என் மலர்tooltip icon

    உலகம்

    காசாவில் உதவிப் பொருட்களுக்காக காத்திருந்த 1,760 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் - ஐ.நா. அறிக்கை
    X

    காசாவில் உதவிப் பொருட்களுக்காக காத்திருந்த 1,760 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் - ஐ.நா. அறிக்கை

    • 994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டனர்.
    • கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர்.

    காசாவில் கடந்த மே மாத இறுதியிலிருந்து உணவு மற்றும் உதவிப்பொருட்களாக காத்திருந்த 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அறிக்கைப்படி, "மே 27 முதல் ஆகஸ்ட் 13 வரை, உதவி கோரும் போது குறைந்தது 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக நாங்கள் பதிவு செய்துள்ளோம்.

    994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐ.நா அறிவித்த இறப்பு எண்ணிக்கை 1,373 ஆகும். இந்நிலையில் கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர்.

    நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய பீரங்கி தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. இதில் உதவிக்காக காத்திருந்த 12 பேர் அடங்குவர்.

    இருப்பினும், இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் ராணுவத் திறன்களை அழிக்க தங்கள் படைகள் செயல்படுவதாகக் கூறுகிறது. மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க இராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இஸ்ரேல் கூறி வருகிறது.

    இதற்கிடையே காசாவில் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது.

    மேலும், அண்மையில் காசாவில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்களை மருத்துவமனையில் வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதன் மூலம் 2023 முதல் காசாவில் இஸ்ரேல் கொன்று குவித்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×