என் மலர்

  கதம்பம்

  மருத்துவர்களையும் அன்பு செய்வோம்...
  X

  மருத்துவர்களையும் அன்பு செய்வோம்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூமியில் கடவுளைப்போல் வாழவும், போர் வீரர்களைப் போல் தியாகம் செய்யவும், நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
  • டாக்டர்களை கடவுளாக்க வேண்டாம். எல்லா உயிர்களைப் போல, மருத்துவர்களையும் அன்பு செய்வோம். மருத்துவர்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்தும்.

  இன்று தேசிய மருத்துவர்கள் தினம். இந்தியாவின் தன்னலமற்ற மருத்துவர்களுள் ஒருவரான பி.சி.ராய் அவர்களது நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. பி.சி.ராய் காந்தியை பின்பற்றியவர். எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தவர். இவரது பிறந்த தினம், நினைவு தினம் இரண்டுமே ஜூலை 1 .

  சிறுவயதில் எப்போதாவது உடம்பு சரியில்லாமல் போகும். அப்பா எங்களை ராமலிங்கம் என்கிற டாக்டரிடம் அழைத்து செல்வார். மென்மையாக பேசும் இயல்புடையவர். பரிவோடு அவர் பேசும் விதத்தில் பாதி சரியாகிவிடும். அதிகம் மருந்துகள் எழுதித்தரமாட்டார். இவர் போன்ற மருத்துவர்கள் கை, பிள்ளைகள் மீது பட்டால் போதும்! குணமாகிவிடும்.

  மருத்துவ அறம் காத்த செம்மல்கள். தேவையில்லாத பரிசோதனைகளை செய்யச் சொல்ல மாட்டார்கள். நம் எல்லோருக்குள்ளும் அழியாமல் இப்படி சில மருத்துவர்களின் முகங்கள் இருக்கின்றன!

  படிப்படியாக மருத்துவத்துறை வணிகமயமானதைக் கண்டோம்.

  பன்நோக்கு மருத்துமனைகள் பெருகின. டாக்டர்களிடம் அல்லாமல் மருத்துமனைகள் கார்ப்ரேட் வசம் சென்றன.

  இதன் விளைவை கோவிட் பரவலில் கண்டோம். நல்லவேளை வட இந்தியாவில் இருந்த அவலம் தென்னிந்தியாவில் இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் வலுவான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளன. கிராமப் புறங்கள் வரை ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி எளிய மக்களை அரவணைக்கும் வகையில் செயல்படுகிறது.

  இருப்பினும் இந்தியா/ தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற லட்சியத்தை அடைய நாம் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

  கத்தார் சிறிய நாடு. 1000 பேருக்கு ஒரு டாக்டர் என்கிற இலக்கை கத்தார் அடைந்திருக்கிறது . மொனாகோ, கியூபா, ஸ்பெயின், பெல்ஜியம் , அர்ஜென்டினா போன்ற நாடுகளும் இவ்விலக்கை நெருங்கியுள்ளன.

  சான் மெரினோ, மால்டா, உக்ரைன், ஃபிரான்ஸ், பெலாரஸ், கியூபா, ஜார்ஜியா, பெல்ஜியம், ஸ்பெய்ன், அர்ஜென்டினா போன்ற நாடுகள், உலகில் அதிக டாக்டர்களை கொண்டிருக்கும் நாடுகள் என்கிற பெருமையைப் பெற்றிருக்கின்றன.

  ஓரளவு ஒத்துக்கொள்ளப்பட்ட , உலகின் முதல் மருத்துவராக கருதப்படுபவர் கிரேக்கரான ஹிப்போகிரடஸ்.

  அக்யூட், கிரானிக், எண்டமிக், எப்பிடமிக் இப்படி நோய்களைப் பகுத்தறிந்தவர் ஹிப்போகிரடஸ். உணவே மருந்து, நடை பயிற்சியின் முக்கியத்துவம் போன்ற நடைமுறை மருத்துவத்தை முதலில் பேசியவர் இவரே.

