என் மலர்
பாலஸ்தீனம்
- பட்டினியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது
- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 30க்கும் மேற்பட்டோர் உணவு தேடி வந்தவர்கள் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் இன்று காலை வரை காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி மற்றும் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
வடக்கு நகரமான கஸ்னியில் உள்ள சிக்கிம் கிராசிங்கில் உதவி வாகனங்களுக்காக காத்திருந்த கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்து.
ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் வடக்கு நகரங்களான பெய்ட் லாஹியா மற்றும் பெய்ட் ஹனூனில் நடந்த தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு நகரமான கான் யூனிஸில் உதவி வாகனங்கள் காத்திருக்கும்போது, செவ்வாய்க்கிழமை மாலை கொல்லப்பட்ட 16 பேரின் உடல்கள் வந்து சேர்ந்ததாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (புதன்கிழமை) நுசைரத் நகரில் உள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், காசாவில் மேலும் ஏழு பேர் பட்டினியால் இறந்தனர். இதனால் பட்டினியால் இறந்தவர்கள் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பிரான்ஸ் உள்ளிட்ட 15 மேற்குலக நாடுகள் வலியுறுத்தி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரிட்டன் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- "எனது அன்புத் தோழர் அவுடா கொலை செய்யப்பட்டார்" என்று நோ அதர் லேண்டின் இணை இயக்குநர் பாசில் அட்ரா இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.
- மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேற்றக்காரர்களால் குறைந்தது 964 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
பாலஸ்தீன ஆர்வலரும் ஆசிரியருமான அவுடா ஹாதெலின், ஆஸ்கார் விருது பெற்ற "நோ அதர் லேண்ட்" திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் அறியப்பட்டவர் ஆவார்.
இந்நிலையில் அவுடா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரான் மலைகளுக்கு அருகிலுள்ள உம் அல்-கைர் கிராமத்தில் திங்கள்கிழமை, இஸ்ரேலிய குடியேற்றக்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"எனது அன்புத் தோழர் அவுடா கொலை செய்யப்பட்டார்" என்று நோ அதர் லேண்டின் இணை இயக்குநர் பாசில் அட்ரா இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.
ஹதலினின் கொலை ஹெப்ரோனுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு கரையில் ஆயுதம் ஏந்திய இஸ்ரேலியர்களின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அக்டோபர் 2023 இல் இருந்து, கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்கு கரையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் குடியேற்றக்காரர்களால் குறைந்தது 964 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
- காசாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக சில சிறப்பு வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பானவை என அடையாளம் காணப்படும்
- இங்கிலாந்து உட்பட பல நாடுகள் காசாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை பெரிய அளவில் நகர்த்தி வருகின்றன.
காசாவில் பஞ்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. உணவு மற்றும் மருந்து காசாவிற்குள் நுழைய அனுமதிக்க மூன்று பகுதிகள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
காசாவில் பட்டினியால் உயிரிழநதோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ள நிலையில் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இந்த முடிவுக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவிகள் அந்தப் பகுதியை அடைய அனுமதிக்க ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த குறுகிய கால போர்நிறுத்தம் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்குப் பொருந்தும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அறிக்கையின்படி, அல்-மவாசி, டேயர் அல்-பலா மற்றும் காசா நகரில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இஸ்ரேல் எந்த இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது.
மற்ற பகுதிகளில், வழக்கம் போல் தாக்குதல்கள் தொடரும். மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். காசாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக சில சிறப்பு வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பானவை என அடையாளம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த வழித்தடங்கள் வழியாக எடுத்துச் செல்லலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் இறக்கி அனுப்ப மற்ற நாடுகளை இஸ்ரேல் அனுமதித்தது. இந்தச் சூழலில், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் காசாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை பெரிய அளவில் நகர்த்தி வருகின்றன. எகிப்திலிருந்தும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
- உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது.
- உணவு விநியோக மையங்களை இஸ்ரேல் மரணப் பொறிகளாக மாற்றுவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளது.
காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் குழந்தைகள். இதன் மூலம், சமீபத்திய நாட்களில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 குழந்தைகள் உட்பட 101 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் கள நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது.

காசாவிற்கு அவசர உதவி கோரி 111 உலகளாவிய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. எல்லைகளற்ற மருத்துவர்கள், ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மற்றும் பொது மன்னிப்பு சபை போன்ற அமைப்புகள் களத்தில் உள்ளன.
காசாவிற்கு வெளியேயும் காசாவிற்குள்ளும் கிடங்குகளில் டன் கணக்கில் உணவு, சுத்தமான நீர், மருந்து மற்றும் எரிபொருள் குவிந்துள்ளன. மனிதாபிமான அமைப்புகள் இவற்றை விநியோகிப்பதை இஸ்ரேல் தடுக்கிறது.
