என் மலர்
அமெரிக்கா
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி
- நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
நியூயார்க்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென எழுந்த மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்று, கத்தியால் அவரது கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தினார். இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனே அவர் மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபர் 24 வயதான ஹடி மடர் என்பதும், நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலில் அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டி செயற்கை சுவாசக் கருவியுடன் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு கண் பார்வையை ருஷ்டி இழக்க நேரிட்டுள்ளது என அவரது புத்தகத்தின் ஏஜெண்ட்டு தெரிவித்துள்ளார்.
சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு வெளியிட்ட தி சடனிக் வர்சஸ் (The Satanic Verses) என்ற புத்தகம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- குடும்ப பிரச்சினை காரணமாக மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
- இந்த தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செடின்ஜி:
தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மொண்டெனேகுரோ. அந்நாட்டின் மெடொவினா நகரில் இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
34 வயதான நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினார். தெருவில் நடந்து சென்றவர்கள், கண்ணில் பட்டவர்கள் என அனைவரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். ஆனால், அந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? தாக்குதலுக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
- இவர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
நியூயார்க்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்றார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தினார். இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். அதன்பின், மருத்துவ ஹெலிகாப்டரில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் கத்தியால் குத்திய நபரை தடுத்து நிறுத்திப்பிடித்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரம்ப் அதிகாரிகளை தவறாக வழி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- இந்த விசாரணையை சூனிய வேட்டை என விமர்சித்த டிரம்ப்.
வாஷிங்டன் :
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடன்கள் மற்றும் வரிச்சலுகைகளைப் பெறுவதற்காக தனது சொத்துக்களின் மதிப்பு குறித்து அதிகாரிகளை தவறாக வழி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மேன்ஹட்டனில் உள்ள நியூயார்க் மாகாண அட்டார்னி ஜெனரல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு டிரம்ப் நேரில் ஆஜரானார்.
சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணையின்போது, அட்டார்னி ஜெனரல் எழுப்பிய ஒவ்வொரு கேள்விக்கும் "ஒரே பதில்" என்று டிரம்ப் கூறிக்கொண்டு, ஒத்துழைப்பு அளிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விசாரணையை சூனிய வேட்டை என விமர்சித்த டிரம்ப், நியூயார்க் அட்டார்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் மற்றும் தன்னிடம் நடந்த விரிவான விசாரணையை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், " பல வருட உழைப்பும், கோடிக்கணக்கான டாலர்களும் கொதித்துக்கொண்டிருக்கிற இந்த நீண்ட தொடர்கதைக்காக செலவழிக்கப்பட்டும் எந்தப் பலனும் இல்லை.
அமெரிக்க அரசியல் சாசனத்தின்கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் உரிமைகள் மற்றும் சலுகைகளின் கீழ் உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் மறுத்து விட்டேன்" என தெரிவித்துள்ளார். அட்டார்னி ஜெனரல் ஜேம்ஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "டிரம்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் 5-வது திருத்த உரிமையை தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக பயன்படுத்தினார். அட்டார்னி ஜெனரல் ஜேம்ஸ், எங்கு வழிநடத்தினாலும் உண்மைகளையும் சட்டத்தையும் பின்பற்றுவார். எங்கள் விசாரணை தொடர்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் வீட்டோ அதிகாரத்தால் சீனா தடுத்து நிறுத்தியது.
- இதுபோன்ற இரட்டை நிலைகள் தடை விதிக்கும் கவுன்சிலின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும் என இந்தியா கூறியது.
நியூயார்க்:
சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராப்புக்கு தடை கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இந்த முயற்சிக்கு ஆதரவாக 14 நாடுகள் முன்வந்தன. ஆனால், சீனா இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.
இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்து நிறுத்தியது.
இதேபோல், கடந்த ஜூனில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி என்பவரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை கூட்டாக பரிந்துரை செய்தன. இந்தப் பரிந்துரையையும் சீனா கடைசி நேரத்தில் நிறுத்திவைத்தது.
இதற்கு முன்னரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா கோரியபோது சீனா முட்டுக்கட்டை போட்டது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இந்த மாதம் சீனா தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் பேசியதாவது:
பயங்கரவாதிகள் மீதான தடுப்பு நடவடிக்கையை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி நிறுத்தி வைப்பது முடிவுக்கு வரவேண்டும். தடுப்பு கமிட்டி வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். உலகின் மிக மோசமான சில பயங்கரவாதிகளை தடுப்பு பட்டியலில் சேர்க்க அளிக்கப்பட்ட பரிந்துரை முறையான காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இரட்டை நிலைகள் தடை விதிக்கும் கவுன்சிலின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் போராடும்போது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரே குரலை வெளிப்படுத்துவர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- தற்போது எலான் மஸ்க் மீண்டும் 7 பில்லியன் டாலர் பங்குகளை விற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.55ஆயிரம் கோடி ஆகும்.
- ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 79 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார்.
நியூயார்க்:
உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் கைவிட்டார். இந்த முடிவை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் வழங்கு தொடர்ந்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் விற்றார். இதன் இந்திய மதிப்பு ரூ.67 ஆயிரம் கோடி ஆகும்.
இந்தநிலையில் தற்போது எலான் மஸ்க் மீண்டும் 7 பில்லியன் டாலர் பங்குகளை விற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.55ஆயிரம் கோடி ஆகும்.
ஒருவேளை டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குறைந்த விலையில் டெஸ்லா பங்குகளை விற்க வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க தற்போது விற்பனை செய்ததாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 79 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகளை அவர் விற்றுள்ளார்.
- டிரம்ப்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
- அமெரிக்க அதிபராக இருந்த ஒருவருக்கு இதற்கு முன்பு இது போன்று எதுவும் நடந்ததில்லை.
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமாக புளோரிடா மாகாணத்தில் மர்-எ-லாகோ என்ற எஸ்டேட் உள்ளது.
இந்த நிலையில் டிரம்ப்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முன் அறிவிப்பு ஏதுவுமின்றி இந்த சோதனை நடத்தப்பட்டது. இதனை டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, "எனது மர்-எ-லாகோ எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் எப்.பி.ஐ. சோதனை நடத்தி வருகின்றனர். முன் அறிவிப்பின்றி சோதனை நடத்தும் அரசு அமைப்புகளுடன் இணைந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.
இச்சோதனை அவசியமோ அல்லது பொருத்தமானதோ அல்ல. அதிகாரிகள் என் பெட்டகத்தை உடைத்தார்கள். இது நமது தேசத்துக்கு இருண்ட காலங்கள்.
அமெரிக்க அதிபராக இருந்த ஒருவருக்கு இதற்கு முன்பு இது போன்று எதுவும் நடந்ததில்லை.
மூன்றாம் தர உலக நாடுகளில் மட்டுமே இத்தகைய தாக்குதல் நடத்த முடியும். துரதிருஷ்டவசமாக தற்போது அந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது. இதற்கு முன்பு கண்டிராத அளவில் ஊழல் நிறைந்துள்ளது. இது மிக உயர்மட்ட அரசியல் இலக்கு நடவடிக்கை ஆகும்.
2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதை அவர்கள் தீவிரமாக விரும்பவில்லை. அமெரிக்க மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார்.
கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது சில ரகசிய ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை புளோரிடாவில் உள்ள சொகுசு பங்களாவுக்கு எடுத்து சென்று விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக டிரம்ப்பின் சொகுசு பங்களாவில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
- ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுபடும் வரை அமெரிக்க பாதுகாப்பு ஆதரவு தொடரும்.
- உக்ரைன் மக்களை அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும்.
வாஷிங்டன்:
உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த உதவி வழங்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்த உதவி மூலம் உக்ரைன் படைகள், ரஷிய படைகளை தாக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
- அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன்.
- இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று மீண்டும் கண்டறியப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஜூலை 21-ம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.
இதற்கிடையே அதிபர் ஜோ பைடன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார் என அதிபரின் டாக்டர் தெரிவித்தார். ஜூலை 31-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் பைடன் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இன்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
- ஸ்டீபன் மார்லோ ஓகியோவில் இருந்து தப்பி சென்றிருக்கலாம்.
- துப்பாக்கி சூடு நடத்தியதாக கருதப்படும் அவரை யாரும் அணுக வேண்டாம்’ என்றனர்.
ஓகியோ:
அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள பட்லர் சவுன்ஷிப் பகுதியில் காரில் வந்த நபர் திடீரென்று துப்பாக்கியால் பொது மக்கள் மீது சரமாரியாக சுட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த நபர் தப்பி சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியானவர்களின் உடலை கைப்பற்றினர்.
தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். சம்பவம் நடந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது துப்பாக்கி சூடு நடத்திய நபர் வெள்ளை நிற காரில் தப்பி சென்றது தெரியவந்தது.
விசாரணையில் அந்த நபர் ஸ்டீபன் மார்லோ என்று கருதப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஸ்டீபன் மார்லோ புகைப்படத்தையும் அவர் தப்பி சென்ற காரின் படம், நம்பரையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, 'ஸ்டீபன் மார்லோ ஓகியோவில் இருந்து தப்பி சென்றிருக்கலாம். அவர் லெக்சிங்டன், கென்டக்கி, இண்டியானா போலீஸ், சிகாகோ ஆகிய நகரங்களில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம். துப்பாக்கி சூடு நடத்தியதாக கருதப்படும் அவரை யாரும் அணுக வேண்டாம்' என்றனர்.
