என் மலர்
அமெரிக்கா
- ஜூன் 22-ந் தேதி ஜோ பைடனை சந்திக்கிறார்.
- இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்.
வாஷிங்டன்
பிரதமர் மோடி, அரசுமுறை பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்.
இந்த பயணத்தின்போது, ஜூன் 22-ந் தேதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கிறார். மோடியை கவுரவிக்கும்வகையில், அவருக்கு ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார்.
இத்தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதுகுறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரின் ஜீன் பியரி கூறியதாவது:-
பிரதமர் மோடி அமெரிக்கா வருகிறார். இந்த பயணம், அமெரிக்கா-இந்தியா இடையிலான ஆழ்ந்த நெருக்கத்தை உறுதிப்படுத்தும். அமெரிக்கர்களையும், இந்தியர்களையும் ஒன்றாக பிணைக்கக்கூடிய குடும்ப, நட்புறவையும் உறுதிப்படுத்தும்.
சுதந்திரமான, வளமான, பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும். பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, விண்வெளி போன்ற முக்கிய துறைகளில் தொழில்நுட்ப உறவை அதிகரிக்கும்.கல்வி தொடர்பான கருத்து பரிமாற்றங்கள், மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள். பருவநிலை மாற்றம், சுகாதார பாதுகாப்பு போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்ள இணைந்து பணியாற்றுவது பற்றியும் பேசுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல், மத்திய வெளியுறவு அமைச்சகமும் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை உறுதிப்படுத்தியது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின்பேரில், பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். அப்பயணத்தில், ஜூன் 22-ந் தேதி, இரவுநேர விருந்தில் பங்கேற்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியும், ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர்.
இம்மாதம் 19-ந் தேதி முதல் 21-ந் தேதிவரை ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டிலும், 24-ந் தேதி ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் நடக்கும் 'குவாட்' தலைவர்கள் மாநாட்டிலும் இருவரும் சந்திக்க உள்ளனர்.
வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா ஜி20 மாநாடு நடத்துவதற்கு முன்பு, பிரதமரின் அமெரிக்க பயணம் அமைந்துள்ளது.
- பிரதமர் மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- அமெரிக்கா வரும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் விருந்தளிக்கிறார்.
வாஷிங்டன்:
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என தெரிவித்துள்ளது.
மேலும், அவரது இந்தப் பயணம் இரு நாடுகளின் வெளிப்படையான, திறந்த நிலையிலான, வளம் சார்ந்த பகிரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கு வலிமை சேர்க்கும். இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளைப் பாதுகாக்கும். பாதுகாப்புத்துறை, தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நமது செயல்திட்டம் சார்ந்த தொழில்நுட்ப உறவை மேம்படுத்தும் வகையிலான பகிரப்பட்ட தீர்மானம் ஆகியவற்றையும் பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
- ஜீன் கரோலை நான் ஒரு போதும் பாலியல் வன் கொடுமை செய்யவில்லை.
நியூயார்க்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
இதில் பெண் எழுத்தாளர் இ.ஜீன் கரோல் ஒருவர். 1990-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்தார் என்று குற்றம்சாட்டினார். பல ஆண்டுகளுக்கு பிறகு இதை அவர் வெளியில் கூறினார்.
ஆனால் ஜீன் கரோல் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக ஜீன் கரோல், நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை டிரம்ப் கற்பழித்தார் என்று குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கில் நியூயார்க் கோர்ட்டு நீதிபதி லூயிஸ் சுப்லான் தீர்ப்பு அளித்தார். அதில், பெண் எழுத்தாளரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
ஜூன் கரோலை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கும் அவரை அவமதிப்பு செய்ததற்கும் டிரம்ப் பொறுப் பேற்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
அதே வேளையில் டிரம்ப் தன்னை கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறிய குற்றச்சாட்டை நீதி பதி நிராகரித்தார். அதற்கான அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தார்.
ஜீன் கரோலை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் (ரூ.41 கோடி) இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு தொடர்பாக டிரம்ப் கருத்து கூறும்போது, "ஜீன் கரோலை நான் ஒரு போதும் பாலியல் வன் கொடுமை செய்யவில்லை. அவரை எனக்கு யாரென்றே தெரியாது. இந்த தீர்ப்பு தனக்கு நேர்ந்த அவமானம் ஆகும்" என்றார்.
