என் மலர்tooltip icon

    பாலஸ்தீனம்

    • கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையின் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
    • கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.

    தெற்கு காசாவில் உள்ள முக்கியமான மருத்துவமனையின் 4ஆவது மாடி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக, காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நான்காவது மாடியின் மீது இரண்டு முறை வான்குதாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாக தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை பலத்த சேதம் ஏற்பட்டது. மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

    தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை இதுவாகும். கடந்த 22 மாதங்களாக நடைபெறும் தாக்குதல் காரணமாக மருத்துவனைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஸ்டாஃப் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேவேளையில் இஸ்ரேல் இது தொடர்பாக உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. காசா முனையில் உள்ள மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. அதேவேளையில் தாக்குதலும் நடத்தி வருகிறது.

    கடந்த ஜூன் மாதம் இதே மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூன்று கொல்லப்பட்ட நிலையில், 10 பேர் காயம் அடைந்தனர். அப்போது, மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.

    இஸ்ரேல்- ஹமாஸ் போரில் 62,686 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
    • பசியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம் என்று ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி வோல்கர் டர்க் கூறினார்.

    காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    அதன் அறிக்கையின்படி, காசாவில் அரை மில்லியனுக்கும் (5 லட்சத்துக்கும்) அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர்

    காசா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீத பகுதியில் பஞ்ச நிலைமை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

    உடனடி போர்நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு, மனிதாபிமான உதவி கிடைக்காவிட்டால், கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலா போன்ற தெற்குப் பகுதிகளுக்கு பஞ்சம் பரவக்கூடும்.

    பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். காசாவில் பசி பட்டினி முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது. பசி பட்டினி அங்கு வேகமாக பரவி வருகிறது.

    உதவி கிடைப்பதில் ஒரு நாள் தாமதம் கூட பட்டினி மரணங்களை அதிகரிக்கச் செய்கிறது. தடுக்கக்கூடிய இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று அறிக்கை எச்சரிக்கிறது.

    மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் டாம் பிளெட்சர், "இது முற்றிலும் தடுக்கக்கூடிய பஞ்சம்.எல்லைகளில் உணவு விநியோகத்தை நிறுத்தும் தடைகளை இஸ்ரேல் திட்டமிட்டு உருவாக்குகிறது. இது நம் அனைவரையும் வேட்டையாடும் பஞ்சம்" என்று கூறினார்.

    "காசாவின் பஞ்சம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் இது மனிதகுலத்தின் தோல்வி" என்றும் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்ரஸ் தெரிவித்தார். .

    பசியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம் என்று ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி வோல்கர் டர்க் கூறினார்.

    மறுபுறம், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் ஐ.நா அறிக்கையை கடுமையாகக் கண்டித்தது. "காசாவில் பஞ்சம் இல்லை. இந்த அறிக்கை ஹமாஸால் கூறப்பட்ட பொய்களை அடிப்படையாகக் கொண்டது" என்று அது குற்றம் சாட்டியது.

    பஞ்சம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

    ஒரு பகுதியில் பஞ்சத்தை அறிவிக்க, ஐ.பி.சி சில கடுமையான அளவுகோல்களைப் பின்பற்றுகிறது. இந்த அளவுகோல்களில் முக்கியமானது, மக்கள்தொகையில் குறைந்தது 20 சதவீத வீடுகளாவது கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வது, 30 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது, ஒவ்வொரு 10,000 பேரில் இரண்டு பெரியவர்கள் அல்லது நான்கு குழந்தைகள் பசியால் உயிரிழப்பது ஆகும். காசாவில் இந்த நிலைமைகள் இருப்பதாக IPC தீர்மானித்துள்ளது.

    காசாவில் கடந்த ஓரிரு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் காசா மக்கள் பட்டினியால் உயிரிழப்பு.
    • இஸ்ரேல் தாக்குதல் நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தல்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக வெற்றிபெறும் வரை காசா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. இதுதான் தங்கள் நாட்டிற்கான ஒரே பாதுகாப்பு என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு உறுதிப்பட தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே காசா மீதான தாக்குதலில் அங்குள்ள மக்கள், குறிப்பாக குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வரும் பரிதாப நிலை நிலவுகிறது. இதனால் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த பரிந்துரையை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இஸ்ரேலும் ஒப்புக்கொண்டால், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் 60 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். அப்போது பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படலாம்.

