிகமயமானதைக் கண்டோம்.

    பன்நோக்கு மருத்துமனைகள் பெருகின. டாக்டர்களிடம் அல்லாமல் மருத்துமனைகள் கார்ப்ரேட் வசம் சென்றன.

    இதன் விளைவை கோவிட் பரவலில் கண்டோம். நல்லவேளை வட இந்தியாவில் இருந்த அவலம் தென்னிந்தியாவில் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் வலுவான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளன. கிராமப் புறங்கள் வரை ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி எளிய மக்களை அரவணைக்கும் வகையில் செயல்படுகிறது.

    இருப்பினும் இந்தியா/ தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற லட்சியத்தை அடைய நாம் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

    கத்தார் சிறிய நாடு. 1000 பேருக்கு ஒரு டாக்டர் என்கிற இலக்கை கத்தார் அடைந்திருக்கிறது . மொனாகோ, கியூபா, ஸ்பெயின், பெல்ஜியம் , அர்ஜென்டினா போன்ற நாடுகளும் இவ்விலக்கை நெருங்கியுள்ளன.

    சான் மெரினோ, மால்டா, உக்ரைன், ஃபிரான்ஸ், பெலாரஸ், கியூபா, ஜார்ஜியா, பெல்ஜியம், ஸ்பெய்ன், அர்ஜென்டினா போன்ற நாடுகள், உலகில் அதிக டாக்டர்களை கொண்டிருக்கும் நாடுகள் என்கிற பெருமையைப் பெற்றிருக்கின்றன.

    ஓரளவு ஒத்துக்கொள்ளப்பட்ட , உலகின் முதல் மருத்துவராக கருதப்படுபவர் கிரேக்கரான ஹிப்போகிரடஸ்.

    அக்யூட், கிரானிக், எண்டமிக், எப்பிடமிக் இப்படி நோய்களைப் பகுத்தறிந்தவர் ஹிப்போகிரடஸ். உணவே மருந்து, நடை பயிற்சியின் முக்கியத்துவம் போன்ற நடைமுறை மருத்துவத்தை முதலில் பேசியவர் இவரே.

    உலகில் முதலில் மருத்துவ நூல்களை எழுதியவரும் இவரே. 70 நோய்கள் பற்றி இவர் தன் நூல்களில் எழுதியிருக்கிறார். எண்டாஸ்கோப்பியின் முன்னோடியும் இவரே. இன்று மருத்துவ மாணவர்கள் பட்டம் பெறுகிறபோது ஹிப்போகிரடஸ் உறுதி மொழியையே வாசிக்கிறார்கள்.

    வரலாற்றில் என்னைக் கவர்ந்த சில மருத்துவர்கள் இருந்தார்கள்.

    கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது! என்றார் ஔவை. ஆனால் வலியிலிருந்து, தீராத ஊனத்திலிருந்து, நோய்த் தொற்றிலிருந்து மனித குலத்தை காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள்.

    இன்று தடுப்பூசியின் மகத்துவத்தை உலகம் காண்கிறது. உலகில் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் டாக்டர் எட்வர்ட் ஜென்னர். பெர்க்கிலியில் பிறந்த இவர் 'நோய்எதிர்ப்பியலின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.

    அதுபோல உலகின் முதல் ஓபன் ஹார்ட் சர்ஜரியை செய்தவர் டாக்டர் டானியல் ஹாலி வில்லியம். இவரொரு ஆஃப்ரிக்க அமெரிக்கன்.

    எனக்கு அலர்ஜி என்றபோதும், அலெக்சாண்டர் ஃபிளமிங்கின் கண்டுபிடிப்பான பென்சிலின், உலகின் சிறந்த ஆண்டி பயடிக்காக கருதப்படுகிறது.

    இன்று குருதிக் கொடை உயர்ந்த தானமாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதரின் ரத்தத்தை இன்னொருவருக்கு செலுத்தலாம் என கண்டுபிடித்தவர் டாக்டர் சார்லஸ் ரிச்சர்ட் ட்ரூ. இவரும் ஓர் ஆஃப்ரிக்க அமெரிக்கர்.

