என் மலர்
இஸ்ரேல்
- ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசினர்.
- ஏவுகணையை நடுவானில் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே தீராப்பகை நிலவியது. குறிப்பாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கிய நாளில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துகிறது. இருதரப்பு மோதல் பிராந்திய அளவில் பெரிய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடிக்க செய்யப்பட்டன. இந்த கோர சம்பவத்தில் 39 பேர் பலியாகினர். சுமார் 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா அமைப்பினர் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.
லெபனானின் எல்லையையொட்டிய இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை முடுக்கிவிட்டனர்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதனால் கோபமடைந்த இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவுக்கு லெபனான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது. கடந்த 2 நாட்களில் லெபனானில் 1,600-க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் 560-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசினர்.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை இலக்காக கொண்டு ஈரானில் தயாரிக்கப்பட்ட காதர் என்கிற நடுத்தர தூர ஏவுகணையை வீசினர். எனினும் அந்த ஏவுகணையை நடுவானில் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
எனினும் இதுவரை இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை மட்டுமே இலக்காக கொண்டு ராக்கெட் குண்டுகளை வீசி வந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் தலைநகரை நோக்கி சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசியது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், லெபனானில் சாத்தியமான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேலிய இராணுவம் தயாராகி வருவதாக இஸ்ரேலிய ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ராணுவ தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி மேலும் கூறுகையில், சமீபத்திய வான்வழித் தாக்குதல்கள் ராணுவம் சாத்தியமான நுழைவுக்கான தரையைத் தயார்படுத்துவதற்கும், ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து வீழ்த்துவதற்கும்" வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார்.
ஹிஸ்புல்லா தனது தீ வரம்பை விரிவுபடுத்தியுள்ளது, இதனால், அவர்கள் மிகவும் வலுவான பதிலைப் பெறுவார்கள் என்று கூறினார்.
- இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
- இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்துக்குக் குறிவைத்துத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதால் நிலை தடுமாறிய ஹிஸ்புல்லா தற்போது இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலில் தங்களின் கமாண்டர் இறந்தாலும் அதனால் தங்களின் அமைப்பு ஒட்டுமொத்தமாக அழியும் என்று எண்ணிவிடக்கூடாது என்று ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடதத் தொடங்கியுள்ள ஹிஸ்புல்லா இதுவரை வடக்கு இஸ்ரேல் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் மீது பேலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த பேலிஸ்ட்டிக் தாக்குதலை ஆன்டி- பேலிஸ்டிக் மிசைல்கள் மூலம் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரின் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்துக்குக் குறிவைத்துத் தாக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த பேஜர் தாக்குதல்களுக்கும் தங்களது தளபதிகளைக் குறிவைத்துக் கொன்றதற்கும் மோசாட்டை [பழிதீர்க்க இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் தலைநகர் டெல் அவிவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள்.
- இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர்.
பெய்ரூட்:
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு-இஸ்ரேல் இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்துள்ளது.
சமீபத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள், வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியதில் 39 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறிய ஹிஸ்புல்லா, அந்நாடு மீது ஏவுகணைகளை வீசியது. இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள். இதனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசியது.
இந்த தாக்குதலை ஒடுக்கும் விதமாக நேற்று லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி கடுமையான தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் உள்ள பகுதிகளில் தீவிர வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.
தலைநகர் பெய்ரூட், தெற்கு லெபனான் உள் ளிட்ட பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 274 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் செயல்பாட்டை முற்றிலும் ஒடுக்கும் விதமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. 35 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,645 பேர் காயமடைந்து உள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறும்போது, லெபனான் மக்களுக்கு நான் செய்தி ஒன்றை சொல்கிறேன். இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர். நீண்ட காலமாக, ஹிஸ்புல்லா உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது.
உங்கள் வீட்டு அறைகளில் ராக்கெட்டுகளையும் ஏவுகணைகளையும் பதுக்கி வைத்துள்ளது. அந்த ஏவுகணைகள் எங்களது நகரங்களை குறிவைக்கின்றன. எங்களது மக்களை ஹிஸ்புல்லா தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் அழிக்க வேண்டும்.
லெபனானியர்கள் ஹிஸ்புல்லாவின் நோக்கத்திற்காக தங்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது. தயவு செய்து, இப்போது ஆபத்து வழியிலிருந்து வெளியேறுங்கள். எங்கள் செயல்பாடு முடிந்ததும், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம். நாங்கள் போர்களைத் தேடவில்லை. அச்சுறுத்தல்களை களையப் பார்க்கிறோம் என்றார்.
இதற்கிடையே இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 200 ஏவுகணைகளை வீசினர். இதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.
- இஸ்ரேல் போர் லெபனான் மக்களுடன் இல்லை.
