குழந்தைகளை வேலைக்கு வைத்த மெக்டொனால்டு நிறுவனங்களுக்கு அபராதம்

லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள் பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.
குழந்தைகளை வேலைக்கு வைத்த மெக்டொனால்டு நிறுவனங்களுக்கு அபராதம்
Published on

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் லூயிஸ்வில்லே உணவக உரிமையாளரும் ஒருவர்.

இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை கூறியிருப்பதாவது:-

லூயிஸ்வில்லே உணவகத்தில் 10 வயது சிறுவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்ததை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனமானது, 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்துகிறது. அங்கு 16 வயதுக்குட்பட்ட 24 சிறுவர்களை வேலைக்கு வைத்துள்ளது. அவர்களை அனுமதிக்கப்பட்டதை நேரத்தைவிட அதிக நேரம் வேலை செய்ய வைத்துள்ளது. அவர்களில் இரண்டு பேர் 10 வயது சிறுவர்கள். அவர்கள் சில நேரங்களில் அதிகாலை 2 மணி வரை வேலை செய்துள்ளனர். ஆனால் அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள், ஆர்டர் செய்யப்படும் உணவுகளைத் தயாரித்து விநியோகிப்பது, கடையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பல வேலைகளை செய்துள்ளனர்.

இவ்வாறு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

தொழிலாளர் நலத்துறை கூறியுள்ள இரண்டு 10 வயது சிறுவர்களும், உணவகத்தின் மேலாளரை பார்க்க வந்த அவரது பிள்ளைகள் என்றும், அவர்கள் வேலை செய்யவில்லை என்றும் உணவக உரிமையாளர் சீன் பாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com