    டாக்டர் மைக்கேல் எலிஸ் டிபெகேதான் முதன் முறையாக பாதிக்கப்பட்ட இதயத்தில், செயற்கையாக பம்ப் செய்யும் வால்வைப் பொறுத்தியவர்.

    ஹெலன் ப்ரோக், அந்தக்காலத்தில், கருவுற்ற பெண்களுக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்தான தாலிடோமைடை தடை செய்ய காரணமாக இருந்தவர். இவரது கண்டுபிடிப்புகள் கைனகாலஜிஸ்ட்டுகளுக்கு இன்றும் உதவக்கூடியதாக இருக்கின்றன.

    ஜேம்ஸ் யங் சிம்சனின் கண்டுபிடிப்பான குளோரோஃபார்ம், டி ஜி.மார்ட்டன் கண்டுபிடிப்பான அனஸ்தீஷியா போன்றவை மானுடத்தை வலியிலிருந்து காப்பாற்றின.

    பூமியில் கடவுளைப்போல் வாழவும், போர் வீரர்களைப் போல் தியாகம் செய்யவும் , நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

    'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!'

    கசிந்துருகுகிறார் குலசேகர ஆழ்வார்.

    கடவுளையும் மருத்துவர்களையும் அருகருகே வைத்து பார்க்கிறான் என் தமிழக்கவி.

    இறுதியாக இன்னொரு விசயத்தையும் கூறவேண்டியிருக்கிறது. இந்திய மக்களின் சராசரி ஆயுள் 72. ஆனால், இந்திய டாக்டர்களின் சராசரி ஆயுட்காலம் 59 ஆண்டுகளே.

    மருத்துவர்களால் நேரத்துக்கு தூங்க முடியாது. சாப்பிட முடியாது. டென்ஷன். விளைவு சுகர், பி.பி.

    நோயாளி இறந்தபோது டாக்டரை அடித்தார்கள் . பிழைத்தபோது கடவுளுக்கு நன்றி சொன்னார்கள்.

    டாக்டர்களை கடவுளாக்க வேண்டாம். எல்லா உயிர்களைப் போல, மருத்துவர்களையும் அன்பு செய்வோம். மருத்துவர்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்தும்.

    -கரிகாலன்

    • நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார்.
    • எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன்.

    எனக்கு சுமார் 42 வயது இருக்கலாம். நான் தெருத் திண்ணையில் அடிக்கடி பல நாட்கள் படுத்துறங்குவது உண்டு.

    ஒரு நாள் பௌர்ணமி தினம் இரவு சுமார் மணி 12.30 இருக்கும். நல்ல நிலவு ஒளி. திண்ணையில் கால் பாகம் இருக்கிறது.

    நான் கண் திறந்து விழித்துப் பார்த்தேன். என் வலது பக்கத்தில் 2அடி தொலைவில் அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் சுத்த வெள்ளை ஆடையோடு தலையை அதே வெள்ளைத் துணியால் மூடிய நிலையில் அமர்திருந்தார்.

    எனக்கு ஒரு படபடப்பு ஏற்பட்டது. அவருக்கு வணக்கம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்து அவர் அடியை நாடினேன்.

    'நான் உன்னோடு பத்தாண்டு காலம் இருக்கப் போகிறேனப்பா. இதை இப்போதே யாரிடமும் சொல்லாதே' என்று கூறிய வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்டேன். உருவமும் பார்த்தேன். அருள்பாலித்த உரையும் கேட்டேன். உடனே காட்சி மறைந்துவிட்டது. உடம்பெல்லாம் புல்லரித்தது. மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.

    என் மனைவியை எழுப்பிக் கூறி மகிழலாம் என்றால் பிறரிடம் அப்போதே கூறவும் கூடாது என்ற அருள் ஆணை.

    என்ன செய்வேன். இருதய பூரிப்போடு தவத்தில் உட்கார்ந்தேன். ஆனால் வள்ளலாரின் காட்சி நினைவு தவிர தவமும் வேறு செய்ய முடியவில்லை.

    அன்று முதல் பத்தாண்டு காலத்துக்குள் நான் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவ மயம்.

