search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு சீனா ஆதரவு - இந்தியா கடும் கண்டனம்
    X

    ஐக்கிய நாடுகள் சபை

    பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு சீனா ஆதரவு - இந்தியா கடும் கண்டனம்

    • இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் வீட்டோ அதிகாரத்தால் சீனா தடுத்து நிறுத்தியது.
    • இதுபோன்ற இரட்டை நிலைகள் தடை விதிக்கும் கவுன்சிலின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும் என இந்தியா கூறியது.

    நியூயார்க்:

    சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராப்புக்கு தடை கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இந்த முயற்சிக்கு ஆதரவாக 14 நாடுகள் முன்வந்தன. ஆனால், சீனா இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.

    இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்து நிறுத்தியது.

    இதேபோல், கடந்த ஜூனில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி என்பவரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை கூட்டாக பரிந்துரை செய்தன. இந்தப் பரிந்துரையையும் சீனா கடைசி நேரத்தில் நிறுத்திவைத்தது.

    இதற்கு முன்னரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா கோரியபோது சீனா முட்டுக்கட்டை போட்டது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இந்த மாதம் சீனா தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் பேசியதாவது:

    பயங்கரவாதிகள் மீதான தடுப்பு நடவடிக்கையை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி நிறுத்தி வைப்பது முடிவுக்கு வரவேண்டும். தடுப்பு கமிட்டி வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். உலகின் மிக மோசமான சில பயங்கரவாதிகளை தடுப்பு பட்டியலில் சேர்க்க அளிக்கப்பட்ட பரிந்துரை முறையான காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற இரட்டை நிலைகள் தடை விதிக்கும் கவுன்சிலின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் போராடும்போது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரே குரலை வெளிப்படுத்துவர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×