வருகிற அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ள டிரம்ப்புக்கு இந்த தீர்ப்பு பின்னடைவாக அமைந்துள்ளது.
- கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது.
- தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
ஹூஸ்டன் :
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது.
வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க வணிக வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவர் கொல்லப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சரூர்நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று ஐஸ்வர்யா தனது தோழியுடன் வணிக வளாகத்துக்கு சென்றிருந்தபோது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி பலியானார். இதில் ஐஸ்வர்யாவின் தோழி காயங்களுடன் உயிர் தப்பினார்.
அமெரிக்க துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் என்ஜினீயர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஐஸ்வர்யாவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- தாறுமாறாக வேகமாக வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தை ஏற்படுத்தி 7 பேர் உயிரை பறித்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிரவின்சிலெவி நகரத்தில் உள்ள ஓசனம் பகுதியில் புலன் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றனர்.
25-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது தாறுமாறாக வேகமாக வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தை ஏற்படுத்தி 7 பேர் உயிரை பறித்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததா? அல்லது சதி வேலை காரணமாக திட்டமிட்டு காரை ஏற்றி தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது.
- பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியான சம்பவம் அந்நாட்டை உலுக்கியது.
டெக்சாஸ்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரத்தின் புறநகரமான ஆலனில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது வணிக வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் புகுந்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி சுட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்தப்படி சிதறி ஓடினார்கள். பலர் அங்குள்ள கடைகளுக்குள் புகுந்து பதுங்கி கொண்டனர். மேலும் வணிக வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
மர்ம நபரின் துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வணிக வளாகத்துக்குள் சிக்கியிருந்த பொது மக்களை மீட்டு ஒவ்வொருவராக வெளியே அழைத்து வந்தனர்.
வணிக வளாகத்துக்குள் வேறு யாராவது துப்பாக்கியுடன் உள்ளனர்களா? என்று தீவிரமாக சோதனை நடத்தினர். அதன்பின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே மர்ம நபர் வாகனத்தில் இருந்து துப்பாக்கியுடன் இறங்கி வணிக வளாகத்துக்குள் செல்லும் வீடியோ காட்சி பரவி வருகிறது.
துப்பாக்கி சூடு நடத்திய நபர்? எதற்காக தாக்குதல் நடத்தினார்? போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல் பலியானவர்களின் விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு தொடக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலியான சம்பவம் அந்நாட்டை உலுக்கியது.
இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் எந்த பயிற்சியும், உரிமமும் இன்றி யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார்.
- நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை அதிபர் ஜோ பைடன் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜோபைடன் கூறியதாவது:-
பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்பு, குடியேற்றம், கல்வி வரை எனது உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதை நீரா தாண்டன் தொடர்ந்து முன்னெடுப்பார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் முதல் ஆசிய-அமெரிக்கர் அவர் ஆவார். நீரா தாண்டன் பொதுக் கொள்கையில் 25 ஆண்டு அனுபவம் கொண்டவர். மூன்று அதிபர்களுக்கு சேவை செய்துள்ளார். பராமரிப்பு சட்டத்தின் முக்கிய நபராக இருந்தார். அவரது நுண்ணறிவு எனது நிர்வாகத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றாக சேவை செய்யும் என்பதை நான் அறிவேன்.
நீரா தாண்டனின் புதிய பொறுப்பில் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர் நோக்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீரா தாண்டன் தற்போது அதிபர் ஜோபைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் உள்ளார்.
- குழந்தையை கருவிலேயே காப்பாற்ற டாக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
- குழந்தையின் ரத்த நாளம் சரி செய்யப்பட்டதால் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
பாஸ்டன்:
பொதுவாக பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம். ஆனால் அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர்.
அங்குள்ள ஒரு பெண் கர்ப்பமானார். அவரது வயிற்றில் கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார். குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர்.