    இராமலிங்க வள்ளலார் அவர் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டு வைத்த செயல்களையெல்லாம் என் எளிய உடலை ஆட்கொண்டு முடித்தார் என்றே எண்ணுகிறேன்.

    (அருள்தந்தை வாழ்க்கை குறிப்பிலிருந்து..ஆர்.எஸ். மனோகரன்)

    • முத்துலட்சுமி ரெட்டியோடு படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர்கள் இந்த ஒரு பெண்ணால் கல்லூரியில் படிக்கும் அனைத்து ஆண்களின் மனதும் சலனப்படுகிறது.
    • அதனால் இவளை இந்த கல்லூரியை விட்டு துரத்த வேண்டும் என்று டீனிடம் முறையிட்டார்கள். அதற்கு அந்த டீன், பெற்றோர்களிடம் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

    இந்தியாவின் முதல் பெண் ஆங்கில மருத்துவர்... இந்தியா என்று அல்ல, இங்கலாந்தில் கூட இந்த பெண்ணிற்கு முன்னர் எந்த பெண்ணும் மருத்துவ படிப்பு படிக்கவில்லை. அந்த பெண்மணி தான் முத்துலட்சுமி ரெட்டி. சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இவர் மருத்துவ படிப்பை முடித்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனார்.

    ஆண்கள் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்ட முதல் ஒரே பெண் மருத்துவர் இவர் தான். கல்லூரியில் இவரை தனியாக ஒரு இடத்தில் அமர வைப்பார்கள். இவரை யாரும் பார்க்க முடியாத படி ஒரு திரை இருக்கும். காரணம், வடிவேல் ஸ்லாங்ல சொல்லனம்னா... பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில பக்கத்தில் வைத்தால் என்ன ஆகும்?. அதனால இவங்களை தனியா ஓரம் கட்டினாங்களாம்.

    இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்து மருத்துவ மேல் படிப்புக்கு இவர் இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் விண்ணப்பித்தார். சிகப்பு கம்பளம் விரித்து முத்து லட்சுமி ரெட்டியை வரவேற்றது. ஆனால் அங்கும் அதே கதை தான். ஆணாதிக்கத்தில் இந்தியா என்ன, இங்கிலாந்தென்ன.. எல்லாம் ஒன்னு தான்அந்த காலத்தில்.

    இங்கலாந்தில் முத்து லட்சுமி ரெட்டி படித்துக் கொண்டு இருந்த பொழுது அவர் உடன் படித்த அனைவருமே ஆண்கள். அன்று அந்த காலேஜை கூட்டி, பெருக்கும் வேலையையும் ஆண்களே செய்தார்கள்.

    முத்துலட்சுமி ரெட்டியோடு படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர்கள் இந்த ஒரு பெண்ணால் கல்லூரியில் படிக்கும் அனைத்து ஆண்களின் மனதும் சலனப்படுகிறது. அதனால் இவளை இந்த கல்லூரியை விட்டு துரத்த வேண்டும் என்று டீனிடம் முறையிட்டார்கள். அதற்கு அந்த டீன், பெற்றோர்களிடம் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

    அப்படியா, உங்கள் மகன்கள் யாரும் இங்கே வர வேண்டாம்.. வீட்டிலேயே இருக்கட்டும். இந்த ஒரு பெண்ணை பார்த்தே உங்கள் மகன்களின் மனம் சலனப்படுகிறது என்றால், நாளை உங்கள் மகன்கள் மருத்துவர் ஆனால் பல பெண்களின் நாடி பிடித்து மருத்துவம் பார்க்க வேண்டி இருக்கும். இத்தகைய சலன புத்தி உடைய ஆண்களுக்கு மருத்துவர் ஆகும் எந்தவித தகுதியும் இல்லை என்றார். இப்படி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு சாதனைப்படைத்தவர் முத்துலெட்சுமி ரெட்டி.

    இவர் வெறும் மருத்துவர் மட்டும் அல்ல, சென்னையின் முதல் பெண் துணை மேயர். சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டவர். அடையார் கேன்சர் இன்ஸ்ட்டிடியூட் இவர் நிறுவியது தான். தேவதாசி முறையை ஒழித்தவர் முத்து லட்சுமி அம்மையார் தான். தமிழ் மொழி, தமிழிசையின் வளர்ச்சியிலும் இவர் மிகப்பெரிய தொண்டு ஆற்றியுள்ளார்.

    • நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான்.
    • நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி. அவற்றை உடைத்தெறிந்தால்…. சாதனைகள் சாத்தியமே!

    நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?

    இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

    நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?

    பல பேருக்குத் தெரியாது…. அவர்- எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

    ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

    நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்தப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

    இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

    "நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்"…… தயக்கத்தில் சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்…….

    அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நீல் ஆம்ஸ்ட்ராங் நெக்ஸ்ட்…. கட்டளை வந்த அடுத்த நொடியே ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்துவைத்தார்.

    உலக வரலாறு- ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

    முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியைப் பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

    இனி நிலவைப் பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு நிமிட தயக்கம் கூட நம்முடைய மிகப்பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது.

    நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி. அவற்றை உடைத்தெறிந்தால்…. சாதனைகள் சாத்தியமே!

    -டாக்டர் ராமானுஜன்

    • 48 நாட்கள் தினமும் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி 15 நிமிடம் வேண்டிக் கொண்டால் குலதெய்வத்தின் ஆசி இப்பிறவி முழுவதும் நமக்குத் தொடர்ந்து கிட்டும்; இப்படி பல செயல்களை சொல்லலாம்.
    • இன்னும் சொல்ல போனால் சித்த மரபின் படி நாம் உண்ணும் உணவு ரத்தமாகி சதையாகி எலும்பாகி, மஜ்ஜையாகி பின்னர்... அது விந்துவாக மாறுவதற்கு ஒரு மண்டல காலம் எடுக்கும்.

    முற்காலத்தில் மருத்துவமாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விரதமாக இருந்தாலும் ஒரு மண்டல காலம் அதாவது 48 நாள்கள் கடைப்படிக்கச் சொல்லுவார்கள். அந்த கணக்கு என்னவென்று தெரியுமா?

    சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன. நம்மை பாதித்து நம் உடலில், மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

    இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா? அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.

    ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி, அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், 12 ராசிக்கூட்டங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்.

    எப்படி என்கிறீர்களா...? இதோ இப்படி..

    கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27. இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்> 9+12+27=48

    எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் எவ்வுயிரும் வாழ முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புகளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

    எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன.

    ஒரு பாழடைந்த ஆலயம் கூட கும்பாபிஷேகம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் செய்தால் மீண்டும் அங்கு அந்த தெய்வ சாநித்யம் உயிர் பெறும்.

    48 நாட்கள் தொடர்ந்து நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு சென்று வந்தாலே நமது வாழ்க்கையில் ஒரு பிரமிப்பூட்டும் மாற்றம் வருவதை நம் ஒவ்வொருவராலும் உணரமுடியும்;

    48 நாட்கள் தினமும் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி 15 நிமிடம் வேண்டிக் கொண்டால் குலதெய்வத்தின் ஆசி இப்பிறவி முழுவதும் நமக்குத் தொடர்ந்து கிட்டும்; இப்படி பல செயல்களை சொல்லலாம்.

    இன்னும் சொல்ல போனால் சித்த மரபின் படி நாம் உண்ணும் உணவு ரத்தமாகி சதையாகி எலும்பாகி, மஜ்ஜையாகி பின்னர்... அது விந்துவாக மாறுவதற்கு ஒரு மண்டல காலம் எடுக்கும்.

    இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும்.

    அதே போல் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டல காலத்துக்குச் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றிகரமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலையோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! இந்த யோக அறிவியல் ரகசியத்தின் உண்மை விளங்கும்.

    - சித்தர்களின் குரல் சிவசங்கர்

    • சங்க இலக்கிய நூல்களாகிய அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் அவ்வையார் எழுதியதாக 69 பாடல்கள் உள்ளன.
    • இதில் புறப்பாட்டு33; அகப்பாட்டு 26. இவை அத்தனையும் ஒரே அவ்வை எழுதியதுதானா?

