என் மலர்tooltip icon

    சீனா

    • ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சீனாவில் மக்கள் போராட்டம் எதிரொலியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது.

    பீஜிங்:

    இரண்டரை ஆண்டுகளாக உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன்பின் பல்வேறு நாடுகளில் பல அலைகளாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடும் ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது சர்வதேச நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதற்கிடையே, மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது.

    அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு தசாப்தத்திற்கு முன் ஜின்பிங் பதவியேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத வகையிலான அரசுக்கு எதிரான மக்களின் இந்த போராட்டம், மக்களின் மிக பெரிய கீழ்படியாமை தன்மை என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், புதிதாக கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வரும் சூழலில், மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக மாவட்ட அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 7 மாவட்டங்களில் தற்காலிக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

    கிழக்கு பீஜிங் நகரில் லேசான அறிகுறிகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பதிலாக, வீட்டிலேயே தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாடியிலேயே உள்ள அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அந்த தளத்தில் இருந்து மேலே மற்றும் கீழே என 3 மாடியில் வசிக்கும் மக்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பெருமளவிலான மக்கள் வரவேற்று உள்ளனர்.

    மத்திய சீனாவில் சூப்பர் மார்க்கெட்டுகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளை மீண்டும் தொடங்குவதற்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும் பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி உள்ளது.

    • 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின்.
    • ஜியாங் ஜெமின், ஷாங்காய் நகரில் வசித்து வந்தார்.

    பீஜிங் :

    சீனாவில் கடந்த 1989 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின். 1989-ம் ஆண்டு சீனாவை உலுக்கிய தியான்மென் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஜெமின், உலக அரங்கில் வலிமையான நாடாக்கும் இலக்கு நோக்கி சீனாவை வழி நடத்தினார்.

    அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஜியாங் ஜெமின், ஷாங்காய் நகரில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த சூழலில் சமீபகாலமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் 96 வயதான ஜியாங் ஜெமின் நேற்று காலமானதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடைந்ததால் அவர் உயிரிழந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சீன அரசு நாடு முழுவதும் அரசு கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவித்துள்ளது.

    ஜியாங் ஜெமின், 1989-ல் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்தபோது​​சீனா பொருளாதார நவீன மயமாக்கலின் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. 2003-ல் அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நேரத்தில், சீனா உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இருந்ததும், அந்த நாடு வல்லரசு அந்தஸ்துக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

    • சீன எல்லை அருகே 100 கிமீ தொலைவில் ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சி.
    • கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக சீனா கருத்து.

    பெய்ஜிங்,

    இந்தியா-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியின் 18வது பதிப்பு தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், சீன எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் நடைபெற்று வருகிறது. பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படையினரும் இணைந்து பணியாற்றுவதை மேம்படுத்துதல், போர் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவையை நோக்கமாக கொண்டு இந்த கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. 


    இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளதாவது: எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியாவும் அமெரிக்காவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியானது 1993 மற்றும் 1996ல் சீனாவும் இந்தியாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும்.

    மேலும் இருதரப்பு நம்பிக்கையை வளர்க்க அழ உதவவில்லை. இது குறித்த தனது கவலையை சீனா, இந்தியா தரப்பிற்கு பகிர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன, இந்திய ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    லடாக் எல்லை அருகே சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா ராணுவத்தை குவித்துள்ளது. சீனாவுடனான இருதரப்பு உறவு வளர்ச்சி அடைய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதி முக்கியம் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க சீனா தீவிரம்
    • ஷென்சோ-15 விண்கலம் மூலம் வீரர்கள் பயணம்

    பெய்ஜிங்:

    விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் பணிக்காக பல நாடுகளுடன் இணைந்த கூட்டுத் திட்டத்தின்படி ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. நீண்ட கால ஆய்வுக்கு பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவின் விண்வெளி நிலையம் ஓய்வு பெறும் என கூறப்படுகிறது.

    இதையடுத்து ரஷியாவிற்கு போட்டியாக புவி சுற்றுப் பாதையில் விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகளில் சீனா தீவிரம் காட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த ஜூன் மாதம் ஷென்சோ-14 குழுவை சீனா விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சோ-15 விண்கலத்துடன் இணைந்த ஒய்15 கேரியர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியது. 


    இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விண்கலத்தை ஏவும் பணி சில நிமிடங்களில் வெற்றிகரமாக நடந்ததாக கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    விண்வெளிக்கு சென்றுள்ள ஷென்சோ-15 குழுவை சேர்ந்த வீரர்கள், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள 3 வீரர்களுடன் இணைந்து கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது. கட்டுமானத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கியிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

    • சீனாவில் கொரோனா ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    பீஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.

    சீனாவின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது.

    இதற்கிடையே, ஊரடங்கு அமலில் உள்ள ஜிங்ஜங்க் மாகாணத்தில் உரும்யூ நகரில் கடந்த 24-ம் தேதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். இதனால் அங்கு தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்நிலையில், சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உரும்யூ நகரில் நேற்று முன்தினம் திரண்ட மக்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் மக்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.

    • கிரிஸ் வூ 32 வயதான ராப் பாடகர்.
    • சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார்.