    2023ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து, காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. சுமார் இரண்டு வருட தாக்குதலில் இரண்டு முறை போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    • 994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டனர்.
    • கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர்.

    காசாவில் கடந்த மே மாத இறுதியிலிருந்து உணவு மற்றும் உதவிப்பொருட்களாக காத்திருந்த 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அறிக்கைப்படி, "மே 27 முதல் ஆகஸ்ட் 13 வரை, உதவி கோரும் போது குறைந்தது 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

    994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐ.நா அறிவித்த இறப்பு எண்ணிக்கை 1,373 ஆகும். இந்நிலையில் கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர்.

    நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய பீரங்கி தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. இதில் உதவிக்காக காத்திருந்த 12 பேர் அடங்குவர். 

    இருப்பினும், இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் ராணுவத் திறன்களை அழிக்க தங்கள் படைகள் செயல்படுவதாகக் கூறுகிறது. மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க இராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. 

    இதற்கிடையே காசாவில் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது.

    மேலும், அண்மையில் காசாவில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்களை மருத்துவமனையில் வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதன் மூலம் 2023 முதல் காசாவில் இஸ்ரேல் கொன்று குவித்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.  

    • உணவுக்காகக் காத்திருந்தபோது 21 பேர் கொல்லப்பட்டனர்.
    • பட்டினியால் உயிரிழந்தவர்களில் 106 குழந்தைகள் அடங்குவர்.

    பாலஸ்தீன நாட்டின் முக்கிய நகரமான காசாவில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 123 பேரை கொன்று குவித்துள்ளது.

    ஜைடவுன் பகுதியில் நடந்த கடுமையான குண்டுவீச்சில் 12 பேர் கொல்லப்பட்டனர். சப்ரா மற்றும் ஷேக் ரத்வானிலும் தாக்குதல்கள் நடந்தன. அங்கு உணவுக்காகக் காத்திருந்தபோது 21 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று காசாவில் மூன்று குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

    இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இதில் 106 குழந்தைகள் அடங்குவர்.

    இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரில், இதுவரை 61,722 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து எகிப்து, கத்தார், மற்றும் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    இதற்கிடையே, இஸ்ரேல் காசா நகரை முழுமையாகக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. 

    • 103 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.
    • காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காசாவில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 513 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடுமையான பசியால் வாடும் காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதன் மூலம்103 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடந்த 2023 முதல் காசாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
    • இஸ்ரேலிய இராணுவம் பத்திரிகையாளர்கள் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

    காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் உலக அவளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை, அல் ஷிபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு அருகே நடந்த தாக்குதலில் அல் ஜசீரா அரபு நிருபர் அனஸ் அல் ஷெரீப், நிருபர் முகமது ரைக் மற்றும் கேமரா ஆபரேட்டர்கள் இப்ராஹிம் ஜாஹிர், முகமது நௌபால் மற்றும் மோமின் அலிவா ஆகியோர் உயிரிழந்தனர்.

    ஹமாஸ் முகவர்களுக்கு உதவ முயன்றபோது அல் ஷெரீஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் பத்திரிகையாளர்கள் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

    போர் தொடங்கிய கடந்த 2023 முதல் காசாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக காசா பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர் அமைப்புகள் இந்த கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.  

    • காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் உணவுக்காக தனது குழந்தைகளுடன் வரிசையில் நின்றபோது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.
    • காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட கால்பந்து வீரர்களின் எண்ணிக்கை 220 ஐ எட்டியுள்ளது.

    பிரேசில் நாட்டை சேர்ந்த உலக கால்பந்து ஜாம்பவான் பீலே. இந்நிலையில் 'பாலஸ்தீன கால்பந்தின் பீலே' என்று அழைக்கப்படும் சுலைமான் அல்-உபைத் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார்.

    பாலஸ்தீன தேசிய அணிக்காகவும், காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அணிகளுக்காகவும் சுலைமான் விளையாடி உள்ளார்.