    பொதுவாக அவ்வையை ஒற்றைத் தோற்றமுடைய ஒரே நபரென நாம் எண்ணுகிறோம். ஆனால் தமிழ்ப் பரப்பில் எட்டு அவ்வையார்கள் இருந்ததாக ஒரு நூலில் படித்த ஞாபகம். இப்படித்தான் அகத்தியர் பற்றி ஒரு பாடல் எழுத எண்ணிய போது... மொத்தம் 36 அகத்தியர்கள் கிடைத்தனர்.

    அதுபோலவே அவ்வையாரிலும் பலர் உண்டு. அதைக்கால வரிசையோடு நிறுவுகிற நூல் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. சில அவ்வைகளை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

    1. முருகன் என்னும் செவ்வேள் முதற்சங்கக் காலத்தவன் எனின்... முருகன், "சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா?" எனக் கேட்ட அவ்வைதான் முதல் அவ்வையாக இருக்கக்கூடும். இவளது காலம் இந்தச் சம்பவம் எப்போது நடந்ததாக வரலாறு முடிவெடுக்கிறதோ அந்தக் காலம்.

    2. திருவள்ளுவர் காலத்தில் அவரது உறவினளாக ஒரு அவ்வை இருந்திருக்கிறாள். அடியளவு கருதி திருக்குறளைச் சங்கப் புலவர்கள் ஏற்க மறுத்தபோது, அவள்தான் வள்ளுவருக்காக வக்காளத்து வாங்கி அந்நூலை அறங்கேற்றம் செய்திருக்கிறாள். அப்படியும் "உறுதிபொருள் நான்கின் ஒன்று குறைகிறதே" என வம்புக்கு வந்த புலவர்களை அமைதிப்படுத்தவே அவள் 'வீட்டுப்பால்" என்னும் நூலை செய்தாள். அது 'அவ்வை குறள்' என்னும் பெயரில் கிடைக்கிறது. இது ஒருஅவ்வை.

    3. சங்க இலக்கிய நூல்களாகிய அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் அவ்வையார் எழுதியதாக 69 பாடல்கள் உள்ளன. இதில் புறப்பாட்டு33; அகப்பாட்டு 26. இவை அத்தனையும் ஒரே அவ்வை எழுதியதுதானா?

    4. "மூவர் கோவையும் மூவிளங் கோவையும்

    பாடிய என்தன் பனுவல் வாயால்

    எம்மையும் பாடுக என்றனீர் யானிங்கு

    எங்கணம் பாடுகேன் நுமையே?"

    எனப் பாடிய அவ்வையின் காலம் தெளிவாகத் தெரிகிறது. இவள் கபிலர் காலத்தில் வாழ்ந்தவள். சேர, சோழ, பாண்டிய மன்னர்களை ஒரே மேடையில் சந்தித்தவள் இவள்தான்.

    5. அதியமான் நெல்லிக்கனி கொடுத்த அவ்வை ஒருத்தி இருக்கிறாள். அவள் மேற்சொன்ன கபிலர் காலத்து அவ்வையாக இருக்கலாம்.

    6. கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் காலத்தில் ஒருஅவ்வை உண்டு. 'கூழுக்குப் பாடியஅவ்வை' இவளா? 8,10.12 ஆம் நூற்றாண்டுகளில் (சற்று முன்பின்னாக) மூன்று அவ்வைகள் இருந்திருக்கலாம்.

    7. அவ்வை என்றாலே நினைவுக்கு வரும் நூல்கள் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி. இவையாவும் ஒரே காலத்தில் ஒரே அவ்வையால் எழுதப்பட்டனவா?

    8.விநாயகர் அகவல், அசதிக்கோவை, பந்தனந்தாதி போன்ற நூல்கள் அவ்வை பெயரில் உள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கூட அவ்வை பெயரில் ஆள் இருந்திருக்கிறார்கள்.

    எனவே அவ்வை என்பவர் ஒருவரன்று. ஒரே பெயரில் வாழ்ந்த வெவ்வேறு காலத்தவர்.

    -பாவலர் வையவன்

    ×