இந்த சோதனையில் மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரிய வந்தது. இது வீனஸ் ஆப் கேலன் என்ற குறைபாடாகும். இந்த குறைபாட்டினால் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும். ரத்தம் நுண் குழாய்களுடன் நேரடியாக இணைவதற்கு பதிலாக நேரடியாக நரம்புகளுடன் இணையும். இதன் காரணமாக நரம்புகளுக்குள் அதிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும். நரம்புகளில் இந்த கூடுதல் ரத்த அழுத்தம் ஏற்படும் போது பல பிரச்சினைகள் உருவாகும். மேலும் இதயம் செயல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயமும் உள்ளது.
மிகவும் அரிய வகை நோயான இந்த குறைபாட்டை ஆபரேஷன் மூலம் சரிசெய்ய டேரன் ஆர்பாக் தலைமையிலான டாக்டர் குழுவினர் முடிவு செய்தனர். அந்த குழந்தையை கருவிலேயே காப்பாற்ற டாக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் நடந்தது. மிகவும் சவாலான இந்த மூளை அறுவை சிகிச்சையினை டாக்டர் குழுவினர் ஒரு ஊசி மூலம் வெற்றிகரமாக நடத்தினார்கள். அதனை அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது அந்த குழந்தையின் ரத்த நாளம் சரி செய்யப்பட்டதால் உயிருக்கு இனி ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
உலகில் முதல் முறையாக இந்த ஆபரேஷனை அமெரிக்க டாக்டர் குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார்.
- போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாசில் இருந்து நேற்று (வியாழன் கிழமை) மதியம் 2 மணி அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார்.
விமானத்தை தவறவிட்ட கோபத்தில், அந்த பயணி விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்றப்பட்ட தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து விமான நிலையம் விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
எனினும், பயணி கூறியதை போன்று வெடிபொருட்கள் எதுவும் அவரது லக்கேஜில் கிடைக்கவில்லை. இதையடுத்து பயணியை போலீசார் கைது செய்தனர். பயணி கோபத்தில் விடுத்த மிரட்டல் காரணமாக விமானம் 37 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் 14 மாதங்களைக் கடந்துள்ளது.
- இரு நாடுகளிடையிலான போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துள்ளது.
போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதில், ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் ஹோவிட்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம்.
ரஷியா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மருத்துவ கட்டிடத்தில் புகுந்த மர்ம மனிதன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டான்.
- புகைப்படத்தை வைத்து அவனை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
அட்லாண்டா:
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிர் இழந்தார்.
அங்குள்ள அட்லாண்டா மேற்கு பீச்ட்ரீ ரோட்டில் ஏராளமான உயரமான கட்டிடங்கள் உள்ளது. சிறந்த வியாபார தலமாகவும் இப்பகுதி விளங்குகிறது.
இந்த பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கட்டிடத்தில் புகுந்த மர்ம மனிதன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டான். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். 4 பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் யார்? என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது 24 வயது வாலிபர் என தெரியவந்தது. அவன் முகத்தை கறுப்பு துணியால் மறைத்து இருந்தான். அவனது புகைப் படத்தை போலீசார் வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படத்தை வைத்து அவனை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
- லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
- வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள் பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் லூயிஸ்வில்லே உணவக உரிமையாளரும் ஒருவர்.
இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை கூறியிருப்பதாவது:-
லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனமானது, 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்துகிறது. அங்கு 16 வயதுக்குட்பட்ட 24 சிறுவர்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களை அனுமதிக்கப்பட்டதை நேரத்தைவிட அதிக நேரம் வேலை செய்ய வைத்துள்ளது. அவர்களில் இரண்டு பேர் 10 வயது சிறுவர்கள். அவர்கள் சில நேரங்களில் அதிகாலை 2 மணி வரை வேலை செய்துள்ளனர். ஆனால் அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள், ஆர்டர் செய்யப்படும் உணவுகளைத் தயாரித்து விநியோகிப்பது, கடையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல வேலைகளை செய்துள்ளனர்.
இவ்வாறு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் நலத்துறை கூறியுள்ள இரண்டு 10 வயது சிறுவர்களும், உணவகத்தின் மேலாளரை பார்க்க வந்த அவரது பிள்ளைகள் என்றும், அவர்கள் வேலை செய்யவில்லை என்றும் உணவக உரிமையாளர் சீன் பாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.