    பீஜிங்

    கனடா மற்றும் சீனா இடையிலான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கனடா நாட்டை சேர்ந்தவர்களும், கனடாவில் சீனர்களும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.

    இந்த நிலையில் சீனாவில் கனடாவை சேர்ந்த பிரபல ராப் பாடகருக்கு கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கிரிஸ் வூ என்கிற 32 வயதான ராப் பாடகர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார்.

    தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோயாங் மாவட்ட கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வந்தது. நேற்று இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, கிரிஸ் வூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் கிரிஸ் வூக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    இந்த விவகாரம் குறித்து கனடா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • சீனாவில் சமீபகாலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
    • தொடர்ச்சியாக தீ விபத்து நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங் மாகாணம் உரும்கியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மள மளவென பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கியது. தீ வேகமாக பரவியதால் அந்த கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் மூச்சு திணறியும், உடல் கருகியும் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்பட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    சீனாவில் சமீபகாலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய சீனா பகுதியில் ஒரு கம்பெனியில் வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே சீனாவில் மீண்டும் கொரானோ பரவல் அதிகரித்து வருவதால் பல நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். தற்போது இதுபோன்று தொடர்ச்சியாக தீ விபத்து நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சீனாவில்தான் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
    • சீனாவில் 92 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    பீஜிங் :

    சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது.

    நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

    இப்படி உலகை உலுக்கிய கொரோனாவை இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

    ஆனால் சீனாவில்தான் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் அங்கு கொரோனா புதிய எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது.

    இது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டபோது ஏற்பட்ட பாதிப்பை விட (28 ஆயிரம்) அதிகம் என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது.

    சீனாவில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பது கொள்கை. இதன் காரணமாக அங்கு 140 கோடி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தினர். குறிப்பாக தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அரசு மையத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்துவது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை பதிவு செய்வதை விட்டு விட்டனர். பொத்தாம்பொதுவாக ஊரடங்குகளை பிறப்பிப்பது தவிர்க்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் வசிக்கிற ஜெங்சூவ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கவும், சிகிச்சை பெறவும் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வைரசுக்கு எதிரான அழிப்புப்போர் என்று அந்த நகர நிர்வாகம் அழைக்கிறது. மேலும் தினமும் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது. தெற்கில் உள்ள குவாங்சோவின் உற்பத்தி மையத்தில் இருந்து வடக்கே பீஜிங் வரையிலான வணிகம் மற்றும் குடியிருப்பு சமூகங்கள் பல்வேறு வகையான முடக்கங்களில் உள்ளன.

    சில இடங்களில் சீன அரசு அனுமதிக்கிற அளவை விட அதிகளவிலான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். தலைநகர் பீஜிங்கில் ஒரு கண்காட்சி அரங்கை ஆஸ்பத்திரியாக மாற்றி உள்ளனர். பீஜிங் சர்வதேச கல்விகள் பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால், யாரும் அங்கு நுழைய தடை போடப்பட்டுள்ளது.

    சீனாவில் 92 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அவர்களுக்கு ஒரு டோசாவது போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனா ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
    • சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

    சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்ற வீடியோ காட்சிகளை சீனா வெளியிட்டு உள்ளது. சீனாவின் அறிவியல் அகாடமி கடந்த அக்டோபர் மாதம் ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

    சூரியனை ஆய்வு செய்யும் வகையில் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை கொண்டு சீனாவின் சூரிய ஆய்வகம் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

    • 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா்.

    பீஜிங் :

    சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மத்திய சீனாவில் உள்ள செங்சாவு மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அங்கு அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், ஐபோன் தொழிற்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த ஊழியர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் அவர்களை விரட்டியடிக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா். இதில் பலர் காயம் அடைந்தனர். மேலும் தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.

    • இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    மத்திய சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று மாலை 4:22 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மீட்புப் பிரிவினர் உடனடியாக படைகளை அனுப்பி வைத்தனர்.

    அதன்படி, பொது பாதுகாப்பு, அவசரப்பிரிவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார விநியோக பிரிவுகள் அவசர கையாளுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒரே நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இரவு 11 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

    இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை தவிர, மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பலவீனமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    • அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
    • பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவின் வுகான் நகரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கடைசியில் முதன் முதலில் கொரோனா நோய் கண்டறியப்பட்டது.

    அதன் பிறகு இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த தொற்று வேகமாக பரவியது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிர் இழந்தனர்.

    சுமார் 2 ஆண்டு காலத்துக்கும் மேலாக உலகத்தை ஆட்டிப்படைத்த கொரோனா நோய் படிப்படியாக குறைந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் இன்னும் தொற்று முடிவுக்கு வரவில்லை.

    சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா பலி இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முதன் முறையாக தலைநகர் பீஜிங்கில் கொரோனாவுக்கு 87 வயது முதியவர் இறந்தார். இதன் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91 வயது பெண் ஒருவரும் உயிர் இழந்து விட்டார்.

    நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 24,215 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கி விட்டதாலும் அடுத்தடுத்து 2 பேர் பலியாகி விட்டதாலும் பீஜிங்கில் மறுபடியும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டு உள்ளன. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், மற்றும் அலுவலகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படுகிறது. தேவை இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

    கொரோனா பரவல் அதிகரிப்பால் விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க சீனா அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    ×