- அது ஹிஸ்புல்லா உடன். நீண்ட காலமாக மக்களை கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது.
லெபனான் மீது பயங்கரமான வகையில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 500 லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினரை பாதுகாக்கும் வகையில் கேடயமாக மாறாதீர்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு லெபனான் மக்களை வீடியோ மூலம் மெசேஜ் தெரிவித்துள்ளார்.
லெபனான் மக்களுக்கான நேதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் "இஸ்ரேல் போர் லெபனான் மக்களுடன் இல்லை. அது ஹிஸ்புல்லா உடன். நீண்ட காலமாக மக்களை கேடயமாக ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது. உங்கள் வீடுகளில் ராக்கெட்டுகளை பதுக்கி வைக்கிறது. அவைகள் எங்கள் நாட்டின் மக்களை குறிவைக்கிறது. ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு எதிராக எங்கள் மக்களை பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் வெளியே எடுக்க வேண்டும்" என்றார்.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இருந்து (லெபனான் எல்லை) வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக அமர்த்துவது எங்களுடைய நோக்கம் என போர் நோக்கத்தை இஸ்ரேல் விரிவுப்படுத்தியது. மேலும், போரின் மையப்பகுதிய வடக்கு நோக்கி நகர்கிறது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
சில தினங்களுக்கு முன் போர் கட்டம் மாற்றப்படுகிறது என லெபனான் எச்சரித்திருந்தது. லெபனான் தாக்குதலை எதிர்கொள்ள தயார் என இஸ்ரேல் பதில் அளித்திருந்தது.
இநத் நிலையில்தான் லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தியதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
- பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
- தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு லெபனானில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியுள்ளது.
தெற்கு லெபானானில், ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதன்படி, 300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இதையடுத்து, தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், 2 நாட்களுக்கு லெபனானில் பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் பள்ளிகள் மூடப்படுகிறது.
- இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம்.
- இது முழுமையான போர் பிரகடனம் என ஹிஸ்புல்லா தெரிவித்தது.
ஜெருசலேம்:
லெபனானில் பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவங்களில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் இது முழுமையான போர் பிரகடனம் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, வடக்கு இஸ்ரேலிய பகுதிகள்மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.
இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படைத்தளபதி இப்ராகிம் அகில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
1983-ம் ஆண்டு பெய்ரூட்டின் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தி 63 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான இப்ராகிம் அகில் குறித்த தகவலுக்கு 7 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா பரிசாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர்
- சுமார் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
உலகமே அதிரும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறியது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்துச் சிதறியது. இந்த இரு சம்பவங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் இது முழுமையான போர் பிரகடனம் என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்திருந்தார். இதற்கிடையே லெபனானில் ஹிஸ்புல்லா தளங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலும் நடத்தியதால் பதற்றம் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா சுமார் 140 ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவி பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- இஸ்ரேல் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
- இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
பெய்ரூட்:
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
ஹமாசுக்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரும் துணையாக இருந்து வருகின்றனர். லெபனானில் இருந்து அவ்வப்போது இஸ்ரேல் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தெற்கு லெபனான் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் இடமாகவும், வீடுகளில் சுரங்க பாதைகள் அமைத்தும், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது.
இதனால் பாதுகாப்பு கருதி ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்பு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.
தங்களது இருப்பிடம் பற்றி வெளியில் தெரியாது என்பதற்காக அவர்கள் இதை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உலகமே அதிரும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியது. இந்த இரு சம்பவங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த புது விதமான தாக்குதல் லெபனான் நாட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டி தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. மறுக்கவும் இல்லை. தொலை தொடர்பு கருவிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் வாயிலாக அனைத்து வரம்புகளையும் இஸ்ரேல் மீறி விட்டதாகவும், இந்த தாக்குதலால் கடும் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா தெரிவித்தார் . இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர் இதுவரை காணாத தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிகளை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 8 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினரும் அதிரடி தாக்குதலில் இறங்கினார்கள்.
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தினார்கள். போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசினார்கள்.
இந்த குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல கட்டிடங்கள், மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களையும் குண்டு வீசி அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதில் உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. நேற்று இரவு இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததால் லெபனானில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். சைரன் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. எல்லைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலண்டர் தெரிவித்துள்ளார். போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காசா போர் தொடங்கிய பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளனர். இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே முழுமையாக போர் நடக்கும் என எதிர்பார்க்கபடுவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.
- எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் பயப்படும் நிலை உள்ளது.
- சோலார் தகடுகளும் வெடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.
பெய்ரூட்:
இஸ்ரேல் மீது அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே லெபனானில் நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்து சிதறியது. ஒரே நேரத்தில் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள்.