    தற்போது 41 வயதான சுலைமான் அல்-உபைத், கடந்த ஆகஸ்ட் 6 அன்று, காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் உணவுக்காக தனது குழந்தைகளுடன் வரிசையில் நின்றபோது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.

    1984 இல் பிறந்த சுலைமான் காசாவில் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவராக இருந்தார். 2007 முதல் 2023 வரை நீடித்த தனது கால்பந்து வாழ்க்கையில் பல்வேறு அணிகளுக்காக 100க்கும் மேற்பட்ட கோல்களை அடித்தார்.

    2010 மேற்கு ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஏமனுக்கு எதிராக அவர் அடித்த சிசர்-கட் கோல் குறிப்பிடத்தக்கது.

    சுலைமான் அல்-ஒபெய்டின் மரணத்துடன், காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட கால்பந்து வீரர்களின் எண்ணிக்கை 220 ஐ எட்டியுள்ளது.

    காசாவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது.

    விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், நடுவர்கள் மற்றும் கிளப் வாரிய உறுப்பினர்கள் உட்பட கால்பந்து தொடர்பானவர்களின் இறப்புகளின் எண்ணிக்கை 321 ஐ எட்டியுள்ளது. 

    • வன்முறையை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் அது நன்மை செய்வதாகத் தோன்றினால், அந்த நன்மை தற்காலிகமானது. அது செய்யும் தீமை நிரந்தரமானது.
    • ஒருபோதும் திரும்பி வராத ஒரு குழந்தைக்காக எந்த பெற்றோரும் வலியில் காத்திருக்கக்கூடாது.

    சுதந்திரத்திற்கான போராட்டத்தின் இரண்டு உலகளாவிய சின்னங்களான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மகாத்மா காந்தியின் பேரக்குழந்தைகள் காசாவுக்காக ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    மார்ட்டின் லூதர் கிங் III ஒரு பிரபலமான அமெரிக்க சிவில் உரிமை செயல்பாட்டாளர். அவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் கொரெட்டா ஸ்காட் கிங்கின் மூத்த மகன். ராஜ்மோகன் காந்தி ஒரு வரலாற்றாசிரியர். அவரது தந்தைவழி தாத்தா மகாத்மா காந்தி.

    இந்த மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், இருவரும் காசாவில் அமைதிக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

    இடது-மார்ட்டின் லூதர் கிங் III, வலது-ராஜ்மோகன் காந்தி 

    "இன்று நாங்கள் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் மகாத்மா காந்தியின் வழித்தோன்றல்களாக மட்டுமல்லாமல், காசாவில் நடந்து வரும் மனிதாபிமான பேரழிவால் காயமடைந்த ஒரு மனித குடும்பத்தின் உறுப்பினர்களாகவும் பேசுகிறோம்.

    வன்முறை, இடப்பெயர்ச்சி மற்றும் வறுமையின் துயர புயலில் சிக்கிய அப்பாவி பொதுமக்களின், குறிப்பாககாசா குழந்தைகளின் அழுகை எங்கள் இதயங்களை கனமாக்குகிறது - மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தியின் வாரிசுகள் கூட்டறிக்கை

    மேலும், பணயக்கைதிகளாக உள்ள அன்புக்குரியவர்களின் இஸ்ரேலிய குடும்பங்களின் ஆழ்ந்த வலியை நாங்கள் உணர்கிறோம். அவர்களின் வலி எங்களுடையது.

    அந்த வேதனையில், மகாத்மா காந்தியின் வார்த்தைகளை நாம் மறந்துவிடக் கூடாது: 'வன்முறையை நான் எதிர்க்கிறேன். ஏனென்றால் அது நன்மை செய்வதாகத் தோன்றினால், அந்த நன்மை தற்காலிகமானது. அது செய்யும் தீமை நிரந்தரமானது'

    தொடர்ச்சியான வன்முறை நீதியைக் கொண்டுவராது. அது துன்பத்தை மட்டுமே அதிகரிக்கிறது' - இந்த உண்மையை நாங்கள் எதிரொலிக்கிறோம். மேலும் இரத்தக்களரிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க அவசரமாகவும் அன்புடனும் அழைப்பு விடுக்கிறோம்.