- மேரி மில்பென் இந்திய தேசிய கீதத்தை பாடுகிறார்.
- 10-ந்தேதி பியானோ இசைமேதை லிதியன் நாதஸ்வரத்துடன் இணைந்து பாடுகிறார்.
வாஷிங்டன் :
நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவாக வரும் 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் தோறும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்கவிடப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் நடக்க உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மில்பென் பங்கேற்று பாடுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் அழைப்பின்பேரில் அமெரிக்காவின் பிரதிநிதியாக அவர் இங்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மேரி மில்பென் பாடகி, நடிகை, ஊடக ஆளுமை என பல முகங்களை கொண்டவர். ஜார்ஜ் டபுள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்டு டிரம்ப் என 3 அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இசை நிகழ்ச்சி நடத்தி பாடி உள்ளார்.
இந்தியாவின் 'ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே' மற்றும் 'ஜன கண மன' ஆகிய பாடல்களுக்கு பெயர் பெற்றவர், இந்த மேரி மில்பென்.
தனது இந்திய பயணத்தால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிற இவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மனித உரிமை போராளியான டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, 1959-ம் ஆண்டு அவர் இந்தியாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டதன் மூலம், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் அமெரிக்காவின் கலாசார தூதராக பங்கேற்பதில் நான் பெருமை அடைகிறேன்.
இந்த பொக்கிஷம் போன்ற நாட்டை நான் கொண்டாடுவதில் பரவசம் அடைகிறேன். இந்தியாவுடனும், உலகமெங்கும் உள்ள இந்திய சமூகங்களுடனும், எனது அர்த்தமுள்ள உறவைக் கொண்டாகிறேன். இந்திய சுதந்திரத்தின் இந்த முக்கியமான கொண்டாட்டத்தின்போது, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான ஜனநாயகக் கூட்டை முன்னிலைப்படுத்துகிறேன்.
நான் எனது இந்திய பயணத்துக்கு தயாராகிற இந்த வேளையில், எனது இதயத்தின் உணர்வுகள், "மற்ற நாடுகளுக்கு நான் சுற்றுலா பயணியாக செல்லலாம். ஆனால் இந்தியாவுக்கு நான் புனித பயணியாக வருகிறேன்" என்ற டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை எதிரொலிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
'இந்தியாஸ்போரா' அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமியின் அழைப்பின் பேரில் மேரி மில்பென் 'இந்தியாஸ்போரா குளோபல் போரத்தில்' முதன்முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அவர் இந்திய தேசிய கீதத்தை பாடுகிறார். 10-ந் தேதி மாலை சர்வ தேச இளம் பியானோ இசைமேதை லிதியன் நாதஸ்வரத்துடன் இணைந்து அவர் பாடுகிறார். இந்த லிதியன் நாதஸ்வரம், சென்னையைச் சேர்ந்த 16 வயதே ஆன இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மின்னல் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
- இந்த ஆண்டு அங்கு இதுவரை மின்னல் தாக்கி 12 பேர் இறந்துள்ளனர்.
வாஷிங்டன் :
அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் மின்னல் தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்த நிலையில் அவர்களில் 3 பேர் உயரிழந்திருப்பதாக வாஷிங்டன் போலீஸ் நேற்று அறிவித்தது. வெள்ளை மாளிகையின் வட பகுதியில் உள்ள லாபாயெட் சதுக்கத்தில் மின்னல் தாக்கியதில் 70 வயது தாண்டிய ஒரு தம்பதியரும், 29 வயதான ஒரு ஆணும் பலியாகி இருப்பதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்தது.
இதுபற்றி வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கேரின் ஜீன் பியாரே வெளியிட்டுள்ள அறிக்கையில், "லாபாயெட் சதுக்கத்தில் மின்னல் தாக்குதலில் ஏற்பட்ட துயரமான உயிரிழப்புகளால் வேதனை அடைந்துள்ளோம். அன்புக்குரியவர்களை இழந்து வேதனையில் உள்ள குடும்பங்களுடன் எங்கள் இதயங்கள் இணைந்துள்ளன. உயிருக்கு போராடுகிறவருக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேசிய மின்னல் பாதுகாப்பு கவுன்சில், இந்த ஆண்டு அங்கு இதுவரை மின்னல் தாக்கி குறைந்தது 12 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
"இடியுடன் மழை வருகிறபோது, நீங்கள் ஒருபோதும் மரத்தின் கீழ் நிற்கக்கூடாது என்பதற்கு இந்த சோக சம்பவம் ஒரு நினைவூட்டலாக அமைந்துள்ளது" என தேசிய மின்னல் பாதுகாப்பு கவுன்சில் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.






