search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    அறிவியல் கொஞ்சம் ஆன்மிகம் கொஞ்சம்!
    X

    அறிவியல் கொஞ்சம் ஆன்மிகம் கொஞ்சம்!

    • ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும்.
    • தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும்.

    உத்தராயணம் - தட்சிணாயனம் பற்றி பார்ப்போம்.. .

    தட்சிணாயனம்: 'தட்சண்' என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே தட்சிணாயன காலமாகும்.

    ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். ஆடி முதல் நாளன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் படுக்கையில் இருந்து விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோவில்களில் பஜனை பாடி அந்தத் தேவர்களை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

    உத்தராயணம்: 'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி என்று பொருளாகும். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும்.

    தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாகும். உத்தராயனமும், தட்சிணாயனமும் சேர்ந்த நம்முடைய ஓராண்டானது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.

    சூரியன் தெற்காகவும் வடக்காகவும் நகருவதாக நமக்குத் தோன்றுவது, புவியானது தனது அச்சில் இருபத்து மூன்றரை (231/2) பாகை சாய்ந்து சூரியனைச் சுற்றி வருவவதால் தான். அதனால்தான் காலநிலை மாற்றம் நமக்கு ஏற்படுகிறது.

    இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். விதைத்த பயிர்கள் செழித்து வளரும். அதனால்தான் "ஆடிப்பட்டம் தேடிவிதை" என்றனர்.

    தட்சிணாயனம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

    ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம்.

    உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயன காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

    இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலைகுளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    - வீரமணி

    Next Story
    ×