காசா மனிதாபிமான அறக்கட்டளை என்ற பெயரில் இஸ்ரேல் அமைத்த உணவு விநியோக மையங்களை இஸ்ரேல் மரணப் பொறிகளாக மாற்றுவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், "உணவு தேடி வரும் மக்களை குறிவைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை.
உணவு விநியோக மையங்களில் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு இணங்கி தங்கள் வார்த்தையை காப்பாற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
இதுதவிர்த்து அண்மையில் பிரிட்டன் மற்றும் கனடா உட்பட 29 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
- உணவுக்காகக் காத்திருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படுகொலைகளை செய்து வருகிறது.
- அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடுகிறார்கள்.
நேற்று (ஜூலை 19) ஒரே நாளில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 37 பேர் ராஃபாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டனர்.
இதன்மூலம் காசா போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,765 ஐ எட்டியுள்ளது. 1,40,485 பேர் காயமடைந்தனர்.
மற்ற அனைத்து வழிகளும் மூடப்பட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.
அங்கு உணவுக்காகக் காத்திருப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு, பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் படுகொலைகளை செய்து வருகிறது.
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சில நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிடுகிறார்கள். சுத்தமான தண்ணீர் இல்லாமல் தொற்று நோய்கள் பரவி வேகமாக பரவி வருகின்றன.
இதற்கிடையே நேற்று, இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், காசாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை எழுதினர். அக்டோபர் 2023க்குப் பிறகு காசாவில் தேர்வுகள் நடதப்பட்டது இதுவே முதல் முறை. 1,500 மாணவர்கள் வரை தேர்வு எழுதியதாக தெரிகிறது.
காசா கல்வித் துறை இந்தத் தேர்வு சிறப்பு மென்பொருளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக தெரிவித்தது.
பல்கலைக்கழகப் படிப்பு கனவை நோக்கிய முதல் படி இந்த தேர்வு. இணையம் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் தேர்வை எழுதினர்.
- போப் ஆண்டவருக்கு தகவல்கள் வழங்கி வந்த விகார் ஜெனரல் பாதிரியார் கேப்ரியல் ரோமானெல்லி இந்த குண்டுவீச்சில் காயமடைந்தார்.
- கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் சுமார் 1,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். பாலஸ்தீன முஸ்லிம்களுடனும் அவர்கள் இணக்கமான உறவைக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று, காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்தது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் நிலைமை குறித்து போப் ஆண்டவருக்கு தகவல்கள் வழங்கி வந்த விகார் ஜெனரல் பாதிரியார் கேப்ரியல் ரோமானெல்லி இந்த குண்டுவீச்சில் காயமடைந்தார். அவரது காலில் காயம் ஏற்பட்டது.
போப் லியோ இந்தத் தாக்குதலைக் கண்டித்து, காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தார்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தாக்குதல் குறித்து விசாரித்து வருவதாகக் கூறின. தேவாலயம் அழிக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 29 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், காசாவில் கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 58,500ஐ கடந்துள்ளது. 1,39,600க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- காசாவில் உள்ள தேவாலயம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்.
- தாக்குதலில் தேவாலயத்தின் காம்பவுண்ட் சேதமடைந்துள்ளது.
காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அங்குள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காம்பவுண்ட் சேதமடைந்துள்ளது.
தேவாலயத்தின் வளாகப் பகுதி மீதான இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர். காசாவில் உள்ள ஒரேயொரு தேவாலயம் பேமிலி கத்தோலிக்க ஆலயம்தான். போரினால் வீடுகளை இழந்த கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் இந்த ஆலயத்தின் வளாகத்தில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவாலயத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து அறிந்திருப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், "மதத் தலங்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்க அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அவற்றுக்கு ஏற்பட்ட எந்தவொரு சேதத்திற்கும் வருந்துவதாகவும்" தெரிவித்துள்ளது.
- ஆரம்பத்தில் 600,000 மக்களையும், இறுதியில் முழு பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்க இந்நகரம் தயாராகி வருகிறது.
- திட்டமிடப்பட்ட அந்நகரத்தை ஹிட்லரின் வதை முகாம்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
தெற்கு காசாவில் உள்ள ராஃபாவில் இடிபாடுகளில் 'மனிதாபிமான நகரம்' ஒன்றை கட்டும் திட்டத்தை காட்ஸ் முன்மொழிந்தார்.
தெற்கு காசாவின் இடிபாடுகளில் ஒரு "மனிதாபிமான நகரத்தை" நிர்மாணிப்பதற்கான செயல்பாட்டுத் திட்டங்களை வகுக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நகரத்திற்கு உள்ளே நுழைந்ததும், பாலஸ்தீனியர்கள் மற்ற நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 600,000 மக்களையும், இறுதியில் முழு பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்க இது தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் உருவாக்க நினைக்கும் நகரம் ஒரு வதை முகாமாக இருக்கும் என்றும் பாலஸ்தீனியர்களை அங்கு வைப்பது இன அழிப்புக்கு சமம் என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் கூறினார்.