  உலகில் முதலில் மருத்துவ நூல்களை எழுதியவரும் இவரே. 70 நோய்கள் பற்றி இவர் தன் நூல்களில் எழுதியிருக்கிறார். எண்டாஸ்கோப்பியின் முன்னோடியும் இவரே. இன்று மருத்துவ மாணவர்கள் பட்டம் பெறுகிறபோது ஹிப்போகிரடஸ் உறுதி மொழியையே வாசிக்கிறார்கள்.

  வரலாற்றில் என்னைக் கவர்ந்த சில மருத்துவர்கள் இருந்தார்கள்.

  கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது! என்றார் ஔவை. ஆனால் வலியிலிருந்து, தீராத ஊனத்திலிருந்து, நோய்த் தொற்றிலிருந்து மனித குலத்தை காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள்.

  இன்று தடுப்பூசியின் மகத்துவத்தை உலகம் காண்கிறது. உலகில் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் டாக்டர் எட்வர்ட் ஜென்னர். பெர்க்கிலியில் பிறந்த இவர் 'நோய்எதிர்ப்பியலின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.

  அதுபோல உலகின் முதல் ஓபன் ஹார்ட் சர்ஜரியை செய்தவர் டாக்டர் டானியல் ஹாலி வில்லியம். இவரொரு ஆஃப்ரிக்க அமெரிக்கன்.

  எனக்கு அலர்ஜி என்றபோதும், அலெக்சாண்டர் ஃபிளமிங்கின் கண்டுபிடிப்பான பென்சிலின், உலகின் சிறந்த ஆண்டி பயடிக்காக கருதப்படுகிறது.

  இன்று குருதிக் கொடை உயர்ந்த தானமாக பார்க்கப்படுகிறது. ஒரு மனிதரின் ரத்தத்தை இன்னொருவருக்கு செலுத்தலாம் என கண்டுபிடித்தவர் டாக்டர் சார்லஸ் ரிச்சர்ட் ட்ரூ. இவரும் ஓர் ஆஃப்ரிக்க அமெரிக்கர்.

  டாக்டர் மைக்கேல் எலிஸ் டிபெகேதான் முதன் முறையாக பாதிக்கப்பட்ட இதயத்தில், செயற்கையாக பம்ப் செய்யும் வால்வைப் பொறுத்தியவர்.

  ஹெலன் ப்ரோக், அந்தக்காலத்தில், கருவுற்ற பெண்களுக்கு செலுத்தப்பட்ட மயக்க மருந்தான தாலிடோமைடை தடை செய்ய காரணமாக இருந்தவர். இவரது கண்டுபிடிப்புகள் கைனகாலஜிஸ்ட்டுகளுக்கு இன்றும் உதவக்கூடியதாக இருக்கின்றன.

  ஜேம்ஸ் யங் சிம்சனின் கண்டுபிடிப்பான குளோரோஃபார்ம், டி ஜி.மார்ட்டன் கண்டுபிடிப்பான அனஸ்தீஷியா போன்றவை மானுடத்தை வலியிலிருந்து காப்பாற்றின.

  பூமியில் கடவுளைப்போல் வாழவும், போர் வீரர்களைப் போல் தியாகம் செய்யவும் , நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

  'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால் மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!'

  கசிந்துருகுகிறார் குலசேகர ஆழ்வார்.

  கடவுளையும் மருத்துவர்களையும் அருகருகே வைத்து பார்க்கிறான் என் தமிழக்கவி.

  இறுதியாக இன்னொரு விசயத்தையும் கூறவேண்டியிருக்கிறது. இந்திய மக்களின் சராசரி ஆயுள் 72. ஆனால், இந்திய டாக்டர்களின் சராசரி ஆயுட்காலம் 59 ஆண்டுகளே.

  மருத்துவர்களால் நேரத்துக்கு தூங்க முடியாது. சாப்பிட முடியாது. டென்ஷன். விளைவு சுகர், பி.பி.

  நோயாளி இறந்தபோது டாக்டரை அடித்தார்கள் . பிழைத்தபோது கடவுளுக்கு நன்றி சொன்னார்கள்.

  டாக்டர்களை கடவுளாக்க வேண்டாம். எல்லா உயிர்களைப் போல, மருத்துவர்களையும் அன்பு செய்வோம். மருத்துவர்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்தும்.

  -கரிகாலன்

  Next Story
  ×