    அனைத்து பணயக்கைதிகளும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் - உணவு, தண்ணீர், மருந்து - காசா மக்களை தடையின்றி அல்லது தாமதமின்றி சென்றடைய வேண்டும்.

    காசாவின் குழந்தைகள் எங்கள் குழந்தைகள். பயத்திலும் அமைதியிலும் வைக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் எங்கள் குடும்பம்.

    எந்தக் குழந்தையும் பசியை அறியக்கூடாது. ஒருபோதும் திரும்பி வராத ஒரு குழந்தைக்காக எந்த பெற்றோரும் வலியில் காத்திருக்கக்கூடாது. இந்தக் கொடுங்கனவு விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

    சர்வதேச சமூகம் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது. உலக தலைவர்கள் சிவில் சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் . நல்லிணக்கத்திற்கான பாதை நீண்டதாக இருக்கும். ஆனால் அது இரக்கம் மற்றும் ஒழுக்கத்தின் முதல் படிகளுடன் தொடங்குகிறது. பிரிவினை, வெறுப்பு மற்றும் விரக்தியைத் தாண்டி நாம் உயர முடியும்.

    உறுதியான இதயங்களுடனும் திறந்த கரங்களுடனும், ஒரு நியாயமான அமைதி அவசியம் மட்டுமல்ல, சாத்தியமானதும் ஆகும்" என்று தெரிவித்துள்ளனர். 

    • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார்.
    • தாக்குதலைத் தொடரலாமா வேண்டாமா என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

    காசா முழுவதும் நேற்று இஸ்ரேலிய தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஐ எட்டியுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 5 பட்டினி மரணங்களை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க முடிவு செய்துள்ளார். ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா, நேதன்யாகுவின் நடவடிக்கை கவலையளிக்கிறது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.

    தாக்குதலைத் தொடரலாமா வேண்டாமா என்பதை இஸ்ரேல் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

    காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 61,158 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 151,442 பேர் காயமடைந்துள்ளனர். 

    • பணயக்கைதிகள் வேண்டுமென்றே பட்டினியால் கொல்லப்படவில்லை, அவர்கள் எங்கள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுகிறார்கள்.
    • பட்டினியால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர்.

    ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு, தங்கள் காவலில் உள்ள இஸ்ரேலிய பணய கைதி எலும்பும் தோலுமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டது.

    இஸ்ரேல் காசாவுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை மறுத்து வரும் நிலையில் பட்டினியால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். 

    இந்நிலையில் இஸ்ரேலின் தடையினால் இஸ்ரேலிய கைதிகளும் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை காட்டும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

    "பணயக்கைதிகள் வேண்டுமென்றே பட்டினியால் கொல்லப்படவில்லை, அவர்கள் எங்கள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் சாப்பிடும் அதே உணவையே சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் கிடைக்கவில்லை" என்று ஹமாஸ் கூறியுள்ளது.

    ஏற்கனவே இஸ்ரேலில் ஆளும் பிரதமர் நேதன்யாகு அரசுக்கு எதிராக போராடி வரும் அந்நாட்டு மக்களின் சீற்றத்தை இது மேலும் அதிகரித்தது.

    இதையடுத்து இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி வழங்க வேண்டும் என்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வலியறுத்தினார்.

    செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜூலியன் லாரிசனை தொலைபேசியில் அழைத்து பணய கைதிகளுக்கு உடனடியாக உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்று நேதன்யாகு கோரியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் காசாவிற்கு மனிதாபிமான உதவி வழித்தடங்கள் திறக்கப்பட்டு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்டால், இஸ்ரேலிய கைதிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவ அனுமதிப்போம் என என்று ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.  

    • பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்பட மாட் டோம்.
    • நிவாரண உதவி வினியோக மையங்கள் அருகே இஸ்ரேல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது.

    இப்போரில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

    இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு எட்டப்பட வில்லை. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்து உள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை கீழே போட விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப் தெரிவித்தார். ஆனால் அதை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

    பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம். ஜெருசலேமை தலைநகராக கொண்ட ஒரு சுயாதீனமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்பட மாட் டோம். எங்களது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    காசாவில் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. இதற்கிடையே நிவாரண உதவி வினியோக மையங்கள் அருகே இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    ×