இஸ்ரேல் ஏற்கனவே காசா மற்றும் மேற்குக் கரையில் போர்க்குற்றங்களைச் செய்து வருகிறது. இந்த முகாம் கட்டுவது அந்தக் குற்றங்களில் பெரிய அளவில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஓல்மெர்ட் கூறினார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "மனிதாபிமான நகரம்" திட்டத்தை ஆதரிக்கிறார். காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அகற்ற அவர்கள் ஒரு முகாமைக் கட்டும் அதே வேளையில், பாலஸ்தீனியர்களைக் காப்பாற்றுவது அவர்களின் குறிக்கோள் அல்ல, மாறாக அவர்களை நாடு கடத்துவதும் தூக்கி எறிவதுதான் என்று ஓல்மெர்ட் கூறினார்.
இஸ்ரேலிய மனித உரிமை செயல்பாட்டாளர்களும் இந்தத் திட்டத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான ஒரு வரைபடம் என்று விவரித்துள்ளனர்.
இது செயல்படுத்தப்பட்டால் இனப்படுகொலைக்கு சமமாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் பலர் திட்டமிடப்பட்ட அந்நகரத்தை ஹிட்லரின் வதை முகாம்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
- இஸ்ரேல் காசா போர் கடந்த 21 மாதமாக நடந்து வருகிறது.
- இந்தப் போரில் காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
காசா முனை:
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. கடந்த 21 மாதமாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்துக்குகும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் தண்ணீர் பிடிக்கச் சென்றவர்கள் என்ற தகவல் வெளியாகியது.
இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியதும் அவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். எனினும், பலர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, அப்படியே தரையில் சாய்ந்தனர். போர் நிறுத்தம் பற்றி விவாதித்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
- இஸ்ரேல் "மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை" மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
- காசாவில் சுமார் 90,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.
இஸ்ரேல் காசாவை குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாற்றுகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப் லசரினி தெரிவித்துள்ளார்.
காசாவில், இஸ்ரேல் "மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை" மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
காசாவில் பசிக்கொடுமை எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது என்றும் கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு விநியோக மையங்களில் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் 615 பேர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் விநியோக மையத்தில் கொல்லப்பட்டனர். பசியை ஆயுதமாகப் பயன்படுத்தி இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின்படி, இஸ்ரேலிய தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், காசாவில் சுமார் 90,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.
இதற்கிடையே காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
குறிப்பாக மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பலாவில் நேற்று இரவு தொடங்கி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் இரண்டு பெண்களும் அடங்குவர் என்று அல்-அக்ஸா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 15 பேர் இறந்ததாக நாசர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 57,762 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 137,656 பேர் காயமடைந்துள்ளனர்.
- இஸ்ரேலுடன் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் நேற்று நடந்த தாக்குதல்களில் இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது. உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
உணவு விநியோக மையங்களை நிர்வகிக்கும் போர்வையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
கடுமையான பசி காரணமாக அவை மரணப் பொறிகள் என்பதை அறிந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக விநியோக மையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதனுடன் அல்-மவாசியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் கான் யூனிஸ் 15 பேரும், காசா நகரில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியில் மேலும் 15 பேரும் கொல்லப்பட்டனர். காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது. 1,34,611 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததிலிருந்த சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையில், 14 அமைச்சர்கள், ஜூலை 27 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் மேற்குக் கரையை முழுமையாக இணைக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்க்கு மத்திய கிழக்கு மற்றும் உலக நாடுகளிடம் இருந்து கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
- உதவிபொருட்கள் வாங்க நின்ற பாலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 38 பேர் உயிரிழப்பு.
இஸ்ரேல்- காசா இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார். என்ற போதிலும் இஸ்ரேல் வான் தாக்குதலை நிறுத்தவில்லை. நேற்றிரவு காசாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது பட்டினியால் தவித்து வரும் பாலஸ்தீனர்கள் உதவிப்பொருட்களுக்களுக்கான காத்திருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்க லாரிகள் மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகளில் வரும் உதவிப்பொருட்களை பெறுவதற்கு பாலஸ்தீன மக்கள் முண்டியத்துச் செல்லும் பரிதாப நிலை ஏற்படுகிறது.
அவ்வாறு முண்டியடித்துச் செல்லும் பட்டினியால் தவிக்கும் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. அவ்வாறு காசாவில் பல்வேறு இடங்களில் உதவிப் பொருட்கள் வாங்கும் இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 38 உயிரிழந்தனர்.






