search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கணேசா... இன்று முதல் நீ சிவாஜி!-  அம்ரா பாண்டியன்
    X

    கணேசா... இன்று முதல் நீ சிவாஜி!- அம்ரா பாண்டியன்

    • திராவிடர் கழகம் சார்பில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடக்க இருந்தது.
    • அதற்காக ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தை அண்ணா எழுதினார்.

    ஒரு முறை கணேசன் வீட்டுத் தெருவில் கட்டபொம்மன் ஆட்டம் நடந்தது. கட்டபொம்மன் நாடகத்தை மட்டுமே நடத்தும் கம்பளத்தார் கூத்து அங்கே நடந்தது. கூத்துப் பார்க்கப் போன கணேசனுக்குக் கூத்தில் வெள்ளைக்கார சிப்பாய்களில் ஒருவனாக வீர நடை போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கணேசன் போட்ட முதல் வேஷம் அதுதான். இப்படி நடித்ததற்காக இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான அப்பாவிடம் முதுகில் அடி வாங்கினார் கணேசன். அடி வாங்கிய கணேசனுக்கு காய்ச்சலும் வந்தது; நடிக்கும் ஆசையும் வந்தது.

    வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போவது வாடிக்கையானது. கடைசியில் "அப்பா அம்மா இல்லாத அனாதை நான்" என்று பொய் சொல்லி எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பெனியில் போய் சேர்ந்தான் கணேசன்.

    திராவிடர் கழகம் சார்பில் ஏழாவது சுயமரியாதை மாநாடு நடக்க இருந்தது. அதற்காக 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தை அண்ணா எழுதினார். நாடகத்தை எழுதிய உடன் நடிகர் டிவி நாராயணசாமியிடம் "உனக்காகவே ஒரு நாடகத்தை எழுதி இருக்கிறேன். நீதான் அதில் நடிக்கவேண்டும்" என்று சொன்னார். அண்ணா சொன்னவுடன் சத்ரபதி சிவாஜி வேடத்தில் எம்ஜிஆரை நடிக்கச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று டி.வி.என் நினைத்தார்.

    டி.வி.என், எம்ஜிஆரிடம் சென்றார். "சிவாஜி வேடத்தில் நடிக்கிறீர்களா?" என்று கேட்டார். நடிக்கிறேன் என்று விருப்பம் தெரிவித்த எம்ஜிஆரை சிவாஜி வேடத்துக்குப் பொருத்தமானவர் என்று அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எம்ஜிஆரின் சிவந்த நிறமும் கட்டான உடல்வாகும் அண்ணாவைக் கவர்ந்தது. தான் கற்பனை செய்த சிவாஜி இவர்தான் என்று அவரும் எம்ஜிஆரை விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டார்.

    எம்ஜிஆருக்கு சிவாஜி உடைகள் தைக்கப்பட்டன. வசனம் ஒப்படைக்கப்பட்டது. வசனத்தை படித்துப் பார்த்த எம்ஜிஆர் ஒரு சில காட்சிகளில் வசனத்தைத் திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். டைரக்டர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கிய ராஜகுமாரி என்ற படத்தில் அப்போது எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்தார்.

    அண்ணாவுக்கு நேரம் கிடைக்காவிட்டால் நானே காட்சிகளைத் திருத்திக் கொடுக்கட்டுமா என்று கேட்டார் சாமி. அண்ணாவும் பெருந்தன்மையோடு அதற்கு சம்மதித்தார். ஆனால் அண்ணா எழுதி சாமி திருத்தி அதில் நடிப்பதா என்று எம்ஜிஆருக்குக் குழப்பமாக இருந்தது. அதனால் "இப்போது என்னால் நடிக்க இயலாது. மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று டி.வி.என்னிடம் சொன்னார் எம்ஜிஆர்.

    எம்ஜிஆர் நடிக்காத பட்சத்தில் எஸ்.வி.சுப்பையா, கே.பி. காமாட்சி ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. அவர்களும் நடிக்க மறுத்து விட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் திராவிடநாடு அலுவலகத்தில் கே. ஆர். ராமசாமி, சிவசூரியன், சிதம்பரம் போன்ற நடிகர்களோடு கணேசனும் தங்கியிருந்தார். அவர்களில் சிதம்பரம் "சிவாஜி வேடத்தில் நம்ம கணேசனைப் போட்டால் என்ன?"என்று டி.வி.என்னிடம் கேட்டார்.

    அண்ணாவிடம் சென்று "சிவாஜி நடிப்புக்கு கணேசனைப் போட்டால் என்ன?" என்று கேட்டார் டி.வி.என். "கணேசன் பெண் வேடங்களில்தானே நடித்துள்ளார். அவர் சரியாக வருவாரா?" என்று கேட்டு யோசித்தார் அண்ணா. "கணேசனைத் தயாரித்து விடலாம்" என்றார் டி.வி.என்.

    "கணேசா, நீ நடிக்கிறாயா?" என்று அண்ணா கேட்டதும், "என்னால் முடியுமா?" என்று கேட்டுத் தயங்கினார் கணேசன். "முயற்சி செய்து பார் கணேசா. உன்னால் முடியும்" என்று அண்ணா கூறினார். மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை கணேசனிடம் கொடுத்து, "நான் வீட்டுக்குச் சென்று வருகிறேன். நீ இதைப் படித்துக் கொண்டிரு. எப்படிப் பேசுகிறாய் பார்ப்போம்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

    அண்ணாவிடம் இருந்து 11 மணியளவில் வசனப்பிரதிகளைப் பெற்றார் கணேசன். மாலை ஆறு மணி போல் திரும்பி வந்தார் அண்ணா. "என்னவாயிற்று?" என்று கேட்டார் கணேசனிடம்.

    "வசனங்களை நான் பேசுகிறேன். நீங்கள் கேளுங்கள்" என்றார் கணேசன். அண்ணாவின் ஆற்றல்மிகு வசனங்களை உணர்ச்சிகரமாகப் பேசி சிவாஜியாகவே மாறிவிட்டார் கணேசன். அண்ணா எழுதிக்கொடுத்த காகிதங்களைப் பார்க்காமலேயே வசனங்களை அழகுற உச்சரித்தார் கணேசன். அண்ணா, கணேசனை கட்டித் தழுவிக்கொண்டார். "நீதான் சிவாஜி.. கணேசா" என்றார்.

    மாநாட்டில் நாடகத்தை ரசித்துப் பார்த்தார் பெரியார். "நான் பத்து மாநாட்டில் சொல்ல வேண்டிய கருத்துக்களை அண்ணா ஒரே நாடகத்தில் கூறிவிட்டார்." என்று பாராட்டினார். தொடர்ந்து, "யாரோ ஒரு சின்னப் பையன் சிவாஜி வேடத்தில் குறுக்க நெடுக்க ஓடிக்கொண்டிருந்தானே, அவன் யார்?" என்று கேட்டார்.

    பின்னாலிருந்து "அவன் பெயர் கணேசன்" என்று சொல்லி அவர் முன் கொண்டுபோய் நிறுத்தினார்கள். "ஆமா கணேசன். சிவாஜி கணேசன்... நல்லா நடிச்சார். சிவாஜி மாதிரி இருந்தார்" என்று பாராட்டினார் பெரியார். "கணேசா இன்று முதல் நீ சிவாஜி" என்று சொல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இதற்குப் பிறகுதான் கணேசன் சிவாஜி கணேசன் ஆனார்.

    Next Story
    ×