2800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட பேஜர்களில் உள்ள பேட்டரியில் வெடிமருந்தை கலந்து இஸ்ரேல் வெடிக்க வைத்ததாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்தது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் லெபனானில் நேற்று ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியது.

பேஜர் வெடித்து சிதறியதில் பலியான ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 3 பேர் மற்றும் ஒரு குழந்தையின் உடல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வைத்திருந்த வாக்கி-டாக்கிகள் வெடித்தது.
அதேபோல் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியது. இதில் பலர் காயம் அடைந்து கீழே விழுந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.
வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. 450-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வீடுகளில் இருந்த சோலார் தகடுகளும் வெடித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் லெபனான் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் பயப்படும் நிலை உள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறும்போது, நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்து உள்ளோம். அதற்கு எங்களிடமிருந்து தைரியம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சி தேவை என்றார். இவரது இந்த கருத்து லெபனான் மீதான தாக்குதல் சம்பந்தமானதா என்பது உறுதி செய்யப்பட வில்லை.
லெபனானில் நடந்த பேஜர் வெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளது.
- லெபனான் எல்லை மக்களை மீண்டும் பாதுகாப்பாக அவர்களுடைய வீட்டிற்கு திரும்ப வைப்பது இலக்கு- இஸ்ரேல்.
- காசா மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது லெபனான் எல்லையை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா முனை மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் தென்மேற்கில் காசா முனை அமைந்துள்ளது. வடக்குப்பகுதி எல்லையில் லெபனான் அமைந்துள்ளது.
காசா மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் ஹிஸ்வுல்லா அமைப்பு இஸ்ரேல் எல்லை அருகே தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் மக்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திரும்ப வைப்பது போரின் இலக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஹிஸ்புல்லாவின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இது ஹிஸ்புல்லாவின் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என கருதப்படுகிறது. இதற்கு காரணம் இஸ்ரேல்தான் என குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியின் மோதலின் மையம் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவ் காலன்ட் கூறுகையில் "படைகள் வடக்கு எல்லை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. போர் தற்போது புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. போரின் மையம் தற்போது வடக்கு பகுதி நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. நாங்கள் வடக்கு பகுதிக்கு படைகள், வளங்கள் மற்றும் ஆற்றலை ஒதுக்குகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
"நான் முன்னரே கூறியிருந்தேன், நாங்கள் வடக்கில் உள்ள குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திரும்பச் செய்வோம். அதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம்" என பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேல் எல்லையில் உள்ள மக்கள் வெளியேற்றம்.
- வெளியேறிய மக்களை அவர்களது வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்ப வைப்பது இலக்கு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாத் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியது.
எதிர்காலத்தில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.
பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா தினந்தோறும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதி எல்லையில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுடைய போர் இலக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
பெஞ்சமின் நேதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசியல்- பாதுகாப்பு மந்திரிசபை தங்களது போர் இலக்கை புதுப்பித்துள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவது என்பதை போர் இலக்கில் சேர்க்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

இதனால் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தாக்குதலை இஸ்ரேல் அதிகரிப்பதுடன் லெபனான்- இஸ்ரேல் எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீன நட்பு நாடுகளுக்கு தங்களது ஆதரவு எனத் தெரிவித்த ஹிஸ்புல்லா, லெபனானின் தெற்கில் உள்ள எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் வலியுறுத்தும் அதே வேளையில், காசா போர் நிறுத்தம் ஏற்பட்டால் எங்களது தாக்குதல் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலின் மத்திய பகுதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
- ஏமனில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இஸ்ரேலின் மையப் பகுதி மீது ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் நாட்டில் மையம் கொண்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் மத்திய பகுதிகளின் மீது நேற்றைய தினம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் மத்திய பகுதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். காசா போருக்கு மத்தியில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகினர். கடந்த ஜூலை 19 அன்று இஸ்ரேலின் அமெரிக்க தூதரகம் அருகே நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதிகளின் துறைமுகத்தை இஸ்ரேல் தாக்கி சேதப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹவுதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை பொழிந்துள்ளனர்
ஏமனில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இஸ்ரேலின் மையப் பகுதி மீது ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் வான் பரப்பிற்குள் வந்த ஏவுகணையை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு தாக்கியது. ஆனாலும், ஏவுகணையின் பாகங்கள் வெடித்து சிதறின. மேலும், ராக்கெட்டுகளும் இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதனால், இஸ்ரேலின் மோடின்[Modiin] ரெயில் நிலையத்தில் பாதிப்பு எற்பட்டது. மேலும், பென் ஷபென் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த ஏவுகணை தாக்குதலில் காயமோ, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை 11 நிமிடத்தில் இஸ்ரேலை தாக்கியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு எமன் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.






